நிர்மலா ராகவன்

நலம்-1-1-1

சுய விமரிசனம்

அபய முத்திரை

இந்துக்கோயில் சிலைகளில் இந்த முத்திரையைப் பார்த்திருப்பீர்கள். பக்கவாட்டில் இருக்கும் வலது உள்ளங்கை வெளியில் தெரிய, விரல்கள் மேல் நோக்கி அமைந்திருக்கும்.

பயம் என்ற வார்த்தைக்கு எதிர்ப்பதம் அபயம். அதாவது, `பயமின்றி இரு, உன்னைத் தீய சக்திகளிடமிருந்து காப்பாற்றுகிறேன்!’ என்று ஒருவருக்கு உணர்த்தி, அவரை அமைதிப்படுத்துவது இந்த அபய முத்திரை. இதைக்கொண்டு புத்தர் ஒரு மதயானையைக் கட்டுப்படுத்தினாராம். எல்லா புத்தர் சிலைகளிலும் இம்முத்திரையைக் காணலாம். இடக்காலைத் தூக்கி ஆடும் நடராஜரின் வலது கரமும் இப்படித்தான் அமைந்திருக்கும்.

அபய முத்திரையைக் காட்டி, நமக்கு நாமே நல்லது செய்துகொள்ளலாம்.

எதற்காக என்கிறீர்களா?

நம்மைப் பாதுகாத்துக்கொள்ள, தவறிழைத்துவிட்டு அதையே நினைத்துக்கொண்டு ஆரோக்கியத்தைப் பாழடித்துக்கொள்ளாமலிருக்க. நம்மை நாமே மன்னித்துக்கொள்ள.

சுய விமரிசனம்

பொழுதைப்போக்க உறவினர்கள், நண்பர்கள், அரசியல்வாதிகள் என்று பலரைப்பற்றியும் (வேண்டாத) விமரிசனங்கள் செய்வது பலரது பழக்கம். இதனால் தாம் பேசுவதிலும், செய்வதிலும் மற்றவர்கள் எப்படியெல்லாம் குறை கண்டுபிடிப்பார்களோ என்ற பயம் எழுகிறது.

எப்போதும் நம்மையே நாம் விமரிசித்துக்கொண்டு, நமது குறைபாடுகளை பறைசாற்றிக்கொண்டு இருக்க வேண்டுமா?

நாம் செய்வது நமக்குச் சரி என்று பட்டால் போதாதா?

குற்ற உணர்வு

குற்ற உணர்வு சிறு பிள்ளைக்கும் உண்டு. அம்மாவுக்குப் பிடிக்காத காரியத்தைச் செய்துவிட்டு, திருதிருவென குழந்தை முழிப்பது இதனால்தான்.

`குழந்தை தெரியாமல் செய்துவிட்டது!’ என்று பெருந்தன்மையுடன் அதன் காரியத்தைப் பெரிதுபண்ணாது விட்டுவிட்டால், குழந்தை அநாவசிய பயமின்றி வளரும்.

அதைவிட்டு, திட்டியோ, அடித்தோ, இன்னும் கூறப்போனால், `அவர்கள் வீட்டிலே நீ அழகான கண்ணாடி ஜாடியை உடைத்தாயே!’ என்று நீண்ட நாட்கள் அதையே சொல்லிக் காட்டிப் பழித்துக்கொண்டு இருந்தால் பெரியவர்கள் தம் பலம் பெருகிவிட்டதாக எண்ணலாம். ஆனால், நாளடைவில், தான் செய்வது எல்லாமே ஏதோ ஒரு விதத்தில் குறைவுள்ளது என்ற சிறுமை உணர்வு எழும். `நான் ஏனோ இப்படி இருக்கிறேனே!’ என்ற சுயபச்சாதாபமும் எழும்.

பெற்றோர்கள் அன்பானவர்களாக இருந்தாலும், ஒரு சில ஆசிரியர்கள் குழந்தைகள் மனதில் நச்சை விதைத்துவிடுவார்கள். அண்மையில், ஒரு ஒன்பது வயதுச் சிறுவன் வகுப்பில் பேசினான் என்பதற்காக அவனுடைய ஆசிரியர் பிற மாணவர்களை அவனுடன் சேரக்கூடாது என்றாராம். அப்பையன் வாழ்க்கையை வெறுத்து, தற்கொலை முயற்சிவரை போய்விட்டான். இது நடந்தது மலேசியாவில். அவன் செய்தது அப்படி ஒன்றும் பழிக்கக்கூடிய காரியம் இல்லை, ஆசிரியர்தான் அதிகார பலத்தால் தவறிழைத்தவர் என்று புரியும் வயதாகவில்லை அவனுக்கு.

உருவத்தில் கோளாறா?

`குண்டு,’ `வழுக்கை’ என்றெல்லாம் பிறர் கேலி பேசும்போது சிரித்து வைத்தாலும், சிறுமை உணர்ச்சி எழுவதைத் தடுக்கமுடியுமா?

அதை மறைக்க, தம்மைத்தானே கேலி செய்துகொள்வார்கள். இது தம்மையுமறியாது, பிறரை உயர்த்திப் பேசும் வழியும்கூட.

பொதுவாக, எந்தக் குடும்பத்திலும் இரண்டாவது மகன் மூத்தவனைவிட உயரமாக இருப்பான். தங்கை அக்காளைவிட உயரமாக இருப்பாள். இதுவும் இயற்கைதான். இதற்கெல்லாம் அவமானத்தால் சுருங்குவது எதற்கு?

கதை

`நான் தனியா எங்கேயும் போகமாட்டேம்பா. எல்லாரும் என்னையே முறைச்சுப் பாப்பாங்க. அழுகை வரும்!’ பதினாறு வயதில் என்னுடன் படித்த அருள்மேரி கூறியது இது.

அவளுடைய ஐந்தடி எட்டங்குல உயரத்தைப் பார்த்து சிநேகிதிகள் பிரமித்தாலும், அவளுக்கு வித்தியாசமான அந்த உயரமே பெரிய குறையாக, அவமானகரமாக இருந்தது. எப்போதுமே இரண்டு, மூன்று பேர் அவளுடன் இருக்கும்படி பார்த்துக்கொள்வாள்.

சராசரிக்கு அதிகமான உயரங்கொண்ட பெண்ணும், அதற்குக் குறைவான ஆணும் தங்களை ஏதோ விதத்தில் தாழ்ந்தவர்களாக நினைத்து வருந்துகிறார்கள்.

கதை

இந்திரன் அரசாங்க நிறுவனம் ஒன்றில் பெரிய அதிகாரி. உருவம் மட்டும் குள்ளம். எதற்காவது தப்பு கண்டுபிடித்து எல்லாருடனும் — பலர் பார்க்க — சண்டை போடுவார். `Shorty’ என்று எல்லாரும் அவரை முகத்திற்கு நேரேயே குறிப்பிட்டது அவரை அவ்வளவு தூரம் பாதித்திருக்கலாம்.

தன்கீழ் வேலை செய்தவர்கள் எந்தவித தவறும் செய்யக்கூடாது என்று எதிர்பார்த்தார். நடக்கக்கூடிய காரியமா அது! யார்தான் தவற செய்யவில்லை?

அலுவலகத்தில் மட்டுமில்லை. யார் வீட்டுக்குப் போனாலும், அங்கேயும் குற்றம் கண்டுபிடிப்பார். இதனால் அவருக்கு உற்ற நண்பர்கள் என்று யாரும் இருக்கவில்லை. எல்லாரும்தான் பயந்து ஓடினார்களே! மதுவே உற்ற தோழன் என்றாக, மனைவி, குழந்தைகளுக்குக்கூட அவரிடம் மரியாதை போயிற்று.

அவருக்குக் கீழிருந்த ஒருவர் தன் நேர்மையான உழைப்பு, மற்றவர்களை அனுசரித்துப்போகும் குணம் ஆகியவற்றால் அரசாங்க விருதுகளைப் பெற்றபோது, `எனக்கு எதுவும் கிடைக்கவில்லையே!’ என்றார் ஆற்றாமையுடன், தான் எங்கு தவறு செய்தோம் என்று புரியாது.

இந்திரன் போன்றவர்களுக்கு அபய முத்திரை அவசியம். `நான் குள்ளமாக இருந்தால் யாருக்கு என்ன வந்தது? இயற்கையை எதிர்த்துப் போராட முடியுமா!’ என்று, குறைகளுடன் தன்னைத்தானே ஏற்றால், பிறரையும் மதிக்கும் குணம் வருமே!

கோபத்தை விடு, முன்னேறலாம்

நாம் செய்த காரியத்தில் நிறைவு இல்லாவிட்டால், அதைச் சுட்டிக் காட்டுபவர்களிடம் ஆத்திரம் வருகிறது. சண்டை போடத் தோன்றுகிறது.

நான் ஆங்கில தினசரி ஒன்றிற்கு இந்திய இசை, நாட்டிய விமரிசகராக இருந்தபோது, கலைஞர்களின் தரத்தை அலசி, பாராட்டத் தக்கவைகள் பலவற்றைக் குறிப்பிட்டிருந்தாலும், ஓரிரண்டு குறைகளைச் சுட்டிக்காட்டியதற்காக அவர்கள் கோபத்துக்கும், தீராப்பகைக்கும் ஆளாகி இருக்கிறேன். அதிலிருந்து, `உலகப் புகழ் வாய்ந்தவர்கள்’ என்ற பெயர்பெற்றவர்களைப்பற்றி மட்டும் எழுத ஒப்புக்கொள்வேன். எதற்கு வம்பு!

சுமாரான ஒரு நடன ஆசிரியை தன் நிகழ்ச்சிக்கு வந்து அதைப்பற்றி எழுதும்படி என்னைக் கேட்டுக்கொண்டாள், தொலைபேசிமூலம்.

“நான் எப்படி எழுதுவேன்னு தெரியுமில்லையா?” என்று கேட்டு அவளை யோசிக்கவிட்டு, பிறகு, “எழுதணுமா?” என்று சமாதானமாகக் கேட்டேன்.

அவள் பயந்து, “பரவாயில்லை. சும்மா வாங்க,” என்றாள். அவளுக்கே தன் திறமையில் நம்பிக்கை இல்லைபோலும்!

பள்ளியில் படிக்கும்போது, `பிழைதிருத்தம்’ என்று பண்ணினோம். அடுத்த முறை அதே தவறுகள் வராது பார்த்துக்கொண்டபோது, மதிப்பெண்கள் கூடின. நாம் வளர்ந்து பெரியவர்களானதும் அக்குணம் ஏன் மாறியது?

வயதான கோளாறா?

வயதானவர்களுக்கு — தம்மைத் தாமே ஏற்க — அபய முத்திரை மிகவும் உபயோகமானது.

`இளம் வயதில் இருந்த உடல் வலிமை, உத்தியோகம், வருமானம் எதுவுமே இப்போது இல்லையே!’ என்ற வருத்தம் ஏற்பட, அது மனைவியின்மேல் ஆத்திரமாக மாறுகிறது. அவள் எது சொன்னாலும், தன்னைப் பழிப்பதாக எடுத்துக்கொள்கிறார்கள்.

“என் கணவருக்குப் படிக்க மிகவும் பிடிக்கும். ஓயாமல் படிப்பார்,” என்றாள் ஒரு சிநேகிதி.

நான் சில இணையதளங்களைப்பற்றிக் கூறினேன்.

பதிலாக, “அவ்வளவுதான்! கத்த ஆரம்பித்துவிடுவார். நான் என்ன சொன்னாலும் அவருக்குப் பிடிப்பதில்லை!” என்றாள்.

மேற்கண்ட வசனத்தை வெவ்வேறு நாடுகளிலிருந்த பல பெண்கள் கூறக் கேட்டிருக்கிறேன்.

பெண்களுக்கு இயற்கை உபாதைகள் பன்னிரண்டு வயதிலிருந்தே ஆரம்பித்து, பிள்ளைப்பேறு காலங்களிலும் தொடர்வதால், முதுமையின் தளர்ச்சி அவர்கள் மனதை அவ்வளவாகப் பாதிப்பதில்லையோ?

எழுத்தாளர்களும் சுயவிமரிசனமும்

தன்னைத்தானே விமரிசித்துக்கொண்டு, தான் செய்தது நிறைவாக இல்லை என்று ஒப்புக்கொள்ளும் குணம் எழுத்தாளர்களுக்கு மிக அவசியம்.

`இரவு பகலாக எழுதினேனே! இதில் சிலவற்றைக்கூட அடிக்க மனம் வரவில்லையே!’ என்று தான் எழுதியதன்மேல் காதல் கொள்பவர்களின் எழுத்து வாசகர்களுக்கு நிறைவைத் தராது.

பத்திரிகை ஆசிரியர்களின் தொழிலே அதுதான் என்பதை புரிந்துகொள்ள விரும்பாது, `நான் கஷ்டப்பட்டு எழுதினதை கன்னாபின்னான்னு சுருக்கிட்டான்!’ என்று புலம்பும் எழுத்தாளர்கள் உண்டு.

`இது அநாவசியம். அல்லது, தவறு!’ என்று நம்பகமான ஒருவர் விளக்கங்களுடன் சுட்டிக்காட்டும்போது அதை எப்படி சரிப்படுத்தலாம் என்று யோசித்தால்தானே முன்னேற முடியும்?

ஒரு துறையில் எத்தனை ஆண்டுகால அனுபவமாக இருந்தாலும், தவறுகளைத் தவிர்க்க முடியாது. `நான் என்ன கடவுளா, தப்பே செய்யாமலிருக்க!’ என்று மன்னித்துக்கொள்ள வேண்டியதுதான். ஆரோக்கியமாவது கெடாமலிருக்கும். அபய முத்திரை இருக்கவே இருக்கிறது!

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *