-மேகலா இராமமூர்த்தி

சிலம்பின் உச்சகட்டம் மதுரை தீக்கிரையாவது! அதனை நிகழ்த்துகின்றாள் சிலம்பினால் மன்னனை வென்ற சேயிழையான கண்ணகி. பின்னர், வையைக் கரையோரமாய்ச் சென்று சேரநாட்டு நெடுவேள்குன்றம் எனும் மலைப்பகுதியை அடைகின்றாள். அதன்மீதேறி அங்கிருந்த வேங்கை மரநிழலில் நின்றவள், வானூர்தியில் தேவர்குழாம் சூழவந்த கோவலனோடு விண்ணாடு போயினள். தென்னாடு போற்றும் பத்தினித் தெய்வம் ஆயினள்.

மலைமீது நின்றவள் வான்சென்ற அதிசயத்தை அங்கிருந்த மலைநாட்டுக் குறவர் கண்டு மலைத்தனர். நம் குலக்கொடி வள்ளிபோன்றிருக்கும் இப்பெண்ணரசியை நாம் தெய்வமாய்ப் பூசிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகின்றனர்.

அச்சமயத்தில், தன் மனைவி வேண்மாளோடும் சுற்றத்தினரோடும் மலைவளம் காணவருகின்றான் சேரமன்னன் செங்குட்டுவன். தாம் கண்ட இந்த அதிசய நிகழ்வை குன்றக்குறவர் அவனிடம் விழிகள் விரிய விவரித்தனர். கானவேங்கையின் கீழ்நின்ற மானுடப் பெண்ணொருத்தி வானகம் சென்றதை அறிந்த செங்குட்டுவன் வியப்பிலாழ்ந்தான். அதுகுறித்து அவன் சிந்தித்திருந்த வேளையில், ”மன்னவா!” எனும் குரல் அவன் எண்ணம் கலைத்தது.

குரல்வந்த திக்கை நோக்கினான்.

மலைவளம் காண அவனோடு வந்திருந்த மதுரைப் புலவர் சாத்தனார் அங்கே நின்றிருந்தார்.

”புலவர் தோழ! ஏன் என்னை அழைத்தீர்…? வானகம் சென்ற அப்பெண் குறித்துத் தங்களுக்கு ஏதேனும் தெரியுமா?” என்று ஆவலோடு கேட்டான் வேந்தன்.

”ஆம் மன்னா! நடந்தவை அனைத்தும் நானறிவேன்” என்றார் தண்டமிழ் ஆசான்.

பரபரப்படைந்த செங்குட்டுவன், ”அப்படியா? சீக்கிரம் சொல்லுங்கள்! யார் அந்தப் பெண்? அவள் நம் நாடு வந்தது ஏன்? வானுலகம் சென்றது எப்படி?” என்று கேள்விகளை அடுக்கினான்.

மன்னனின் பதற்றம் கண்ட புலவரின் முகத்தில் முறுவல் முகிழ்த்தது.

”வேந்தே…கேள்! தன் மணாளனோடு புகாரினின்று புறப்பட்டு மதுரை வந்தாள் அந்த மங்கை. அவளுடைய போதாத காலம், சிலம்பை விற்கக் கொல்லனிடம் சென்ற அவள் கணவன் கோவலன், கள்வன் கொன்று பொய்க்குற்றம் சாட்டப்பட்டுக் கொல்லப்பட்டான் பாண்டிய மன்னனால். விவரமறிந்த அம்மாதரசி சினந்தாள்; சீறினாள். தேரா மன்னனின் ஆராயாத தீர்ப்பைத் திருத்த அவன் அவைநோக்கி விரைந்தாள். தன் காற்சிலம்பு மாணிக்கப் பரல்களால் ஆனது; கோப்பெருந்தேவியின் சிலம்பைப்போல் முத்துக்களால் ஆனதன்று என்பதைச் சிலம்பை உடைத்துப் புலப்படுத்தினாள்.

”பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட யானோ அரசன்? யானே கள்வன்!” என்று நொந்தான் மன்னன். செங்கோல் தவறிய அதிர்ச்சி அவனை உறைய வைத்தது. மண்ணைவிட்டே மறைய வைத்தது. அவன் தேவியும் கணவன் ஆவிதேடி அவன் பின்னே பயணமானாள். அதன்பின்னரும் தணியவில்லை கண்ணகியின் கடுங்கோபம். அரண்மனையைவிட்டு வெளியே வந்தவள், மதுரை நகரைப் பார்வையால் சுட்டாள்; இங்குள்ள தீத்திறத்தாரை அழித்திடுக!” என்று அங்கியக் கடவுளுக்கு (அக்னி தேவன்) ஆணையிட்டாள்.  

அங்கிருந்து புறப்பட்ட அவ் வஞ்சி, வையைக் கரையோரமாய் மேடென்றும் பள்ளமென்றும் பாராது விரைந்து வந்தாள் உன் வஞ்சி (நகர்) நோக்கி! தன் கதையைச் சேரன் அறியவேண்டும் என்றெண்ணித்தான் உன்னாடு வந்து விண்ணாடு சென்றாள்போலும்!” என்று அவள் வரலாற்றைச் சாத்தனார் உரைத்திட, “அதுவரைத் தன்னிலை மறந்து கதைகேட்டிருந்த குட்டுவன் சுயவுணர்வு மீண்டான்.”

’சிலம்பின் வென்ற சேயிழை’யின் கதை அவனைத் திகைக்கவைத்தது!

தன் செங்கோல் வளையக் காரணமாயிருந்த தீவினையைத் தன் உயிரைக் கொடுத்து நிமிர்த்திய பாண்டிய மன்னனின் துயரமுடிவு அவனை வேதனையில் ஆழ்த்தியது.

”மன்னனாயிருப்பதில்தான் எத்தனை எத்தனை இன்னல்கள்?!”

மழைவளங் கரப்பின் வான்பே ரச்சம்
பிழையுயி ரெய்திற் பெரும்பே ரச்சம்
குடிபுர வுண்டுங் கொடுங்கோ லஞ்சி
மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்ப மல்லது தொழுதக வில்…
(சிலப்: வஞ்சிக்காண்டம் – காட்சிக்காதை)

நாட்டில் மழை பொய்த்துவிட்டால்… ”மன்னன் கொடுங்கோலன்! அதனால்தான் மழைபெய்யவில்லை!” என்று மக்கள் பழிப்பரோ என்றோர் அச்சம்; மன்னுயிர்களுக்கு யாதுகாரணத்தினாலோ துன்பம் நேர்ந்துவிட்டால்… ”மன்னனின் ஆட்சி சரியில்லை; அதனால்தான் மக்களுக்குத் துன்பம்” எனும் அவச்சொல் வந்துவிடுமோ எனும் பேரச்சம். குடிகளைப் புரந்து, கொடுங்கோலுக்கஞ்சி மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் (மன்னர்குடியில் பிறத்தல்) துன்பமே! இதனைப் போற்றத்தக்கதெனச் சாற்றியவர் யார்?” என்றெண்ணி வருந்தினான் அவன்.

”ஆகா! பாண்டியன் தொலைந்தான்! பகைவர் எண்ணிக்கையில் ஒன்று குறைந்தது!” என்று மகிழ்ச்சியில் துள்ளவில்லை சேரன். மாறாக, செங்கோன்மை தவறினால் மன்னர்க்கு நேரும் சங்கடங்களையே சிந்தித்திருந்தது அவன் உள்ளம். ஒரு மன்னனின் தவறான செய்கையும் அதனால் அவனடைந்த கேடும் இன்னொரு மன்னனுக்குப் பாடமாகின்றது இங்கே!

சிலம்பு செப்பும் அறங்களில் ஒன்றான ”அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்பதை மெய்ப்பித்துவிடுகின்றது பாண்டிய நெடுஞ்செழியனின் மறைவு.

”அரசியலார் தவறிழைத்தால் அறம் அவர்களைத் தண்டிக்கும்; அதிலிருந்து அவர்கள் தப்பமுடியாது” எனும் அடிகளின் அமுதவாக்கு எல்லாக் காலத்துக்கும் பொருந்தக்கூடியதுதானே?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *