புதுப்பாளையம், அந்தியூர்

guru

தமிழ்நாடு –  ஈரோடு மாவட்டம், அந்தியூரில் புதுப்பாளையம் எனும் இடத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு குருநாதசுவாமி ஆலயம் அமைந்துள்ளது. மிக வித்தியாசமான முறையில் அமைந்திருக்கும் தெய்வத் திருமேனிகள் காண்போரை தம் வசமிழக்கச் செய்வது நிதர்சனம். இக்கோவில், ஈரோடு மாவட்டம் , அந்தியூரிலிருந்து வடக்கே 2 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு மலைத் தொடரின் அருகில் மிக  அமைதியானதொரு சூழலில் அமைந்துள்ளது.   பாண்டிய மன்னர்களின் ஒரு குறு நில மன்னனால்  கற்கோவில் கட்டி வைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

guru1

 சிற்பியால் செதுக்கப்படாத, சுயம்புவாகத் தோன்றிய  திருவுருவமாக விளங்கும் இக்கோவிலின் சிற்பங்கள் வடிவழகில் ஆச்சரியமேற்படுத்துகின்றன. வரட்டுப்பள்ளம் எனும்  நீர்தேக்கத்திலிருந்து நீர் பள்ளம் நோக்கி  ஓடி அந்தச் சுற்று வட்டாரத்தை  குளுமையுடன் பாதுகாக்கிறது.  சுமார் 1 ஏக்கர் நிலப்பரப்பில்   தரைமட்டத்திலிருந்து 3 அடிகள் கீழ்நோக்கி மலை அடிவாரத்தில் குருநாத சாமி வனம் அழகாக அமைந்திருப்பது காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது . அருள்மிகு காமாட்சி அம்மன் தவநிலையில் அமர்ந்திருக்கும் திருக்கோலத்தின் எதிர் புறம் சித்தேசுவரன் மற்றும் மாதேசுவரன் திருவுருவங்கள் அமைந்துள்ளன. அம்மன் திருஉருவின் வலப்புறத்தின் கீழ் நவ நாயகிகள் சிற்பங்களும் ஏழுகன்னிமார்கள் உருவங்களும் அமைந்துள்ளன. அருகில் உள்ள பெருமாள் சன்னதியில்  இராமர், இலக்குவன்,சீதை ,பரத சத்துருக்கன், ஆஞ்சநேயர், கருடாழ்வார் ஆகியோர் உள்ளதாகவும் ஐதீகம் உள்ளது. சிவ பெருமான் மற்றும் முருகப்பெருமான் இருவரும் ஒருசேர குருநாத சுவாமியாக   குன்றின்மீது அமர்ந்திருக்கிறார். இவர் பாலகுருநாதசுவாமி என்றும், உக்கிரகுருநாதர் என்றும் வழங்கப்படுகிறார். மேலும், நாகதேவதை, தண்டகாருண்யர், தர்ப்பை அம்மன் ஆகிய மூர்த்தங்களுக்கெதிரில்,  அண்ணன்மார் முன்னுடையாரும் குருநாதருக்குக்  கீழ்புறம் பதினென் சித்தர்களும், மூதாதையர்கள் மூவர் சிலைகளும் இடது ஓரத்தில்  அகோர வீரபத்திரனும், எதிரில் உத்தண்ட முனிராயரும் அன்னப்பறவையும் காட்சி தர அருகே பஞ்ச பாண்டவர்கள் சிலைகள் உள்ளது. பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் ஏகியபோது இங்கு வந்து காமாட்சியம்மனை வழிபட்டதாக செவிவழிச் செய்தியும் நம்பப்படுகிறது.

guru5

கோயில் சுற்றுப் பிரகாரத்தின் முன்பகுதியில் பூசைப் பொருட்களை வைத்து பாதுகாக்கப்படும் குலுக்கை எனும் பெட்டகம் உள்ளது. இது 11 அடி நீளம், 11 அடி அகலம், 11 அடி உயரம் கொண்டது என்கின்றனர். இக்குலுக்கையின் மேல்பகுதியின்  வழியாக மட்டுமே  செல்வதற்கான நுழைவாயில் உள்ளது. கீழே  காற்றோட்ட வசதிக்காக துவாரம்  அமைக்கப்பட்டு  அந்த துவாரத்தில் பாதுகாப்புக்காகப் பாம்புகளை விட்டு வைத்தனர் என்ற ஆச்சரியமான செய்தியையும் கேள்விப்படமுடிந்தது.  இந்த குலுக்கையின் கதவை ஆகம விதிப்படி விரதம் இருந்து பூசை செய்யும்  பூசாரிகளில் ஒருவர் மட்டுமே திறப்பாராம். மற்றவர்கள் அப்பெட்டகத்தில் நுழைய முயற்சித்தால் பாம்பு தீண்டி  இறந்துவிடுவர் என்ற நம்பிக்கையும் உள்ளது. அது மட்டுமின்றி  தங்கள் தோட்டங்களில் பாம்பு, பூரான், தேள் போன்ற விசம் கொண்ட உயிரினங்களால் தங்களுக்கு ஆபத்து நேராமல் இருக்க, குலுக்கைக்கு பூக்கள் வைத்து வழிபடுகின்றனர். இந்த குலுக்கையைக்  காண்பதற்கு புற்று போன்று உள்ளதும் ஆச்சரியமானது.

guru3

காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இக்கோயில்  திறந்திருக்கும். தற்போதுள்ள மகாமண்டபம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு அமரர் சா.குருசாமி முதலியார் என்பவரால் உருவானது என்றும் தற்போது அவர் தம் குடும்ப வாரீசுகளால் பராமரிக்கப்படுகிறது என்கிறனர். சபா மண்டபம் ஆலாம்பாளையம் அமரர் நஞ்சமுதலியார் அவர்களால் கட்டப்பட்டது. இக்கோயிலுக்கு கல்வெட்டுகளோ, செப்பேடுகளோ பாதுகாக்கப்படவில்லை.

செவிவழிச் செய்தியாக உலாவரும் புராணக் கதை:

கிட்டத்தட்ட  600 ஆண்டுகளுக்கு முன் சிதம்பரத்தை அடுத்த பிச்சாபுரம் எனும் வனப்பகுதியில் மூன்று குழவிக்கற்களை  நட்டு குட்டியாண்டவருக்கு கோயில் கட்டி வழிபட்டு வந்திருக்கின்றனர். ஆற்காடு நவாப் இங்கு பூசை செய்யும் பூசாரியின் வீட்டுப் பெண்களில் ஒருவரை மணமுடிக்க விரும்பி  பெண் கேட்டுள்ளார். பூசாரியும் உறவினர்களிடம் கலந்து பேசி பின்னர் சம்மதம் தெரிவிப்பதாகக் கூறினாராம். ஆனால்  உறவினர்கள் இதற்கு சம்மதிக்கவில்லை. அதனால் அனைவரையும் சிறையில் தள்ளிவிடுவதாக நவாப் மிரட்டியுள்ளார். அந்த நேரத்தில்  உறவினர் ஒருவருக்கு  தெய்வ அருள் வாக்காக,  “நீங்கள் வணங்கி வரும் இம்மூன்று கற்களையும் எடுத்துக் கொண்டு, இரவோடு இரவாக சென்றுவிடுங்கள்” என்று கூறியுள்ளார். அதன்படியே பூசாரியாரின் உறவினர்கள் ஒரு கூடையில் தெய்வமான அந்த மூன்று கற்களையும் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டனர். அடுத்த நாள் நவாப்பின் ஆட்கள் அங்கு சென்று பார்த்த போது எவரும் இல்லாதது கண்டு கோபத்தில் கோயில் கோபுரம், குதிரை மற்றும் யானைகள் கட்டும் இடங்களை சேதப்படுத்தியுள்ளனர். தெய்வக் கற்களுடன் சென்றவர்களோ பல ஊர்கள் கடந்து பசியாலும், பட்டினியாலும் தேகம் நொந்துபோய் உள்ளனர். தங்களையே பாதுகாத்துக்கொள்ள  இயலாத நிலையில், தம்முடன் கொண்டு வந்த மூன்று கற்களையும் அருகில் இருந்த ஆற்றில் வீசிவிட்டு, வேறு ஊருக்குச் செல்ல முடிவு செய்து ஓரிடத்தில் படுத்து ஓய்வெடுத்தனர். அடுத்தநாள் அனைவரும் புறப்பட்ட போது, கற்கள் இருந்த அந்த கூடையில் மூன்று கற்சிலைகள் இருந்ததைக் கண்டு ஆச்சரியத்தில் ஆனந்தக்கண்ணீர் விட்டனர். அன்று முதல் அச்சிலைகளையே  தங்கள் குலதெய்வமாக வழிபட முடிவெடுத்துள்ளனர். நடந்து வந்தவர்கள் அந்தியூரில் உள்ள புதுப்பாளையம் எனும் இடத்திலுள்ள கல்மண்டபத்தை அடைந்துள்ளனர். ஆட்சியில் இருந்த பாண்டிய மன்னரிடம் அனுமதி பெற்று அந்த  மூன்று கற்சிலைகளையும் வழிபாடு செய்தனர். பிற்காலப் பாண்டிய மன்னர்களில் ஒரு குறுநிலமன்னன் இந்த இடத்தில் ஒரு கோயில் கட்டினார். காலப்போக்கில் மூன்று கற்சிலைகளுக்கும் பதிலாக, மூன்று உருவங்களை அமைத்து வழிபட முடிவு செய்தனர். அதன்படி முதல் கல்லைக் குலதெய்வமாக்கி காமாட்சி அம்மனாகவும், இண்டாவது கல்லை பெருமாளாகவும், மூன்றாவது கல்லை அப்பன் (சிவன்), மகன் (முருகன்) ஆகிய இருவரையும் இணைத்த நிலையில் குருநாதசுவாமி என்றும் பெயரிட்டனர். குரு என்றால் ஈஸ்வரன், நாதன் என்றால் முருகன். தெலுங்கு பக்தர்கள் இவரை பாலகுருநாதசுவாமி என்றும், உக்கிரகுருநாதர் என்றும் வணங்கி வருகின்றனர்.

சுவாமி சிலைகளை சுமந்துகொண்டு ஈரோடு மாவட்டம் வழியாக நடந்து வரும் வழியில், பவானி வட்டம் – தொப்பம்பாளையம் எனும் ஒரு சிற்றூரில் இருக்கும் இருசியம்மன் மற்றும் எமராசர் கோவில்களில் தங்கி வழிபாடு செய்துபின் அங்கிருந்து பொரவிபாளையம் எனும் ஊரில் தங்கள் இறைச்சுமையை சுமக்க முடியாமல் இறக்கிவைக்கின்றனர். இறைவாக்கின்படி ஒரு பெரும் கற்சிலையை அங்கேயே நட்டுவைத்து வழிபாடும், பூசைகளும் செய்கின்றனர். அந்த இடம் தற்போது அந்தியூரிலிருந்து குருவரெட்டியூர் எனும் ஊருக்கு செல்லும் வழித்தடத்தில் பொரவிபாளையம் எனும் ஊரிலும் பிரதி வாரம் வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு நடத்தப்படுகிறது என்கிறார்கள். அன்று அந்த இடத்தை ஆண்ட பாண்டிய மன்னனின் உபயமான கல் மண்டபத்தில் அவர்தம் மீன் சின்னங்கள் இருப்பதையும் காணமுடிகிறது.

இங்கு காமாட்சியம்மன் தவக்கோலம் பூண்ட அற்புதமான திருமூர்த்தம் ஒன்றும் காண முடிகிறது. இத்திருவுருவின் ஒர் அதிசயமாக இதனை குறிப்பிட்ட சற்றுத் தொலைவின் ஒரு கோணத்தில் பார்க்கும்பொழுது அன்னை பராசக்தி சிம்மமாகக் காட்சியளிப்பதைக் காணமுடிகிறது! இயற்கையாக அமைந்த இவ்வடிவம் அன்னையின் இருப்பை உறுதிப்படுத்துவதாகவே தோன்றுகிறது. அம்மன் தவக்கோலம் குறித்ததோர் புராணக்கதையும் செவிவழிச் செய்தியாக அறிய முடிகிறது.

 தற்போதய புதுப்பாளையம் கோவிலில் இருந்து வடமேற்கில் 2 கி.மீட்டர் தொலைவில் உள்ள வனம் ஒன்றில் அன்னை காமாட்சி தவம் செய்யும் நோக்கோடு வருகிறார்.  பசுமையான அவ்வனம் அந்தியூர் வனம் என்பது. மாய மந்திரத்தில் சிறந்தவனான உத்தண்ட முனிராயன் என்பவன் அவ்வனப்பகுதியை ஆக்கிரமித்திருந்தான். அன்னையின் தவத்திற்கு இடைஞ்சலாக இருந்த இவனை குருநாத சுவாமியின் சீடரான, அகோர வீரபத்திரர் என்பவர் கடும் சண்டையிட்டு அழித்துவிடுகிறார். மாய தந்திரம் அறிந்த அறிந்த முனிராயர் தன் உருவத்தை பெரிதாக்கி உயரமாகி எதிர்க்க குருநாதசாமி மகாமேரு தேரில் முனிராயரை விட உயரமாகி சண்டையிட்டு வெற்றிவாகை சூடுகிறார். இறுதியாக அவன் அழியும் முன், “ஐயனே, என் அகந்தைப்பேயை ஒழித்த எம் குருநாதா! உமது திருக்கரத்தால் அழியும் பேறு பெற்றதால், என் முற்பிறவி சாபம் நீங்கப் பெற்று புனிதமடைந்தேன். அன்னையின் தவம் இனி தடையேதுமின்றி சிறப்புற நடைபெற்று இவ்வனம் இக்கணம் முதல் குருநாதசுவாமி வனமாகத் திகழும். குருநாதசுவாமியின் பூரண அருளோடு, நான், அகோர வீரபத்திரனின் எதிரில் கைகூப்பி தலை வணங்கி நிற்க அருள்புரிவாய்” என்று வேண்டினான். அதன்படி வரமும் பெற்றான். இன்றும் அசுர குணம் படைத்தோரும் குருநாதசுவாமியை வேண்டி நின்றால் அவர்தம் பாவங்கள் விலகி, சாபமும் நீங்கி நல்வழிப்படுத்தப்படுகின்றனர் என்ற நம்பிக்கையும் உள்ளது. அன்று அப்படி சிறு கற்சிலையாக அமைக்கப்பட்ட அத்திருவுருவங்களே இன்று குன்றாக வளர்ந்து நிற்பதகாவும், பக்தர்களின் குறை தீர்க்கும் குருநாதசுவாமியாகவும் வீற்றிருப்பதாகவும் நம்புகின்றனர்.  காமாட்சியம்மையின் தவக்கோலத்தின் அருகில் சித்தேசுவரன், மாதேசுவரன், நவநாயகிகள், ஏழு கன்னிமார்கள், நாகதேவதை, தண்டகாருண்யர், தர்ப்பை அம்மன், அண்ணன்மார் என்னும் முன்னுடையார், 18 சித்தர்கள் போன்றோர் நிறைவாக எழுந்தருளியுள்ளனர். அகோர வீரபத்திரர் எதிரில் உத்தண்ட முனிராய துரையும், அன்னப்பாறையும் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

guru4

திருவிழா:

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம், முதல் புதன்கிழமை பூச்சாட்டுதலுடன் திருவிழா மிகச் சிறப்பாகத் துவங்குகிறது. இரண்டாவது புதன்கிழமை , கொடியேற்றுதல், மூன்றாவது புதன்கிழமை வன பூசை மற்றும்  நான்காவது வார புதன்,வியாழன்.வெள்ளி சனி ஆகிய நான்கு நாட்கள் ஆடிப் பெருந்தேர்விழாவும், ஐந்தாவது புதன்கிழமை பால்பூசையுடன் முடிவடைகிறது. பிரதி ஆவணி மாதம் முதல் புதன்கிழமை சிதம்பரப்பூசை எனும் படித்தரப்பூசை வன்னியர் குல சத்திரியர்களால் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. சிதம்பர பூசை முடிந்ததும், பூசாரி அருள் வந்து திருவால விளக்கு என்னும் விளக்கில் பச்சை தண்ணீரில் விளக்கு எரித்துக்காட்டுவதோடு , பூசையில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு பொது வாக்கும் அளித்து பின் பிரசாதம் வழங்குதல் வழமையாக நடக்கிறது என்கிறார்கள். இத்திருவிழாவில் மூலவரே உற்சவராக காட்சி தருவதால் பக்தர்களின் வேண்டுதல் பூரணமாக நிறைவேறுவதாக ஐதீகம். ஆடி மாதம் நான்காம் புதன்கிழமை காமாட்சி அம்மன் பல்லக்கிலும் ,சிறிய மகாமகத் தேரில் பெருமாள்சாமியும், பெரிய மகாமகத்தேரில் அருள்மிகு குருநாதசாமியும் வனத்திற்கு வருகிறார்கள். வனபூசைகள் முடிந்த  அன்று இரவு 12 மணிக்கு மேல் புறப்பட்டு காலை 6 மணிக்கு அந்தியூர் புதுப்பாளையம் வந்து அடைவதும் வழமையாக நடக்கிறது. இத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கிறார்கள்.

முற்பிறவி சாபம், பாவம் போன்றவைகள் நீங்க இங்குள்ள குருநாதசுவாமியை வழிபட்டுச் செல்கின்றனர். பாம்பு, பூரான், தேள் போன்ற கொடிய நஞ்சுடைய பூச்சிகளால், ஆபத்து நேராமல் இருக்கவும் இங்கு வழிபடுகின்றனர்.

இவ்வனத்தின் பாதுகாவலரான அகோர வீரபத்திரனின் எதிரில் கைகூப்பி தலை வணங்கி நிற்கும் முனிராயரின் வேண்டுகோளுக்கிணங்க இன்றும், அனைத்து சமூகம் சார்ந்த  பக்தர்களும் இங்கு ஆடு, கோழி போன்ற உயிர்பலி கொடுக்கும் பூசைகளும் நடைபெறுகின்றன. சிவன், முருகன், பெருமாள், காமாட்சியம்மன் என பால்பூசை செய்யக்கூடிய தெய்வங்கள் இருக்கும் இடத்தில் மிக வித்தியாசமான முறையில் இது போன்ற பூசைகளும் நடப்பதும், பிராமணர்களுக்கும் குல தெய்வமாக இருக்கும் இக்கோவில் வித்தியாசமான முறையில் வழிபாடு காண்பதும் குறிப்பிடத்தக்கது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *