படக்கவிதைப் போட்டி (94)

பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

15934442_1202823703105160_1197894185_n

110834822n04_rவைத்தியநாதன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (14.01.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

editor

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

Facebook Twitter Flickr 

Share

About the Author

editor

has written 1158 stories on this site.

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

6 Comments on “படக்கவிதைப் போட்டி (94)”

 • பழ.செல்வமாணிக்கம் wrote on 14 January, 2017, 17:41

  சுகமான சுமை

  அன்னை எனக்கு தந்த சீர் தனமே!
  சுமையே தெரியாத ஒரு சுகமே !
  அன்புக்கு பொருள் சொன்ன இலக்கணமே!
  ஈருயிர் ஓருயிராய் வடிவெடுத்த அதிசயமே !
  அன்னை, தந்தையை உருவாக்கிய அழகு பிரம்மாவே !
  தோளில் நீ வந்தமர்ந்ததால்
  உன் தோழமை புரிந்தது!
  தலைக்குமேலிருந்து எனைப் பார்க்கும் பார்வை!
  உயிரெழுத்தாய் நீ இருப்பாய் என
  உணர்த்தும் பார்வை!
  உள்ளுக்குள் தன்னுடல் கொடுத்து
  அன்னை சுமந்தது ஒரு பத்து மாதம்!
  உலகத்தில் உன்னை ஆளாக்க
  தந்தை சுமந்தது இரு பத்து வருடம்!
  சுமப்பது சுகமாய் இருந்தாலும்
  உன் தோளில் உறங்க மனம் ஏங்குதடா!
  நீ நிழல் தரும் காலம் வரை கண்ணை இமை போல! உன்னை காத்திருப்பேன்!
  தந்தை என்னும் உறவு தந்து
  என் தந்தையின் உயர்வை புரிய வைத்தாய்!
  வாழ்வுப் பாடம் கற்றுத் தந்தாய்! நீ தான் எந்தன் தகப்பன் சாமி!
  தன்னலமில்லா தியாகத்தினால்
  தகப்பன்மார் அனைவரும் அகிலத்தில் சாமியன்றோ!

 • பெருவை பார்த்தசாரதி
  பெருவை பார்த்தசாரதி wrote on 14 January, 2017, 19:05

  படத்தில் தன் நெஞ்சில் அன்பாகத் தவழும் குழந்தையை, தந்தை வாஞ்சையுடன் கொஞ்சி மகிழ்வதை, “பெண்குழந்தை” எனப் பாவித்து பின்வரும் கவிதையைப் புனைகிறேன்…

  என் நெஞ்சில் தவழ்ந்தாடும். . .
  ===========================

  பாவையொருவள்கை பிடித்தேனானதடி பல்லாண்டு
  பலஆண்டாய்ப் பிள்ளை யிலையெனும் கவலையிலே

  ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டாகப்
  பத்தாண்டுகடந்ததடி, பலனொன்றுமில்லையடி!

  ஒருவருக்குத்துணை யொருவர் மட்டும்தானா?..
  ஏனிந்தக்கொடுமையடா? யெனும்குறையை இறைவன்கேட்பானா!

  குழந்தைவேண்டி கும்பிடாத கடவுளில்லை
  குழவியொன்றுபிறக்க ஜாதகத்தில் வழியுமில்லை.

  அரசமரத்தையொரு ஆயிரமுறை சுத்திவாரு மென்றானொருவன்
  ஆடும்தொட்டிலதில் கட்டென்றான் அயலாரொருவன்

  மருத்துவரைப் பாரென புத்திசொன்னானொருவன்,
  சோதனைக்குழாய் சோதனைக்கு தீர்வாகுமென்றானொருவன்

  ஆளுகொரு வழிசொல்லஅத் துணைவழிகேட்டு
  அலையாய் அலைந்தேன் அனுதினமும் திரிந்தேன்..

  நன்றியுள்ள நாயும், அழுக்கைக்களைந்துண்ணும்
  பன்றியையும். . .பரிவோடு பார்க்கும்போதெல்லாம். . .

  வாயில்லா ஜீவனுக்கே வாரிவழங்கும் எம்பெருமான்
  வாய்விட்டு அலரினாலும் குழவிவரம் கொடுப்பானில்லை!

  நாம்கொண்டவிரதமும், நாம்பெற்றஞனமும் எப்பொதும்
  நல்வழிக்கே என்பார்கள் பெரியோர்கள்!

  வேண்டுவோருக்கு வேண்டுவன பலகொடுக்கும் பரமன்..
  எனக்குமொன்று கொடுத்தான் வேண்டுமதைத் தவறாமல்!

  நல்லதொரு நன்னாளில் எனக்கொரு மகள் பிறந்தா ளவளெனைத்
  தேன்தமிழில் கவிபாடும் திறன்கொடுத்தாள்!

  இறைவனிட மிரைந்துயான்பெற்ற இளயநிலாச்சிரிப்பதனில்
  இவ்வியதார்த்த வாழ்வனைத்தும் மகிழ்ச்சி பொங்குதடி!

  வரம்பெற்று வாராதுபோல்வந்த நித்தம்வளரு மென்னிளமதிக்கு
  சிரி(ஶ்ரீமதி) எனப்பெயரிட்டு சீராட்டி அன்பாலே வளர்த்தேனே.

  புண்ணியம்பல செய்தேனுனை ஈன்றெடுக்க
  புதுப்பிறவி எடுத்தாலும் நீயே எனக்கு மகளாவாய்

  சூரியனைப் போன்றயுன்முகம் பார்ப்பின்
  தாமரை போன்றுஎன்முகம் விரிந்துமலரும்

  பட்டாம்பூச்சியின் இறக்கைபோன்ற மென்மையுன் விரல்களின்
  பட்டுப்போன்ற ஸ்பரிசத்தால், உடல்ரத்தம் உறையுதடி

  கனிந்த உன்முகம் காணுகையில், கவலையெல்லாம்
  காற்றடித்த மேகம்போல் கரையுதடி நொடிப்பொழுதில்

  இருகையால் தூக்கியுனை உச்சி மோர்ந்தால்
  இருதயமும் மூச்சுமொருகணம் பூரிப்பால்நிக்குதடி

  என்னிதயம் துடிக்க அடைப்பிதழேதும் தேவையில்லை
  உன்னிமைத்துடிப்பில் என்னிதயம் சீராக இயங்குமன்றோ.

  உன்மழலைப் பார்வையொன்றே போதும்
  என்நாவி சைக்கும் பலபாக்கள் நொடிப்பொழுதில்

  என் நெஞ்சில்தவழ்தாடு முனைப்பார்க்கும் போதெல்லாம்
  “என்நெஞ்சில்பள்ளிகொண்டவன்” பாடல் பலமாகக்கேட்குதப்பா!

  அன்புடன்
  பெருவை பார்த்தசாரதி

  =======================================================================
  பி.கு::

  இறைவனிட மிரைந்துயான்பெற்ற….இறைவனிடம் பணிந்து நாம் கேட்கின்ற எதுவாயினும் நிச்சயம் பலனுண்டு.

  வரம்பெற்று வாராதுபோல்வந்த….எந்த ஒரு பொருளையும் எளிதில் அடைந்துவிட்டால் அதில் மகிழ்ச்சி இருக்காது, அதுவே கஷ்டப்பட்டு நாமடைந்ததாக இருந்தால் என்றும் மகிழ்ச்சி நிலைத்து இருக்கும். அதுபோல இரைவனிடம் வரம்பெறுவது எளிதல்ல கடினம்

  என்னிதயம் துடிக்க அடைப்பிதழேதும் தேவையில்லை….இதயம் துடிப்பதற்கு வால்வ் தேவையில்லை என்கிற பொருள்படும்

  ======================================================================

 • செண்பக ஜெகதீசன்
  Shenbaga jagatheesan wrote on 14 January, 2017, 19:32

  வேண்டாம் அந்த விபரீதம்…

  தெரிந்துகொள் தம்பி தெரிந்துகொள்,
  தோள்கள் இவை உன்னைத்
  தூக்கிச் சுமந்த
  தந்தையின் தோள்கள்..

  உலகம் பார்க்க உன்னை
  உயர்த்திப் பிடித்து,
  உயர்த்திக் காட்டிய தோள்கள்..

  உன்னை உருவாக்கிடவே
  உழைத்து உழைத்து
  உரமேறிய தோள்கள்..

  அந்தத்
  தோள்சாய்ந்த நீ
  தோள்கொடு முதுமையில்
  தந்தை தலைசாய்க்க..

  ஏற்றிவிட்ட அவரை
  எந்தக் காரணம் காட்டியும்
  ஏற்றிவிடாதே
  முதியோர் இல்லப் படியில்…!

  -செண்பக ஜெகதீசன்…

 • pravin wrote on 14 January, 2017, 23:43

  @Peruvai Sarathi…உவமை நன்றாக இருந்தது.

 • Radha viswanathan wrote on 15 January, 2017, 17:43

  தோளுக்காக ஏக்கம்

  சிரசு மட்டும் பிரதானமில்லை
  எண் சாண் உடலில்
  இதோ இத் தோள்களும் தான்

  தோளுக்குத்தான் எத்தனை பெருமை
  தோள் கண்டார் தோளே கண்டார் -என‌
  பேசுகிறது இராம கதை

  அண்ணல் இராமன், தம்பி இலக்குவன்
  ஏறிச் சென்றதோ அனுமனின் தோளிலே தானே

  இன்பச் சுமையை இதயம் தாங்கும்
  துன்பச் சுமைக்கென இருப்பது இத்தோளே

  காதலி, பிள்ளை, தோழ்ன், தோழி இவர்களை மட்டுமா
  பெற்றவர்களையும் சுமக்கவே இத் தோள்கள்

  ஆனால் இன்றோ அந்நிய நாட்டிற்கு சென்று விட்டது இத் தோள்
  படிப்பு பட்டம் வலிமை கொண்ட தோள்களை
  வாரிக் கொடுத்து விட்டு வாசலில்
  ஏங்கிக் கிடக்கிறது நம்பிக்கையை கையிலேந்தி
  இளமையும் முதுமையும்
  வலிமைத் தோளில் சாய்வதற்கும் வழி நடத்தவும்

 • வெங்கடாசலம்.பா wrote on 21 January, 2017, 13:16

  ஜல்லிக்கட்டு
  இது நம் தமிழ்
  பாரம்பரியத்தின்
  பாரம் மிகுந்த விளையாட்டல்ல
  வீரம் மிகுந்த விளையாட்டு
  தமிழ்ச் சாரம் நிறைந்த விளையாட்டு
  இன்றோ
  ஓரம் நிற்கும் விளையாட்டு

  பீட்டா அமைப்பே
  ஜல்லிக்கட்டை முடித்தாய் நீட்டா
  மக்களே பீட்டா அலுவலகத்தில்
  பூட்டுவோம் பெரிய பூட்டா
  பீட்டாவை விரட்டியட

Write a Comment [மறுமொழி இடவும்]


one + 6 =


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.