-எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்த்திரேலியா

“திருப்புகழ்” எங்கள் சமயத்துக்குக் கிடைத்த மற்றொரு வரப்பிரசாதமாகும்.  கோவில்களிலே திருமுறை ஓதும்போது திருப்புகழும் சேர்க்கப்பட்டுவிட்டது. இதற்குக் காரணம் அதன் அமைப்பும், இறைவன் புகழைக் கூறும் விதமுமாகும்.  தமிழ்மொழியில் இப்படிப் பாடமுடியுமா என்னும் அளவுக்கு மிகமிக அற்புதமாக அமைந்திருப்பதுதான் திருப்புகழ்.

அந்தத் திருப்புகழைத்தந்த அருணகிரியார் பற்றிப் பார்க்கும்பொழுது அவர் யாவரும் வெறுக்கும்படியான அருவருக்கத்தக்க இழிவான முறையில் வாழ்ந்தார் என்று அறியமுடிகிறது. யாவரும் வெறுத்து ஒதுக்கிய நிலையில் இருந்தவரை மாற்றியது எது? அதுதான் இறைவனின் திருவருள்! அருணகிரியாரின் மாற்றம் அவருக்கு மட்டும் பயன்பட்டதா? இல்லவே இல்லை! யாவருக்கும் பயன்பட்டது. அவரது மாற்றத்தினால் திருப்புகழோடு – கந்தர் அனுபூதி, கந்தரலங்காரம் என்னும் அரிய தத்துவங்களும் பாடல்களாக வந்து சேர்ந்தன. நாளும்பொழுதும் கோவில்கள்தோறும் பயபக்தியுடன் ஓதப்படுகின்றன். பலருக்கும் பக்திக்கு வழிகாட்டியும் நிற்கின்றன என்பதும் நோக்கத்தக்கதாகும்.

நல்லைநகர் தந்த நாவலர் பெருமானை சைவர்கள் தமது ஐந்தாவது குரவராக கொண்டுள்ளனர்.

“நல்லை நகர் நாவலர் பிறந்திலரேல்
சொல்லு தமிழ் எங்கே சுருதியெங்கே
எல்லரிய வேதமொடு ஏத்து ஆகமங்களெங்கே” – என்று போற்றும் வண்ணம் நாவலர் பெருமான் சைவ சமயத்துக்குத் தொண்டாற்றியுள்ளார். நாவலர் மட்டும் இல்லறத்தில் இறங்கி அதன்வழி சென்றிருப்பாரேயானால் அவரின் ஆற்றல்கள் இந்தளவுக்கு எமது சமயத்துக்கு உதவியிருக்குமா என்பது கேள்விக்குரியதே! ஆனால் நாவலர் தனது வாழ்க்கைப் போக்கையே மாற்றினார்.

மாற்றம் பெற்றதன் விளைவால்தான் அவரால் சைவத்தைக் காப்பாற்றவும், சைவம் இன்றும் ஈழத்தில் தழைத்து நிற்கவும் முடிகிறது எனலாம். தான் மாறியது மட்டுமன்றி – மற்றவர் மனங்களிலும் நல்ல சமயமாற்றம் வரவும் பெரும் பங்காற்றினார்.

புராணங்களையும், இதிகாசங்களையும், கோவில்களில் சாதாரண மக்களும் விளங்கும்படிப் பிரசங்கம் மூலம் எடுத்து விளக்கினார். பெரிய புராணத்தை யாவரும் விளங்கும்படி வசனநடையில் ஆக்கினார். கந்தபுராணத்தைக் கோவில்கள் தோறும் விளக்கினார். சமய அனுட்டானங்கள் பற்றி நீண்ட விரிவுரைகளை கோவில்களில் ஆற்றினார். நாவலர் தனது சமயப்பணியை மேற்கொள்ளத் தேர்ந்தெடுத்த இடம் கோவில்கள்தான்.

சம்பந்தரும் அப்பரும் கோவில்கள்தோறும் சென்று இறைபுகழைப் பாடி சமயம் வளர்த்து மக்களிடையே மாற்றம் வரச்செய்ததுபோல – நாவலர் தனது பேச்சைக் கோவில்கள்தோறும் நிகழ்த்தி மக்கள் மனத்தில் நல்ல மாற்றம் வரச் செய்தார்.

நாவலர் ஏற்படுத்திய மாற்றத்தால் நாவலர் கலாசாரம் என்ற ஒன்றும் – கந்தபுராணக் கலாசாரம் என்ற ஒன்றும் ஈழத்தில் உருவாகி நல்ல மாற்றம் வருவதற்கு வழிவகுத்தது எனலாம்.

எம்மிடையே வாழ்ந்து இறையடி சேர்ந்தவர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள். அவர் தனது வாழ்க்கையை மாற்றி அதனை இறைவழிபாட்டிலும், சமயவளர்ச்சியிலும் செலுத்தினார். ஊரெல்லாம் சென்றார். இறைவன் பற்றியும், பக்தி பற்றியும், வாழ்வாங்கு வாழுதல் பற்றியும், தர்மம் பற்றியும், அன்னதானம் பற்றியும் எடுத்துச் சொன்னார். சொன்னதோடு நின்றுவிடாமல் – நாவலர் பெருமான் போன்று செய்தும் காட்டினார்.

தேடிய பொருளையெல்லாம் தெய்வப்பணிக்கே அர்ப்பணம் செய்தார். உலகு எங்கும் சென்றுவந்தார். அவரது இறைபக்தியினால் பலர் மாற்றம் அடைந்தனர். சமூகத்தில் மாற்றங்களுக்கு அவரின் செயற்பாடுகள் பெரிதும் உதவியது. அவர் தனது கதாப்பிரசங்கங்களை நிகழ்த்துவதற்குத் தேர்ந்தெடுத்த இடம் கோவில்கள்தான். கோவில்கள் காந்தசக்தி மிக்கன. யாவரையும் தன்வயமாக்கக் கூடியன. எனவேதான் நாவலரைப் போன்று வாரியார் சுவாமிகளும் கோவிலைத் தெரிவு செய்தார். இதனால் அவர்கள் எதிர்பார்த்த மாற்றமும் ஓரளவுக்கு நிகழ்ந்தது எனலாம்.

இன்பம் கிடைக்கும் நிம்மதி கிடைக்கும் என்றெண்ணி – உல்லாச விடுதி களை நோக்கிச் செல்லுகின்றனர். அங்கு சென்றால் உல்லாசமாக இருக்க முடியும் என்றே எண்ணுகின்றனர். பொழுதை ஒரு வழியாகப் போக்கிவிட்டோம் என்றும் எண்ணுகின்றனர்.

”பொழுது” என்பது பெறுமதியானது.பொழுதைப் போக்கிவிட்டோம் என்பது அர்த்தமற்றதாகும். பொழுதைப் பொருத்தமான முறையில், பயன்தரும் வகையில் பயன்படுத்த வேண்டும். பொழுதை நாம் பொருந்தா வகையிலே செலுத்த முற்பட்டால் – எமது மனம், சிந்தனை, செயற்பாடு யாவுமே தடம் புரண்டே போய்விடும். இங்கெல்லாம் சென்று எமது அரிய பொழுதினை வீணடிக்கின்றோமேயன்றி பயனுடையதாக்குகின்றோமல்ல என்பதை யாவரும் உணருதல் அவசிமானதாகும். கேளிக்கைகளும், களிப்பாட்டங்களும் என்றுமே நல்ல மாற்றங்களைத் தரவே மாட்டாது என்பதையும் நாமனைவரும் கட்டாயமாக மனத்தில் பதித்துக் கொள்ளுதல் வேண்டும்.

“அரிது அரிது மானிடர் ஆதல் அரிது” என்பதை யாவரும் அறிவோம். அப்படி அரிய பிறவியில் வந்த நாங்கள் சுதந்திரமாக வாழலாம். விலங்குகளுக்கு வாழ்க்கைபற்றி எதுவுமே தெரியாது. நாகரிகம், பண்பாடு, கலை, கலாசாரம், உயர்வு, தாழ்வு, படிப்பு, உழைப்பு, தானம், தர்மம், இவையாவும் மனித சமூகத்துக்கே உரியன. இவை பற்றி விலங்குகள் நினைத்தே பார்ப்பதும் இல்லை.

இதனால் மாற்றம் என்பதுபற்றி அவைகள் அலட்டிக் கொள்வதே இல்லை.  ஆனால் மாற்றம் என்பது மனித சமூகத்துக்கு மிகவும் அவசியமானதாகும். அந்த மாற்றமும் நல்ல மாற்றமாகவே அமைவதும் மிகவும் கட்டாயமாகும். அந்த வகையில் சமூகத்தில் எப்படியெல்லாம் மாற்றங்கள் நிகழ்ந்து வந்தன அவை சமூகத்துக்கு எப்படியெல்லாம் நல்ல வழியாக அமைந்தன என்பதையெல்லாம் பார்த்தோம்.

எதை எப்படிச் செய்தால் நன்மைவரும் அல்லது தீமைவரும் என்று அறியும் ஆற்றல் மனிதனுக்கே இருக்கிறது. நல்லபடி வாழ நல்ல மாற்றங்கள்தானே அவசியமானது. அந்த மாற்றங்களை நாமும் எமக்குள் ஏற்படுத்திவிடலாம்.

பயப்படாதீர்கள்! இன்று – உலகம் போகும் போக்கில் எத்தனையோ மார்றங்கள்! என்னதான் செய்யமுடியும் என்று நீனைக்கிறீர்களா! சற்று நின்று நிதானியுங்கள்! சஞ்சலங்கள் மிகுந்து விட்டதா? நித்திரையும் வர மறுக்கின்றதா? எல்லாமே வெறுமையாகத் தோன்றுகிறதா?

இவையாவும் தீர வழியைத் தேடுகிறீர்களா? நல்ல மருந்தையும் நாடு கிறீர்களா? யாவற்றுக்கும் – நல்ல மருந்தும், மாற்று வழியும் உங்கள் அருகிலேயே இருக்கிறது. அது ஏன் இன்னும் உங்களுக்குப் புலப்படவில்லை என எண்ணுகிறீர்களா? நீங்கள் இன்னும் அந்த இடத்தின் அருமையைப் பெருமையை அறியவில்லை. அதனை நாடவில்லை! தேடி ஓடவில்லை!

கவலைப்படாதீர்கள்! அந்த இடம் எங்கும் இல்லை. உங்கள் இருப்பிடத் துக்கு அருகிலோ அல்லது சற்றுத் தூரத்திலோ அமைந்திருக்கும் ” கோவில்கள்” தான். கோவில்களுக்கு இன்னுமொரு சிறந்த பெயர்தான் ” சாந்திநிலையம். ” அன்பு, பொறுமை, கருணை, இரக்கம், பாசம், நேசம், சாந்தி, சமாதானம், அமைதி, அடக்கம், ஆனந்தம், ஆரோக்கியம், அத்தனையையும் இலவசமாக வழங்கி நிற்கும் இடம் கோவில்கள்தான்.

கோவிலுக்குச் சென்றால் மனப்பாரம் குறையும்; சஞ்சலங்கள் மறைந்துவிடும்; மூர்க்க குணங்கள் அடங்கிவிடும். மற்றவர்மீது பற்றும் பாசமும் ஏற்படும். தாய்மை உணர்வு உருவாகும். தாழ்மை உணர்வு ஏற்படும். சகோதரத்துவம் வந்துவிடும். உயர்வு தாழ்வு ஓடிவிடும். போட்டியும் பொறாமையும் தவிடு பொடியாகிவிடும். போலிக் கெளரவம் பொசுங்கிவிடும். மனமெல்லாம் தூய்மையான உணர்வு எழுந்துநிற்கும். அமைதி தானாய்வந்து நிற்கும். அங்கு ஒருவித ஆனந்தம் பொங்கிப் பிரவாகிக்கும்.

இந்தப்பிரவாகத்தில் தினமும் நாம் நம்மை இணைத்துக் கொண்டால் வாழ்க்கையே அர்த்தமுள்ளதாக மாறிவிடும். மாறிவிடுவதை உணருகின்ற வேளை – எம்முள் இன்பவெள்ளம் பாயும். அதுதான் இறைவனின் பெருங் கருணை. இந்த உணர்வைத்தான் பகவான் இராமகிருஶ்ண பரமஹம்சர் அடைந்தார் என அறிகிறோம்.

“தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே!” இது ஒரு நல்ல மாற்றம் அல்லவா? மனம் மாற்றம் அடைய உடலும் மாற்றம் அடைந்து செயற்பாடும் மாற்றம் அடைந்து – தூய்மையும் இறையும் ஒன்றாகும் இடம் கோவில்தான்.

இன்னுமே மாற்றம் அடையாது இருப்பவர்களே – அனைவரும் வாருங்கள்! கோவிலுக்குச் செல்லுவோம்! மனம் மாற்றம் ஏற்படுத்தும் மருந்து கோவிலில் தானிருக்கிறது. ஆலயத்தைத் தொழுவோம்! ஆண்டவனை நினைப்போம்! சமயவழியில் செல்லுவோம்! மாறாத மனமெல்லாம் நிச்சயம் மாற்றம் அடையும். மாற்றம் என்பது நடந்தே தீரும்! அதுவும் நல்ல மாற்றம் என்பதே நல்ல வாழ்வுக்கும் தேவையாகும். அதனைத் தந்தது சமயமும் கோவில்களும்தான். இன்றளவில் தந்து கொண்டிருப்பதும் சமயமும் கோவில்களுமேயாகும்.

(முற்றும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *