அகிம்சைக்காரனின் காதல்

ராஜகவி ராகில்

 

 

அவனுடைய சுவாசம் காத்திருந்தது

தென்றலுக்காக

அவன் சோலையில் இருந்தாலும்

அவனுடைய பூ

இன்னமும் மலரவில்லை

 

அதோ

அந்தக் கவிதை வருகிறாள்

இதுவரை பத்திரமாகப் பிடித்து வைத்திருந்த

அந்தப் பட்டாம் பூச்சியைக் கொடுத்து

தன் காதலைச் சொன்னான் அவன் .

 

அந்த தேவதை அவனை

ஒரு வகையாகப் பார்த்தபடி கேட்டாள்

இந்தப் பெரிய சோலையில் உங்களுக்கு

ஒரு ரோஜாப்பூ கிடைக்கவில்லையா

 

என் காதலைக் கூறுவதற்கு

ஒரு கொலை செய்வது எனக்குப் பிடிக்கவில்லை

பூவை

செடியில் வைத்து ரசிப்பதுதான் அழகும் தர்மமும்

 

இந்தப் பட்டாம் பூச்சியை நான் என்ன செய்வது

 

பறக்க விடு

காதல் சிறகு கொண்டு அது புதிதாகப் பறக்கட்டும்

 

எனக்கு

பூதான் வேண்டும்

அந்தப் பூ பிடிவாதம் பிடித்தாள்

 

ஒரு பூ செடியில் இருக்கும் போதுதான்

அது உயிரோடு இருக்கும்

அதைப் பறித்தால் அந்த மலர் இறந்துவிடும்

உயிரில்லாத பூ தந்துதான்

என் காதலை நான் வெளிப்படுத்த வேண்டுமா

 

பட்டாம் பூச்சி உயிருள்ளது

அது போல என் காதலும் உயிருள்ளது

 

அந்தக் கார்முகில் குளிர் அழகி

ஏற்றுக் கொண்டாள்

 

நான் இனி கூந்தலுக்குப் பூக்கள் வைக்க மாட்டேன்

உயிரில்லாதவற்றை யார் சூடுவார்

இனி அதன் வாசங்கூட எனக்குப் பிடிக்காது

என்றாள்

 

அப்போ

பட்டாம் பூச்சிகள் பிடித்துத் தருகிறேன்

உன் கூந்தலில் சூடு என்றான் அவன் .

 

அவை மணக்காதே

 

உன் கூந்தல் நறுமணத்தில்

பட்டாம் பூச்சிகள் மணக்கட்டுமே

 

உங்களை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு

ஒரு பூவைக் கூட பறிக்க விரும்பாத நீங்க

என்னை நல்லாப் பார்த்துக்குவீங்க…என்றவள்

 

ஒரு முத்தப் பூப்பறிக்கத் தயாரானாள்

காதலைக் கட்டிப் பிடித்தபடி .

 

 

Share

About the Author

ராஜகவி ராகில்

has written 27 stories on this site.

புனைப்பெயர் - நிந்ததாசன் வழங்கி வரும் விருதுப் பெயர் - ராஜகவி ராகில் மின்னஞ்சல் - rajakavirahil@gmail.com இலங்கையில் கிழக்கு மாகாணத்திலுள்ள தென் கிழக்கில் அமைந்துள்ள நிந்தவூர் நான் பிறந்து வளர்ந்து படித்த கிராமம் பட்டம் , பட்டப் பின் பட்டம் பெற்றது பேராதனைப் பல்கலைக் கழகம் தொழில் - * ஆரம்பத்தில் ஆசிரிய பணி * இலங்கை வானொலியில் அறிவிப்பாளர் , நிகழ்ச்சித் தயாரிப்பாளர் * இலங்கை சர்வதேச வானொலி , இலங்கை ஆசிய சேவை , * இலங்கை வானொலி வர்த்தக சேவை * இலங்கை வானொலி தென்றல் சேவை * இலங்கை வானொலி மலையக சேவை * இலங்கை வானொலி பிறை எப் எம் சேவை * இப்பொழுது வாழ்விடம் தென்னாபிரிக்காவில் உள்ள சீசெல்சு நாட்டில் *தொழில் - பேராசிரியர் *தென்னிந்திய தமிழ்த் திரைப்படப் பாடல் ஆசிரியர் * இதுவரை எனது நூல்கள் 14 வெளிவந்துள்ளன சிறுகதை -1 நூல் நாவல் - 1நூல் பயணக் கட்டுரை - 1நூல் கவிதைகள் - 11 நூல்கள் * தோழன் - கலை இலக்கியச் சஞ்சிகை ஆசிரியர்

Write a Comment [மறுமொழி இடவும்]


8 × three =


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.