படக்கவிதைப் போட்டி – (97)

பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

16395471_1222352404485623_2015787474_n

விஷ்ணு ராம் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (04.02.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

editor

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

Facebook Twitter Flickr 

Share

About the Author

editor

has written 1157 stories on this site.

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

8 Comments on “படக்கவிதைப் போட்டி – (97)”

 • சி.ஜெயபாரதன்
  சி. ஜெயபாரதன் wrote on 31 January, 2017, 10:17

  நேரே நிமிர்த்திப் பார்.

  சி. ஜெயபாரதன், கனடா

  நிழற் படத்தில் தெரிவது
  நெஞ்சை அறுப்பது !
  இருட்டடித்த பாலைவனம் !
  நீரோட்டம் போல்
  கானல் நீர் !
  ஏமாற்றும் தரை வெளிச்சம் !
  தூரத்துக் கரும்புகை
  காளான் முகில்,
  அணுவெடிப்புச் சோதனை
  புரியும்
  அரங்கேற்றம் ! அனைத்தும்
  மாயத் தோற்றம் !
  நிழற்படத்தை நேராக்கிப் பார் !
  நிழல் நிஜமாகிறது !
  தெருவில் இருநபர் நடக்கிறார் !
  பெருமழை பெய்து
  நிழல் தெரிகிறது !
  இதுதான் மெய்யான
  நடப்பு.
  தலை கீழாய்ப் பார்த்தால்
  உலகக் கேடுகள்
  கலக்கிடும் உன் நெஞ்சை !
  நிழலாகும்
  நிஜம் !

  +++++++++++++++

 • இப்னு ஹம்துன் wrote on 2 February, 2017, 13:43

  அதில் நாங்கள் தெளிவாக இல்லை
  மேலும்
  முழுவதும் தலைகீழாயிருக்கிறது.
  படம் பிடிக்கும் உன் திறமையைப்
  பெரிதும் விதந்தோதுபவனே நான்
  இன்னும் பல கலைப்படங்கள்
  உன்பெயர் சொல்ல வாழ்த்துவேன்
  என்றாலும் என் நண்ப
  தலைகீழான
  இப்படமே
  என் நேர்ப்படம் என்று
  சொல்லிவிடாதே யாரிடமும்.

 • பழ.செல்வமாணிக்கம் wrote on 4 February, 2017, 17:38

  ஊழித் தாண்டவம் ஆழிப்பேரலை அழித்தது ஓராண்டு !
  வெள்ளம் வந்து அழித்தது ஓராண்டு!
  புயல் வந்து அழித்தது ஓராண்டு!
  உயிர்த்தெழுந்து வந்தோம் ஒன்றினைந்து!
  வந்தாரை வாழ வைப்பது தமிழர் பண்பாடு!
  இயற்கை தந்த இன்னலைக் கூட
  தாங்கிக் கொண்டோம் !
  பொறுமையோடு!
  இடரில் தெரிந்தது எங்களின்
  ஒருமைப்பாடு!
  ஒற்றுமை உணர்வு கலந்தது
  எங்கள் மூச்சோடு !
  இருந்தாலும் தாங்க இயலவில்லை
  இயற்கை படுத்தும் பாடு!
  பட்ட காலிலே படும் என்பது
  போகட்டும் நேற்றோடு !
  ஊழித் தாண்டவம் ஆடிய புயலே !
  உன் செயலின் விளைவைப் பார்!
  நாங்கள் அழுத கண்ணீர்
  தேங்கிக் கிடக்கும் சாலையைப் பார்!
  பூமித் தாயின் வெடித்துச்சிதறிய வேதனை பார்!
  வண்ணக் கனவோடு வாழ்ந்த
  வாழ்க்கை , இன்று கறுமையாய்
  போன துயரைப் பார்!

 • செண்பக ஜெகதீசன்
  Shenbaga jagatheesan wrote on 4 February, 2017, 19:38

  அசலா…

  நிழல்
  நிஜமாவதில்லை என்றும்..

  தலைகீழ் பாடங்கள்
  தருவதில்லை கல்வித் தரத்தை..

  கானல்நீரைக்
  கண்ட கண்களால்
  கொஞ்சமும் தீராது தாகம்..

  தண்ணிபோட்டுவிட்டு
  தலைகீழாய் நிற்பவனுக்குத்
  தெரியாது உலகம் நேராய்..

  இப்படித்தான்
  இப்போது மனிதன்-
  தன்னிடம் குறையுடன்
  திருத்தப்போகிறானாம் உலகை,
  திருந்துவானா…!

  -செண்பக ஜெகதீசன்…

 • பழ.செல்வமாணிக்கம் wrote on 4 February, 2017, 19:57

  கவிதையின் தலைப்பு “ஊழித் தாண்டவம் “.
  தலைப்பும், கவிதையோடு சேர்ந்து விட்டது.

 • பெருவை பார்த்தசாரதி
  பெருவை பார்த்தசாரதி wrote on 4 February, 2017, 22:30

  அலைதானென நினைத்தேன்.. ஐயோகொடூரமாகக் தாக்கவந்த..
  ஆழிப்பேரலை மீண்டும்வந்து நம்நெஞ்சையாட்டி வைக்குமே?..

  ஆழியுன் பேரலையால் நீஇட்ட பேரிடரால்..
  பாவியென் நினைவுக்கு புதைந்து மண்ணாகிவிட்ட
  பிணங்களல்லவா ஞாபகம்வருகிறது!..

  மனித வாழ்வு முடியும்வரை இனிமுற்றிலுமாகயுனை
  மறக்க முயற்ச்சி செய்வோம்..நிச்சயமாக நீயில்லையென.

  மாற்றியோசிப்போம்…

  மனமூன்றிப் படத்தைப் பலமுறை பார்க்கும்போது
  மனத்தினுள் ஒளிந்திருக்கும் மாயம்விலக வழியுண்டு!

  உற்றுப்பார்த்தால் சாலைமுழுதும் கரும்புகைபோலவும் தெரிகிறதே!..
  ஊர்ந்து செல்லும் வேகவாகங்களின் வயிற்றெரிச்சல் புகையாக வெளியேறியதா?..

  இல்லை! இல்லை! அதுவுமில்லை..

  தயிர்போல் நிலத்தை யுழுதுபயிர்செய்த இடம்தானின்று..
  தார்சாலையானதோ!, மழை பொய்த்தவாய்ப்பால்?..

  வறண்ட சாலையிலோடும் வற்றியநீரை
  வருத்தமுடன் பார்ப்பதுயார் கார்மேகம்தானே!

  இல்லை! இல்லை!

  இன்னுமொருமுறை மாற்றியோசி..

  நீலத்தண்ணீருக்குள் முகமுற்றுப் பார்க்கையில்..
  நிஜபிம்பம் நிழலாய்த் தெரியுது!

  தலைவணங்கித் தரைவழியே பார்த்தால்தான்…
  இளைத்ததலையிரண்டு கொழுத்தகாலுடன் நடப்பது தெரியும்…

  அதிகஎடை ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல…
  அனுதினமும் மருத்துவர் சொல்லும் அறிவுரையேற்று..

  பெருத்த உடல்மெலிதாக இளைப்பதற்கு..உடல்..
  பெருத்த இருநபர் இறுமாப்பாய் நடப்பதுபோலும் தெரிகிறது!

  ஊளைச்சதையொழிய ஒருமணிநேரம்..தொடர்ந்த
  காலை(ளை)நடை சிறந்ததென உரைக்கிறார்போலும்.

  பலநாள் நடைபயிலுதல் யுடல்நலத்துக் குகந்ததெனத்தெரிந்தும்.
  ஒருநாள் நடைபயின்ற தைமறுநாள் மறக்கும் நபராகயிருக்கலாமோ?..

  கூட்டத்தைக் கண்டால் ஓட்டமெடுக்கும் எண்ணத்தில்..
  கூட்டுப்பயிற்ச்சியில் இருவருக்கும் நம்பிக்கையில்லையோ?.இது

  நடைபயிற்சியா? அல்லது பேச்சுப்பயிற்சியா?..விடைகாணந்த
  நண்பர்களோடு நடந்தால் தாணுண்மை தெரியும்?…

  நடைபயில உகந்தநேரம் பசுமையான காலைதானென..
  நயமாகப் பலர் சொல்லிக் கேட்டிருக்கோம்!

  காலையெழும் பொழுதின்முன்னே துயிலெழுந்துநாம்..
  காலாற நடந்தாலே நோயின்றி வாழலாம் வாழ்நாளெலாம்!

  குறுதியில் தீயகொழுப்பு திட்டமாக கரைய..
  உறுதியுடன் நடக்கவேண்டுமொரு மணிநேரமாவது!

  கால்கை விரித்து வேகமாக நடந்தால்நம்
  இதயமும் விசாலமாக வியங்கும்!

  நலமுடன்வாழ அன்றாடம் நடைபயிலவேணும்!
  உயர்வுடன்வாழ உற்றாரை மதித்து நடத்தல்வேணும்!

  பூங்காவில் நடப்பதிலேயொரு மனமகிழ்ச்சி!
  புல்வெளியில் நடப்பதிலேயொரு சுகம்!

  கால்கொதிக்க கடும்வெயிலில் நடப்பதைவிட..
  உள்ளங்கால் குளிரஈரஇதமான நடையில் தானதிகயின்பம்.

  பெருவை பார்த்தசாரதி

 • பெருவை பார்த்தசாரதி
  பெருவை பார்த்தசாரதி wrote on 4 February, 2017, 22:36

  படக்கவிதை தலைப்பு ……..

  நடையில் இன்பம்…
  =====================

 • பெருவை பார்த்தசாரதி
  பெருவை பார்த்தசாரதி wrote on 5 February, 2017, 7:22

  திருத்தம்..

  தலைவணங்கித் தரைவழியே பார்த்தால்..
  தலையிரண்டு கொழுத்தகாலுடன் நடப்பது தெரியும்…

Write a Comment [மறுமொழி இடவும்]


3 + = eight


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.