செண்பக ஜெகதீசன்

உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார்
மரமக்க ளாதலே வேறு. (திருக்குறள் -600: ஊக்கமுடைமை) 

புதுக் கவிதையில்…

ஊக்கமே ஒருவனுக்கு
உறுதியான அறிவு,
ஊக்கமற்றோர்
வெறும் மரங்களே… 

உருவிலவர்
மனிதரைப் போலிருப்பது
மட்டுமே வேறுபாடு…! 

குறும்பாவில்…

ஊக்கமுடைய மனிதர் மட்டுமே
உறுதியான அறிவுடையோர்,
ஊக்கமிலார் மனிதவுருவில் மரங்களே…! 

மரபுக் கவிதையில்…

ஊக்கம் ஒன்றே ஒருவன்தன்
     -உறுதி யான அறிவாகும்,
ஊக்க மில்லா மனிதரெல்லாம்
     -ஒன்றும் பயனிலா மரமாவர்,
நோக்கில் காணும் வேறுபாடு
     -நிற்கு மந்த மரமெல்லாம்
நோக்க மனிதர் உருவிலேதான்
     -நிற்ப தன்றி வேறிலையே…! 

லிமரைக்கூ…

ஊக்கமிலாரை மரமெனவே கூறு,
ஊக்கமே உறுதியான அறிவு, மரமவைதான்
மனிதவுருவன்றி வேறுபாடில்லை வேறு…! 

கிராமிய பாணியில்…

ஊக்கம் வேணும் ஊக்கம் வேணும்
வாழ்க்கயில மனுசனுக்கு ஊக்கம் வேணும்…
ஊக்கம் ஒண்ணே மனுசனுக்கு
உண்மயான அறிவாவும்… 

ஊக்கமில்லா மனுசரெல்லாம்
ஒண்ணும் ஓதவாத மரந்தானே,
மனுசன்போல உருவத்தில மரந்தானே,
வேறயில்ல வித்தியாசம்… 

அதால,
ஊக்கம் வேணும் ஊக்கம் வேணும்
வாழ்க்கயில மனுசனுக்கு ஊக்கம் வேணும்…!

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *