aj

எழிலரசி கிளியோபாத்ரா
[பேரங்க நாடகம்]
மூலம்: ஷேக்ஸ்பியர் & பெர்னாட்ஷா

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

+++++++++++

வயது ஏறினும் வதங்காது அவள் மேனி !
வழக்க மரபுகளால் குலையாதவள் வாலிபம் !
வரையிலா விதவித வனப்பு மாறுபாடு ……!
படகில் அவள் அமர்ந்துள்ளது பொன்மய ஆசனம்!
கடல்நீரும் பொன் மயமாகும் அதன் ஒளியால்.
படகின் மேற்தளப்பரப்பு தங்கத் தளமேடை
மிதப்பிகள் நிறம் பழுப்பு! பரவும் நறுமணத் தெளிப்பு
காற்றுக்கும் அதனால் காதல் நோய் பீடிக்கும்!
படகுத் துடுப்புகள் யாவினும் வெள்ளி மினுக்கும்.
ஊது குழல் முரசு தாளத்துக் கேற்ப உந்தி,
வேகமாய்த் தள்ளும் காதல் துடிப்பு போல் !
அவளது மேனி வனப்பை விளக்கப் போனால்,
எவரும் சொல்லால் வர்ணிக்க இயாலாது !

வில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]

முன்னுரை: கிளியோபாத்ராவின் வரலாறு பேராசை, வஞ்சகம், ஏமாற்றம், மோகம், போகம், சோகம், கொலை, மரணம் ஆகிய அனைத்தும் பின்னிய ஒரு காதல் நாடகம்! கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் பிறந்த எகிப்தின் எழிலரசி அவள்! அவளது வாழ்க்கையில் குறுக்கிட்டு அவள் காதலித்து மணந்த ரோமாபுரித் தளபதி ஜூலியஸ் சீஸர், பிறகு அவரது சீடர் மார்க் அண்டனி ஆகியோரது கோர மரணத்துக்கு ஓரளவு அவளது தொடர்பே காரணமானது!

ஃபெரோவின் பரம்பரைகளில் வந்த எகிப்திய ராணிகளில் மிக்கப் புகழ் பெற்றவள் கிளியோபாத்ரா. எடுப்பான தோற்றமும், வசீகரக் கவர்ச்சியும், கூரிய ஞானமும், தேசப் பற்றும், போர் வல்லமையும், பேச்சுத் திறமையும் கொண்டவள். ஆனால் அவள் எகிப்திய மாதில்லை! மாஸபடோமியா மன்னர் வழிமுறையில் டாலமியின் வம்சத்தில் ஏழாம் டாலமியின் புதல்வியாக உதித்தவள். கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் கிளியோபாத்ரா பிறந்தாள். அப்போது எகிப்தின் தலைநகராக அலெக்ஸாண்டிரியா நிலவியது. கிளியோபாத்ரா என்று பலர் அவள் வம்சத்தில் பெயரைக் கொண்டிருந்தாலும், கடைசியாகப் பட்டத்தரசியாக வாழ்ந்த ஏழாவது கிளியோபாத்ராவே ஜூலியஸ் சீஸரின் காதலியாகவும், மார்க் அண்டனியைக் காதலித்த மாதாகவும் எகிப்த், ரோமானிய வரலாற்றில் முக்கியத்துவம் பெறுபவள்.

aj3

தந்தை ஏழாம் டாலமி நாடு கடத்தப் பட்ட சமயத்தில் கிளியோபாத்ராவின் மூத்த தமக்கை எகிப்தின் ராணியாகப் பட்டம் சூடினாள். பிறகு அவள் எப்படியோ கொலை செய்யப் பட்டாள். மீட்சியாகி வந்த தந்தை நான்கு ஆண்டுகள் ஆண்டபின் மரணம் எய்தினார். அதன் பிறகு ஏழாம் கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து ஆண்டார்கள். அப்போது கிளியோபாத்ராவுக்கு 17 வயது. பண்டைக் கால எகிப்திய வழக்கப்படிக் கிளியோபாத்ரா சட்ட விதிகள் ஏற்காதவாறு 12 வயது தம்பியைத் திருமணம் புரிந்து, அவளே தன் விருப்பப்படி நாட்டை ஆண்டு வந்தாள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும் தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்தித் தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, அங்கிருந்து கொண்டு தமையனைப் பலிவாங்கும் சதிகளில் ஈடுபட்டாள். அப்போது ரோமானியத் தளபதி பாம்ப்பியைத் தாக்க அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ஜூலியஸ் சீஸரைக் காணும் வாய்ப்பை எதிர்பார்த்தாள், கிளியோபாத்ரா.

ரோமாபுரித் தளபதி ஜூலியஸ் சீஸருக்கும், அவரது ரோமானியப் பழைய நண்பன் பாம்ப்பேயிக்கும் நடந்த போரில், டாலமி சீஸரின் பக்கமிருந்து பாம்ப்பேயின் படுகொலைக்குக் காரணமானான். பாம்ப்பே டாலமி உதவியால் கொல்லப் பட்டதை விரும்பாத சீஸர் கோபப்பட்டு முடிவில் டாலமியைத் தண்டிக்க முற்படுகிறார்! கிளியோபாத்ராவும், டாலமியும் தன் முன் வரவேண்டும் என்று சீஸர் ஆணையிட்டார். சிரியாவிலிருந்து வெளியேறி மறைமுகமாகச் சீஸரைத் தனியாகச் சந்தித்தாள் கிளியோபாத்ரா. சீஸரைத் தன் மேனி அழகால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்திப் பலிவாங்கும் திட்டத்தில் வெற்றியும் பெறுகிறாள். சீஸர் டாலமி செய்த சில தீவிரக் குற்றங்களுக்குக் கொலைத் தண்டனை விதிக்கிறார். முடிவில் கிளியோபத்ரா சீஸரின் உதவியால் எகிப்தின் பட்டத்து ராணியாக மகுடம் சூடுகிறாள்.

மூன்று ஆண்டுகள் சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. குழந்தைக்கு டாலமி சீஸர் என்று பெயரிடுகிறாள். ரோமாபுரியில் கல்பூர்ணியாவை ஏற்கனவே திருமணம் செய்த சீஸருக்குப் பிள்ளை யில்லாத ஒரு குறையைக் கிளியோபாத்ரா தீர்த்தாலும், அவரது கள்ளத் தனமான தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் பலர் ஏற்று கொள்ள வில்லை! அன்னிய மாதுடன் உறவு கொண்ட சீஸர் மீது ரோமாபுரிச் செனட்டர் பலருக்கு வெறுப்பும், கசப்பும், கோபமும் உண்டானது! முடிசூடிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டார். கிளியோபாத்ரா குழந்தையுடன் கோலகலமாக ரோமுக்குச் சென்று சீஸருடன் தங்கிய சில தினங்களில், செனட்டர்கள் சிலர் மறைமுகமாகச் செய்த சதியில் சீஸர் கொல்லப் பட்டார். உயிருக்குப் பயந்த கிளியோபாத்ரா உடனே சிறுவனுடன் எகிப்துக்குத் திரும்பினாள்.

சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகிச் சதிகாரர் அனைவரும் மார்க் அண்டனியால் ஒழிக்கப் படுகிறார். மார்க் அண்டனி, அக்டேவியன், லிபிடஸ் ஆகிய மூவரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவுகிறது. கிளியோபாத்ரா ரோமாபுரி விசாரணைக்கு மீள வேண்டும் என்ற மார்க் அண்டனியின் உத்தரவை மீறுகிறாள். பிறகு நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்கு வரும் அண்டனியைத் தன் கவர்ச்சியால் மயக்கித் திறமையுடன் அவனையும் தன் காதல் அடிமையாய் ஆக்குகிறாள் கிளியோபாத்ரா. ஏற்கனவே அக்டேவியான் தமக்கையை மணந்த அண்டனி, எகிப்தில் கிளியோபாத்ராவை மணந்து கொள்கிறான். அண்டனியின் காதல் தேனிலவு நீடித்து கிளியோபாத்ரா இரண்டு குழந்தைகளைப் பெறுகிறாள்.

சீஸருக்கு ஏற்பட்ட கதி அண்டனிக்கும் உண்டாகுகிறது. ரோமானிய செனட்டர்களின் சினத்தையும், வெறுப்பையும் மார்க் அண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை அண்டனியுடன் போர் தொடுக்கிறது! போரிட்டு வெற்றியும் அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன அண்டனி தற்கொலை செய்து கொள்கிறான். அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ரா மகனைத் தப்ப வைத்து, நாகத்தைத் தனது மார்பின் மீது தீண்ட விட்டு முடிவில் தானும் சாகிறாள்.

aj1

சீஸர், கிளியோபாத்ரா, ஆண்டனி

கிளியோபாத்ரா நாடகப் படைப்பு:

ஆங்கில நாடக மேதைகள் பெர்னார்ட்ஷா எழுதிய “சீஸர் & கிளியோபாத்ரா”, ஷேக்ஸ்பியர் எழுதிய, “ஜூலியஸ் சீஸர்”, “அண்டனி & கிளியோபாத்ரா” ஆகிய முப்பெரும் நாடகங்களை ஓரளவுச் சுருக்கித் தமிழில் கிளியோபாத்ரா என்னும் ஒற்றை நாடகமாக எழுத விரும்புகிறேன். நான் மதுரைக் கல்லூரியில் படித்த (1950-1952) ஆண்டுகளில் எனக்கு ஷேக்ஸ்பியரின் நாடகம், “ஜூலியஸ் சீஸர்” ஆங்கிலப் பாட நூலாக அமைந்தது. அப்போது அந்த நாடகத்தின் உன்னதப் படைப்பான “அண்டனியின் அரிய சொற்பொழிவைத்” [Antony’s Oration] தமிழாக்கம் செய்தேன். அந்த வேட்கை மிகுதியால் இப்போது கிளியோபாத்ராவின் முழு வரலாற்றை நாடகமாகத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்க முற்படுகிறேன்.

பெர்னார்ட்ஷா தனது நாடகம் “சீஸர் & கிளியோபாத்ரா” ஆரம்பத்தில் அவரிருவரும் முதன்முதல் சந்திக்கும் தளத்தையும், நிகழ்ச்சியையும் மாற்றி யிருக்கிறார். மனிதத் தலைச் சிங்கத்தின் [Sphinx] அருகில் ஒருவருக்கொருவர் யாரென்று தெரியாத போது முதன்முதல் சந்திப்பதாகவும், அப்போது சீஸர் தன்னை யாரென்று சொல்லாமல் நழுவுவதாகவும் காட்டியுள்ளார். மெய்யாக வரலாற்றில் நடந்தது முற்றிலும் வேறானது. மேலும் பெர்னாட்ஷா தன் நாடகத்தில் சீஸரைச் சந்திக்கும் போது, கிளியோபாத்ராவின் வயதை 17 என்று காட்டுகிறார். ஆனால் உண்மையில் அப்போது அவளது வயது 20 அல்லது 21 என்பது தெரிய வருகிறது! மேலும் கிளியோபாத்ராவை வெறும் கவர்ச்சியை மட்டும் பயன்படுத்தித் தானும் காதலில் மயங்கி ஆடவரை வசப்படுத்தும் மங்கை யாகவும், கூரிய மதியில்லாத பெண்ணாகவும், சிறு வயதிலே கெட்ட பழக்கங்களில் ஊறிப் போன மாதாகவும் காட்டுகிறார். ஆனால் மெய்யான கிளியோபாத்ரா மிகவும் கல்வி ஞானம் உள்ளவள்; வனப்பு மிகுந்த வனிதையாக இல்லாவிட்டாலும், அவள் வசீகரம் மிக்கவள். இனிய குரலில் சுவையாகப் பேசிப் பகைவரையும் நண்பராக்கும் வல்லமை கொண்டவள். போர் ஞானம் உள்ளவள். ஏழு மொழிகள் பேசும் திறமை பெற்றவள். நான் எழுதும் நாடகத்தில் கூடியவரை மெய்யாக நிலவி வந்த கிளியோபாத்ரா, ஜூலிய சீஸர், மார்க் அண்டனி, அக்டேவியன் ஆகியோரைத்தான் காட்ட விரும்புகிறேன்.

image

ஆண்டனி & கிளியோபாத்ரா

[தொடரும்]

+++++++++++++++++++++++++++++

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Juliua Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1968]

+++++++++++++++++

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *