க. பாலசுப்பிரமணியன்

மழலையர்களின் கற்றல் நிலைகள்

education

மழலைப் பருவத்தில் கற்றல் என்பது ஒரு தொடரான செயல்; ஆனால் அது நேரடியாக மட்டும் நடக்கும் செயலல்ல. கற்றலின் 95 விழுக்காடுகள் மறைமுகமாகவோ அல்லது கோர்வையின்றியோ நடக்கக் கூடிய செயல். ஐம்புலன்களாலும் கற்றலுக்கான உள்ளீடுகள் கிடைக்கின்றன. அவைகளைத் தனித்தனியாகவோ அல்லது ஒருங்கிணைத்தோ மூளை ஒரு கருத்தாக உருவாக்குகின்றது.

பொதுவாக கற்றலின் உள்ளீட்டுப் பரிமாணங்களை கீழ்கண்டவாறு பிரிக்கின்றனர்.

  1. பார்த்தல் (Seeing)
  2. கவனித்தல் (Observation )

3 உணருதல் (Feeling)

4 அறிதல் (knowing )

  1. புரிதல் (understanding)

அறிதலைப் பற்றிய ஆராய்ச்சி வல்லுனர்களின் கருத்துப்படி “பார்த்தல் அனைத்தும் அறிதலோ அல்லது புரிதலோ அல்ல”. (Seeing is not knowing) ஆனால் பார்த்தல் அறிதலுக்கும் புரிதலுக்கும் அடிகோலாக இருக்கின்றது. ஆகவே மழலையர்களுடன் பழகும் பொழுது அவர்கள் எதை பார்க்கின்றார்கள் எங்கே பார்க்கின்றார்கள் எப்படிப் பார்க்கின்றார்கள் என்பதையெல்லாம் கூர்ந்து கவனித்தல் அவசியம். இது அவர்களுடைய கற்றலின் பரிமாணங்களை மட்டுமின்றி அவர்களின் கற்றலின் போக்கு திறன் ஆகையவற்றைப் பற்றிய ஒரு பொதுவான கருத்தை மதிப்பீடு செய்ய உதவும்

பார்த்தல் ( Seeing) என்ற நிகழ்வு குறைந்த காலகட்டத்திலே திசைமாற வாய்ப்புக்கள் அதிகம். ஆகவே மழலையர்களின் பார்வையை வைத்து அதைப்பற்றிய அறிவு வந்துவிட்டதாகக் கருதுதல் தவறாகும். பார்த்தலிலிருந்து மழலைகள் அடுத்த நிலையான கவனித்தலுக்குச் செல்கின்றன. (Observation) இந்த நிலையில் பார்க்கின்ற இடம், பொருள் மற்றும் செயல்களை உன்னிப்பாக நோக்குதலால் அதைப்பற்றிய ஒரு கோர்வையான கருத்துக்கு வித்திடப்படுகிறது. ஆனால் இந்த முயற்சி எந்தவிதமான கருத்துக்கு வித்திடுகிறது என்பதை முடிவு செய்யமுடியாது. உதாரணமாக வீட்டில் தன்னுடைய தாயார் ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்புவதையோ அல்லது அடுப்பில் தோசை வார்ப்பதையோ சிறிது தூரத்திலிருந்து கவனிக்கும் பொழுது அந்தக் கோர்வையான செயல்கள் அந்த மழலையின் மூளைக்கு எட்டுகின்றது. ஆனால் அதற்கான காரணங்களோ அல்லது அதன் விளைவுகளோ மழலைக்குத் தெரிவதில்லை. ஆனால் இந்த நிகழ்வு அது என்ன என்று உணரவேண்டும் என்ற உள்ளுணர்வுக்கு வித்திடுகின்றது.

இந்த உள்ளுணர்வால் உந்தப்பட்ட மழலை அதை உணர்வுபூர்வமாக அறிய முற்படுகின்றது, உடனே தன்னுடைய பயணத்தை அந்த நீரை நோக்கியோ அல்லது அடுப்பை நோக்கியோ ஆரம்பிக்கின்றது. அப்போது அந்த மழலைக்கு நீரின் குணங்களைப் பற்றியோ அந்த அடுப்பின் சூடான நிலை பற்றியோ எந்த நுண்ணறிவும் இருப்பதில்லை. இந்த உணர்வு சார்ந்த அனுபவம் மழலைக்கு புதுமையாக இருப்பது மட்டுமின்றி அது மகிழ்சசியையோ அல்லது துயரத்தையோ அளிப்பதாக அமைகின்றது. இந்த உணர்வு கற்றலுக்கு முக்கிய ஆதாரமாகும்.

உணர்வுகளால் கிடைத்த அனுபவமே அந்தக் குழந்தைக்கு ஒரு நேர்முகமான அல்லது மறைமுகமான கற்றலாக மாறுகின்றது. இது அறிதல் புரிதலின் ஆரமப நிலையாக அமைகின்றது. கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில்  “இது நீர்” என்றும் குளிர்ந்தோ அல்லது சூடாகவோ இருக்கின்றது என்ற உணர்வுசார்ந்த கற்றலும் மழலைக்குக் கிடைக்கின்றது.

இந்த விதமான கற்றல் நாள் முழுதும் பெரியவர்களின் மேற்பார்வையிலோ அல்லது மேற்பார்வையின்றியோ தொடர்ந்து கிடைத்துக்கொண்டிருக்கின்றது. பொதுவாக்ச மழலைப் பருவத்தில் விளையாட்டுப் பொருள்களின் மூலமாக இந்த அறிதல் மகிழ்வை ஊட்டுவதாகவும் ஒரு நிர்பந்தத்திற்கு கட்டுப்படாததாகவும் அமைகின்றது

மழலையர்களின் கற்றலில் ஒரு முக்கிய நிலை “மழலைப் பேச்சு.” இது கேட்பதற்கும் உறவாடுவதற்கும் ஒரு இனிமையான அனுபவம் தரக்கூடியது.

இதனால் தான் வள்ளுவரும்

யாழினிது குழலினிது என்பர்தம் மக்கள்.

மழலைச்சொல் கேளாதவர்.

என்று சுருங்கச் சொல்லி விளங்க வைத்திருக்கிறார்.

இந்த மழலைப் பேச்சின் உருவகம், வளர்ச்சி, முறைகள் பற்றிய பலவித ஆராய்ச்சிகள் உலக அளவில் நடந்துள்ளன. இந்த மழலை மொழிகள் வெவ்வேறு கலாச்சாரங்களுக்கும் சமுதாய நடைமுறைகளுக்கும் தகுந்தவாறு வடிவெடுத்துள்ளன. ஆனால் மொழிகளுக்கு அப்பாற்பட்டு இது மனித மூளையின் வளர்ச்சிப்பாதையில் ஒரு இன்றியமையாத மற்றும் முக்கியமான படிக்கல்லாகக் கருதப்படுகின்றது..

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *