திருவாசகத் தேனில் சைவசித்தாந்தம்

0

-எம். ஜெயராமசர்மா – மெல்பெண், அவுஸ்திரேலியா

  இறைவன் தன் திருவடியால் இந்நிலமிசை வந்து அருள்பாலித்துத் தனது திருக்கரத்தால் எழுதிய பெருமை பெற்றது “திருவாசகம்”. இத்திருவாசகத்தைக் கேட்டவரும் உருகுவார். படித்தவரும் உருகுவார். இதனாலத்தான் “திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் “என்று சொன்னார்கள் போலும். தேன் மருத்துவ குணம் கொண்டது. தானும் கெடாது தன்னைச் சேர்ந்ததையும் கெடவிடாத தன்மை கொண்டது. இதனால்தான் “திருவாசகம் என்னும் தேன்” என்று யாவரும் ஏற்றிப் போற்றுகின்றனர். தமிழர் மட்டுமின்றி மேனாட்டினரும் திருவாசகத்தை உயர்ந்த நிலையிலேயே வைத்துள்ளனர். கல்லையும் கரைக்கும் தன்மையுடையது திருவாசகம். கல் நெஞ்சையே நல்நெஞ்சாக்கும் பெருமையும் உடையது திருவாசகம்.

   தோத்திரங்களும் சாத்திரங்களும் சைவத்தின் இரு கண்களாகத் திகழ்கின்றன. அந்தச் சைவத்தின் முழுமுதல் தெய்வமாகச் சிவனே விளங்குகின்றார். ‘சிவமாம் தெய்வத்தின்மேல் தெய்வமில்லை” என்பது சைவத்தின் அறுதியான முடிவாகும். அன்பு நெறியால் இறைவனைக் காட்டுவன தோத்திரங்கள். அறிவு நெறியால் இறைவனைக் காட்டுவன சாத்திரங்கள். இவ்விரு நெறிகளுமே இறையுண்மையையே காட்டி நிற்கின்றன.

   வேதாந்தம் என்னும் ஆரா அருங்கனி பிழிந்த சாரம் கொண்டதே சைவசித்தாந்தம். இது தமிழ்நாட்டுடனும் ஈழத்துடனும் நெருக்கமான உறவினைக் கொண்டது. இப்பகுதிகளின் பண்பாட்டு உருவாக்கத்தில் முக்கியப் பங்களிப்பைச் செய்து வந்துள்ளது.

   சமயத்தையும் தத்துவ ஞானத்தையும் இணைத்தது சைவசித்தாந்தம். ஆன்மாக்களின் நித்தியத்துவத்தையும், தனித்தன்மையையும் கெடுக்காது நிலைநாட்டி இவ்வுலக வாழ்வை உண்மையானதும், பயனுடையதுமாக்கி _ இம்மை மறுமை இரண்டையும் சிறப்புடையன ஆக்கிய தனிச்சிறப்பு ” சைவசித்தாந்தத்துக்கு மட்டுமே உரியது”. “இந்தியாவிலுள்ள மதங்கள் அனைத்திலும் சைவசித்தாந்தமே மிகமேம்பட்டது” என்பதில் ஐயமில்லை என மேனாட்டு அறிஞரான ஜி.யூ.போப் கூற – “சைவசித்தாந்தம் இந்திய சிந்தனைகளது உணர்வினது சிகரம்” என ஏற்றிப் போற்றுகின்றார் கெளடி என்னும் அறிஞர்.

   சைவசித்தாந்தம் மூன்று பொருள்களைப் பற்றிச் சொல்கிறது. நமது சிந்தனைக்கும் ,ஆராய்ச்சிக்கும் உரிய விஷயம் அனைத்தையும் இந்த மூன்று பொருள்களுள்ளும் அடக்கலாம். இறை, உயிர், தளை என்பனவே அவை.

