திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் (4)

க. பாலசுப்பிரமணியன்

இறைவனிடம் நாம் என்ன கேட்கவேண்டும்?

திருமூலர்-1

ஒரு கோவிலில் தரிசனம் செய்துவிட்டுத் திரும்பி வரும் இரு நண்பர்களில் ஒருவன் மற்றவனிடம் கேட்டான் “நீ இறைவனிடம் என்ன வேண்டிக்கொண்டாய்?”

இதுபோன்ற கேள்விகள் நம் வீடுகளிலும் உறவு மற்றும் சுற்றத்திலும் அடிக்கடி கேட்கப்படுகின்றது.

“செல்வம் வேண்டும், பதவி வேண்டும், புகழ் வேண்டும், வீடு மனை வேண்டும், நல்ல குடும்பம் வேண்டும்” என்று பலவிதமான வேண்டுதல்களை நாம் மீண்டும் மீண்டும் இறைவன் முன்னே வைக்கின்றோம்., நம்முடைய வேண்டுதல்களுக்குப் பலன் கிடைக்காதபோது இறைவன் காதுகளில் நம் வேண்டுதல் விழவில்லை என்றும், இறைவன் சிலபேருக்கு மட்டும் தான்  கருணை காட்டுகிறான் என்றும், அல்லது இது நம் விதி, இதை இறைவனால் கூட மாற்ற முடியாது என்றும் சமாதானாப் படுத்திக்கொள்ளுகின்றோம். ஆனால் இறைவனோ கருணைக்கடல்! தன்னுடைய குழந்தைகளுக்கும் பக்தர்களுக்கும் ஒரு குறை அல்லது துயரம் என்றால் அவன் அதை நீக்க வழி வகுக்காமல் இருப்பானா ?

இறைவன் கருணைக்கடல் என்றால் அதிலிருந்து உருவாகிப் பெய்கின்ற  கருணை மழை நம் மீதும் பெய்யுமா என்ற சந்தேகம் எப்பொழுதும் உள் மனத்தில் ஏற்படுகின்றது. அழைத்தால் வருவானா இறைவன்? அழைத்துத்தான் பார்த்துவிடலாமே!

நம்முடைய பல சந்தேகங்களுக்கும் தரமற்ற விருப்பங்களுக்கு பதில் கொடுப்பதுபோலவும் வழிகாட்டுதல் போலவும் அமைந்துள்ளது திருமூலரின் கீழ்கண்ட பாடல்:

வானின் றழைக்கும் மழைபோல் இறைவனுந்த்

தானின்  றழைக்குங்கொல் என்று தயங்குவார்

ஆனின்   றழைக்கும் மதுபோல்என் நந்தியை

நானின்  றழைப்பது  ஞானங் கருதியே !

இறைவன் நம் மீது கருணை காட்டுவானோ என்ற சந்தேகம் சிறிதளவும் வேண்டாம். எவ்வாறு ஒரு கன்று தன் தாயை நோக்கிச் செல்கின்றதோ அதுபோல நமது மனமும் அந்த இறைவனை நோக்கிச் செல்கின்றது என திருமூலர் விளக்கம் அளிக்கின்றார்.

ஆனால், திருமூலரின் வேண்டுதல் என்ன?

“அழைப்பது ஞானங்கருதியே ” என்று விளக்கித் தன் விருப்பத்தை வெளிப்படுத்துகிறார். மாயையின் பிடியிலிருந்து விலகி அரனின் தாள்களில் ஒன்றிட விழைந்ததுதானே அவர் மனம்?

இறைவனிடம் அளவில்லாக்  காதல் கொண்ட வள்ளலாரோ “எனக்கு அருள் செய்யாவிட்டால் அந்தப் பழி உனக்குத்தான் வரும். நீ ஏன் தாய் தந்தையன்றோ?” என்று உரிமையோடு வழக்காடுகின்றார்.

“பழியெனக் கல்லவே தாய் தந்தைக் கல்லவோ

பார்த்தவர்கள் ஏசார்களோ

பாரறிய மனைவிக்கு பாதியுட லீந்தநீ

பாலகனைக் காக்கொணாதோ

யெழில் பெரிய அண்டங்க ளடுக்கா யமைத்த நீ

யென் குறைகள் தீர்த்தல் பெரிதோ “

இதற்கும் ஒரு படி மேலே சென்று மாணிக்கவாசகரோ “எல்லாவற்றையும் அன்றே உனக்குத் தந்துவிட்டேன். நீயும் ஆட்கொண்டுவிட்டாய். இப்பொழுது எனக்குத் துயரம் வந்தால் அது உனக்கு வந்தது அல்லவோ! ” என விளிக்கின்றார்

அன்றே என்றன் ஆவியும்

உடலும் உடமை எல்லாமும்

குன்றே அனையாய் என்னை

ஆட்கொண்டபோதே கொண்டிலையோ !

இன்று ஒரு இடையூறு எனக்கு உண்டோ

எண்தோள் முக்கண் எம்மானே

நன்றே செய்வாய் பிழை செய்வாய்

நானோ இதற்கு நாயகமே !

ஆகவே, இறைவனிடம் எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்பதை விட, எனக்கு எது கிடைத்தால் நல்லதோ அதைக் கொடு என்று வினவுவதே உகந்தது. ஞானத்தை விட உயர்ந்த பரிசு நமக்கு கிடைப்பது அரிது!

இறைவனின் “அருள் ஒளி”யே கிடைத்தற்கரிய மிகப்பெரிய பரிசு என்பதை உணர்ந்த வள்ளலாரோ இறைவனோடு வாதாடுகின்றார்:

வாழையடி வாழைஎன வந்த திருக்கூட்ட

மரபினில் யான் ஒருவன் அன்றோ வகையறிவேன் இந்த

ஏழை படும்பாடு உனக்குத் திருவுளச் சம்மதமோ

இது தகுமோ இது முறையோ இது தருமந்தானோ

மாழைமணிப் பொது நடஞ்செய் வள்ளல்யான்  உனக்கு

மகன் அல்லனோ நீ எனக்கு வாய்த்த தந்தை அலையோ

கோழைஉலகு உயிர்த்துயரம் இனிப் பொறுக்க மாட்டேன்

கொடுத்தருள் நின் அருள் ஒளியைக் கொடுத்தருள் இப்போதே !

இறைவன்பால் கொண்ட அன்பால் அடியார்கள் ஒவ்வொருவரும் உளமுருகி அவன் அருளைத்தேட, அவன் கருணையை  நாட அவனோடும்  அவன் நினைவோடும்  இரண்டறக் கலந்த நிலையை நாம் காண்கின்றோம். ஆனால் திருநாவுக்கரசரோ இந்தப் பிறப்பு மட்டுமல்ல எப்படிப்பட்ட பிறப்பு எடுத்தாலும் இறைவனின் தாள்களையே நாடும் உன்னத உணர்வுநிலைக்கு நம்மை எடுத்துச் செல்லுகின்றார்.

புழுவாய் பிறக்கினும் புண்ணியா !

உன்அடி என்மனத்தே

வழுவாதிருக்க வரந்தர வேண்டும் !

இறைவனின் கருணையை நாடும் உள்ளங்களுக்கு திருமூலரின் இந்தப்பாடல் ஒரு வழிகாட்டுதலாக அமைந்துள்ளது..

தொடருவோம்

Share

About the Author

க. பாலசுப்பிரமணியன்

has written 366 stories on this site.

க. பாலசுப்ரமணியன், முன்னாள் இயக்குனர் (கல்வி). மத்திய இடைநிலைக் கல்விக் கழகம், டில்லி ஆர்வம்: இலக்கியம், கவிதை, கல்வி, உளவியல், மனித வள மேம்பாடு கல்வி பற்றிய இவருடைய பல கட்டுரைகளும் புத்தகங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

Write a Comment [மறுமொழி இடவும்]


− 2 = one


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.