இலக்கியச்சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ் – 40

மீனாட்சி பாலகணேஷ்

முடிப்பூவின் பிரச நாறும் பிரம்பான்!

பிள்ளைத்தமிழ் நூல்களின் காப்புப்பருவத்தில் வழக்கமாக விளிக்கப்படும் தெய்வங்களின் பட்டியலிலிருந்து வேறுபட்டு வெவ்வேறு தெய்வங்களையும், அடியார்களையும், திருச்சின்னங்களையும் விளிப்பதனைச் சில நூல்களில் காணலாம். திருவைந்தெழுத்தினையும் திருநீற்றினையும் விளித்தலை முன்னொரு அத்தியாயத்தில் கண்டோம். முருகனின் மற்றொரு தாயான கங்கையையும் வாகனமான மயிலையும் ஆயுதமான வேலையும் விளிப்பதனையும் கண்டோம். இந்தக்கட்டுரையில் எட்டிக்குடி முருகன் பிள்ளைத்தமிழின் ஆசிரியர் (கோவை கவியரசு நடேச கவுண்டர்) சிவனடியார்களும், முருகனடியார்களும் கழுத்திலணியும் உருத்திராக்கத்தினையும், சிவபிரானின் வாகனமாகிய திருநந்தி தேவரையும் விளித்துக் குழந்தை முருகனைக் காக்க வேண்டுவதனைப் பார்க்கலாம். இதுவும் ஒருவிதமான இறையன்பு கலந்த தாயன்பின் வெளிப்பாடே!

ame

சூரியன் விண்மணி எனப்படுபவன். அவனைச் சிவனார் தனது ஒரு கண்ணாகக் கொண்டவர். சிவனாரின் முக்கண்களும் முறையே சூரியன், சந்திரன், நெருப்பு ஆகியவை ஆகும். ஆகவே சூரியனைத் தனது ஒரு வடிவாகக்கொண்ட முக்கண்மணியாகிய சிவபிரான் எனப்பொருள் கொள்ளவேண்டும். முப்புரத்தார் எனும் மூன்று அரக்கர்கள் பறக்கும் கோட்டைகளைத் தம்வசம் வைத்துக்கொண்டு தேவர்களைக் கொடுமை செய்து வந்தனர். தேவர்கள் சிவபிரானிடம் முறையிடவே அவர் ஒரு சிரிப்பாலேயே முப்புரங்களையும் அழித்து தேவர்களைக் காத்தார். அவருடைய கண்ணினின்றும் உகுத்த நீரில் தோன்றியது உருத்திராக்கம். இதனை அதனால் சிவகண்மணி எனவும் கூறுவது வழக்கமாகும். இதனைப் பிறவிப்பிணியைப் போக்கும் மணி எனவும் கூறுவர். ஏனெனில் உருத்திராக்கம் அணிவதனால் விளையும் நன்மைகள் மிகப்பலவாம். பிறவிநோய் நீக்குவதற்கு திருநீறு மருந்தும், உருத்திராக்கம் மணியும், திருவைந்தெழுத்து மந்திரமும் ஆவன என்பது பெரியோர் விளக்கமாம். ஆகவே அடியார்கள் இத்தகைய உருத்திராக்கமணியின் சிறப்புகளை எண்ணி உளம் மகிழ்வர்.

இத்தகைய உருத்திராக்கமணியை விளித்து நமது முருகமணியைக்காக்க வேண்டுகிறார்.

தெளிந்த மாசுமறுவற்ற மாணிக்கமணி போன்றவன் முருகப்பிரான். அந்தணர்கள் தமது பூசனைகளாலும் மந்திரங்களாலும் எப்போதும் தேடுகின்ற சுப்பிரமணியன் அவன். தேவர்களின் தலைவன் எனப்படும் தெய்வசிகாமணியும் அவனே! அவனை வழிபடும் அடியார்கள் தமது உள்ளத்தில் (உண்மையாக, நியாயமாக) வேண்டும் பொருட்களை வாரிவழங்கும் சிந்தாமணியும் அவனே!

ame1

ஒருதரம் சரவணபவா என்று உரைப்பவர் உளத்தினில் நினைத்ததெல்லாம் உடனே கைகூடுமென வேதங்கள் மொழியுதே உண்மையறி வானபொருளே! என்ற சீர்காழி கோவிந்தராஜனின் பாடலைக் கேட்டு உருகாதவர் யார்?

அவன் எட்டிக்குடி எனும் ஊரில் உறைகிறான். அவ்வூரின்கண் பெருமதிப்புள்ள மாணிக்கங்களால் இழைக்கப்பட்ட மாடமாளிகைகள் மிகுந்துள்ளன. அந்த வேலவனை நீ காத்தருள வேண்டும் என உன்னை வேண்டுகிறேன் எனப்பாடுகிறார்.

உருத்திராக்கம்:

விண்மணியை ஓருருவாக் கொண்ட முக்கண் மணிமுன்

விண்ணவர்கள் முப்புரத்தார் செய்கொடுமை விளம்பக்

கண்மணிநீ ருகுப்பவரு கண்மணியைப் பிறவிக்

கடியவினை நோய்கடியும் மணியையெணி மகிழ்வாம்

தெண்மணியை விப்பிரர்கள் தேடுசுப்ர மணியைத்

தேவசிகா மணியையடி யார்கள்சிந் தாமணியை

எண்மணிக ளொன்பதிழை மாடமலி கின்ற

எட்டிகுடி வேலவனைக் காவல்செய் கவெனவே.

(எட்டிக்குடி முருகன் பிள்ளைத்தமிழ்- காப்புப்பருவம்- நடேச கவுண்டர்)

***

அடுத்து நாம் காண்பது சிவபிரானின் அணுக்கத்தொண்டரும், வாகனமுமாகிய நந்திதேவரை விளித்து முருகனைக் காக்க வேண்டும் பாடல்.

ஒரு பசு அல்லது காளையானது தாம்புக்கயிற்றினால் பிணிக்கப்பட்டிருக்கும்; பசும்புல்லை உணவாகக்கொள்ளும். மானிடர்க்கு அடிமைப்பட்டு இருக்கும். இக்கருத்தினை மனித வாழ்விற்கும் உவமையாக்கி, நந்திதேவரை விளிக்கும் இப்பாடலில் அழகுறப் பொருத்தியுள்ளார் புலவர்பிரான்.

மானிட வாழ்வு மும்மலங்கள் ஆகிய பாசம் எனும் தாம்பினால் பிணிப்புண்டுள்ளதாகும்; நாம் உண்ணும் உணவும் விளைநிலங்களிலிருந்து பெறப்படும் புல்லாகிய உணவே! ஐம்புலன்களிலிருந்து பெறப்படும் நிரந்தரமற்ற இன்பங்களே இவை! ‘பராதீனப்படுதல்’ என்பது சுதந்திரமின்றி, மற்றோர் சொற்படி நடத்தல் என்பதாகும். ஏதோ ஒரு எசமானனுக்கு அடிபணிந்து அவன் கட்டளைப்படியே நாம் வாழ்கின்றோம் அல்லவா? நாமும் அந்தப் பசு போன்றவர்களே! இங்ஙனம் பாசத்தில் பசுக்களாக உழலும் நம்மைப் பதியாக நின்று நிலையான தனது பதத்தை அளித்துக் காக்க வல்லவன் அச்சிவபிரான் ஒருவனே! அவ்வாறு நாம் மேலான நற்கதியை அடையுமாறு நம்மீது கொண்ட நேசத்தால் ஈசன் அருளுகிறான். எவ்வாறு தெரியுமா?

ஆகமங்களும் வேதங்களும் விளக்கிடும் அத்துவித நெறியை- அதாவது பரமாத்மாவும் சீவாத்மாவும் ஒன்றே எனும் உண்மையை- அது தொடர்ந்து அவ்வாறே நடைபெறுமாறு மிகுந்த அருளுடனும் நேசத்துடனும் செய்விப்பவன் அந்தச் சிவபெருமானே; அவன் கல்லால மரத்தின் நிழலிலமர்ந்து மௌனகுருவாக முனிவோர்க்கு உபதேசிக்கும் சம்புவாவன். அது சரி. இங்கு நந்திதேவரைப்பற்றிக் கூறப்புகுந்தவர், சிவபிரானைப் பற்றிக் கூறுவானேன் எனும் வினா எழுகிறதல்லவா? இப்படிப்பட்ட சம்புவினிடம் அவனை அடுத்து, அவன் பக்கத்திலேயே நிற்பவர் நந்திதேவர். ‘சிவபிரானின் பக்கத்தில் இருப்பவர்,’ எனப் பேசப்படும் பெருமை உடையவனே என விளிக்கிறார் புலவனார். இப்போது அவருடைய முக்கியத்துவம் புரிகின்றதல்லவா?

மேலும் நகர்வலம் வரும்போதும் உலாப்போதுகளிலும் சிவபிரானைத் தரிசிக்க வருபவர்கள் கூட்டமாக வந்து அவர் பாதையை மறித்து நிற்கும்போது, தனது கைப்பிரம்பினால் அவர்களைத் தட்டி, விலக்கி, கூட்டத்தினை ஒழுங்கு செய்பவர் நந்திதேவர். அதனால் அவர் கையிலுள்ள பிரம்பு பிரமன் முதலானோர்களின் முடியிலுள்ள பூக்களின் தேனையும் வாசனையையும் உடையதாக இருக்கின்றது. ‘பிரமன் முதலானோர் முடிப்பூவின் பிரச நாறும் பிரம்பானே!’- அற்புதமான கற்பனை, இல்லையா? பெரிய பெயரான ‘நந்தி’ எனும் பெயர் படைத்தவனே, நறுமணம் கமழும் தாமரை மலரில் உறையும் இருநால்வரான எட்டுப் பெண்கள்- எட்டு இலக்குமிகளும் வாழும் செல்வவளம் படைத்த எட்டிக்குடியில் மருவும் வடிவேலவனைக் காக்கவே, என வேண்டுகிறார்.

திருநந்திதேவர்

பாசத் தாம்பிற் பிணிப்புண்டு பயிலும் புலப்புல் லுணவார்ந்துame2

பராதீ னப்பட் டுளபசுக்கள் பதியாய் மேலாங் கதியுறவே

நேசத் தாலா கமவேத நிகழ்த்துஞ் சுத்தாத் துவிதநெறி

நிகழக் கல்லால் நிழலிருந்து நிகழ்த்துஞ் சம்புக் கடுத்தவனாய்

பேசப் படுசீ ருடையானே பிரமன் முதலோர் முடிப்பூவின்

பிரச நாறும் பிரம்பானே பெருமா னந்திப் பெயரானே

வாசக் கமல மலர்மேவு மடவா ரிருனால் வரும்வாழும்

வளமா ரெட்டிக் குடிமருவும் வடிவே லவனைக் காத்தருளே.

(எட்டிக்குடி முருகன் பிள்ளைத்தமிழ்- காப்புப்பருவம்- நடேச கவுண்டர்)

எண்ணற்ற கற்பனைகள், தொன்மங்கள், நயங்கள், சொல்லாடல்கள்- அருமையான பாடல்கள்! பிள்ளைத்தமிழ் நூல்கள் இவையனைத்தும் நிரம்பிய சிற்றிலக்கியச் செல்வங்கள். இன்னும் தொடர்ந்து காண்போம்.

மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}
************

Share

About the Author

மீனாட்சி பாலகணேஷ்

has written 91 stories on this site.

திருமதி மீனாட்சி பாலகணேஷ் விஞ்ஞானியாக மருந்து கண்டுபிடிப்புத் துறையில் (Pharmaceutical industry) 30 ஆண்டுக்காலம் பணியாற்றி, ஓய்வு பெற்றவர். தற்சமயம் தனது இரண்டாம் காதலான தமிழைப் பயின்று வருகிறார். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்று, தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளார். தமிழ் இணைய தளங்களில் இலக்கியக் கட்டுரைகள் எழுதி வருகிறார்.

One Comment on “இலக்கியச்சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ் – 40”

  • மீ. விசுவநாதன்
    மீ.விசுவநாதன் wrote on 20 April, 2017, 9:58

    அருமை.

Write a Comment [மறுமொழி இடவும்]


seven × = 35


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.