   சைவசித்தாந்தத்துக்கு முக்கிய ஆதாரங்கள் வேதங்களா ஆகமங்களா என்று நோக்கும் இடத்து இரண்டுமே பிரமாண நூல்கள்தான். எனினும் வேதங்களைவிட ஆகமங்களே முக்கியமானவை எனக் கொள்ளமுடிகிறது. வேதங்களைப் பொதுப்பிரமாணமாகவும் ஆகமங்களைச் சிறப்புப் பிரமாணமாகவும் கொள்ளுவது மரபாக உள்ளது. ஆகமம் என்பதற்கு விளக்கம் – பதி, பசு , பாசம் பற்றிக்கூறுவது என்று அறிகின்றோம்.

     தோத்திரங்களும் சாத்திரங்களும் சைவத்தின் கண்ணாக விளங்குவதோடு நின்றுவிடாமல் – சைவசித்தாந்தக் கருதுக்களையும் தன்னகதே கொண்டு நிற்கின்றன் என்பது முக்கியமானதாகும். இந்த நிலையில் திருவாசகம் என்னும் தேனானது – தோத்திரநூல் எந்த அளவுக்குச் சைவசித்தாந்த உண்மைகளைக் கொண்டிருக்கிறது என்று பார்ப்பது பொருத்தமாய் இருக்கும் அல்லவா?

தொல்லை இரும்பிறவிச் சூழுந் தளைநீக்கி
அல்லலறுத் தானந்தம் ஆக்கியதே – எல்லை                             மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்                               திருவா சகமென்னும் தேன்.

தொல்லைக்குக் காரணம் பிறவி. அதை எடுப்பதே பெரிய தளையாகும். பிறவிப் பிணியகல இறையருள் தேவை. இறையருள் கிட்டினால் ஆனந்தம். பிறவி நோயும் அறியாமையும் அகன்றவுடன் சிவானந்தம் ஆகிய பேரானந்தம் விளையும். அந்த ஆனந்தத்தை எப்படிப் பெறலாம் என்று எமக்கெல்லாம் காட்டி நிற்கிறது திருவாசகமாகிய தேன் என்று இப்படல் காட்டி நிற்கிறதல்லவா? அதுமட்டுமல்ல… சைவசித்தாந்த உண்மையும் இதனுள் காட்டப்படுவது நோக்கத்தக்கது.

 எமது உடம்பில் சிரசு மேலானது. அதற்கு மேலாக இருப்பது சிகையாகும். சிகைக்கு மேலொன்றுமில்லை. ஆகவே சிகாமந்திரமாக விளங்கும் திருவாசகத்துக்கு மேல் சிறந்த நூல் இல்லை என்று பெரியவர்கள் சொல்லுவர். இந்தத் திருவாசகத்தில் “சிவபுராணம்” முக்கியப் பகுதியாகக் கொள்ளப்படுகிறது. அதன் ஆரம்பமே சைவசித்தாந்தத்தின் முக்கிய கருவைக் கொண்டிருக்கிறது எனலாம்.

“நமச்சிவாய வாழ்க ”

“நமச்சிவாய” என்பது திருவைந்தெழுத்து மந்திரமாகும்.இதன் பொருள் –

ம – பாசம்

ய – பசு

சி – பதி

ந – திரோதான சக்தி

                      வ – அருட்சக்தி                                                                  திருவாசகம் இறைவனுடைய தலைமைப் பண்பையும், அவனுக்குட்பட்ட உயிர்களின் அடிமைப் பண்பையும், பொருத்தமாக விளக்கிச் சொல்வதைக் காணலாம்.உயிர்கள் மலம் நீங்கி இறைவன் அருள்பெற மணிவாசகர் பாடியதால் திருவைந்தெழுத்தின் எல்லா வடிவங்களையும் திருவாசகத்தில் காணமுடிகிறது.

   சைவசித்தாந்தம் – மாயை, கன்மம், வினை பற்றியெல்லாம் சொல்லுகிறது. பிறப்புக்குக் காரணம் வினை. ஆன்மாக்கள் உடம்பை எடுப்பதற்கும் – பிறப்பதற்கும் – இறப்பதற்கும், அனுபவிப்பதற்கும் – இன்ப துன்பங்களுக்கும் – வினைப்பயனே காரணமாகிறது. இவற்றைத் திருவாசகம் –

           14 – மாயப் பிறப்பறுக்கும்

20 – முந்தை வினை முழுதும்

25 – பொல்லா வினையேன்

26 – புல்லாகிப் பூடாய் ….எனத் தொடங்கி எல்லாப் பிறப்பும்

   பதி என்று பேசப்படும் இறைவன் ஆன்மாக்களின் மலபந்தங்களை நீக்க முயலுகிறான். இறைவனின் அருள்நோக்கம் ஒன்றினால்தான் ஆன்மாக்களின் மலபந்தம் அகல முடியும். இதனைத் திருவாசகம் காட்டும் விதம் நயக்கத்தக்கதே.

            18 – அவன் அருளாலே அவன் தாள்வணங்கி

            38 –  மெய்ஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே

            40 – அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே

             42 – ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்

             48 – பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்

             64 – பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே

             78 – காக்கும் எம்காவலனே

             87 – மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே

88 – கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே

91 அல்லல் பிறவி அறுப்பானே …….                                                               ( திருவாசகம் )

     மணிவாசகப் பெருமான் இவற்றையெல்லாம் தன்மேலேற்றிக் கூறியிருந்தாலும் – இவற்றினூடாகச் சைவசித்தாந்த உண்மைகளை மற்றவர்களும் இலகுவில் விளங்கும் வண்ணம் செய்துள்ளார் என்று எண்ணலாம் அல்லவா?

     உயிர்கள் பதியினைப் பிரிந்து பாசத்துக்கு உட்படும் நிலை செயற்கையானது.  பதியினை அடையும் நிலை இயற்கையானது. இக்காரணத்தினால்தான் யாராவது இறந்துபோனால்” இயற்கை எய்தினார்” என்கிறோம். இந்த உலகவாழ்வு செயற்கையானது. அது வருவதற்குக் காரணம் அவா ஆகும். அவா ஆனது விரைவில் மறையமாட்டது. அதனை முயன்றே போக்கவேண்டும். அப்படிப் போக்கினால் இறைவனிடம்   இருந்து நீங்காத இயற்கைத் தன்மையைப் பெறும். இதனை வள்ளுவர் ” பேராஇயற்கை” என்று குறிப்பிட்டாரோ எனக் கருதக்கூடியதாக இருக்கிறது. இக்கருத்தைத் திருவாசகம் கோவில் மூத்த திருப்பதிகத்தில் காட்டுவதும் நோக்கத்தக்கது.

இன்றெனக் கருளி யிருள் கடிந்
துள்ளத்  தெழுகின்ற ஞாயிறே போன்று
நின்றநின் றன்மை நினைப்பற நினைந்தேன்
னீயலால் பிறிது ற்றின்மை
சென்று சென்றணுவாய்த்
தேய்ந்துதேய்ந்தொன்றாம்
திருப்பெருந் துறையுறை சிவனே
யொன்றுநீ யல்லை யன்றியொன் றில்லை
யாருன்னை யறிகிற்பாரே.

உயிரனது சிவத்தோடு ஒடுங்கும் பேரருள் நிலை இங்குக் காட்டப்படுகிறது. இதனால் திருவாசகத்தில் இதனை ‘இருதயப் பாடல்” எனப் பெரியவர்கள் கருதுவர். “சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்றாம்” என்னும் அடிகள் மூலமாக உயிரின் பாசநீக்கம் – சிவப்பேறு காட்டப்படுகிறது.

   மலம் என்று சொல்லும் பொழுது எமக்கெல்லாம் அருவருப்பு ஏற்படுகிறதல்லவா?  முகத்தைச் சுளிக்கின்றோமல்லவா? ஆனால் இந்தச் சொல் தத்துவவிளக்கமாகச் சைவ சித்தாந்தத்தில் இடம்பெற்று நிற்கிறது. சகலவிதமான சிக்கல்களுக்கும் “மலமே” காரணமாக இருக்கிறது. இந்த மலமானது ஆணவம், கன்மம், மாயை எனச் சைவசித்தாந்தத்தில் பேசப்படுகிறது. அறியாமையை விளைவிப்பது ஆணவ மலம். இன்ப, துன்பங்களை விளைவிப்பது கன்ம மலம். மயக்கத்தை உண்டுபண்ணுவது மாயாமலம். இந்த மயக்கத்தினால் – ஆன்மாவானது தன்னை உடம்பாகவும், உலகில் காணப்படும் போகங்களை உண்மையானதெனவும் எண்ணிவிடுகின்றது. இதனால் மாயையும் மலங்களில் ஒன்றாகிவிடுகிறது.

   திருவாசகம் மலம் பற்றிக் காட்டி நிற்கிறது.மலத்தைக் காட்டுவதோடு – அதனைப் போக்குதற்கு யார்தான் உள்ளார் என்பதையும் கூறி நிற்பது நோக்கத்தக்கது.

     111 – மூலமாகிய மும்மலமறுக்கும்

112 – தூயமேனிச் சுடர்விடு சோதி            ( கீர்த்தித் திருவகல் )

122 – முத்தா போற்றி முதல்வா போற்றி

128 – மன்னிய திருவருள் மலையே போற்றி

194_ மருவிய கருணை மலையே போற்றி   ( போற்றித் திருவகல் )

8- . உழிதரு காலத்து உன் அடியேன்
செய்த வல்வினையைக்
கழிதரு காலமும் ஆய் அவை காத்து
எம்மைக் காப்பவனே.

16 – நாய் அடியேன்
பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான்    ( திருச்சதகம் )

2 – உள்ள மலம் மூன்றும் மய உகு பெரும்
(பண்டாய நான்மறை  20 20 -வாழ்கின்றாய் வாழாத
நெஞ்சமே வல்வினைப் பட் டாழ் கின்றா யாழாமற்
காப்பனை யேத்தாதே   சூழ்கின்றய்க் கேடுனுக்குச் சொல்
கின்றேன் பல்காலும் வீழ்கின்றாய் நீயவலக் கடலாய
வெள்ளத்தே     ( திருச்சதகம் )

    மூலமலம் வினைபற்றிச் சொல்லி – இவைபோக இறைவன் துணை எத்துணை அவசியமானது என்பதையும் இப்பாடல் சுட்டிநிற்பது நோக்கத்தக்கதாகும்.

1 – முத்தி நெறியறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பக்திநெறி யறிவித்துப் பழவினைகள் பாறும்
வண்ணஞ் சித்தமலம் யறுவித்துச் சிவமாக்கி
யெனையாண்ட அத்தனெனக் கருளியவா றார்பெறுவா
ரச்சோவே,

2 – மும்மை மலம் அறுவித்து முதலாய முதல்வன் தான்
நம்மையும் ஓர் பொருளாக்கி …    என்று காட்டிநிற்கும் திருவாசகம் சொல்லும் இறைவனின் மலபரிபாக நிலையும் ஆட்கொள்ளும் நிலையும், யாவரும் விளங்கும் வண்ணம் இருக்கின்றது என்பது புலனாகிறதல்லவா ?

    பிறவிக்குக் காரணம் மலங்கள்தான். எனவேதான் திருவாசகம் ” ஆர்த்த பிறவித்துயர்” என்று கூறியதும் நோக்கத்தக்கது. திருவம்மானையில் “எங்கள் பிறப்பு அறுத்திட்டு எம் தரமும் ஆட்கொண்டு ‘என்றும்…” கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை வெள்ளத்தழுத்தி வினைகடந்த வேதியனே” .. என்றும்.. ” கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட” .. என்றும் _ ” இப்பிறவி ஆட்கொண்டு இனிப் பிறவாமே காத்து” என்றும், அப்பிறவியைப் போக்க இறைவனே துணை யென்பதும் காட்டப்பட்ட விதம் யாவரது உள்ளத்தும் பசுமரத்தாணி போல் பதியுமல்லவா ?

    “வேற்றுவிகார விடக்குடம்பின் உட்கிடக்க ஆற்றேன் ” என்கிறார் மணிவாசகர்.   இந்த உடம்பு புண்மயமானது.” மலஞ்சோரும் ஒன்பதும் வாயிற்குடிலை” என்று சொல்லுவதைக் கேட்கும்பொழுது உடம்பின் அருவருப்புத் தெரிகிறதல்லவா? அதுமட்டுமல்ல ” புறந்தோல் போர்த்தங்கு புழுவழுக்கு மூடி” – இதுவும் உடம்புதான். இதனால் இந்த உடம்பினுள் இருக்கும் பிறவி நிலைக்கு “ஆற்றேன் ஆற்றேன்” என்று மணிவாசகர் திருவாசகம் மூலம் வெளிப்படுத்தி நிற்பது தத்துவத்தின் சாரம் அல்லவா?   ஆறுதல் தருபவன் யாரெனின் அது இறைவன் மட்டுமே என்பது திருவாசகத்தின் கருத்துத்தானே! இதனால்தான் “அவன் அருளாலே அவன்தாள் வணங்கி” என்று போதித்து நிற்கிறது.

   சைவசித்தாந்தம் கடவுள் கொள்கையை முக்கியமாகக் கருதுகிறது. ” சிவன் ” என்னும் சொல்லிலிருந்து வந்ததுவே “சைவம்” ஆகும். சித்தாந்தம் எனக் குறிப்பிடாது “சைவசித்தாந்தம்” என்று சிவத்தையும் சம்பந்தப்படுத்தி வழங்குவதிலிருந்து சிவனுக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது புலப்படுகிற தல்லவா?

    சைவசித்தாந்தம் “பதி ” என்று குறிப்பிடுவது இறைவனையே. இந்த இறைவனை  இறை, கடவுள், பதி, பரமசிவம், சிவம், ஈசன், பேருயிர், பரமாத்மா என்று பலபெயர்களில் அழைப்பதைக் காண்கிறோமல்லவா ? ஒரு நாமமோ ஓர் உருவமோ இல்லா இறைவனுக்குப் பல நாமங்கள் கொடுத்து வணங்குவதையும் காண்கிறோம் தானே! இதில் “கடவுள்” என்ற சொல் பலவித அர்த்தங்களை உள்ளடக்கியதாகும். உள்ளத்தைக் கடந்தவர், உலகையும் கடந்தவர், உலகுள்ளும் இருப்பவர், உயிர்கள் உள்ளும் வியாபித்து நிற்பவர், இந்தக் கருத்துக்கள் சைவசித்தாந்தமே. இதனை மணிவாசகரும் திருவாசகத்தில் காட்டுகிறார்.

           137 – பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி

138 – நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி

139 – தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி

140 – வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி

141 – வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி

 திருப்பள்ளி எழுச்சியால் இறைவனைத் துயில் எழுப்ப மணிவாசகர் முயலுகிறார். எம்மை எல்லாம் அஞ்ஞான இருளில் இருந்து எழுப்புவதற்கு இது உதவுகிறதல்லவா?  திருப்பள்ளி எழுச்சியில் இறைவனைப் பற்றி மணிவாசகர் காட்டுவது சைவசித்தாந்தக் கடவுள் கொள்கையை விளக்கி நிற்பதாக இருக்கிறது.

பூதங்கள் தோறும் நின்றாயெனின் அல்லால்
போக்கு இலன் வரவிலன் என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டு அறியோம் உனைக்கண்டு அறிவாரைக்
சீதம் கொள்வயல் திருபெருந்துறை மன்னா
சிந்தனைக்கும் அரியாய் எங்கள் முன்வந்து                               ஏதங்கள் அறுத்து எம்மை ஆண்டு அருள்புரியும்                        எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

கடவுள் பற்றிச் சைவசித்தாந்தம் என்ன கருதுகின்றது என்பதற்கு மேலும் பலவற்றை திருவாசகம் தந்து நிற்கிறது.

மின் ஆர் உருவ விகிர்தா போற்றி                                                 நதி சேர் செஞ்சடை நம்பா போற்றி
ஐயா போற்றி அணுவே போற்றி
சைவா போற்றி தலைவா போற்றி
உரை உணர்வு இறந்த ஒருவ போற்றி
அருமையில் எளிய அழகே போற்றி
கருமுகில் எளிய அழகே போற்றி
அழிவிலா ஆனந்த வாரி போற்றி
அழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி
முழுவதும் இறந்த முதல்வா போற்றி
சடை இடை கங்கை தரித்தாய் போற்றி                                       தென்நாடு உடைய சிவனே போற்றி                                               எந்நாட்டவர்கும் இறைவா போற்றி                                                 அரியாய் போற்றி அமலா போற்றி                                                   அருவம் உருவமும் ஆனாய் போற்றி                                           துரியமும் இறந்த சுடரே போற்றி                                                     சிந்தனைக்கும் அரிய சிவமே போற்றி                                           புரம்பல எரித்த புராணா போற்றி                                                       பரம் பரம் சோதிப்பரனே போற்றி

திருச்சதகத்தில் உள்ள கீழ்வரும் பாடல் சைவசித்தாந்தக் கடவுள் கொள்கையை மிகவும் சிறப்பாகக் காட்டி நிற்கிறது.

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனதென்றவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை யென்சொல்லி வாழ்த்துவனே!

 இறை அனுபவத்தை மணிவாசகர் திருவாசகத்தில் வெளிப்படுத்தியுள்ள பாங்கு அவரது எளிமையினையே காட்டி நிற்கிறது. இரக்கமும், உருக்கமும், இணைந்து இறைஅனுபவத்தை உணரப்பண்ணி இருக்கிறது திருவாசகமென்னும் தேன் என்றால் அது மிகையாகாது. மணிவாசகர் ” அம்மையே அப்பா ஒப்பிலா மணியே” என அழைத்து “பால்நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து பாவியேனுடைய ஊனினை           உருக்கியவன்” என்று விளக்குகின்றார்.” ஒப்புனக்கில்லா ஒருவனே ” – ” பாசவேர் அறுக்கும் பழம் பொருளே, பிறவி வேரறுத்து என் குடிமுழுதாண்ட பிஞ்ஞகா”  என்றும் கூறிநிற்கின்றார். இவையெல்லாம் சைவசித்தாந்த நெறிகளைக் காட்டும் திருவாசகச் செய்திகள் எனலாம்.

   சைவசித்தந்தம் தமிழர் சொத்து. சைவத்தின் சொத்து. திருவாசகம் – தமிழிரதும் சைவத்தினதும் சொத்தாகும். சொத்துக்களைப் பிரிப்பது முறையற்றது. சைவசித்தாந்தச் சொத்து திருவாசகச் சொத்தினுள் இருக்கின்றது என்பதைப் பல நிலைகளில் பார்த்தோம் அல்லவா? சைவசித்தாந்தத்துக்குச் சாத்திர நூல்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவமோ   அதே அளவு தோத்திர நூல்களும் முக்கியமானதாக இருக்கின்றன.

     அந்தவகையில் தோத்திர நூலான “திருவாசகம் என்னும் தேன்” சைவசித்தாந்தக் கருத்துக்களை எந்த அளவுக்குக் கொண்டிருக்கிறது என்பதைக் காணமுடிகிறதல்லவா? எனவே சைவசித்தாந்தம் கூறும் பதி, பசு, பாசம், இறைபற்றி அறியத் “திருவாசகம் என்னும் தேனை” நாடலாம் என்னும் எண்ணம் உங்கள் உள்ளமதில் தோன்றி இருக்கும் என்று எண்ணுகிறேன்.

    மேனமைகொள் சைவநீதி விளங்கத்
திருவாசகத்தேனைப் பருகுங்கள்! இறையடி
தொழுமின்கள்! ஈசன் புகழ் பாடுங்கள்!

விளங்கிழை பகிர்ந்த மெய்யுடை முக்கண்
காரணன் உரௌயெனும் ஆரண மொழியோ
ஆதிசீர் பரவும் வாதவூர் அண்ணல்
மலர்வாய் பிறந்த வாசகத் தேனோ
யாதோ சிறந்தது என்குவீர் ஆயின்
வேதம் ஓதின் விழிநீர் பெருக்கி
நெஞ்சு நெக்குருகி நிற்பவர் காண்கிலேம்
திருவாசகம் இங்கு ஒருகால் ஓதின்
கருங்கல் மனமும் கரைந்துகக் கண்கள்
தொடுமணற் கேணியின் சுரந்து நீர்பாய
அன்பர் ஆகுநர் அன்றி
மன்பதை உலகில் மற்றையர் இலரே.   (சிவப்பிரகாச சுவாமிகள்)

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *