செண்பக ஜெகதீசன்

வாளோடென் வன்கண்ண ரல்லார்க்கு நூலோடென்
னுண்ணவை யஞ்சு பவர்க்கு. (திருக்குறள் -726: அவை அஞ்சாமை)

புதுக் கவிதையில்…

வீரமின்றி அஞ்சுபவர்
வைத்திருக்கும்
வாளினால் பயனேதுமில்லை… 

அறிவு மிக்கோர்
அவையில் செல்ல
அஞ்சுபவனுக்கு,
அவனிடமுள்ள நூலினால்
ஏது பயனுமில்லை…! 

குறும்பாவில்…

அஞ்சும் வீரமிலானின் வாளுக்கும்,
அறிஞர்தம் அவையஞ்சுவோனின் நூலுக்கும்
அறவே இல்லை பயனே…! 

மரபுக் கவிதையில்…

களத்தில் இறங்கி வீரத்துடன்
     -கத்தி யெடுத்துப் போராட
உளத்தில் அச்சம் கொண்டவரின்
   -வாளினால் ஏதும் பயனில்லை,
அளவிலா அறிவுடைச் சான்றோர்தம்
  -அவையினில் சென்று பேசுதற்கே
தளர்வொடு அஞ்சுவோன் நூலதாலும்
  -துளியும் இல்லை பயனதுவே…! 

லிமரைக்கூ… 

வாளினால் வெற்றியேதும் வராது
அஞ்சுவோன் கையிலிருந்தால், அவையஞ்சுவோன் நூலும்
அதுபோல் பலனேதும் தராது…! 

கிராமிய பாணியில்…

பயப்படாத பயப்படாத
படிச்சவுங்க சபயில பயப்படாத…

பயனில்ல பயனில்ல
கொஞ்சங்கூடப் பயனில்ல,
பயந்துசாவுறவன் கைவாளால
படயில ஒண்ணும் பயனில்ல… 

அதுபோல
படிச்சவுங்க சபயில போகத்தான்
பயப்படுறவனோட புத்தகத்தாலயும்
பயனில்ல பயனில்ல
கொஞ்சங்கூடப் பயனில்ல… 

அதால,
பயப்படாத பயப்படாத
படிச்சவுங்க சபயில பயப்படாத…!

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *