அண்ணாமலை சுகுமாரன்

ans-1-1

இந்தத் தொடரின் சென்றபகுதியில் பிரின்செப் இந்திய வரலாற்றில் மிக முக்கியமான ஒருவரை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் எனக் குறிப்பிட்டிருந்தேன் .

அந்த மிக முக்கிய ஒருவர் வேறு யாரும் இல்லை. அசோகர் தி கிரேட் தான் அவர் . அசோகர் என்று ஒரு அரசர் இருந்தார் என்பதை பண்டைய இலக்கியங்கள் மட்டுமே கூறிவந்தன. ஆயினும் எந்த ஒரு அறிவியல் ஆதாரங்கள் கொண்டும் அந்த வரலாறு அப்போது நிறுவப்படவில்லை .

அசோகர் என்ற ஒருவர் இருந்தாரா அல்லது வெறும் தொன்மக்கதைகளில் சித்தரிக்கப்படும் கற்பனைப் பாத்திரமா என்ற ஐயம் அந்தக்கால வரலாற்றறிஞர்களிடையே இருந்து வந்தது. அசோகாவதானம் எனும் இரண்டாம் நூற்றாண்டு சம்ஸ்கிருத நூலொன்றும், இலங்கையின் பண்டைய தீபவம்சம், மகாவம்சம் போன்றவை இரண்டும் புராணக்கதைகளின் மிகைப்படுத்தல்களோடு அசோகரின் வாழ்க்கை சம்பவங்கள் பலவற்றை சித்தரிக்கின்றன.

ஒரு நாடக கதாப்பாத்திரம் போன்று கலிங்கப் பெரும் போரை நிகழ்த்தி பின்னர் போரை வெறுத்து பௌத்த நெறிமுறையின்படி தேசத்தை ஆண்டு வந்தவர் என்று விவரிக்கப்பட்டிருந்தது . ஆயினும் இத்தகைய செய்திகள் வரலாற்றுச் சான்றுகளைக் கொண்டு அந்தக் காலக்கட்டத்தில் நிறுவப்படவில்லை .

இந்திய வரலாற்றின் கடந்துபோன இந்த இருபது நூற்றாண்டில் ,குறைந்தது பாதி கால அளவில் இந்தியா அடுத்தவர்களின் ஆளுமையிலோ அல்லது ஆக்கிரமிப்பிலோதான் இருந்திருக்கிறது .

தமிழ் நாட்டை எடுத்துக்கொண்டால் கி. பி. 14ஆம் நூற்றாண்டுக்குப் பின் தொடர்ந்து மாறி மாறி தமிழர் அல்லாத பிறரால் ஆளப்பட்டு வந்திருக்கிறது . 6ஆம் நூற்றாண்டுக்கு முன் சுமார் 300 வருடங்கள் களப்பிரர்கள் ஆளுகையில் இருண்டகாலமாக இருந்தது எனக் கூறப்படுகிறது .இத்தகைய சூழலில் ,இந்தியா எங்கும் தொல்லியல் எச்சங்கள் அந்தக்காலக்கட்டத்தில் மிகுந்து தொகுப்பாரின்றி கிடந்தன ..
அவ்வாறே அசோகரால் அமைக்கப்பட்ட ஸ்தூபிகளும் ,பாறை கல்வெட்டுகளும் இந்தியாவெங்கும் , தமிழ் நாட்டைத்தவிர இலங்கையிலும் பல இடங்களில் கிடைத்தன. ஆயினும் அந்தக்காலக்கட்டத்தில் அவைகள் அசோகரால் அமைக்கப்பட்டது என யாருக்கும் தெரியாது ,அதில் எழுதப்பட்டிருக்கும் விநோதமான எழுத்துக்கள் அடங்கிய வாசகங்கள் என்பது அப்போது யாருக்கும் புரியவும் இல்லை .

கி. மு. 273-முதல் 236 வரை ஆட்சி புரிந்த அசோகர் , அவரின் ஆட்சியின் கடைசிப் பகுதியில் புத்த மதத்திற்கு மாறியபின் இந்தியாவில் தமிழ் நாட்டைத் தவிர,மேலும் இலங்கையிலும் புத்த மத கொள்கைகளையும் , இதர தர்ம நீதிகளையும், அசோகர் செய்த மக்கள் தொண்டு விவரங்களையும் கல்லில், தூண்களிலும் , பாறைகளிலும் பொறித்து வைத்திருந்தார் . அசோகரின் கலைபடைப்புகளில் முதன்மையானவை மௌரியப் பேரரசு முழுமையும் அவர் நிறுவிய தூண் சாசனங்கள். 40 முதல் 50 அடி உயரத்தினதாய் வான் நோக்கிய தூண்கள். அவைகள் இரண்டு விதமான கற்களினால் செய்யப்பட்டிருந்தன. தூணின் நடுக்கம்பத்திற்கு ஒன்று ; தூண் சிகரத்திற்கு இன்னொன்று. நடுக்கம்பம் ஒற்றைக் கல்லிலிருந்து வெட்டப்பட்டதாக இருக்கும்.

பௌத்த சமயக் கொள்கைகளைப் பரப்பும்பொருட்டு நிறுவப்பட்ட தூண்களின் சிகரத்தில் விலங்குகளின் சிற்பங்கள் அமைக்கப்பட்டிருந்தன . பௌத்த சமயத்தின் பரவலான சின்னமாக இருக்கும் தாமரை மலரை தலைகீழாக்கி அதன் மேல் விலங்குகளின் சிலை அமைக்கப்பட்டிருக்கும் ; சிங்கம் அல்லது நின்ற நிலை அல்லது உட்கார்ந்த நிலையில் மாடு ஆகிவையாகும் .

நான் பள்ளி இறுதி வகுப்பு படித்த போது (1965), எங்களுக்கு சமூகம் என்று ஒரு பாடம் இருந்தது. அதில் இரண்டு பிரிவுகள் உண்டு . ஒன்று சரித்திரம் மற்றது பூகோளம் , ஒவ்வொன்றுக்கும் 50 மதிப்பெண்கள் .
இதில் சரித்திரம் என்பது மதிப்பெண் எடுக்க எளிதானது என்பது எங்கள் எண்ணம் .ஏனெனில் எப்படியும் அசோகரின் ஆட்சிக்காலம் அல்லது அக்பரின் ஆட்சிக்காலம் அல்லது வேறு ஒரு மன்னரின் ஆட்சிக்காலம் ஏன் பொற்காலம் என்று ஒன்று அல்லது இரு கேள்வி நிச்சயம் அந்தப்பாடத்தில் வரும் என்பது தெரியும் ..

அதற்கு பதில் என்னவோ ஒரே மாதிரிதான் , நாடு முழுவதும் சாலைகள் அமைத்தார் ,நிழல் தரும் மரங்கள் நட்டார், கிணறுகள் அமைத்தார் ,மனிதர்களுக்கும் ,மிருகங்களுக்கும் மருத்துவ மனைகள் அமைத்தார், இத்தியாதி ,இத்தியாதிகள் .

இதில் ஒரு வேடிக்கையான உண்மை என்னவென்றால் இத்தனை மக்கள் பணிகளை தான் செய்ததாக அசோகர் தனது சாசனங்களில் பொறித்து வைத்திருந்தார் . இவைகள் அத்தனையும் சுமார் 2500 ஆண்டுகளாக கல்லில் பொறிக்கப்பட்டு ,படிக்க ஆளில்லாமல் காத்துக்கிடந்தது .அசோகரின் சீர்திருத்தங்களையும் கொள்கைகளையும் குடிமக்களுக்கு வழங்கிய அறிவுரைகளையும் நவீன உலகிற்கு பறை சாற்றின. நன்னெறிகளின் அடிப்படையில் ஒரு பேரரசை நிறுவிய ஆற்றல் மிகு பேரரசரின் நல்ல எண்ணத்தை இக்கல்வெட்டுகள் மூலம் நமக்கு அறியவருகிறது .

அசோகர் ஸ்தம்பங்கள் பிற்காலத்தில் வந்த சில பேரரசர்களின் கவனத்தைக் கவர்ந்தன. அவைகளில் பொறிக்கப்பட்டிருந்தது என்ன என்று அப்போது புரியாவிட்டாலும் அதன் வனப்பு பலரையும் கவர்ந்தது .எனவே அவைகளைப் பெயர்த்தெடுத்து வந்து தாங்கள் விரும்பிய இடங்களில் அமைத்துக் கொண்டனர் . அந்த சமயத்தில் இந்தியா வந்த சீன யாத்திரீகர்கள் பாஹியான் மற்றும் யுவான்சுவாங் அசோகர் ஸ்தூபிகளைப் பார்த்தார்களே தவிர அதில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துகளை படிக்கவோ அல்லது படிக்காத தெரிந்த உள்ளூர் வாசிகளையோ பெற இயலவில்லை .எனவே யூகத்தின் அடிப்படையில் தவறான விளக்கங்களைத் தந்து சென்றனர் .

அலகாபாதின் அசோகா ஸ்தம்பம் போல், தில்லியில் இருக்கும் இரண்டு அசோக ஸ்தம்பங்களும் மீரட் மற்றும் அம்பாலாவில் இருந்து எடுத்து வரப்பட்டவை . 14ஆம் நூற்றாண்டில் தில்லியை ஆண்ட பெரோஸ் ஷா துக்ளக் என்கிற மன்னரால் அவை எடுத்துவரப்பட்டன . . இவ்விரண்டு ஸ்தம்பங்களிலும் சிகரம் இல்லை. புராதன கௌஷம்பி நகரத்தில் நிறுவப்பட்ட ஸ்தம்பம் இன்று அலஹாபாத்தில் திரிவேணி சங்கமத்துக்கு அருகில் முகலாயப் பேரரசர் அக்பர் கட்டிய கோட்டைக்குள் காணப்படுகிறது.

இவ்வாறு காட்சியளித்த ஸ்தூபிகளை ஒரு முறை குதிரையில் உலா போகும்போது இரண்டு பெரிய உயரமான தூண்களை பிரிசெப் பார்த்திருக்கிறார். அதில் இருந்த விநோதமான எழுத்துகள் அடங்கிய வாசகங்கள் அவரை ஈர்க்கின்றன. இது என்ன மொழி என்று அங்குள்ள மக்களிடமும் அறிஞர்களிடமும் கேட்கிறார். யாருக்கும் சரிவரத் தெரியவில்லை. அவைகள் அலெக்ஸாண்டர் இந்தியாவுக்கு படைஎடுத்து வென்ற பிறகு எழுதி வைத்த கல்வெட்டு என சில புத்திசாலிகள் பிரின்செப்பீடம் கூறினார்கள் அலெக்சாண்டர் எங்கே டில்லி வந்தார்? அவர் பஞ்சாப் பாதி கூட வரவில்லையே என்று அவைகளை நிராகரித்தார் பிரின்செப்.

பிரின்செப் “ஏஸியாட்டிக் சொசைட்டி” என்று ஆராய்ச்சி சங்கத்தில் இருந்ததாலும் ஆங்கிலேயே அரசில் உயர் பதவியில் இருந்ததாலும் , இது மாதிரி எழுத்துகள் இந்தியாவில் எங்கெல்லாம் இருக்கிறது என்று தேடச் சொல்கிறார்.

அவரே ஒரு முறை ஒரு ஸ்தூபியின் சிறிய உடைந்த பகுதியை பார்க்கிறார். அதில் மூன்று வாக்கியத்தில் மூன்று இடத்திலும் ஒரே வார்த்தைகள் இருக்கின்றன. அதைப்பார்த்த பிரின்செப்சுக்கு ஒரு வித்தியாசமான எண்ணம் , ஐசக் நியூட்டனுக்கு வந்ததுபோல் இவருக்கும் வந்தது .

பொதுவாக யாராவது ஒரு தர்மம் ,கொடை இவைகளைக் கொடுத்தால் அதை வாக்கியத்தின் முதலிலோ அல்லது இறுதியிலோ தானம் தந்தது இன்னார் என்று எழுதிவைக்கும் வழக்கம் அன்றே இருந்திருக்கிறது. சமஸ்கிருதத்திலும் “தா,ன,ம்” என்றுதான் அது வரும். அதுமாதிரி இந்த வினோதமான வித்தியாச எழுத்து மொழியில் ஏன் இந்த மூன்று எழுத்துகளும் “தா அல்லது த” , “ன” “ம்” என்பதை குறிப்பதாக இருக்கக்கூடாது என பிடித்து விட்டார். இவ்வாறு தில்லியில் இருக்கும் ஒரு ஸ்தம்பத்தில் பொறிக்கப்பட்டிருந்த வித்தியாசமான பொறிப்பில் மூன்று எழுத்துகளைப் புரிந்துகொண்டது ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது “தேவனாம்பிய” (தெய்வங்களுக்கு பிரியமானவன்) “பியதஸ்சி” (மக்களை அன்புடன் கருதுபவன்) போன்ற பட்டப் பெயர்கள் தில்லி ஸ்தம்பத்தில் மட்டுமில்லாமல் வேறு பல ஸ்தம்பங்களிலும் பொறிக்கப்பட்டிருப்பது மெல்ல மெல்லத் தெரிய வந்தது.

அந்த எழுத்து எதோ காரணத்தால் பிராமி எழுத்து எனப்பட்டது. பிரம்மன் உண்டாக்கியதால் பிராமி எனப்பெயர் பெற்றது என்பவர்களும் உண்டு. இந்தியாவில் இருந்து எல்லா பிராமி எழுத்துகள் கல்வெட்டையும் பிரதி எடுத்து ஒவ்வொன்றாய் கண்டுபிடித்தார். அந்த பிராமி எழுத்துகளுக்கும் “பாலி” மொழிக்கும் சம்பந்தம் இருப்பதைச் சொன்னார்.

எல்லா வாக்கியங்களிலும் “தேவாம்சி பியதாசி” என்று ராஜா பேர் சொல்லப்பட்டதால் பிரின்ஸ்செப்புக்கு குழப்பம் வந்தது. ராஜாவின் பேர் “பியதாசி” என்பதா இன்னும்வேறு ஏதாவது இருக்கிறதா என்ற குழப்பம் வந்தது.

இதற்கிடையே தரவுகளைத் தேடச் சொன்ன ஆணைக்கு பலன்கள் வரத் தொடங்கின . இலங்கையிலிருந்து தகவல் ஒன்று வருகிறது. அங்கே கிடைத்த இலங்கை மன்னன் பற்றிய கல்வெட்டிலும் இலங்கை மன்னன் பேர்” தேவநாம்சி பியதாசி” என்றே போட்டிருக்கிறது. என்பதே அது .

இன்னொரு தகவல் கர்நாடகம் மைசூரில் மாஸ்கி என்ற இடத்தில் கிடைத்த கல்வெட்டுகளில் மன்னன் பெயர்” தேவநாம்சி பியதாசி அசோகன்” என்று இருக்கிறது.

எனவே அந்த தேவநாம்சி பியதாசி எனும் சக்கரவர்த்தியின் பெயர் அசோகர் என்பது உறுதியானது. இந்திய வரலாற்றில் இந்த கண்டுபிடிப்பு எத்தனை முக்கியம் வாய்ந்தது என்பது இப்போது நம் அனைவருக்கும் தெரியும். அசோக சக்கரவர்த்தியின் புரிதலுக்குப் பிறகு இந்திய வரலாறு படிப்படியாக உருப்பெற ஆரம்பித்தது .பிராமி எனும் எழுத்து படிக்கக் கூடியதாயிற்று .பல கல்வெட்டுகள் பாதிக்கப்பட்டன .

சாரநாத்தின் அசோக ஸ்தூபியை அலங்கரித்த நான்கு சிங்கங்களின் சிகரம் அதிக முக்கியமானது. அதுவே நமது இந்திய அரசின் தேசியச் சின்னம் ஆனது . . நான்கு சிங்கங்கள் பின்னுக்குப் பின்னாக நிற்பதை சித்தரிக்கிறது. அந்த சிங்கச் சிலைகள் ஒரு வட்ட சட்டத்தின் மேல் பொருத்தப்பட்டிருக்கின்றன. அந்த வட்ட சட்டத்தைச் சுற்றி செதுக்கப்பட்ட யானை, ஓடும் குதிரை, மாடு, சிங்கம் – இவற்றுக்கிடையிடையே 24 ஆரங்களையுடைய சக்கரங்கள் மணி வடிவ தலைகீழ்த் தாமரையின் மேல் வைக்கப்பட்டுள்ளன.

அந்த 24 ஆரங்கள் உள்ள தர்ம சக்கரம்தான் நமது தேசியக் கொடியில் நடுவில் இடம்பெற்று பட்டொளி வீசிப் பறக்கிறது. அசோகரின் அத்தனை பாறைக்கல்வெட்டுகளும் ,ஸ்தூபிகளும் சொன்ன கருத்துகள் அத்தனையும் மக்களுக்குத் தெரிய வந்தன .இந்த வகையில் பிரின்செப் செய்த தொண்டு, அவரின் ஆர்வம் இந்திய வரலாற்றின் ஒரு மிக முக்கிய தொடக்கத்தை ஆதாரப்பூர்வமாக அறிவித்தது .

அசோகர் தி கிரேட் என அசோகர் பெயர் பெற்றார் .தென்னாட்டில் பிரின்செப் மாதிரி ஒரு ஆய்வாளர் நமது ராஜராஜன் போன்றோரை அறிவியல் உலகத்திற்கு ஆதாரங்களுடன் தக்க முறையில் அறிமுகம் செய்யாததால் நமது பேரரசர் ராஜராஜன் , ராஜராஜன் தி கிரேட் என அழைக்கப்படவில்லை .

சந்திர குப்த மவுரியரின் பேரனான அசோகர் பற்றி அதுவரை வரலாறு கவனிக்கவில்லை. அவரை ஒரு அடையாளம் தெரியாத மன்னர் என்றே நினைத்து வந்துள்ளனர். ஆனால் பிரின்செப்ஸ் என்ற ஆங்கிலேயர்தான் அசோகரை வரலாற்றுக்கு அறிமுகம் செய்துவைத்தார் .

பிறகு அசோகரின் எல்லா கல்வெட்டுகளையும் படித்து முடித்தார். அவர் படித்து புரிந்து கொண்டதில் சில இவை. எல்லா மன்னர்கள் போல இந்திரன் சந்திரன் என்று மட்டும் அசோகர் தன்னை பற்றி எழுதிவைக்கவில்லை. தன்னை ஒரு அவதாரமாக முன்னிருத்தவே செய்யவில்லை. தான் செய்த பாவங்களையும் கல்வெட்டிலே செதுக்கியுள்ளார். பல இடங்களில் வெட்கத்தை விட்டு மன்னிப்பும் கேட்டிருக்கிறார். அசோகர் காலத்தில் மிருகவதை கடுமையாக தடுக்கப்பட்டுள்ளது.

தம்மா என்ற தர்ம சக்கரத்தை அடிப்படையாகக் கொண்டு மிகப்பெரிய தர்மம் பற்றிய சிந்தனையுடன் வாழ்ந்திருக்கிறார் அசோகர்.

இதுபோன்று இன்னமும் நிறைய உள்ளன. ஆயினும் இந்த கட்டுரை அசோகர் பற்றிய கட்டுரை அல்ல. இது வரலாற்றின் வேர்களாக இருந்த பிரின்செப்போன்றவர்களின் வரலாற்றுத் தொடர் .எனவே இந்த கல்வெட்டு கூறும் விபரங்களை இத்துடன் நிறுத்திக்கொள்வோம்.

அதே சமயம் இது எந்த வகையிலும் நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் நமக்கு செய்து விட்டுப்போன அநியாயங்களை மறந்து விட்டு அவர்களை நியாயப்படுத்தும் முயற்சியும் அல்ல .

அவர்கள் அந்தக்காலகட்டத்தில் கிடைத்த ஆதாரங்களைத் தொகுத்து அவர்கள் புரிந்து கொண்ட வகையில் அல்லது அவர்களுக்கு அருகாமையில் இருந்தவர்களால் சொல்லப்பட்ட நமது வரலாற்றை இவர்கள் உலகுக்கு அறிமுகம் செய்தனர் .

அவர்கள் கூறிய வரலாறு அத்தனையும் உண்மையானவை என்று நாம் எடுத்துக்கொள்வது தேவையில்லை . ஆயினும் அதை உறுதியாக மறுக்கும் வகையில் அடுத்த புதிய ஆதாரம் நமக்கு கிடைக்கும்வரை நம்மால் அதை மறுக்கவும் முடியாது .

இந்தத் தொடர் இந்திய வரலாறு எழும்ப பல ஆதாரங்களைத் தொகுக்க உதவியவர்களை அறிமுகம் செய்யும் முயற்சி மட்டுமே . வரலாறு என்றுமே மாறுதலுக்கு உட்பட்டது . அசோகரின் பல பாறைக் கல்வெட்டுகளை படித்த பிரின்செப் தமிழ் நாட்டின் சங்க காலத்தை உறுதி செய்யும் சில சான்றுகளையும் கண்டெடுத்தார் . அவைகளை அடுத்த வாரம் காணலாம் .

நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *