-முனைவர் க.துரையரசன்

சொல்லாத சொல்லிற்கு நீ எஜமான்; சொன்ன சொல்லுக்கு அது எஜமான் – இது நூற்றுக்கு நூறு உண்மை என்று அனுபவம் கூறுகிறது. இதைத்தான் வள்ளுவர்,

யாகவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.   (குறள். 127) என்று கூறியுள்ளார்.  பொருளற்ற சொற்களைப் பயன்படுத்தக்கூடாது என்பதைத் தொல்காப்பியர்,

“எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே”  (தொல். பெயரியல் நூ. 1)

thiruஎன்று வலியுறுத்துகிறார். இத்தகு சொற்பயன்பாடு குறித்த வள்ளுவர் கருத்துகளை இக்கட்டுரை முன்வைக்கிறது.

ஒத்த கருத்தை வலியுறுத்துவன:

அதிகாரந்தோறும் பத்து குறள்கள் என்று வள்ளுவர் தான் வகுத்துக் கொண்ட வரையறைக்குள் தாம் கூறவந்த பொருண்மையைக் கூறிமுடிக்க முடியாத சில இடங்கள் இருந்ததாகவே கருத வேண்டியுள்ளது. அதனால்தான் சில பொருண்மைகள் குறித்து ஒன்றுக்கு மேற்பட்ட அதிகாரங்களை வள்ளுவர் படைத்துள்ளார். ஒத்தக் கருத்துடைய அதிகாரங்களில் நுணுக்கமான பொருள் வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றை நாம் ஒரு பொருள் பற்றியவையாகவே கருத வேண்டும். அப்பொழுதுதான் வள்ளுவர் கூறவந்த பொருண்மை முழுமை அடைவதாக இருக்கும். அவ்வகையில் சொற்களைப் பயன்படுத்துவதில் உள்ள முக்கியத்துவம் குறித்து வள்ளுவர் ஐந்து அதிகாரங்களைப் படைத்துள்ளார். அவை:

  • இனியவை கூறல்   –   அதிகாரம் 10
  • பயனில சொல்லாமை – அதிகாரம் 20
  • சொல்வன்மை   –   அதிகாரம் 65
  • அவையறிதல்   –   அதிகாரம் 72
  • அவையஞ்சாமை –    அதிகாரம் 73

இங்ஙனம் ஒத்தப் பொருண்மையுடைய அதிகாரங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

நட்பு:

இப்பொருண்மையில் 5 அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவை:

  • சிற்றினம் சேராமை –     அதிகாரம் 46
  • நட்பு      –     அதிகாரம் 79
  • நட்பாராய்தல்      –     அதிகாரம் 80
  • தீநட்பு      –     அதிகாரம் 82
  • கூடாநட்பு      –     அதிகாரம் 83

குறிப்பறிதல்:

இப்பொருண்மையில் 3 அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவை:

  • குறிப்பறிதல்      –     அதிகாரம் 71
  • குறிப்பறிதல் –     அதிகாரம் 110
  • குறிப்பறிவுறுத்தல் –     அதிகாரம் 128

தெரிந்துசெயல்: 

இப்பொருண்மையில் 3 அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவை:

  • தெரிந்துசெயல்வகை –     அதிகாரம் 47
  • தெரிந்துதெளிதல் –     அதிகாரம் 51
  • தெரிந்துவினையாடல் –     அதிகாரம் 52

வினை:

இப்பொருண்மையில் 3 அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவை:

  • வினைத்தூய்மை –     அதிகாரம் 66
  • வினைத்திட்பம் –     அதிகாரம் 67
  • வினைசெயல்வகை –     அதிகாரம் 68

இல்வாழ்க்கை: 

இப்பொருண்மையில் 2 அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவை:

  • இல்வாழ்க்கை    –  அதிகாரம் 5
  • வாழ்க்கைத் துணைநலம் –  அதிகாரம் 6

கல்வி: 

இப்பொருண்மையில் 2 அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவை:

  • கல்வி –     அதிகாரம் 40
  • கல்லாமை – அதிகாரம் 41

குடிமை: 

இப்பொருண்மையில் 2 அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவை:

  • குடிமை –     அதிகாரம் 96
  • குடிசெயல்வகை –     அதிகாரம் 103

கொல்லாமை: 

இப்பொருண்மையில் 2 அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவை:

  • புலால் மறுத்தல் –     அதிகாரம் 26
  • கொல்லாமை –     அதிகாரம் 33

நெஞ்சு: 

இப்பொருண்மையில் 2 அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவை:

  • நெஞ்சொடு கிளத்தல் –     அதிகாரம் 125
  • நெஞ்சொடு புலத்தல் –     அதிகாரம் 130

படை: 

இப்பொருண்மையில் 2 அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவை:

  • படைமாட்சி –     அதிகாரம் 77
  • படைச்செருக்கு –     அதிகாரம் 78

புணர்ச்சி: 

இப்பொருண்மையில் 2 அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவை:

  • புணர்ச்சி மகிழ்தல் –     அதிகாரம் 111
  • புணர்ச்சி விதும்பல் –     அதிகாரம் 129

புலவி: 

இப்பொருண்மையில் 2 அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவை:

  • புலவி –     அதிகாரம் 131
  • புலவி நுணுக்கம் –     அதிகாரம் 132

பெரியார் தொடர்பு: 

இப்பொருண்மையில் 2 அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவை:

  • பெரியாரைத் துணைக்கோடல் அதிகாரம் 45
  • பெரியாரைப் பிழையாமை –     அதிகாரம் 90

மேற்காண் செய்திகளின் அடிப்படையில் நோக்கும்பொழுது சொற்பயன்பாடு, நட்பு ஆகிய இரண்டு பொருண்மைகளுக்கு மட்டுமே தலா ஐந்து அதிகாரங்களை வள்ளுவர் படைத்துள்ளார். பிற பொருண்மைகளுக்கு இரண்டு அல்லது மூன்று அதிகாரங்களைப் படைத்துள்ளார் என்பதைக் காணமுடிகிறது.

இனி, கட்டுரையின் பொருண்மையான சொற்பயன்பாடு குறித்துத் தொடர்ந்து நோக்கலாம். இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறியுள்ளதைப்போல இனியவை கூறல், பயனில சொல்லாமை, சொல்வன்மை, அவையறிதல், அவையஞ்சாமை ஆகிய ஐந்து அதிகாரங்களில் கூறப்பட்டுள்ள செய்திகள் ஒத்த தன்மையுடையவை அல்லது ஒத்தப் பொருண்மையுடையவை என்பதை ஆராய்வோம்.

இனியவை கூறல்: 

ஒருவன் இனிமையான சொற்களையே கூறவேண்டும் என்ற கருத்தை வற்புறுத்தும் வள்ளுவர் இனிய சொற்கள், அன்பு கலந்தவை – ஈதலின் நன்று – அறச்செயல் – அணிகலன் – இம்மையும் மறுமையும் இன்பம் பயப்பன – என்றெல்லாம் கூறி,

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. (குறள். 100) என்று வேதனையுடன் வினா எழுப்புகிறார்.

பயனில சொல்லாமை: 

இனிய சொற்களைக் கூறவேண்டும் என்று வலியுறுத்திய வள்ளுவர் பயனற்ற சொற்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்துகிறார். பயனில சொல்லுவான், எல்லாராலும் எள்ளப்படுவான் – நண்பர்களுக்குத் தீமை செய்வான் – அறம் இல்லாதவன் – மதிப்புக் கெடும் – மனிதன் என்று கூறார் – மக்கட்பதடி என்பர் – அறிவுடையோர் சொல்லார் – என்றெல்லாம் கூறி,

சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
சொல்லின் பயனிலாச் சொல்.     (குறள். 200) என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.

சொல்வன்மை: 

இனியவற்றைக் கூறுக, பயனில கூறற்க என்ற வள்ளுவர் சொல்வன்மையை நாநலம் என்றியம்புகிறார். நாநலம், எல்லா நலத்துள்ளும் உயர்ந்தது – ஆக்கமும் கேடும் வரும் – கேட்பாரைப் பிணிக்கும் – கேளாரைக் கேட்பிக்கும் – அறம் பொருளை விடச் சிறந்தது – சொலல் வல்லனை இகல்வெல்லல் அரிது – உலகம் ஏவல் கொள்ளும் என்றெல்லாம் கூறி,

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து. (குறள். 645)

என்று சொற்களைத் தேர்ந்து – சொல்லும் சொல்லை வெல்லும் சொல் இல்லை என்று அமையுமாறு சொல்ல வேண்டும் என்று கூறி சொல்வன்மையை வள்ளுவர் விளக்குகிறார்.

அவையறிதல்: 

இடம், பொருள், ஏவல் அறிந்து பேசவேண்டும் என்பர் அனுபவசாலிகள். இதை வள்ளுவர் அவையறிதலில் நன்கு விளக்கிக் கூறியுள்ளார்.

அவையறிந்து பேசவேண்டும் – ஆராய்ந்து பேசவேண்டும் – இடமறிந்து பேசவேண்டும் – அறிவுடையாரிடத்து அறிவுடையோராயும் அறிவிலிகளிடத்து அறிவிலியாயும் பேசவேண்டும் – அறிவில் மிக்கோர் கூடியுள்ள அவையில் முந்திச் சென்று பேசற்க – என்றெல்லாம் கூறிய வள்ளுவர்,

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தமகணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல். (குறள். 720)

என்பதன் மூலம் ஒத்த அறிவுடையாரிடத்து ஒத்த அறிவுடைய செய்திகளைப் பேசவேண்டும். இவ்வரன்முறை மீறினால் சொல்லப்படும் செய்தி தூய்மையற்ற முற்றத்தில் (தரையில்) கொட்டிய அமிழ்தத்திற்கு ஒப்பாகும் என்கிறார்.

அவையஞ்சாமை: 

அவையில் அஞ்சாமல் பேசும் ஆற்றல் மிக்கோர் வாய்தவறியும் பிழை சொல்லார். அவையிலஞ்சாமல் கற்றார் மனங்கொள்ளுமாறு கூறுவோரே கற்றாருள் கற்றார் ஆவர். போர்க்களத்தில் அஞ்சாமல் சென்று சாகத்துணிந்தவர் பலரிருக்கச் சான்றோர் அவைக்களத்தில் அஞ்சாமல் சென்று உரைப்போர் ஒரு சிலரே என்று வள்ளுவர் அவையஞ்சா ஆற்றல் மிக்காரைப் புகழ்ந்துரைப்பர்.

அவையஞ்சி உரைக்குந்திறனற்றோரை, போரிட அஞ்சுந்தன்மை கொண்டானிடம் உள்ள வாள் போன்றதே அவையஞ்சுவான் கற்ற கல்வி – தாம் கற்றவற்றைக் கல்வித்திறமிக்க அவையினில் உரைக்க இயலாதவர் கற்ற கல்வி பயனற்றது – அத்தகையவன் கல்லாதவரை விடக் கீழானவன் என்றெல்லாம் கூறும் வள்ளுவர் அவையஞ்சுவோர் உயிரோடு வாழ்ந்தாலும் இறந்தவர்க்கு ஒப்பானவர் என்பதை,

உளர்எனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்.   (குறள். 730) என்ற குறளில் பதிவு செய்துள்ளார்.

இங்ஙனம் மேற்கண்டவாறு வள்ளுவர் சொல்லும் சொல்லின் முக்கியத்துவத்தை வள்ளுவர்  இனியவை கூறல், பயனில சொல்லாமை, சொல்வன்மை, அவையறிதல், அவையஞ்சாமை ஆகிய ஐந்து அதிகாரங்களில் விளக்கமுற எடுத்துரைத்துள்ளார். ஆகையால் வள்ளுவரைப் பின்பற்றி சொல்லும் சொல்லை வெல்லும் சொல்லில்லை என்று அனைவரும் பாராட்டத்தக்க வகையில் பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றிக்கு வித்திடுவோம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *