பொற்கிழிக்கவிஞர் டாக்டர். ச.சவகர்லால்

 

பூவுலக மாந்தர்க்குக் கண்கள் வைத்தான்;

பார்வையினால் மனம்மலர வழிகள் வைத்தான்;

மேவிவரும் ஓசைநலம் கேட்டு நெஞ்சம்

மேன்மையுற இருசெவிகள் அழகாய் வைத்தான்;

காவினிலே பூத்தமலர் மணம்சு வைக்கக்

கட்டழகு முகத்தினிலே மூக்கை வைத்தான்;

நாவினையே உரையாட வைத்தான்; இன்ப

நாட்டியங்கள் அரங்கேற மெய்யை வைத்தான்.

 

வைத்தவனை மறந்துவிட்டோம்; கணமும் தீமை

வளர்ப்பதற்கே ஐம்புலனைத் தீட்டிக் கொள்வோம்;

சைத்தானின் ஆட்சிபீட மாக மெய்யைத்

தாரைவார்த்துக் கொடுத்துவிட்டோம்; புலன்க ளெல்லாம்

கைத்தாளம் போட்டதற்கே தொண்டு செய்யக்

கடைப்பட்டு நைகின்றோம்; நல்ல பாதை

சைத்தானும் காட்டாது; மனித நெஞ்சும்

சரிபாதை கேட்காது;  கெட்டு  நையும்.

 

கண்மடல்கள் தீமையினைப் பார்ப்ப தற்கே

கணந்தோறும் திறக்கிறது; இரண்டு பக்கம்

உண்டான செவிவழியோ தீமை வெள்ளம்

ஓடிவர அழைக்கிறது; மூக்கோ நாற்றம்

ஒன்றைத்தான் நுகர்கிறது; மெய்யோ என்றும்

உருப்படாது போகிறது; உறவு கொள்ள

உண்டான நாவதுவோ நுனியில் தீயை

உண்டாக்கிச் சுடுகிறது; மனிதன் பாவம் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *