படக்கவிதைப் போட்டி 98-இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி

திருமிகு. வெண்ணிலா பாலாஜி எடுத்திருக்கும் இந்தப் புகைப்படத்தை இவ்வாரப் படக்கவிதைப்போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்களுக்கு நம் நன்றி உரித்தாகிறது!

elderlyness

செய்தித்தாளைக் கைகளிலும் முதுமையை உடலிலும் சுமந்திருக்கும் இந்தப் பெரியவரின் பார்வையின் கூர்மையில் ஏதோ ஒரு செய்தி ஒளிந்திருக்கக் காண்கிறேன்!

அந்த அரிய தகவலைத் துப்பறியும் வேலையைப் போட்டியாளர்களிடம் விட்டுவிடுவோம்!

நமக்குத் தொழில் கவிதைகளை இரசித்தல் மட்டுமே!

***

பாடுபட்டுப் படிக்கவைத்த பிள்ளைகள் தன்னை முதுமையில் பேணாது, நாடுவிட்டு நாடு சென்றாலும் அவர்பால் கொண்ட அன்பில் மாற்றங்கொள்ளாது, மனத்தில் ஏமாற்றங்கொள்ளாது, தன்னையே நம்பிவாழும் உத்தமரைக் காண்கிறோம் திரு. செண்பக ஜெகதீசனின் கவிதையில்.

ஒரு தந்தையின் குரல்…

பாடுபட்டுச் சம்பாதித்து
படிக்கவைத்த பிள்ளைகள்
நாடுவிட்டுச் சென்றனர்,
நல்ல வாழ்வு தேடியே..

உறுதுணையாயிருந்த
உத்தமியும்
உலகைவிட்டுச் சென்றுவிட்டாள்..

வேறுதுணை ஏதுமில்லை,
உறவினரும்
எறெடுத்துப் பார்க்க
என்னிடம்
எதுவுமில்லை சொத்தாக..

சோறு கேட்கும் வயிற்றுக்குச்
சொற்பமேனும் கொடுக்கத்தான்
வேறு எவரையோ நாடி
வேலைசெய்து பிழைக்கின்றேன்..

சாகும்வரை யாரையும்
சார்ந்திடாமல் நடமாட
சக்திகொடு இறைவா..

என்னைப்போல பலருண்டு
இங்கேதான்,
அதனால்
எங்கிருந்தாலும் வாழ்க
என்பிள்ளைகள் சுகமாய்…!

***

”இளமையில் தாய்தந்தையரிடம் தாம்பெற்ற அன்பினை அவர்தம் முதுமைக்காலத்தில் அவர்களுக்குத் திருப்பித் தருதல் பிள்ளைகளின் கடனாகும். குறைந்துகொண்டே வரும் அம்முதியோரின் வாழ்வுக்கு இனிமைகூட்டுவது, இன்பமூட்டுவது அன்புவொன்றே!” என்பது திரு. பழ. செல்வமாணிக்கத்தின் கருத்து.

தனிமைக்கொரு தனிமை

குழி விழுந்த கண்கள்!
ஒளி மறந்த விளக்குகள்!
கண்ணீரை மறைக்க ஒரு
கண்ணாடி!
மேல் சட்டை முழுதும் அழுக்குக் கறை!
உள்ளத்தில் தூய்மையின்
வளர்பிறை!
நரை நிறைந்த சிகை!
வேதனை கலந்த ஒரு
புன்னகை!
கூடிக் கொண்டே போகும் அகவை!
குறைந்து கொண்டே வரும் வாழ்க்கை!
வறுமை இவர்களின் வாடிக்கை!
வசதியும், இறைவனும் இவர்களுக்கு
ஒன்று தான்!
இரண்டையும் இதுவரை இவர்கள்
பார்த்ததில்லை !
செய்தித் தாளில் இவர்
தேடுவது எதனை?
தொலைத்த தன் வாழ்க்கையையோ!
வாடிய பயிரைக் கண்டு வாடித்
தவித்தது ஒரு காலம்!
வாடிய உயிரையும், வேடிக்கை
பார்ப்பது இக்காலம்!
இவர்கள் வாழ்வில் என்று
வரும் வசந்தகாலம்!
இளமையில் வறுமை, கொடுமை
என்றாள் ஔவைப் பாட்டி!
உண்மையில் கொடுமை
முதுமையில் தனிமை!
பிறந்தவுடன் நீ தந்தைக்கு குழந்தை!
இன்றைக்கு அவர் தான் உன்
மூத்த குழந்தை!
திருப்பித் தருவாய் உன்
அன்பின் பகிர்வை!

***

”முதுமை வேண்டுவது பொன்னையோ பொருளையோ அல்ல; பெற்ற பிள்ளைகளின் அன்பையும் அருளையுமே!” என்பதை எளிமையாய்த் தம் கவிதைகளில் காட்டியிருக்கும் கவிஞர்களுக்குப் பாராட்டுக்கள்!

இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தெரிவாகியிருக்கும் கவிதையைக் காண்போம்!

உழைப்பும் தன்னம்பிக்கையும்!

எனக்ககவை எண்பதேயானாலும்
எனக்குற்ற துணையென்று “உழைப்பு” ஒன்றுதான்!

என்கையே எனக்குதவியெனும் கருத்தில்
என்மன உறுதி! இன்றைக்கும் எனைவாழவைக்கும்!

தள்ளாத வயதினில் சமுதாய மெனைத்
தள்ளிவைப்பதாக யான்நினைத்தாலும்…

வெறுப்புற்று வாழவியலா நிலைகண்டுநான்
விரக்தியுற்றுத் துவளும்மனம் கொண்டதில்லை!

முதியோரில்லம் சேர்ந்தங்கொரு கோடியில்
முடங்கி உறங்கி சுருங்கிக் கிடக்கவும் விரும்பவில்லை!

மனிதரிலே மனிதராக நானும் பிறந்தேன்
இளமைமுதல் மானத்தோடு வாழ்வதிலே முயன்று முதியவனானேன்!

“சோம்பித் திரிவர் தேம்பித் திரிவர்”!
“சோம்ப லிளமையில்” – “வறுமைமுதுமையில்”- யென்கிற..பழமொழியின் உட்பொருள்தனை யறிந்துநம் மனதை வழக்கப்படுத்தி நலம்வாழ முயற்சி செய்தால்

பந்தங்களும் சொந்தங்களும் உதவாத போதும்நம்
பரிதாப நிலைகண்டொரு நாளும்பதற வேண்டியதில்லை!

சிற்பம்தனில் ஒளிந்திருக்கும் சிறு உளியின்சக்திபோல
உடம்பினுள் ஒளிந்திருக்கும் உன்னதசக்தி நீயறிந்தால்!

காலிழந்த நங்கையொருத்தி சிகரம்ஏறிய சாதனைபோல
நீயிழந்த நம்பிக்கை மீண்டுமெழ – நீயுமுண்டு வரலாற்றில்!

பிறக்கும் போது தொட்டிலில் தொடங்கிய வாழ்க்கையை
இறக்கும்வரைக் கட்டிலில் வீழ்ந்துவாழ மனமில்லை!

இளமையில் சேர்த்ததெல்லாம் எனைவிட்டு விலகினாலும்
உழைக்குமெண்ணம் முதுமையிலும் விலகவில்லை!

உழைப்பவர் போலசிலர் வேடந்தான் போடுகின்றார்!
உண்மைஅறிந்து கொண்டபின்னே வெறுப்புதான் மிஞ்சும்!

எண்பது வயதானாலும் உழைப்பயறாத..
என்முதுகில் கூன்விழ மறுப்பது இயற்கையன்றோ!

நாளிதழ் தினமும் படிக்கின்றேன் கண்ணொளி இன்னும் மங்கவில்லை!
நலமுடன்வாழ நானிலத்தில் நானின்றும் உழைக்கின்றேன்!

“நாடிவரும் அதிர்ஷ்ட மெனநினைத்து” உழைக்கமுயற்சி யிலையெனில்…
ஓடிவிடும் உடல்நலம் வீணாய் நமைவிட்டு
ஒப்பி நானும்…தளராது தன்னம்பிக்கையில்…தெரிந்தகைத் தொழில்செய்து
அயராது உழைத்தினிதே வாழ்வேன்அகவை நூறானாலும்!

உட்கார்ந்த இடத்தினிலே, வயதான காலத்திலும்
உயர்வான எண்ணத்திலே, ஒருவருக்கும் தீங்கின்றி

வேளையொரு சோற்றுக்குப் பிறரைவேண்டி வாழாமல்
சைக்கிளுக்குக் காற்றடித்துப் பஞ்சர் ஒட்டிஉழைத்துப் பிழைப்பேன்!

முதியோர் இல்லம் சேர்ந்து முடங்கிவிட விரும்பாது,

”ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்”
எனும் வள்ளுவத்துக்கு வாழும் சான்றாய், ”வண்டிக்குப் பஞ்சர் ஒட்டியேனும் என் வாழ்க்கை வண்டியைக் கண்ணியத்தோடு ஓட்டுவேன்!” எனும் நெஞ்சுரத்தோடு வாழும் நேர்மைமிகு பெரியவரைத் தன் கவிதையில் கம்பீரமாய்க் காட்சிப்படுத்தியிருக்கும் பெருவை திரு. பார்த்தசாரதியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்து மகிழ்கிறேன்.  

 

 

 

மேகலா இராமமூர்த்தி

மேகலா இராமமூர்த்தி

Share

About the Author

மேகலா இராமமூர்த்தி

has written 310 stories on this site.

2 Comments on “படக்கவிதைப் போட்டி 98-இன் முடிவுகள்”

 • பழ.செல்வமாணிக்கம் wrote on 13 February, 2017, 17:14

  உழைப்பும்,தன்னம்பிக்கையும் இருந்தால் முதுமை கூட இனிமை தான் என்னும் கருத்தை சொல்லியிருக்கும், பெருவை திரு.பார்த்தசாரதி,இவ்வார சிறந்த கவிஞராக தேர்நதெடுக்கப் பட்டிருப்பது மிகச் சரியான முடிவு. கவிஞருக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.

 • பெருவை பார்த்தசாரதி
  பெருவை பார்த்தசாரதி wrote on 13 February, 2017, 18:15

  இவ்வாரம் சிறந்த கவிஞராக எனைத் தேர்வு செய்த நடுவர் திருமதி மேகலா ராமமூர்த்தி அவர்களுக்கும், மனமார்ந்த பாராட்டை முன்வைத்த கவிஞர் பழ. செல்வமாணிக்கம் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  ஒவ்வொரு வாரமும் ஒரு படத்தை வெளியிட்டு, அந்தப் படத்தைப் பார்த்தவுடன் நம் சிந்தனையில் எழுகின்ற சிறப்பான எண்ணங்களை கவிதையாகத் தொடுக்கின்ற வல்லமையை எழுச்சி பெற, இந்த படக்கவிதை என்கின்ற போட்டியாக வல்லமையில் வெளிவருவதை பாராட்ட வேண்டும்.

  ஏனென்றால், ஒரு படத்தைப் பார்க்கும்போது, ஒவ்வொருவர் மனதிலும் தோன்றுகின்ற எண்ணங்கள் வெவ்வேறு விதமாக எழுவதை இங்கே காணமுடியும். ஒவ்வொருவர் சிந்தனையில் ஊற்றெடுக்கின்ற வித விதமான எண்ணங்களை பார்த்து வியக்க வைக்கின்றது படக்கவிதை.

  ஒரு சிறப்பான படத்தை வைத்து எழுதுவதைவிட, சாதாரணமாக இயற்கையாக எடுக்கப்பட்ட படத்தை வைத்து எழுத நினைப்பதால், எவ்விதத்திலும் நம்மால் எழுதமுடியும் என்கிற மேலான நம்பிக்கையும் பிறக்கிறது.

  “உங்களாலும் கவிதை எழுத முடியும்” என்கிற எண்ணத்தையும் தூண்டி, கவிதை எழுத வேண்டும் என்கிற உழைப்பையும் உருவாக்குகின்ற இம்முயற்ச்சி வெற்றிபெற்று, தொடர்ந்து முன்னேறி இன்று சதமடிக்க உள்ளது.

  வல்லமை இதழுக்கு புகழ் சேர்க்கும் விதமாக தொடர்ந்து புதிய முயற்ச்சிகளைக் கையாளும் வல்லமை ஆசிரியர் குழுவுக்கு, குறிப்பாக ஆசிரியர் பவள சங்கரி, பொறுப்பாசிரியர் சாந்தி மாரியப்பன் மற்றும் நடுவர் மேகலா அவர்களுக்கும் என் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  அன்புடன்
  பெருவை பார்த்தசாரதி

Write a Comment [மறுமொழி இடவும்]


+ 7 = eleven


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.