நிர்மலா ராகவன்

நிகழ்காலத்தில் வாழ்வது

நலம்-2

எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படுபவர்கள் முன்னுக்கு வரத் துடிக்கும் நடிகைகளும், அரசியல்வாதிகளும் மட்டுமில்லை. `வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என்பது நம் கையில்தான் இருக்கிறது’ என்பதைப் புரிந்துகொண்டவர்களும்தான்.

இவர்களிடம் அப்படி என்ன சிறப்பு என்றால், இவர்கள் கடந்த காலத்தைப் பெரிது பண்ணுவதில்லை.
நான் கானடா நாட்டிலுள்ள விக்டோரியா தீவிற்குச் சென்று மூன்று வாரங்கள் தங்கியிருந்தபோது, குறிப்பாக விவாகரத்து செய்த பெண்களுடன் கலந்து பேசவேண்டும் என்று கேட்டதற்கு இணங்கி வந்திருந்தார்கள் சிலர்.

`நீங்கள் உங்கள் அப்பா மடியில் உட்கார மாட்டீர்களா? அவரைக் கட்டி அணைப்பதோ, முத்தமிடுவதோ கிடையாதா?’ என்று என்னைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, `இவளிடம் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்’ என்று நெருங்கிப்போனார்கள்.

கதை

“என் குழந்தை உருவான தேதி..,” என்று குறிப்பிட்டுப் பேசினாள் காதரின். முப்பது வயதுக்குள் இருக்கும்.

“பிறந்த தேதி என்று சொல்லுங்கள்,” என்று திருத்த முயன்றேன்.

“சரியாகத்தான் சொல்கிறேன். நான் உறங்கும்போது, என் அனுமதி இல்லாமல் என் கணவர் செய்த செயலால் அன்று உருவான குழந்தை!” என்றாள் கசப்புடன். “அவர் செய்தது கற்பழிப்புக்குச் சமானம்! அதனால் விவாகரத்து செய்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை!”

சிறிது பொறுத்து, “எங்கள் வாழ்க்கையில் சில மகிழ்ச்சியான தருணங்களும் இருந்தன,” என்றவளைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். கடந்துபோன வாழ்க்கையில் ஓரளவு இன்பமும் இருந்தது என்று பலர் ஒத்துக்கொள்வதில்லை.

இவளைப்போன்ற பெண்கள் கடந்த காலத்திலேயே உழன்று, தம் நிம்மதியையும், மகிழ்ச்சியையும் குலைத்துக்கொள்ளாது இருக்கிறார்கள்.

விவாகரத்து செய்த பல பெண்கள் தாம் விட்டு விலகியவரைப்பற்றி வாய்க்கு வந்தபடி பேசுவதைக் கேட்டிருக்கிறேன். இல்லையேல், தம் துரதிர்ஷ்டத்தை ஓயாது நொந்துகொள்வார்கள். மேரியைப்போல.

கதை

மேரி அழகிய, பணக்கார வீட்டுப் பெண். மணமானபின் அமெரிக்காவிலிருந்து வந்தவள். ஐம்பது வயதிலும் மிக இளமையாக இருந்தாள்.

“நானும் என் கணவரும் ஓயாது சண்டை போடுவோம். எப்படி தெரியுமா? அவர் தொலைகாட்சிப் பெட்டியை தூக்கி எறிவார். நான் மட்டும் என்ன சளைத்தவளா? நானும்..,” என்று சொல்லிக்கொண்டே போனவளை அதிர்ச்சியுடன் பார்த்தேன்.

விவாகரத்துக்குப்பின் ஆளுக்கொரு மகன் என்று தீர்ப்பாயிற்று. இவளுடைய பொறுப்பில் வந்த மூத்த மகனுக்குக் கல்யாணம் ஆனதும் இவள் பாடு திண்டாட்டமாகப் போயிற்று. மருமகள் இவளைப் படாதபாடு படுத்த, விலகினாள் — ஓர் அட்டைப்பெட்டியில் தன் உடமைகளை அடைத்துக்கொண்டு.

“என் மகனுக்கு நிறையப் பணம் வருகிறது. ஆனால், எனக்கு இந்தக் கதி!” என்று என்னிடம் புலம்பினாள், என் தோழி இல்லாத சமயத்தில் அவள் வீட்டையும் செல்லப்பிராணிகளையும் பார்த்துக்கொண்ட இந்த house sitter.

உற்றவர் யாருமே இல்லாத நிலையில் மேரி தன்னைக் கவனித்துக்கொள்ளத் தவறிவிட்டாள் என்று நினைக்கவைத்தது அவளுடைய பரிதாபகரமான தோற்றம்.

“முதலில் நீ கடைக்குப் போய், உன் தலைமயிரைச் சீர்படுத்திக்கொண்டு வா. பிறகு உன் மகன் வீட்டுக்குப் போ. அப்புறம் என்ன நடக்கிறது என்று பார்!” என்றேன்.

சில நாட்கள் கழித்து, பெரிதாகச் சிரித்தபடி வந்து கூறினாள்: “நான் நாகரிகமாக என்னை மாற்றிக்கொண்டு போனேனா! மருமகள் ஒரேயடியாக உபசாரம் செய்தாள், போங்கள், `என்ன குடிக்கிறீர்கள்? சில நாட்கள் தங்கிவிட்டுப் போங்களேன்,’ என்று!”

அவளுடைய சிரிப்பில் நானும் கலந்துகொண்டேன். “நான்தான் சொன்னேனே! வெளித்தோற்றத்தை வைத்து ஒருவரை எடைபோடும் உலகம் இது!”

ஒரு மருந்துக்கடையில் ஆள் எடுக்கிறார்கள் என்ற அறிவிப்பைப் பார்த்து, என்ன பேசவேண்டும், எப்படி அவர்களைக் கவர்வது என்று படித்துப் படித்துச் சொல்லிக்கொடுத்தேன். “உன் கஷ்டங்களை எல்லாரிடமும் சொல்லிக்கொண்டிருக்காதே!”

ஓரிரு தினங்களுக்குப்பின், “எனக்கு வேலை கிடைத்துவிட்டது!” என்றாள் மகிழ்ச்சியாக.

பிறகு, ஒரு பொது இடத்தில் என்னைப் பார்த்துவிட்டு, ஓடிவந்து அணைத்தாள் மேரி. உள்நாட்டவர்கள் ஆச்சரியத்துடன் எங்களிருவரையும் மாறி மாறிப் பார்த்தனர். வெள்ளைக்காரிக்கும், புடவை அணிந்த இந்த ஆசியப் பெண்மணிக்கும் அப்படி என்ன தொடர்பு இருக்க முடியும் என்று யோசித்திருப்பார்கள்.

சிலருக்கு, `கடந்த காலத்திலேயே வாழ்ந்து, உன் நிகழ்காலத்தைப் பாழடித்துகொள்ளாதே!’ என்று சொல்லிக்கொடுக்க வேண்டியிருக்கிறது.

வேறு சிலருக்கு எவ்வளவு வயதானாலும், நிகழ்காலத்தில் பிரச்னை எதுவும் இல்லையென்றாலும், சில கசப்பான நிகழ்வுகள் மனதில் அலைமோதிக்கொண்டுதான் இருக்கும்.

`உன்னிடம் மட்டும் என் கதையைச் சொல்கிறேன்,’ என்று ஆரம்பித்திருந்தாள் ஏஞ்சல்.

கதை

“என் வாழ்க்கையே ஒரு பொய் என்று தோன்றியது. கணவரோ வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டிருந்தார். வெளி உலகத்திற்கு நாங்கள் ஆதர்ச தம்பதிகளாகத் தோற்றம் அளித்தோம்,” என்று தன் அந்தரங்கத்தை என்னிடம் கொட்டினாள்.

“`எதற்காக இப்படி ஒரு அவமதிப்பைத் தாங்கிக்கொள்கிறாய்?’ என்று என் மகளே இடித்துக் கேட்டபின்தான் விவாகரத்துக்கு மனு செய்தேன்”.

“ஜீவனாம்சம் கிடைத்ததா?” என்று விசாரித்தேன், கரிசனத்துடன்.

“விருப்பமில்லாமல் கொடுப்பார். அதனால் வேண்டாம் என்றுவிட்டேன்”. இதைத் திரும்பத் திரும்பச் சொன்னாள்.

ஏஞ்சலும் அவள் கணவரும் ஒரே துறையில் இருந்தவர்கள். அவள் சாதித்ததைத் தான் செய்ததாகச் சொல்லிக்கொள்வாராம். அவளுக்குக் கூடுதலான திறமை. அதுதான் தன்னைவிட மிகக் கீழான நிலைமையிலிருந்த பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டார்போலும்!

“அறுபத்தோறு வயதிலா விவாகரத்து செய்தாய்?” என்று நான் ஆச்சரியப்பட்டபோது, “வயது ஒரு பொருட்டாகவே படவில்லை. நிம்மதியை இழந்து என்ன வாழ்க்கை!” என்றவள் உலகெங்கும் சுற்றியவள்.

இன்னொரு பெண்ணைப்பற்றிக் கூறியபோது, “இவளிடம் என்ன குறை கண்டு, இவளை விவாகரத்து செய்தான் இவளுடைய கணவன்? தான் எந்த விதத்திலோ தாழ்மையானவள் என்ற வருத்தம் இவளுக்கு இருக்குமல்லவா?” என்று மெல்லக் கேட்டாள்.

எதற்குக் கேட்கிறாள் என்று புரிந்துகொள்ளாமல், “இவளுடைய அருமை அவனுக்குப் புரியவில்லை என்றுதான் வைத்துக்கொள்ள வேண்டும்!” என்றேன் உடனே.

மேரியின் முகம் மலர்ந்ததைப் பார்த்து, `இவள் தன்னை அந்தப் பெண்ணின் நிலையில் இருத்திக்கொண்டுதான் அப்படிக் கேட்டாளா! என்று ஆச்சரியப்பட்டேன்.

கதை

எங்கள் வீட்டில் வேலை செய்த இந்தோனீசிய பணிப்பெண், ஈடா (Ida) உதட்டுப்பூச்சுடன் அழகாக அலங்கரித்துக்கொள்வாள். `கருமமே கண்ணாயினார்’ என்பதைப்போல, சிரித்த முகத்துடன், உழைத்து வேலை செய்வாள். அவளைப் பார்ப்பவர்களுக்கு இன்பமான வாழ்க்கை இவளுக்கு வாய்த்திருக்கிறது என்றுதான் தோன்றும்.

சாதாரணமாக, அவர்கள் இன ஆண்கள் செய்வதைப்போல, இவளையும் கணவன் விவாகரத்து செய்துவிட்டான் என்றறிந்தபோது அதிர்ச்சியாக இருந்தது.

பிறவி எடுத்ததே திருமணம் செய்துகொள்வதற்குத்தான் என்று வளர்க்கப்படுகிறார்கள் இந்த ஏழைப்பெண்கள். (என் மகளுக்கு பதின்மூன்று வயதானபோது, ஒருத்தி, `ஏன் இன்னும் நீங்கள் மகளுக்குக் கல்யாணம் செய்துவைக்கவில்லை?’ என்று கேட்டாள் என்னிடம்!)

அதன்பின், விவாகரத்து செய்யப்பட்ட இன்னொரு பெண், டியானா, உலகமே தலையில் இடிந்து விழுந்து விட்டதைப்போல் நடக்க, “ஈடாவைப் பார்த்துக் கற்றுக்கொள்,” என்றேன் கண்டிப்பாக. “நிமிர்ந்து நட. நன்றாக அலங்கரித்துக்கொள். நீ சோர்ந்துபோனால், உன் குழந்தைகளை யார் பார்த்துக்கொள்வார்கள்?”

டியானா விரைவிலேயே தேறினாள். கடுமையான உழைப்பால் உடல் உறுதியாகியது.

ஒரு பெண் அழகாக இருந்தால், யார் சும்மா விடுவார்கள்?

வேறோரு பெண்ணின் வாழ்க்கையைக் கெடுக்கிறோமே என்ற சிந்தனை சிறிதுமின்றி, ஒரு நாள் யாரோ ஒருவனுடன் ஓடிப்போனாள் டியானா!

அவள் வாழ்நாள் பூராவும் அழுதே கழிக்கவில்லையே என்று ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்!

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *