செண்பக ஜெகதீசன்

நெடுநீர் மறவி மடிதுயில் நான்குங்
கெடுநீரார் காமக் கலன். (திருக்குறள் -605: மடியின்மை) 

புதுக் கவிதையில்

காலங் கடத்தலுடன் மறதி
சோம்பல் தூக்கம்,
இவை நான்கும்
வாழ்வில் கெட்டழிவோர்
விரும்பியேறும் மரக்கலங்களாம்…! 

குறும்பாவில்

மறதி காலங்கடத்தல் சோம்பல் தூக்கமிவை
மரக்கலங்கள் வாழ்க்கைக் கடலில்,
விரும்பி ஏறுவர் கெட்டழிவோர்…! 

மரபுக் கவிதையில்

காலங் கடத்தல் மறதியோடு
     -குறையாச் சோம்பல் கடுந்தூக்கம்,
ஞால வாழ்வில் இவைநான்கும்
     -நன்றாய் வாழ விரும்பாமல்
கால மெல்லாம் கெட்டழிவோர்
     -கருத்தில் கொண்டே விருப்பமுடன்
பாலமாய் ஏறிடும் மரக்கலமாம்,
     -பாரீர் நீரே பாரோரே…! 

லிமரைக்கூ…

காலங்கடத்தல் சோம்பல் மறதி,
கடுந்தூக்கம் கலம்நான்கிவை ஏறிச்செல்வோன்
கெட்டழிவான் வாழ்விலே உறுதி…! 

கிராமிய பாணியில்

வேண்டாம் வேண்டாம்
சோம்பலு வேண்டாம்,
வாழ்வக் கெடுக்கிற
சோம்பலு வேண்டாம்… 

சோம்பலோட கூடவே
காலங்கடத்தலு மறதி
கடுந்தூக்கம் எல்லாமே
கெட்டழிக்கும் மனுசனயே,
கேடுகெட்டவன் ஏறுகிற
கப்பலுதான் இதுநாலும்… 

அதால,
வேண்டாம் வேண்டாம்
சோம்பலு வேண்டாம்,
வாழ்வக் கெடுக்கிற
சோம்பலு வேண்டாம்…!

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *