முனைவர் சுபாஷிணி

பண்டைய கலாச்சாரங்கள் – ஹோஹண்டூபிங்கன் அரண்மனை அருங்காட்சியகம், ஜெர்மனி

மன்னர்கள் வாழ்ந்த அரண்மைனைகளில் சில இன்றைக்கு அருங்காட்சியகங்களாக மாற்றம் கண்டுள்ளன. ஐரோப்பாவில் இத்தகைய அருங்காட்சியகங்களை ஏறக்குறைய அனைத்து நாடுகளில் காணலாம். ஜெர்மனியிலோ கோட்டைகளுக்கும் அரண்மனைகளுக்கும் சிறிதும் குறைவில்லை. அப்படி ஒரு அரண்மனை அருங்காட்சியகம் தான் டூபிங்கன் நகரில் இருக்கும் பண்டைய கலாச்சாரங்கள் – ஹோஹண்டூபிங்கன் அரண்மனை அருங்காட்சியகம்.

இந்த அரண்மனை கி.பி.1050ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இந்த அரண்மனை 1979 தொடங்கி 1994ஆம் ஆண்டு வரை பெரிய அளவில் சீரமைக்கப்பட்டது. தற்சமயம் உலகப்புகழ்வாய்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான டூபிங்கன் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாகவும் இந்த அருங்காட்சியகம் விளங்குகின்றது. கட்டிட சீரமைப்புப் பணிகள் முற்றுப்பெற்ற பின்னர் அரும்பொருட்கள் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டு பொது மக்கள் பார்வைக்காக இந்த அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில் 2000 சதுர அடிப் பரப்பில் 4600 அரும்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள சேகரிப்புக்கள் வரலாற்றுக்கு முந்தைய காலத்துச்சேகரிப்புக்கள், தொல்லியல் அகழ்வாய்வுகள், மற்றும் எகிப்திய, கெல்ட், கிரேக்க ரோமானிய வரலாற்றுச் சான்றுகளின் சேகரிப்புக்களாக அமைந்துள்ளன.

1961ஆம் ஆண்டில் டூபிங்கன் பல்கலைக்கழகத்தில் எகிப்திய வரலாற்றுத்துறை தொடங்கப்பட்டது. ஸ்டுட்கார்ட் நகரின் வர்த்தகரான எர்ன்ஸ்ட் ஃபோன் சீகலின் அவர்கள் வழங்கிய எகிப்திய அரும்பொருட்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத்துறை தொடங்கப்பட்டது. படிப்படியாக மாநில அரசின் பொருளாதார உதவியுடனும் ஸ்டுட்கார்ட் லிண்டன் அருங்காட்சியகத்தின் உதவியுடனும் எகிப்திய சேகரிப்புக்கள் இங்கே மேலும் சில இணைந்தன. இன்று ஜெர்மனியில் இருக்கும் மிக முக்கியமான எகிப்திய அருங்காட்சியகமாக இது திகழ்கின்றது. இதுவரை எகிப்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் ஏறக்குறைய ஐம்பது விழுக்காட்டிற்கும் மேலாக ஜெர்மானிய அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் ஈடுபட்டனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. இங்குள்ள சேகரிப்புகளில் இன்றைக்கு 5000 ஆண்டுகள் வரையிலான அரும்பொருட்கள் இடம்பெறுகின்றன. மம்மிகளை வைத்து பாதுகாக்கும் மரப்பெட்டிகள், பாப்பிரஸ் ஆவணங்கள், இறந்தவர்களுக்கான சடங்குகளில் சேர்க்கும் சடங்குப்பொருட்கள், இறை வடிவங்கள், ஆபரணங்கள், ஆயுதங்கள், கருவிகள் என இவை வெவ்வேறு வகையில் அமைந்தவை.

ஐரோப்பிய பண்டைய நாகரிகங்களில் கிரேக்க, ரோமானிய நாகரிகங்கள் அதி முக்கியமானவை. ஏறக்குறைய எல்லா ஐரோப்பிய நாடுகள் மட்டுமன்றி அமெரிக்காவிலும் சரி உலகின் ஏனைய நாடுகளிலும் சரி, கிரேக்க, ரோமானிய கலைப்பொருட்களும் கட்டுமானக் கலைகளும், சித்தாந்தங்களும் கொண்டாடப்படும் கலைகளாகவே இருக்கின்றன. ஐரோப்பிய நாடுகளின் பல அருங்காட்சியகங்களில் கிரேக்க, ரோமானிய சிற்பங்களும் கோயில்களின் எச்சங்களும், ஏதாகினும் ஒரு வடிவில் அமைந்த கலைப்பொருட்களும் பாதுகாக்கப்படுகின்றன. டூபிங்கன் அருங்காட்சியகமும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒரு தனிக்காட்சி வளாக அறையில் 350 கலைப்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தைச் சிறப்பிக்கின்றன.

asu

இந்த அருங்காட்சியகத்தின் சிறப்புகளில் ஒன்று பிரான்சின் லாஸ்ஸாஸ் (Lascaux) குகையில் அமைந்திருக்கும் விலங்குகள் பாறை ஓவியம். சுமார் 17,000 ஆண்டுகள் பழமையானவை என தொல்லியல் அறிஞர்களால் குறிப்பிடப்படும் இந்த குகை பாறை ஓவியங்களின் மறுபதிப்பு ஒன்று இங்கே இந்த டூபிங்கன் அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. லாஸ்ஸாஸ் குகையில் வியக்கத்தக்க வகையில் அமைந்த ஏறக்குறைய 2000 ஓவியங்கள் குகையின் உள்ளே பாறைச் சித்திரங்களாக தீட்டப்பட்டுள்ளன. விலங்குகள், மனிதர்கள், உருவங்கள் என மூன்று வகையில் இந்த ஓவியங்கள் உள்ளன. பெரும்பாலான ஓவியங்கள் கருப்பு, சிவப்பு, மஞ்சள் ஆகிய வர்ணங்களில் அமைந்திருக்கின்றன. இவற்றுள் மிகச் சிறப்பானதாகக் கருதப்படுவது காளை மாடுகள் நிறைந்த ஒரு சுவர்ப்பகுதியில் இருக்கும் ஓவியங்கள். இது 36 விலங்குகளின் வரை ஓவியங்கள் நிறைந்த ஒரு தொகுதி. இந்தத் தொகுதியை ஆராய்ந்த David Lewis-Williams மற்றும் Jean Clottes என்ற அறிஞர்கள் இவற்றை உருவாக்கிய பண்டைய மனிதர்கள் தெய்வ வழிபாடு மற்றும் தெய்வீக சக்திகளை உருவகப்படுத்தும் வகையில் இதனை அமைத்திருப்பதாகக் கருதுகின்றனர். அது மட்டுமன்றி பிரான்சில் அன்றைய காலகட்டத்தில் மக்களின் சுற்றத்தில் அவர்கள் பார்த்துப் பழகிய மிருகங்கள் எவை என்பதை அடையாளம் காணவும் இந்த குகை பாறை ஓவியம் உதவுகின்றது.

இந்த அருங்காட்சியகத்தை உள்ளடக்கிய டூபிங்கன் பல்கலைக்கழகம் தற்சமயம் வெவ்வேறு தொல்லியல் ஆய்வுகளில் தம் குழுவினரை ஈடுபடுத்தியுள்ளது. 1988ம் ஆண்டு இப்பல்கலைக்கழகத்தின் மான்ஃப்ரெட் காஃப்மான் அவர்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் உலகத்தரம் வாய்ந்த ஆய்வுகளாகக் குறிப்பிடப்பட்டு மேலும் பல ஆய்வுகள் தொடர வழி அமைத்துக் கொடுத்தது. தற்சமயம் இந்த பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறை ஜெர்மனி, பிரான்சு, ஐக்கிய அரபு நாடுகள், கிரேக்கம், ஈரான், தென்னாப்பிரிக்கா மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் நடத்தப்பட்டு வருகின்றன. ஜெர்மனியின் தென்பகுதி ஆச் மற்றும் லோன் பள்ளத்தாக்கில் இக்குழுவினர் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வுகள் இப்பல்கலைக்கழகத்திற்கு புகழ் சேர்த்தவையாக அமைந்திருக்கின்றன.

இந்த அருங்காட்சியகத்தில் இருக்கும் குறிப்பிடத்தக்க சில சேகரிப்புகளைப் பற்றியும் அறிந்து கொள்வது பயனளிக்கும்.

asu1

இது ஏறக்குறைய நாற்பதாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு சிற்பம். புலியின் வடிவம் இது. காட்டெருமையின் கொம்பினால் செய்யப்பட்டது இச்சிலை. இன்றைக்கு 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு விலங்கினைப் பார்த்து அதன் உருவத்தை வடிவமைக்கும் ஆற்றலுடன் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் இருந்தனர் என்பதற்குச் சான்றாகிறது இச்சின்னம். ஜெர்மனியின் தென்பகுதி ஆச் மற்றும் லோன் பள்ளத்தாக்கில் சேகரிக்கப்பட்ட இதே வகையான 50 அரும்பொருட்கள் இங்கே காட்சிக்கு உள்ளன.

asu2

கிரேக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் சிற்பங்கள் கிடைத்தது போலவே பானைகளும் விளக்குகளும் அதிகமாகக் கிடைத்திருக்கின்றன. அத்தகைய ஒரு மண்பானை தான் இது. பல வடிவங்களை உள்ளடக்கிய, நீர் சேகரித்து வைக்கும் இறைவழிபாட்டுச் சடங்கில் பயன்படுத்தப்படும் பானை இது.

asu3

எகிப்து பண்டைய கோயில்களுக்கும் கடவுள் வடிவங்களுக்கும் எண்ணற்ற சடங்குகளுக்கும் பிரசித்தி பெற்ற ஒரு பழமையான கலாச்சாரப் பின்னனி கொண்ட நாடு. எகிப்திலிருந்து கொண்டு வரப்பட்ட, ஹீரோக்லிப்ஸ் எழுத்துக்கள் நிறைந்த ஒரு சிதைந்த ஆலயத்தின் உட்புறச்சுவர் பகுதி இது.

asu4
இறந்து போன உடல்களை மம்மியாக்கி அதனை வைக்கும் சவப்பெட்டிகள் இங்கு சேகரிப்பில் இடம்பெருகின்றன. சாதாரண மனிதர்களுக்கு மரத்தால் செய்யப்படும் இவ்வகை பெட்டிகள் அரசகுலத்தோருக்குத் தங்கத்தால் இழைக்கப்பட்டு ஆபரணங்களாலும் விலையுயர்ந்த கற்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

asu5
கிரேக்க ரோமானிய சிற்பங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் இருக்கும் சிற்பங்கள் இவை. கையில் டிஸ்க் வடிவிலான ஒன்றை ஏந்தியிருக்கும் இச்சிற்பத்தின் பெயர் டிஸ்கோபொலுஸ் (Discobolus). இதனை உருவாக்கியவர் மைரோன் என்ற கிரேக்க சிற்பி. கி.மு.460-450 வரை எனக்குறிப்பிடப்படும் காலகட்டத்தில் இச்சிற்பியால் பல சிற்பங்கள் உருவாக்கப்பட்டன. அதில் ஒன்றுதான் டிஸ்கோபோலுஸின் சிற்பமும்.

இப்படி சிறப்புகள் மிக்க பல்வேறு அரும்பொருட்களை கண்காட்சியில் அமைத்திருக்கின்றார்கள். இந்த அருங்காட்சியகத்தின் ஊழியர்களின் அன்பான சேவையும் மனதைக் கவரத்தவறவில்லை.

ஜெர்மனியில் காணவேண்டிய ஒரு முக்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க அருங்காட்சியகம் இது என்பதில் சிறிதும் ஐயமில்லை. இந்த அருங்காட்சியகம் பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்புவோர் https://www.unimuseum.uni-tuebingen.de/ என்ற வலைத்தளத்தில் மேலதிக தகவல்கள் பெறலாம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *