-அண்ணாமலை சுகுமாரன்

ANS-1-1 (1)

கடந்து போன 19ம் நூற்றாண்டில் இந்திய துணைக்கண்டம் முழுமையும் (இந்தியா, நேபாளம் , பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை , அவை அத்தனையும் அப்போது ஆங்கிலேயர் ஆளுகையில் இருந்தன )அசோகரின் கல்வெட்டுகள் மிக அதிகமாக கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் அவைகள் பிரின்செப்பின் முன்னெடுப்பால் புரிந்து கொள்ளப்பட்டன .. இந்திய வரலாற்றின் மிகப் பழமையான, குறிப்பிடத்தக்க நீளமான, முழுதும் புரிந்து கொள்ளப்பட்ட கல்வெட்டுகள் அசோகர் காலத்தவை மட்டுமே எனலாம். இதற்கு வழி வகுத்தது பிரின்செப் தான் என அந்தக்காலத்தில் அறியப்பட்டது .

அசோகரின் கல்வெட்டுகள் பெருவாரியாக தூண் மற்றும் பாறைக்கல்வெட்டு என இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டன . பாறைக்கல்வெட்டுகள் மேலும் மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டன .அவை சிறு பாறை கல்வெட்டுகள் , கற்பாறை ஆணைகள் மற்றும் குகைக்கல்வெட்டுகள் ஆகும் .

இவைகளைப் பற்றிய விரிவானத் தகவல்கள் ,இந்த கல்வெட்டுகள் தெரிவிக்கும் செய்திகள் மற்றும் கருத்துகள் சுவையானவை எனினும் நாம் பிரின்செப் பற்றிய தகவல்ளைத் தொகுப்பதாலும் , அவர் கண்டுபிடித்த கல்வெட்டுகளில் கிடைத்த தமிழ் நாட்டைப் பற்றிய தகவல்களில் மட்டுமே குறிப்பிட விரும்புவதால் , அதைப்பற்றிய செய்தியை மட்டும் இனி பார்க்கலாம் .இல்லையேல் இந்தத் தொடர் பாதை மாறிவிடும் .

பொதுவாக அசோகர் தூண்களிலும் , கற்பாறைகளிலும், குகைச்சுவர்களிலும் பொறிக்கப்பட்ட அரசாணைகள், பிரகடனங்கள் எல்லாம் அசோகரின் சீர்திருத்தங்களையும் கொள்கைகளையும் குடிமக்களுக்கு வழங்கிய அறிவுரைகளையும் பறை சாற்றின. ஆயினும் அவற்றில் இரண்டாவது பாறைக்கல்வெட்டும் , 13 வது பாறைக்கல்வெட்டும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது .

இரண்டாவது பாறைக்கல்வெட்டு இவ்வாறு கூறுகிறது ,

1. ஸர்வத் விஜிதே(ம்)ஹி தேவாநாம்பிர்யஸ பிர்யதர்ஸினோ ராஞோ
2. ஏவமபி ப்ர சந்தேஸீ யதா சோடா, பாடா ஸதியபுதோ கேதளபுதோ ஆ தம்ப
3. பர்ணி அன்தியோகோ யோன ராஜா யே வாபி அன்தியகஸ் ஸாமிநோ
4. ராஜானோ ஸவத தேவனாம் பியஸ ப்ரிய (பிய) தஸினோ ராஞோ த்வே சிகீச்சா கதா
5. மனுஸ சிகிச்சா ச பஸீ சிகிச்சா ச ஔஸீதானி ச யாநி மனுசோபதானி ச
6. பஸோ ப கானி ச யத் யத் நாஸ்தி ஸர்வத்ர ஹாரா பிதானி ச ரோபா பிதானிச
7. முலானி ச ஃபலானிச யத் யத் நாஸ்தி ஸர்வத் ஹாரா பிதானி ச ரோபாபிதானி
8. பந்தேஸீ கூபா ச கானாபிதா வ்ருச்சா ச ரோபா பிதா பரிபோக்ய பஸீ மனுஸாநம்

தேவனுக்குப் பிரியமானவன் என குறிப்பிடப்பெறும் . அசோகர் தமது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் மட்டுமின்றி அண்டை நாடுகளான , சோழ, பாண்டிய, ஸத்தியபுத்திரர், கேரளபுத்திரர் மற்றும் அவருடைய அண்டைநாடுகளுக்கும் இரு வகை மருத்துவங்கள் அளிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளதை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது . அதாவது மனிதருக்கும் விலங்கினங்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பெறுதல் வேண்டும். எங்கெல்லாம் மூலிகைச் செடிகளும் பழம் தரும் மரங்களும் இல்லையோ, அவைகள் கிடைக்கும் இடங்களிலிருந்து தருவித்து இல்லாத இடங்களில் நடப்படவேண்டும் என்றும், பசுக்கள் நீர் அருந்த கிணறு போன்ற நீர் நிலைகள் ஏற்படுத்தவேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றது. இவ்விதமாகப் பசுக்களும், மனிதர்களும் , மகிழ்வுடன் வாழவேண்டும் என்று அந்தக் கல்வெட்டு கூறுகிறது.

இக்கல்வெட்டில் தமிழகத்தில் சங்க காலத்தில் வாழ்ந்த அரசர்களின் வம்ச பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதனால் அசோகருக்கு இணையான காலத்தில் ( கி மு 3ஆம் நூற்றாண்டுகளில்) தமிழ் மன்னர்கள் தமிழ் நாட்டுப்பகுதியில் வாழ்ந்தது தெளிவாகிறது .நமது சங்க இலக்கியங்கள் கூறும் செய்திகளுக்கு ஒரு வரலாற்று ஆதாரம் தமிழ் நாட்டுடன் சம்பந்தம் இல்லாத அசோகர் மூலம் வட இந்தியாவில் இருந்து கிடைக்கிறது .இது நமது தமிழக வரலாற்றிற்கு மிக முக்கிய சான்று ஆகும் . எனவேதான் இவைகளை சற்று விரிவாக எழுதினேன் .

தமிழக வரலாற்றை குறிப்பாக சங்க காலத்தை கி பி .8ஆம் நூற்றாண்டு என மிகவும் பின்னோக்கி கொண்டு செல்லும் “டிக்கன்” போன்ற அறிஞர்களின் கருத்துகளைத் தவறானவை என இக்கல்வெட்டு மூலம் மெய்ப்பிக்க நமக்கு தக்க சான்றுகள் கிடைத்திருக்கிறது ..

அசோகர் தனது அண்டை நாடாகக் குறிப்பிடுவதால் அசோகரின் ஆட்சியோ படையெடுப்போ தமிழகத்தில் நிகழவில்லை என்பது அவரது கல்வெட்டு மூலமே உறுதியாகிறது தமிழ் மன்னர்கள் இக்காலத்தில் ( கி மு 300)மிக வலிமைகொண்டு விளங்கியுள்ளனர் என்பதை அறிய முடிகிறது இவை வெளிவர உதவியவர் பிரின்செப் தான் என்பது நாம் அவரை நினைவு கூறுவது முக்கியமானதாகும் .

தமிழ் மன்னர்கள் மட்டுமின்றி ஸத்தியபுத்திரர் என்ற ஒரு வம்சத்தின் பெயரோ அல்லது மன்னரின் பெயர் அந்தக் கல்வெட்டில் இடம்பெற்றிருந்தது ஸத்தியபுத்திரர் என்பது யாரைக் குறிப்பிடுகிறது என்பது நீண்ட காலம் ஒருபுரியாத, விடை தெரியாத கேள்வியாகவே இருந்துவந்தது .
அந்த புதிரை திருக்கோவிலூர் அருகே ஜம்பை எனும் ஊரில் கிடைத்த ஒரு கல்வெட்டு புரியவைத்தது .இவ்வூரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள குகை ஒன்றிலேயே இக் கல்வெட்டு அமைந்துள்ளது.

கி.மு. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கணிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டு தமிழ்நாட்டு வரலாற்றைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் கொண்ட ஒரு கல்வெட்டாகக் கருதப்படுகின்றது.

சங்ககாலத் தமிழ் இலக்கியமான புறநானூற்றில் பேசப்படுபவனும், தகடூர்த் தலைவனுமாகிய அதியமான் நெடுமானஞ்சி ஒரு குகை வாழிடத்தைத் தானமாகக் கொடுத்ததை இக் கல்வெட்டு அறிவிக்கின்றது.

கல்வெட்டின் செய்தி: ஸத்திய புத்திரன் அதியன் நெடுமான் அஞ்சி என்பவர் தானமாகக் கொடுத்தே பாளி (சமணர் படுக்கை)

சங்ககால அரசன் ஒருவனின் பெயர் கொண்ட கல்வெட்டுச் சான்று ஒன்று கிடைத்தது இந்தக் கல்வெட்டின் சிறப்பு. அத்துடன், அதியமான் இந்தக் கல்வெட்டில் “சதிய புத்தோ” என்னும் அடை மொழியுடன் குறிப்பிடப்பட்டுள்ளார் . இதன்மூலம் அசோகனின் கல்வெட்டொன்றில், சேர, சோழ, பாண்டியர்களுடன்”சதிய புத்தோ” எனக் குறிப்பிடப்பட்டுள்ள அரசகுலம் எது என்பது குறித்து நிலவிய விவாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்தது

தமிழ் அரசர்களின் சிற்றரசர்காளாக விளங்கிய அதியமான் போன்றோரும் அசோகர் அறியும் வண்ணம் சிறப்புற்று விளங்கியுள்ளனர் என்பது தெளிவாகிறது. அசோகருக்கு அண்டை நாடாகக் குறிப்பிடப்படுவதால் அசோகரின் ஆட்சியோ படையெடுப்போ தமிழகத்தில் நிகழவில்லை என்பதை அறியலாம். தமிழ் மன்னர்கள் இக்காலத்தில் மிக வலிமைகொண்டு விளங்கியுள்ளனர் எனக் கூறலாம்.

இனி 13 வது பாறைக்கல்வெட்டு கூறும் தகவல்களைப் பார்க்கலாம்.

அவருடைய 13 வது பாறைக் கல்வெட்டில், தெற்கில் தம்பண்ணி அதாவது தாம்பரபரணி வரையான சோழ பாண்டிய நாடுகளில் தர்ம விஜயத்தில் வெற்றிகொண்டதாகக் கூறுகிறார் .

இதில் சதிய புத்தோ அதியமான் நெடுமானஞ்சி பெயர் இடம் பெறவில்லை கேரளா புத்திர எனும் சேரர் பெயர் இடம் பெறவில்லை . இதற்குக்காரணம் முந்தய கல்வெட்டுக்கு சில ஆண்டுகள் சென்றபின் இந்தக்கல்வெட்டுப் பொறிக்கப்பட்டதால் அப்போது அதியமான் இறந்து போயிருக்கலாம் என தமிழ் இலக்கியத்தில் கல்வெட்டியல் கூறுகள் எனற புத்தகத்தில் முனைவர் ஆ .ஜெகதீசன் கூறுகிறார் .
சேரர்கள் பாண்டியர்களால் வெல்லப்பட்டிருக்கலாம் .

மேலும் அசோகர் தாம்பரபரணி வரையான சோழ பாண்டிய நாடுகளில் தர்ம விஜயத்தில் வெற்றிகொண்டதாகக் கூறுகிறார் . போரில் வென்று இந்தப்பிரதேசங்களைக் கொண்டதாகக் கூற இயலாது . அவரது போதனைகள் அங்கே பரவியதாகத்தான் தர்ம விஜயம் என்று குறிப்பிடுகிறார் எனக் கொள்ளலாம் .

அதியமானைப்பற்றியும் தமிழ் மூவேந்தர் பற்றியும் வேறு ஒரு கல்வெட்டு தமிழ் நாட்டுக்கு வெளியே ஒரிசாவில் ( கலிங்கம் ) கிடைத்துள்ளது .

இதைக்கண்டுபிடித்ததில் நேரடியாக பிரின்செப் அவர்களுக்கு தொடர்பு இல்லை என்றாலும் ,இந்தத்தருணத்தில் இந்த கல்வெட்டுப்பற்றியும் தெரிந்துக் கொள்வதில் தவறில்லை எனலாம் .

இந்தியக் கல்வெட்டுகளிலேயே வரலாற்று நிகழ்ச்சிகளை அவை நடந்த ஆண்டுகளைக் குறிப்பிடும் முதல் கல்வெட்டு ஹத்திக்கும்பா கல்வெட்டாகத்தான் இருக்கக்கூடும். காரவேலன் என்ற மன்னர் தென்னாட்டில் அப்போது நிலவிய ஒரு கூட்டணியைப் பற்றிக் கூறுகிறார் .

அந்தக்கூட்டணி நிலவியதால் தமிழ் நாட்டை வெல்லவில்லை எனக் கூறுகிறார் .

, தமிழ் மூவேந்தர் உடன்பாடு பற்றிய குறிப்பில் 113 அல்லது 1300 ஆண்டு நீடித்திருந்த கூட்டணி என்றும், இந்தக் கல்வெட்டு ஆண்டுகளைக் குறிப்பிடுகிறது. தனசூலியக் கால்வாய் கட்டிய ஆண்டைப் பற்றிக் குறிப்பிடும் “நந்த ₃ ராஜ திவஸ ஸத” (नंदराज तिवस सत) என்பதை நந்தராசன் ஒருவனில் தொடங்கிய ஆண்டுக்கணக்கில் கொள்வதா அல்லது சமண சமயத்தைச் சார்ந்த காரவேல மன்னனுக்கு சமணத்தின் முக்கியமான வர்த்தமான மகாவீரர் மறைந்த ஆண்டிலிருந்து தொடங்கிய மகாவீரர் ஆண்டுக்கணக்கில் கொள்வதா என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. அதே போல “திவஸ ஸத” (மூன்று நூறு) என்பதை முந்நூறு என்று படிக்காமல் நூற்று மூன்று என்று ஏன் படிக்கிறார்கள் என்ற குழப்பம் இன்னமும் நிலவுகிறது . இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இயற்கையின் தாக்கத்தால் விளைந்த சேதங்கள் மட்டுமின்றி, சில எழுத்துகளின் மாறுபட்ட வடிவம், உளிக்குறிகளையும் எழுத்துகளையும் வேறுபடுத்த முடியாத குழப்பம், இவ்வைகளாலும் மழைநீராலும் சிதைந்த எழுத்துகள் என்று பலவற்றால் பதினேழு வரிகளைப் படிப்பதிலேயே ,அறிஞர்களிடையே சச்சரவுகளும் பல கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து வந்திருக்கின்றன

இவ்வாறு பிரின்செப் அவர்களின் சீரிய முன்னெடுப்பால் அசோகரின் பிராமி எழுத்துகள் புரிதல் தொடங்கியது .

அடுத்த வாரம் இன்னமும் சில முக்கிய நபர்களின் வரலாற்றுப் பங்களிப்பையும் , அதன் தாக்கம் என்ன என்பதையும் விபரமாகக்காணலாம்

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *