படக்கவிதைப் போட்டி 106-இன் முடிவுகள்

 

-மேகலா இராமமூர்த்தி

 

a family

ஓவியம்போல் காட்சியளிக்கும் இப் புகைப்படத்தை எடுத்திருக்கும் திரு. ஷேக் முகமது பாராட்டுக்குரியவர். இவ்வழகிய படத்தைப் படக்கவிதைப்போட்டிக்குப் பாங்காய்த் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கும் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பனும் நம் போற்றுதலுக்குரியவரே!  

மங்கலமான மனைமாட்சியின் நன்கலமாம் நன்மக்கட்பேற்றைப் பெற்றிருக்கும் இப்பெற்றோர் பேறுபெற்றோரே.

கண்ணைக்கவரும் இவ்வண்ணப்புகைப்படம் கவிஞர்களின் கற்பனைத்திறனைப் பொற்புடன் திறந்துகாட்டக் கிடைத்ததோர் நல்வாய்ப்பு!

இனி, கவிதைகளுக்குச் செல்வோம்!

*****

”ஆற்றின் கரைகளை இணைப்பது கற்பாலம்; ஆண் பெண் இதயங்களை இணைப்பதோ
காதலெனும் நற்பாலம். இந்தக் காதல் பாலம் தந்த பரிசே இவ்விணையர் கரங்களில் வரமெனத் தவழும் கனிமழலை; பிரிக்கும் மதிலினும் இணைக்கும் பாலமே மேல்” என இல்லறத்தின் இனிமையை நல்ல சொல்லெடுத்துப் போற்றுகின்றது திரு. செண்பக ஜெகதீசனின் கவிதை!

பாலங்கள்…

ஆற்றின் கரைகளை
இணைப்பது பாலம்..

ஆசையில்
ஆண்பெண் இதயங்களை
இணைக்கும் பாலம்-
காதல்..

காதல் மணவாழ்வில்
ஆணும் பெண்ணும்
அகலாமல்
இணைக்கும் பாலம்-
பிள்ளை..

பிரிக்கும் மதிலைவிட,
இணைக்கும் பாலம்
மேலல்லவா…!

*****

’ஆறில்லா ஊரின் அழகு பாழ்’ என்றனர் ஆன்றோர். இன்று ஆறிருக்கின்றது ஆனால் அதில் நீரில்லை. நீரற்ற ஆற்றின்மேல் பாலம் எதற்கு?  வறட்சியால் வையமே பரிதவிக்கின்றது; வருணனின் கருணைப்பார்வை புவியின்மீது படாதோ? என்று நெஞ்சுநொந்து பேசுகின்றார் திரு. சி. ஜெயபாரதன்.

நீரில்லா ஊர்

தாகமாய் உள்ளது ஒருகாலத்தில்
வேகமாய் நீரோடிய இந்தக்
கால்வாய் !
காவேரி ஆறும் இப்படி ஒருநாள்
சாவை அடையும் !
மழை பெய்து நீரோட்ட மின்றேல்
வேளாண்மை கருகி
பஞ்சம் பெருகி
பசுமை எங்கும் மங்கி
நகரம் ஒருநாள் நரக மாகும் !
பாலம் கட்டியும் இங்கே
பயனில்லை !
நீரில்லாக் கால்வாய் மேல்
பாலமா ?
ஞாலத்தில் இன்று மாந்தர்க்கு
நீர்ப்பஞ்சம் ! நீர்ப்பஞ்சம் !
நீர்ப்பஞ்சம் !
வேர் உறிஞ்ச நீரின்றி
பச்சை இலைகள் பல மஞ்சளாய்
வெளுத்துப் போயின !
இளந்தம்பதிகள்
என்ன செய்வதென் றறியாமல்
கலங்கி நிற்கிறார் !
நீரில்லா ஊர் பாழாகும் !
கருணையுள்ள
வருண பகவானே ! எமக்கோர்
வழிகாட்டு !

*****

காணிநிலம் வேண்டினார் மகாகவி பாரதி; ஆசையாய்க் கட்டிய வீட்டில் குடிபோகத் தடையாயிருக்கும் குடிநீர்ப் பஞ்சம் நீங்கவேண்டும் என்று வேண்டுகின்றார் கவிஞர் திரு. பார்த்தசாரதி.  அவர் வேண்டுதல் பலித்து, அக்கனவு இல்லத்தில் அவர் குடியேறும் நாள் நனவாக வேண்டும் என நாமும் வாழ்த்துவோம்!

ஆசைக்கோர் இல்லம்

எந்திரமய வாழ்க்கை மறந்து – நான்
****இயல்பாக வாழ எனக்கொரு
தனி வீடு கட்டவேண்டும் -அதில்
****தனிமைச் சுகம் காணவேண்டும்..!

அழகின் எல்லையாக இருக்கவேணும் – அதன்
****அருகே ஆறுகுளம் அமையவேணும்
கடனில்லா வீடு கட்டவேணும் – அதில்
****கலையழகு  கொஞ்சவேண்டும்..!

சொந்த உழைப்பில் விளையவேணும் – அதில்
****பந்தங்களுக்குப்  பங்கில்லா நிலைவேணும்
இயற்கைச் சூழலோடு ஒன்றி – அதில்
****இன்பவுலா வரவேண்டும்..!

கண்குளிர ரசிப்பதற்கும் வாழ்ந்து – அதைக்
 ****கண்டுகளிப்பதற்கும் வேண்டுமொருவீடென்று
காலிமனையில் இல்லம் எழுப்ப – நெடுநாள்
****கனவோடுநான் காத்திருந்தேன்..!

காலமொரு நாள்கனிந்து வர – என்
****கனவுமதுநன வாகியதொருநாள்
நிலைக்கும் சொத்தாக இருந்தாலும் – அங்கே
****நிலையாகக் குடியேற வசதியில்லை..!

மண்ணுரிமை பெற்றுவிட்டென் – ஆனால்
****மழைக்கடவுள் அருளில்லை
நீரின்றி அமையாது உலகென – அய்யன்
****வள்ளுவன் மொழிந்ததுபோல்..!

கழனிகாடுகள் வீடுகள் குளிர்ந்திருக்க – ஆங்கே
****கனிந்தமழையின் கொடைவேண்டும்!
ஆசையாய்க் கட்டிய இல்லமதில்
****அங்கேயில்லை குடிதண்ணீர்..!

வெறிச்சோடிக் கிடக்குது எம்வீடு – மனம்
****வெதும்பிப் பார்ப்பேனவ்வப்போது
காலமாற்றத்தால் உருவாகும் கதைபோல் – அது
****கனவுவீடாக மாறித்தான்போனது..!

வருஷமொரு முறைபார்த்து வந்தேன் – இப்ப
****வயசு அறுபத்தியாறாச்சு
கட்டிய வீட்டில் குடியேற – காலமின்னும்
****எட்டியதூரத்தில் இல்லையம்மா..!

இரவானால் பறவைகள்தன் கூட்டிற்கு – அது
****இயற்கையாய்ச் செல்வதுபோல்
இருக்கும் வரையில் எண்ணங்கள் நம்மினிய
****இல்லம் நோக்கியே நகரும்..!

அன்புக்கோர் மனைவி பாசத்துக்கோர் பெண்
****பண்புக்கோர் பிள்ளையெனும்
வரிசையிலே வாழ்க்கையில் இன்னு – மொரு
****ஆசைக்கோரில்லம்  எனவொன்று
இறையருளால் அனைவரும் பெறவேண்டும்..!

*****

நல்ல கவிதைகளை நம் உள்ளம் இரசிக்கத் தந்திருக்கும் கவிஞர்களுக்குப்  பாராட்டுக்கள்!

அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வாகியிருப்பது…

வீடு பேறு அழகான குடும்பம் இது!
இல்லறமே நல்லறமாம்!
அன்பான மங்கை நல்லாள்!
பண்பு மிகு ஆண் மகனாம்!
மனதால் இணைந்தார்கள்!
பெற்றவர்கள் இசைவோடு
திருமணமும் முடித்தார்கள்!
அழகான வீட்டினிலே
அமைதியுடன் வசித்தார்கள்!
வீடென்ற பெயர் ஏன் வந்தது?
கவலையை விட்டதினால் வீடானதோ?
ஆணவத்தை விடும் இடம்
என்பதால் வீடானதோ?
கோபத்தை விடும் இடம்
என்பதால் வீடானதோ?
நான் என்பதை விட்டு
நாம் என்று வாழ்ந்தார்கள்!
ஆண்டவன் அருளாலே !
நல் மழலை பெற்றார்கள்!
அன்பை விதைத்தார்கள்!
ஆனந்தமாய் இருந்தார்கள்!
இசைபட வாழ்ந்தார்கள்!
ஈகை புரிந்ததினால்!
உயர்வை அடைந்தார்கள்!
ஊக்கத்துடன் உழைத்தார்கள் !
எண்ணியதை பெற்றார்கள்!
ஏழேழு பிறவியிலும் தொடரும் சொந்தமிது !
ஐயமில்லை! ஐயமில்லை!
ஒன்று பட்ட உள்ளத்தால்!
ஓங்கியது உங்கள் வாழ்க்கை!
ஔவை மொழி போல இனிக்கட்டும்!
அஃதே எங்கள் ஆசை!

ஆணவத்தைவிட்டு அன்பால் இணைந்த இணையர், இல்லறமாம் நல்லறத்தின் பயனாய்ப் பெறுகின்ற இன்மழலைக்கு ஈடேது இவ்வுலகில்?

பெருமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற என்று மக்கட்பேற்றின் மாண்பைப் போற்றுகின்றார் வாழ்வியல் வலவர் வள்ளுவர்.

நன்மக்கட்பேற்றோடு முற்றுப் பெறுவதில்லை இல்வாழ்க்கை. ஈகை எனும் இனிய குணத்தால் அது மேலும் சிறக்கிறது எனும் அரிய வாழ்வியல் உண்மையை எளிமையாய்ச் சொல்லியிருக்கும் திரு. பழ. செல்வமாணிக்கத்தின் கவிதை இவ்வாரத்தின் சிறந்த கவிதையெனும் பெருமையைப் பெறுகின்றது. கவிஞருக்கு என் பாராட்டுக்கள்!

மேகலா இராமமூர்த்தி

மேகலா இராமமூர்த்தி

Share

About the Author

மேகலா இராமமூர்த்தி

has written 293 stories on this site.

One Comment on “படக்கவிதைப் போட்டி 106-இன் முடிவுகள்”

 • பழ.செல்வமாணிக்கம் wrote on 10 April, 2017, 21:41

  இல்லறத்தை நல்லறமாக நடத்திக் கொண்டிருக்கும்
  லட்சக்கணக்கான தம்பதிகளுக்கு இந்தக் கவிதையை அர்ப்பணிக்கிறேன்.
  வல்லமை ஆசிரியருக்கும், திருமதி. மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.
  அழகுத் தமிழில் அற்புத கவிதைகளை அள்ளித் தரும்
  என் உயிரினும் மேலான உடன் பிறப்புகளுக்கும் நன்றிகள் பல.

Write a Comment [மறுமொழி இடவும்]


seven × 9 =


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.