பவள சங்கரி

நம் தமிழ்நாட்டில் சித்தர்களின் இராச்சியம் தொடர்ந்தவாறுதான் உள்ளது என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. அதில் முக்கியமான ஒன்றுதான் சிவன் மலை நிகழ்வு. சிவ வாக்கிய சித்தர் பூஜித்த மலை தான் சிவன்மலை. கொங்கு நாட்டில், காங்கயம்-திருப்பூர் நெடுஞ்சாலையில் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சக்தி வாய்ந்த, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கொண்டுள்ள சிவன்மலை. வெகு காலங்களுக்கு முன்பு இக்கோவில் பட்டாலிமலை என்று வழங்கப்பட்டுள்ளது. இவ்வாலயத்தில் சிவ வாக்கிய சித்தர் திருப்பணிகள் செய்துள்ளார்.

ஆண்டவன் உத்திரவு!

18010860_796916363807516_6034925669327239018_n
வரும்காலத்தில் நடக்கப்போவதை குறிக்கும் விதமான பொருளை இக்கோவில் தெய்வம் முன்கூட்டியே பக்தர்கள் கனவில் வந்து சொல்வதும், அதன்படி இந்த ஆலயத்திலுள்ள பெட்டியில் கனவில் குறிப்பிட்ட அப்பொருளை வைத்து வழிபாடுகள் நடைபெறுகின்றன. இது வெகு காலமாக தொடர்ந்து வரும் வழமையாகவே உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் சொம்பில் நீர் வைத்து பூசை செய்யும்படி வாக்காகியுள்ளது. அந்த ஆண்டில்தான் சுனாமி எனும் பேரரக்கனால் பெரும் அழிவு ஏற்பட்டது. அதேபோல் தங்கம் வைத்து பூசை செய்தபோது வரலாற்றில் இல்லாத அளவிற்கு பெரிய அளவில் உயர்ந்த தங்கத்தின் விலை இன்றளவிலும் அப்படியே நிலைத்தே உள்ளது. பச்சரிசி வைத்து பூசை ஆனபோது விவசாயம் செழித்தோங்கியது. இதுபோன்று நுாற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்து, இதுவரை பூஜை செய்யப்பட்டுள்ளன. கார்கில் போர் வந்தபோது துப்பாக்கி வைத்து வழிபாடு நடந்ததும் மறக்கக்கூடிய விசயம் அல்ல.

இப்படி ஒவ்வொரு முறையும் நடக்கப்போகும் நிகழ்விற்கேற்றவாறு பொருள் வைத்து வழிபட பக்தர்களின் கனவில் வாக்களிக்கப்படுகிறது. இந்த முறை வலம்புரிச் சங்கு வைத்து வழிபட உத்திரவு ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. சிவபெருமானின் அருள் பூரணமாக கிட்டியுள்ள நிலையில் தமிழ்நாட்டிற்கு நிச்சயமாக நல்ல காலம் பிறந்துள்ளதாகவே கொள்ளமுடிகிறது!

பக்தர் கனவில் வாக்கு!

sivan malai

திருப்பூர், வெள்ளக்கோயில், தென்னிலை, பரமத்தி, பல்லடம், கோவை மற்றும் காங்கயத்திற்கு அருகில் உள்ள சுற்றுப்புற கிராமங்களில் , இருக்கும் தனது பக்தர் எவரேனும் ஒருவரின் கனவில் சிவன் மலை சாமி தோன்றி, குறிப்பிட்ட அந்த பெட்டியில் வைக்க வேண்டிய பொருள் பற்றி கூறுகிறார். அந்த நபர் அருள் வந்த நிலையில், கோயில் நிர்வாகியிடம் வந்து தாம் கண்ட கனவு பற்றிய செய்தியைக் கூறுகிறார். அவர் சொன்னது உண்மைதான் என்று உறுதி செய்யும் வகையில் அந்த நிர்வாகிகள் சிகப்பு மற்றும் வெள்ளை பூக்களை பொட்டலத்தில் வைத்து அதை சாமி முன்பு போட்டு ஒரு குழந்தையை எடுக்கச்சொல்லுவார்கள். இதற்கு பூச்சயனம் கேட்பது என்பார்கள்.

அதில் ஒரே முறையில் வெள்ளைப் பூ வந்தால் முருகப்பெருமான் கனவில் தோன்றி கூறியது உண்மைதான் என்பது உறுதி செய்யப்பட்டு அந்தப் பொருளுக்கு சிறப்பு பூசைகள் செய்து அதை அப்பெட்டியில் வைத்து விடுவார்கள். இதனுடன் அருள் வந்து வாக்கு சொன்ன பக்தர் பெயர், அவரது ஊர், அவர் கோயிலில் வந்து சொன்ன தேதி என அனைத்து விவரங்களையும் தெளிவாக அந்த பெட்டியின் கீழ் எழுதி வைத்துவிடுகிறார்கள். இது இன்றுவரை நடைமுறையில் உள்ளது.

சென்ற ஜனவரி 11 2017, அன்று திருப்பூர் மாவட்டம், தாராபுரம், கொங்கூரைச் சேர்ந்த சிவராம் என்பவரின் கனவில், இரும்பு சங்கிலி வைக்க உத்தரவானதையடுத்து, ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இரும்பு சங்கிலி வைத்து பூஜை செய்யப்பட்டது. எத்தனைபேர் இரும்புக் கம்பிகளுக்குப்பின் சென்றார்கள் என்பதை உலகமே அறியுமே.. அதற்கு முன், கடந்த ஆக., 29, 2017இல் பூமாலை வைக்கப்பட்டிருந்தது. கணக்கு நோட்டு புத்தகம் வைத்து பூசை செய்தபோது, மத்திய அரசாங்கம் கறுப்பு பணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆக இன்று 21, ஏப்ரல் 2017, சிவனருள் தீமைகளை அழித்து நன்மைகளை நிலைபெறச் செய்யும் வகையில் வலம்புரிச் சங்கின் நாதம் எங்கும் இனிமையாக ஒலிப்பதைக் கேட்கலாம்!

படத்திற்கு நன்றி : திரு ரகுராமன் பாலகிருஷ்ணன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *