நிர்மலா ராகவன்

கோபம் பொல்லாத வியாதி

நலம்-2-1
கோபம் மனித இயற்கை. சிறு குழந்தைகூட பசி வரும்போது, அழுது, தன் தேவையை வெளிப்படுத்தும். உடனே பால் கிடைக்காவிட்டால், கோபம் அதிகரிக்க, அழுகையும் பலக்கும்.

`நான் கோபக்காரன். அதற்கு என்ன செய்வது? கோபம் இயற்கைதானே!’ என்று, கோபத்தை அடக்கத் தெரியாது, வன்முறையில் இறங்குபவர்களும் உண்டு.

இது எந்த விதத்தில் சரி? கோபம் ஆத்திரமாக மாறும்போது, பிறரும் அதனால் பாதிக்கப்படுகிறார்களே!

தார்மிக கோபம்

தீயது என்று தெரிந்தே சிலர் செய்யும் காரியங்களால் நாம் அடையும் கோபம் இது.

`ஒன் வே’ (One Way) என்று போட்டிருந்தாலும், எல்லாரும் தவறான வழியில் அத்தெருவில் காரோட்டிப் போகும்போது, `நான்தானே சரியாகப் போகிறேன்!’ என்ற மிதப்புடன் ஒருவன் சென்றால் யாருக்குக் கெடுதல் விளையும்? அவர்களைப் பின்தொடராது, வேறு வழியைப் பார்த்துக்கொண்டு போக வேண்டியதுதான்.

பதின்ம வயதினல் பலரும் உலகம் எப்படியெல்லாம் சிறந்திருக்க வேண்டும் என்று கற்பனை செய்திருப்பார்கள். அது பொய்த்து, `உலகம் இவ்வளவுதானா!’ என்று தோன்றிப்போவதை ஏற்க முடியாதபோது, கோபம் வருவது இயல்பு.

ஆனால், அதை மாற்ற முடியாது என்கிற உண்மை புரியும்போதும் அந்தக் கோபத்தை விடாமல் பிடித்துக்கொண்டிருப்பதால் யாருக்கு நன்மை? கோபத்தை ஒத்திப்போட்டால், அதன் தீவிரம் குறையும். மாற்று வழியும் புலப்படும்.

கதை

ஒரு முறை நாங்கள் குடும்பத்துடன் மிருகக்காட்சி சாலைக்குப் போயிருந்தபோது, மலாய் இளைஞன் ஒருவன் தன் கைநிறைய சிறு சிறு கற்களை வைத்துக்கொண்டு, கூண்டுக்குள் இருந்த குரங்குக்குட்டிமேல் எறிந்து கொண்டிருந்தான். ஒவ்வொரு முறையும் அது வலியில் துடித்துக் கத்தியபடி வேறு இடத்துக்குத் தாவியபோது, உரக்கச் சிரித்தான். பக்கத்திலிருந்த காதலியைப் பார்த்துப் பெருமிதத்துடன் பார்த்தான் — என்னமோ தன் வீரத்தால் அவளை அசத்த நினைத்தவன்போல்.

எங்களால் அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை.

அவன் காதில் படும்படி, “மிருகங்களைப் பிடிக்காதவர்கள் இங்கு (Zoo) வந்திருக்கவே கூடாது!” என்று ஆங்கிலத்தில் கடுமையாகச் சொன்னாள் என் மகள்.

முகம் சிறுத்துப்போக, அவன் அங்கிருந்து விரைந்தான்.

நிராசையே கோபம்

ஒன்றரை வயதுக் குழந்தையான பாலன் ஓயாது ஏதேதோ பேசினான். மழலையில் அவன் கூறியது தாய்க்கு விளங்கவில்லையே என்று அழுதும் பார்த்தான். அப்படியும் பலனில்லாது போகவே, நிராசை கோபமாக மாறியது.

அம்மாவைக் கோபித்துக்கொள்ள முடியுமா?

தன்மேலேயே கோபம் வர, நெற்றியைச் சுவற்றில் முட்டிக்கொள்ள ஆரம்பித்தான். நெற்றி புடைத்துப்போயிற்று. ஆனாலும் அம்மாவுக்கு அவன் மொழி புரியவில்லை. `அப்படிச் செய்யாதே!’ என்று அவள் மன்றாடியும், அவனால் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள இயலவில்லை.

அதனால், அவன் சுவற்றருகே போகும்போதெல்லாம் தன் கையை அதன்மேல் வைத்து, அவனுடைய நெற்றியைப் பாதுகாப்பாள் தாய்!

தெருவில் நெரிசல் அதிகமாக இருக்கும்போது, எல்லா வாகன ஓட்டிகளும் பல்வேறு ஒலிகளை எழுப்புவார்கள். இதனால் முன்னாலிருப்பவர்கள் வேகமாகப் போய்விடுவார்களா, என்ன? பிறர் தான் நினைத்தபடி நடக்கவில்லையே என்ற ஆத்திரத்தை வெளிப்படுத்த ஏதோ ஒரு வழி!

இதேபோல், பதவியிலிருக்கும் சிலர் செய்யும் அக்கிரமங்களை பார்ப்போரிடமெல்லாம் கூறிக் கூறி அங்கலாய்ப்பார்கள் சிலர். இதற்கென்றே டீக்கடைகளுக்குப் போகிறவர்களும் உண்டு!

ஒருவர் அடையும் கோபத்தால் பிறரை மாற்றிவிடுவது நடக்காத காரியம்.

கதை

எவ்வளவோ எதிர்பார்ப்புகளுடன் இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்திருந்தாள் துர்கா. ஆனால், அவள் கணவன் ஈச்வரனோ, எப்போதும்போல் தன் நண்பர்களுடனேயே பெரும்பொழுதைக் கழித்தான்.

இரவில் நேரங்கழித்து அவன் வீட்டுக்கு வரும்போதெல்லாம் துர்கா தன் கோபத்தில் உழன்று கொண்டிருப்பாள். அவர்களுக்குடையே விவாதம் முற்றும். அவளைத் தவிர்க்க, இன்னும் அதிக நேரத்தை வெளியில் செலவிட்டான் ஈச்வரன்.

துர்காவின் ஆரோக்கியம் கெட்டது. மன இறுக்கம் தலைவலி, வயிற்றுக்கோளாறு, இளைப்பு என்று பல உபாதைகள்.

சில வருடங்களுக்குப் பிறகு, கணவனை மாற்ற முடியாது என்று புரிந்துகொண்டாள். செய்ய முடியாத காரியத்திற்காகத் தன் உடலை எதற்காகக் கெடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஞானோதயம் பிறக்க, தோழிகளுடன் நேரத்தைச் செலவிட ஆரம்பித்தாள்.

`விவாகரத்து,’ என்று வழிகாட்டினர் சிலர். துர்கா ஒப்பவில்லை.

எந்த எதிர்பார்ப்பையும் விடுத்து, தனக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபட்டாள். மனமும் தெளிந்தது.

இவள் சுமுகமாக, ஈச்வரனும் அதிகப் பொழுதை வீட்டில் கழிக்க ஆரம்பித்தான். (இது நடக்க பல வருடங்கள் ஆயின).

நினைத்ததெல்லாம் நடக்காவிட்டால்

போட்டியில் பரிசு பெறாதவன் நீதிபதிகளைக் குற்றம் சாட்டுவதும், உற்றவர் இறந்துவிட்டால், மருத்துவர்மேல் கோபம் கொள்வதும் இயற்கை. ஆனால் அந்தக் கோபம் நீண்ட காலம் நம்மைப் பாதிக்க விடுவது அபாயம். பரிசும் கிடைக்கப் போவதில்லை, இறந்தவர் மீண்டு வரப்போவதுமில்லை.

கையாலாகாத்தனத்தால் வரும் கோபம்

கதை

“தெருவில நடக்கும்போது மனைவி என் கையைப் பிடித்து அழைச்சுட்டுப்போறா! எப்படிங்க!”
“இவரு தன்பாட்டில நடுரோட்டில நடக்கிறாருங்க! பயமா இருக்கே!”
அத்தம்பதிகள் இருவரும், மாறி, மாறி, என்னிடம் முறையிட்டார்கள்.

கணவருக்கு சில நாட்களுக்கு முன்னர்தான் இருதயத்தில் அறுவைச் சிகிச்சை நடந்திருந்தது. `இனிமே நீ என்கூட வராதே!’ என்று கோபமாகச் சொல்லிவிட்டு, தனியாகப் போக ஆரம்பித்திருந்தார்.

மனைவியின் பயம் நியாயமானதுதான் என்றாலும், எந்த ஆணுக்குத்தான் மனைவி தன்னைக் குழந்தைபோல் நடத்துவதை ஏற்க முடியும்?

“சின்னக் குழந்தைக்குச் சொல்றதுமாதிரி ஒவ்வொண்ணையும் அவருக்குச் சொல்லிக் குடுக்காதீங்க! ஃப்ரீயா விடுங்க!” என்று நான் எடுத்துச் சொன்னேன்.

“அவங்க ரொம்ப கஷ்டப்பட்டிருக்காங்க,” என்று அவர் மனைவிக்குப் பரிந்தார்!

கணவனும், மனைவியும் இப்படி ஒருவருக்காக மற்றவர் கவலைப்படுவதைப் பார்க்க நிறைவாக இருந்தது. சிரிப்பும் வந்தது. எங்கள் வாழ்வில் இல்லாத பூசல்களா!

ஏமாற்றமே கோபமாக

எல்லாருக்கும் ஏதாவது ஒரு சமயத்தில் கோபம் வரத்தான் செய்யும். அத்தருணங்களில் ஒருவர் எப்படி நடந்துகொள்கிறார் என்பதைப் பொறுத்துத்தான் அவரது குணத்தை எடைபோட முடியும்.

எங்கள் வீட்டருகே இருந்த கடையில் ஒரு கிலோ உருளைக்கிழங்கை ஒவ்வொன்றாகப் பொறுக்கி வாங்கினேன்.

`கொஞ்சம் குறைகிறதே!’ என்று கடைக்காரர் கரிசனமாக தானே ஒரு கிழங்கை எடுத்துப்போட்டார்.
வீட்டுக்கு வந்து பார்த்தால், அந்தக் கிழங்கு அழுகல்!

கடைக்காரர் தான் மிகவும் பக்திமான் என்று சொல்லிக்கொள்வார். ஒரு பள்ளிக்கூடத்தில் மதபோதகர் வேறு!

எதிலிருக்கும்போதே ஏமாற்றப்பட்டுவிட்டோமே என்ற கோபம் என்னுள் வினாடிக்கு வினாடி அதிகரித்தது. திரும்பக்கொடுப்பது என்று முடிவெடுத்ததும் மனம் சமாதானமாக, வேறு காரியங்களைக் கவனித்தேன்.

ஒரு மணி நேரம் கழித்து, மீண்டும் கடைக்குப் போய், “நீங்கள் போட்ட கிழங்கைப் பாருங்கள்,” என்று காட்டினேன், கடுமையாக.
“நீங்கள்தானே எடுத்துக்கொண்டீர்கள்?” என்றார், பதிலுக்கு.

விடாப்பிடியாக, “நீங்கள் இப்படிச் செய்தது நன்றாகவேயில்லை,” என்றதும், “சரி, சரி. வேறு எடுத்துக்கொண்டு போங்கள்!” என்றார் அசுவாரசியமாக.

சிறு விஷயம்தான் என்றாலும், என் கோபம் வெற்றிச் சிரிப்பாக மாறியது.

கோபம் என்பது ஒருவர் அடையும் பயத்தால், வருத்தத்தால் வருவது.

கதை

பதினேழு வயதான மாலினியை அவளுடைய பாட்டு வாத்தியாரே கெடுக்க முயற்சித்தார். அவள் தப்பித்துவிட்டாலும், தான் பெரிதும் மதித்த ஒருவர் இப்படிச் செய்துவிட்டாரே என்ற வருத்தம் நாளடைவில் கோபமாக மாறியது.

நடந்த சம்பவத்தைப் பிறரிடம் பகிர்ந்து, ஆறுதல் தேடவும் பயம். `அவருடைய நடத்தைக்கு நீதான் காரணம்!’ என்று பழியைத் தன்மீதே போட்டுவிட்டால் என்ன செய்வது? இதனால் பார்க்கும், பழகும் ஆண்களையெல்லாம் சந்தேகப்பட ஆரம்பித்தாள்.

(முன்னெச்சரிக்கையாக, மாலினி ஒரு தோழியுடன்தான் சென்றிருந்தாள். `அவளையும் ஏன் அழைச்சுண்டு வந்தே?’ என்று அவர் ஆத்திரப்பட்டபோதே அவளுக்குச் சந்தேகம் எழுந்திருந்ததால் தப்பிக்க முடிந்தது).

பல வருடங்கள் கழித்து, மாலினி தன் துயரக்கதையை என்னிடம் பகிர்ந்துகொண்டாள், `யாரிடமும் சொல்லிவிடாதே!’ என்ற கெஞ்சலுடன்.

`இதில் உன் தவறு எதுவுமில்லை,’ என்று சுட்டிக்காட்டினேன். ஓர் அறியாப்பெண்ணைத் தனியாகத் தன் வீட்டுக்கு வரச் சொல்லிவிட்டு, அவளை பலாத்காரம் செய்ய முயன்றவர்தான் — அதிலும், அவளைவிட இருபது வயது மூத்தவர் _ குற்றமிழைத்தவர்.

`பாடவே பிடிக்காமல் போய்விட்டது!’ என்று ஒப்புக்கொண்டாள். பல பிரபலமான ஆசிரியர்களிடம் இசை பயின்று, நல்ல பாண்டித்தியம் கொண்டவள்.

`வாத்தியார் கெட்டவராக இருந்தால், அதுக்கு (கர்னாடக சங்கீத மாமேதைகள்) தியாகராஜரும், தீக்ஷிதரும் என்ன செய்வார்கள்? அவர்கள்மேல் உனக்கு என்ன கோபம்?’ என்று எடுத்துரைத்தேன்.

சற்றுத் தெளிந்து, `அதுவும் சரிதான்,’ என்று மீண்டும் பாட ஆரம்பித்தாள். கோயில்களில் மட்டும் மனமுருகிப் பாடுவாள்.

நமக்கு ஆத்திரம் விளைவித்தவரின்மீது நாம் எவ்வளவுதான் கோபப்பட்டாலும், அவருக்கு அதனால் ஒரு பாதிப்பும் கிடையாது.

கெடுவது என்னவோ கோபத்தைத் தமக்குள்ளேயே அடக்கிவைத்தவர்களின் உடலும், மனமும்தான். திறமைகளும் வெளிப்படாமலேயே போய்விடும்.

என்றோ நடந்தது

`சிறு வயதில் அப்பா காரணமின்றி அடித்தார், ஆசிரியை திட்டினாள்,’ என்று நடந்து முடிந்தவைகளை (அவை நடந்தபோது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும்) பெரியவர்களானபோதும் ஓயாது அசைபோட்டு வாடுவார்கள் சிலர். இவர்களது நிகழ்காலம் மட்டுமன்றி எதிர்காலமும் வீணாகாதா!
“கோபம் அடைவதால், பிறர் நம்மைத் தண்டிக்கப்போவதில்லை. கோபமே நம்மைத் தண்டித்துவிடும்” (யாரோ).

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *