படக்கவிதைப் போட்டி – 99

பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

16707196_1234358473285016_1145075655_n
67945931@N04_rராஜ்குமார் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (18.02.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

editor

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

Facebook Twitter Flickr 

Share

About the Author

editor

has written 1157 stories on this site.

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

5 Comments on “படக்கவிதைப் போட்டி – 99”

 • செண்பக ஜெகதீசன்
  Shenbaga jagatheesan wrote on 17 February, 2017, 21:49

  காளையே…

  மானம் காக்கும் காளையிது
  மாணவர் சக்தியைக் காட்டியது,
  சேனையாய்க் காளையர் கூடிவந்தே
  செயித்துக் காட்டும் காளையிது,
  வானம் பொழியும் பூமியிலே
  வளத்தைப் பெருக்கும் காளையிது,
  கோனெ உழவர் தரத்தினையே
  கோபுரம் ஏற்றிடும் காளையிதே…!

  -செண்பக ஜெகதீசன்…

 • பழ.செல்வமாணிக்கம் wrote on 18 February, 2017, 17:23

  நேயம் மனிதன் நட்பைச் சொல்லும் நிழற்படம்!
  அன்பின் பெருமையை நமக்கு
  உணர்த்தும் அற்புதப் பாடம்! ஈசன் ஏறிய வாகனம்!
  இருந்தும் இல்லை தலைக்கனம்!
  காளை உழைப்பின் இலக்கணம் !
  உயிரினம் எல்லாம் ஒன்றெனச்
  சொல்லும் இனிய தருணம்!
  மனித நேயத்தின் அழகான காட்சி இது!
  தமிழரின் அன்பை உணர்த்தும்
  சாட்சி இது!
  காளையை தெய்வமாய்
  தொழுபவன் தமிழன்!
  தமிழனை, தோழனாய்
  நினைப்பது காளை!
  இவர்களை பிரிக்க நினைத்தது
  சில வீணர்களின் வேலை!
  அற வழி இனைந்தனர் இளைய தலை முறை!
  அரும்பாடு பட்டு மீட்டனர்!
  சல்லிக்கட்டெனும் ஏறு தழுவலை !

  ஏறு தழுவுதலை இப்படியும்
  கொள்ளலாமோ?
  வீர மறவனின் அரவணைப்பில்
  காளை மயங்கி நிற்கிறதே!
  முரட்டுக் காளை கூட பசுவாய்
  மாறியது எப்படி?
  அன்பிற்கு எத்தனை வலிமை!
  ஆண் மகனும் அப்படித்தான்!
  அன்பிற்கு ஆட்படுவான்!
  அடக்க நினைத்தால்!
  வீறு கொண்டெழுவான் !
  காளையின் மனமறிந்த
  காளை இவன்!
  குடும்பத்தை காத்திருக்க
  இறைவன் அனுப்பிய தூதன்!
  உடல், பொருள், ஆவி
  அத்தனையும் தந்திடுவான் !
  மனைவி, மக்கள் மகிழ்ந்திருக்க
  மாடாய் உழைத்திடுவான் !
  ஒளியை தருவதற்கு
  மெழுகாய் கரைந்திடுவான் !
  தனக்கென வாழா உயிரினம்
  இரண்டுக்கும் உண்டு புகழிடம்!

 • சச்சிதானந்தம் wrote on 18 February, 2017, 19:13

  ஊறு விளைவிக்கும் கயவர் செய்கையால்,

  ஆறு கைநழுவி உழவு பொய்த்தாலும்,

  ஏறு தழுவும் நம் இதய உரிமையை,

  வேறு பணிமறந்து வீதியில் திரண்டு,

  நூறு தடைதகர்த்த வீரரில் ஒருவன்,

  நீறு தவழும் திருமுகத்துடன் வரவே,

  சீறும் குணம் மறந்து காளையும் நன்றி

  கூறும் காட்சியை உ,லகுக்குக் காட்டும்,

  பேறு பெற்றதே இந்தப் புகைப்படம்!

 • பெருவை பார்த்தசாரதி
  பெருவை பார்த்தசாரதி wrote on 18 February, 2017, 22:41

  ஜல்லிக்கட்டுக் காளைக்கு வீரஉரை:
  =====================================

  அடங்காத காளையேநீ!
  ***அடங்காதே யாருக்கும்!
  நெற்றிப் பொட்டில் திலகமிட்டு வீரத்துடன்…களத்தில்
  ***வெற்றி முத்தமிட்டபின் உனைவீழ்த்த யாருமில்லை!

  வீரமூட்டி வளர்த்துன்னை மைதானத்தில் விடுகிறேன்..
  ***வீரர்களை முட்டி நிதானமாயப் பரிசுவென்று வா!
  கட்டவிழ்த்து விட்டவுடன்..கட்டோடெதிர்..
  ***கண்டவரைக் காயமின்றிச் சாய்த்துவிடு!

  அகிம்சையால் நாம்பெற்ற சுதந்திரம்போல்..உனையடக்க..
  ***ஆயுதமின்றி எதிர்கொண்டுவரும் வீரர்களைவென்றுவா!
  உன்திமில்பிடித்து திமிர் அடக்கநினைத்தால்..
  ***தன்தமிழ் வீரம்பெரிதன்று தக்கபடி எடுத்துச்சொல்லு!

  மல்லுக் கட்டும் வீரர்கள் மத்தியில்..
  ***ஜல்லிக்கட்டொன்றுதான் வீரமெனப் புரியவை!
  ஈராண்டாய்க் கட்டுண்டிருந்த காளையே..
  ***இன்றுன் வீரத்தை இருநொடியில் காட்டு!

  களைப்பறியா உன் கொம்பைப் பிடித்தால்..
  ***அளப்பரிய யுன்தெம்பை எடுத்துக்காட்டு!
  வால் பிடிக்கும் வாழ்க்கை வேண்டாவென..
  ***உன் வாலைப் பிடிப்பவனை எட்டிஉதை!

  பார்வைபடாமல் பக்கத்தில்வரும் வீரர்களையுன்..
  ***வஞ்சகம்வேண்டா வென வயிற்றில் முட்டு!
  சீராட்டிப் பாராட்டி வளர்த்தயுன் உடம்பை தொட்டால்..
  ***சீறியவனை துவம்ஸம் செய்து சிலிர்த்துநில்!

  விளையாடிக் களைக்கும்போதுநீ..எனைப்பார்!
  ***காளையுனை வீரத்தோடு வளர்த்த நானிருக்கிறேன்!
  நூறுமீட்டர் ஓடவேண்டாம் உலகசாதனைசெய்ய..
  ***ஒருமீட்டர் ஓடிப்பாருங்கள் காளையோடு அதுவேசாதனை!

  ஈதொரு வீர விளையாட்டென்று சொல்லிங்கே!
  ***ஓர்கோழைக்கு துளிஇடமில்லை என்றுசொல்!
  அயலார் வியந்துகளிக்கு மிவ்விளையாட்டில்..
  ***அயலினம் நுழைய அனுமதியோம் மென்றுரை!

  பாட்டில் குற்றமிருக்கலாமானால்..உன்
  ***விளையாட்டில் குற்றமென்று..
  கூறும் கயவர்களை யினியுன்
  ***கூரான கொம்பால் குத்திக் கிழித்துவிடு!

  சொப்பனமே கண்டிடுவார் உனைவெல்ல..
  ***தப்பனவே உணர்ந்திடுவார் தோல்விகண்டபின்னே!
  வீழ்ச்சியுறா வெற்றிபெற…காளையடக்கும் வீர்ர்களே..
  ***சூழ்ச்சியின்றி விளையாட சூதறியாது வரவேண்டும்!

  தோற்றபிறகு எங்களைக் கொல்வதென்பது…
  ***அயலார் வகுத்த கோழைத்தனமெனில்…
  தோற்றாலுமினி உங்களைக் கொல்லாமலிருப்பது..
  ***காளையெங்கள் வீரத்தனமென்று பறைசாற்று!

 • Shanmugasundaram wrote on 15 March, 2017, 20:41

  காளையர்கள் தங்களின் வீரத்தை நிலைநாட்ட உன்னை வீழ்த்த நினைத்தால் அங்கு வீழ்ந்ததோ அவர்கள் வஞ்சம், வால் பிடித்து பிழைக்கும் என்னம், சூழ்ச்சி.
  உன் இனம் மட்டும்தான் அண்ணல் காந்தியடிகளின் அகிம்சை தத்துவத்தை ஆயுதமில்லா அறப்பபோர் புரிய அடுத்த தலைமுறைக்கும் உணர்த்துகிறது.

  கன்னியர்கள் மணக்கோலம் காணவே நீயே அடங்கிடுவாயோ எனில் கருணையின் வடிவமே நீதானோ.
  காளைகளின் பெருமை தனை பைந்தமிழில் கவி மழை பொழிந்தமைக்கு என் உள்ளம் குளிர்ந்தேன். வாழ்க நின் தமிழ் தொண்டு.

  பாராட்டுக்கள்.. பெருவை..அவர்களே

Write a Comment [மறுமொழி இடவும்]


one + 2 =


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.