கற்றல் ஒரு ஆற்றல் 74

க. பாலசுப்பிரமணியன்

கற்றலின் பாதைகளும் அதன் தாக்கங்களும்

education-1-1-1

மகாபாரதக் கதையிலே ஒரு நிகழ்வு. பஞ்ச பாண்டவர்கள் தங்கள் குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு முறை அர்ச்சுனன் தன்னுடைய தாத்தா பீஷ்மரிடம் சென்று கேட்கின்றான்

“என்னுடைய கற்றல் எப்போது முடிவுபெறும்?” என்று. அந்தக்கேள்விக்கு பொறுமையாக பதிலளிக்கிறார் பீஷ்மர்

“உனது கற்றலில் கால் பகுதி உன்னுடைய குருவிடமிருந்து கிடைக்கும்.
இன்னொரு கால் பகுதி உன்னுடைய சுய கற்றலினால் கிடைக்கும்.
மூன்றாவது கால் பகுதி உன்னுடைய சுற்றத்தோடு உறவாடும்பொழுது கிடைக்கும்.
கடைசிப் பகுதி காலப் போக்கில் நிறைவுபெறும்.”

காலத்தைக் கடந்து பொருள் தரும் அரிய கருத்தன்றோ இது!

தற்காலத்தில் உண்மை நிலையை இது சுட்டிக்காட்டுவதாகவும் அமைந்துள்ளது. தற்காலத்தில் கல்வி வல்லுநர்கள் மாணவர்கள் மீது கற்றலின் தாக்கம் கீழ்கண்ட நான்கு முறைகளில் ஏற்படுவதாகக் கூறுகின்றனர்.

1. முறைசார் கற்றல் (Formal learning)
2. முறைசாராக் கற்றல் (informal learning)
3. இடைக்கற்றல் (incidental learning)
4. தற்செயலான கற்றல் (accidental learning)

பொதுவாக பள்ளிக்கூடங்கள் மூலமாக கிடைக்கும் கற்றல் திறன்கள், மற்றும் ஆசிரியர்களின் தனிப்பட்ட பயிற்சிகள் மூலமாகக் கிடைக்கும் கற்றல் நுணுக்கங்கள், புத்தகங்கள் படிப்பதன் மூலமாக கல்வித்திட்டங்களுக்குட்பட்ட அறிவு அமைப்புகள் முறைசார் கற்றலின் வழியில் கிடைப்பவை.

குடும்பத்தில் உறவுகள் மூலமாகக் கிடைக்கும் அறிவுத் துளிகள், வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள் மற்றும் வெளி உலகின் தகவல் மையங்கள் மூலமாக கல்வித் திட்டங்களுக்குட்பட்ட மற்றும் அவைகளுக்கு அப்பாற்பட்ட கற்றல் வகைகள் முறைசாராக் கற்றல் வழியில் நமக்கு கிடைப்பன,

வாழ்க்கைப் போக்கில் நாம் செய்கின்ற பல செயல்கள் மூலமாகவும், அனுபவங்கள் மூலமாகவும் உணர்வுகள் மூலமாகவும் நாம் சேகரித்துக் கொள்ளும் பல விஷயங்கள் இடைக்கற்றலாக நமது வாழ்வில் பரிணமிக்கின்றன.

திடீரென்று நமக்கு ஏற்படும் பல அனுபவங்கள் சில மறக்கமுடியாத, மறக்ககூடாத அறிவை நமக்குத் தந்து செல்கின்றன. இந்த கற்றல் பரிமாணங்களை நாம் எதிர்பார்த்திருக்கவோ அல்லது திட்டமிட்டிருக்கவோ மாட்டோம். ஆனால் இவற்றில் பல நம்முடைய வாழ்க்கை வளம் பெறுவதற்கான வாழ்க்கைக் கல்வியாக அமைந்து விடுகின்றன. இவை அனைத்தும் தாற்காலிகக் கற்றலாக அமைகின்றன.

இந்த நான்கு வகையான கற்றல் வழிகளும் நம்முடைய அறிவையும்,(knowledge) புத்திக்கூர்மையையும் (intelligence), திறன்களையும் (skills) மேம்படுத்தவும் வளம்பெறச்செய்யவும் உதவுகின்றன. ஆயினும், இந்த நான்கு வழிகளின் தாக்கங்களின் விழுக்காடுகள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமாக அமைவது மட்டுமின்றி தாக்கங்களின் ஆழப்பரிமாணங்களும் மாறுபட்டு நிற்கின்றன.

சமுதாயச் சூழ்நிலைகள், குடும்பச் சூழ்நிலைகள், பொருளாதாரச் சூழ்நிலைகள், பூகோளச் சூழ்நிலைகள் ஆகிய பல வெளியுலக தாக்கங்களின் காரணமாக இந்த நான்கு கற்றல் வழிகளும் அவற்றின் தன்மைகளும், அவற்றின் பரிமாணங்களும் மாறுபடுகின்றன. உதாரணமாக சில பத்தாண்டுகளுக்கு முன்பு கற்றலின் பெரும் பங்கு முறைசார் கல்வி மூலாமாகவும், ஓரளவு முறைசாராக் கல்வி வழியிலும் கிடைத்துக்கொண்டிருந்தது. ஆனால் தற்போதைய ஆராய்ச்சிகளின்படி கிட்டத்தட்ட 90 விழுக்காடு கற்றல் தாக்கங்கள் முறைசாராக் கல்வி வழியில் ஏற்படுவதாக அறியப்பட்டுள்ளது.

ஆகவே தற்காலக் கல்வி முறைகளில் பள்ளிகளில் முறைசார் மற்றும் முறைசாரா கற்றல் முறைகளுக்கான இணைப்புகளும், பாலங்களும் அமைக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. இதன் காரணமாக பள்ளிகளில் ஆசிரியர்களின் கல்வி கற்பிக்கும் முறைகளிலும் நுட்பங்களிலும் தேவையான மாற்றங்கள் கொண்டுவர வேண்டிய நிர்பந்தமும், முறைசார் கற்றல் மூலமாக முறைசாரக் கற்றலையும் மேம்படுத்த வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.

தொழில்நுட்பங்கள், கணினிகள், அலைபேசிகள் போன்றவற்றின் அளவற்ற உபயோகங்களும், தொழில்நுட்பக் கருவிகளின் மேம்பட்ட ஒருங்கிணைந்த பயன்கள் மூலமாகவும் மற்றும் வேகமான, தடையற்ற, அதீதமான கல்வி கற்கும் முறைகளாலும் கல்வி கற்கும் வேகமும் இடங்களும் மாறுபட்டும் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டும் வளர்ந்து வருகின்றன.

ஒருவகையில் இந்த மாற்றங்கள் கற்றலை சிறப்பித்துக்கொண்டும் மேம்படுத்திக்கொண்டும் எளிமையாக்கிக்கொண்டும் வருகின்ற நேரத்தில் கற்பவர்களிடையே அதிக வேறுபாடுகளையும் எதிர்பார்ப்புக்களையும் மனஅழுத்தங்களையும் உண்டாக்கி வருகின்றன. இந்தத் தாக்கங்கள் கற்றலை மட்டுமின்றி வாழ்க்கை முறைகளையும் சிந்திக்கும் செயல்படும் திறன், வளம் மற்றும் பாங்குகள் ஆகியவற்றை மாற்றிய வண்ணம் இருக்கின்றன.

ஆகவே, பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்றலுக்கு உகந்த சூழ்நிலைகளை உருவாக்குவதில் ஆசிரியர்களுக்கு சிறப்புத் திறன்களின் தேவை வலுக்கின்றதுஇந்த மாறிவரும் தேவைகளுக்கான பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு எந்த அளவு கிடைக்கின்றன என்ற கேள்வி ஒரு பக்கம். இந்தப் பயிற்சிகளை எந்த அளவுக்கு அவர்கள் தங்கள் வகுப்பறைகளில் உபயோகித்துக்கொள்கிறார்கள் என்ற கேள்வி ஒரு பக்கம். இதை வெறும் தொழில் சார்ந்த மாற்றமாக மட்டும் கருதுகின்றார்களா அல்லது இந்த மாற்றங்களை வருங்காலச் சமுதாயத்திற்கு வித்திட வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயல்படுகின்றார்களா என்ற ஐயங்கள் மற்றொரு பக்கம்.

இதற்கு நடுவில் முன்நிற்கின்ற  உண்மை என்னவென்றால் எந்தக்கல்வி முறையிலே கல்வி கற்றாலும் மாணவர்கள் மாற்றங்களை பள்ளிகளைவிட ஆசிரியர்களைவிட அதிக வேகமாகவும் அதிக எளிதாகவும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதுதான். இதைக் கருத்தில் கொண்ட ஒரு கல்வி வல்லுனரின் கூற்று: “தற்காலத்தில் மாணவர்களோடு ஆசிரியர்களும் கற்றலின் பங்குதாரர்களாக இருக்கிறார்கள்” என்பதே.

(தொடரும்)

Share

About the Author

க. பாலசுப்பிரமணியன்

has written 378 stories on this site.

க. பாலசுப்ரமணியன், முன்னாள் இயக்குனர் (கல்வி). மத்திய இடைநிலைக் கல்விக் கழகம், டில்லி ஆர்வம்: இலக்கியம், கவிதை, கல்வி, உளவியல், மனித வள மேம்பாடு கல்வி பற்றிய இவருடைய பல கட்டுரைகளும் புத்தகங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

Write a Comment [மறுமொழி இடவும்]


four + = 8


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.