எஸ் வி வேணுகோபாலன்

மே 24ம் தேதி எங்கோ ரயில் நின்ற ஓசை கேட்டு அலறியடித்துக் கொண்டு எழுந்து பார்த்தபோது வண்டி மதுரை நிலையத்தில் நின்றிருந்தது. மீண்டும் கண் அசந்தாயிற்று. பின்னர் எழுந்து பார்க்கையில் சாத்தூர். அப்புறம் கோவில்பட்டி வரவும் அங்கே இறங்கினால், தமுஎகச பொதுச் செயலாளர் தோழர் ச தமிழ்ச்செல்வன் அவர்களது மகன் திருமணத்திற்கு வந்த வேறு சில தோழர்களும் கண்ணில் தட்டுப்பட வெளியில் வந்ததும் வழக்கம் போல் முதல் வேலையாக நாளேடுகள் வாங்கியாயிற்று. தங்குமிடம் சேர்ந்தபிறகு அருகிருந்த தேநீர்க் கடை அருகே சென்றபோது இரட்டிப்பு உற்சாகம்….கடையை ஒட்டிய திண்ணையில் காத்திருந்த அன்றைய நாளேடுகளின் இடையே தீக்கதிருமிருந்தது. ஞாயிற்றுக்கிழமையின் சிறப்புப் பக்கங்களில் கபீர்தாசர் பற்றிய காத்திரமான சித்திரம் நெஞ்சை நிறைக்க இளஞ்சூட்டில் தேநீரும் சேர்ந்து உள்ளே இறங்கியது.

திருமண மண்டபத்தை எட்டிய மாத்திரத்தில் முதலில் சந்திக்கக் கிடைத்தவர் கையில் ஒரு புத்தகத்தை வழங்கி இதை வாசித்துவிட்டுச் சொல்லுங்கள் என்றார் – நூல், குறுந்தொகை அறிமுக அகல்விளக்கு, கொடுத்தவர் நூலாசிரியர் மயிலை பாலு. மிகச் சரியான இந்தத் தொடக்கம் அந்த நாள் முழுக்க எழுத்துக்கள், எழுத்தின் காதலர்கள் மற்றும் நூல்களோடே கலந்து ரசிக்க வைத்துவிட்டது.

திருமண நிகழ்வை, தமிழ்ச்செல்வன் குடும்பத்தார் கலை, இலக்கிய கூட்டுக் களியாட்டமாக அமைத்திருந்தனர். மேடையில் பாப்பம்பாடி ஜமா குழுவினரின் பெரிய மேளம் முழங்க இருந்த இடைவெளியில் அதற்குள் கையிலிருந்த ஃபிரண்ட்லைன் பத்திரிகையின் அதிர்ச்சிக் கட்டுரை ஒன்றையும், அற்புதப் படைப்பு ஒன்றையும் வாசித்து முடிக்க முடிந்தது. முன்னது, உலக பொருளாதார நெருக்கடியின் ஒரு பிரதிபலிப்பாக, ஜப்பான் நாடு பிரேசில் நாட்டிலிருந்து தங்கள் தேசத்தில் வந்து நிறைந்திருக்கும் 3 லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்களைப் பயணச் செலவு மற்றும் கூடுதல் பணம் கொடுத்து வணக்கம் சொல்லி , உங்களூருக்குப் போய்விடுங்கள், இனி இந்த மண்ணை மிதிக்காதீர்கள் என்று சொல்லிவருவதைக் குறித்த வேதனை சித்திரம். அதிர்ந்து போய்க் கதறி அழும் பிரேசில் பெண்மணியின் முகம் எப்போதும் மறக்காது. அடுத்தது, ஈக்குவடாரில் சோசலிஸ்டுகளின் வெற்றி. அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ராஃபேல் கொரியா, ஆண்டு பட்ஜெட்டில் கல்வி, பொது சுகாதாரம் உள்ளிட்ட சமூகச் செலவினங்களுக்கு சரிபாதி ஒதுக்க இருக்கிறார். 1972க்குப் பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதல் அதிபர்.

பாப்பம்பாடி ஜமாவின் அட்டகாச முழக்கங்களை அடுத்து, மணமக்கள் சித்தார்த், பிரதீபா அழைக்கப்பட்டது திருமணம் செய்துகொள்ள அல்ல, அதற்குமுன் சில புத்தக வெளியீடுகளைச் செய்து முடிக்க. இல்லறத்தில் இணைந்து அவர்கள் ஆற்றும் முதல் பணி புத்தகங்களோடு தொடர்புடையதாக இருக்கட்டும் என்றார் தமிழ். கொள்ளுத் தாத்தா மதுரகவி பாஸ்கரதாஸ் அவர்களது நாட்குறிப்புகளை ச முருகபூபதி தொகுப்பில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருந்த அந்த நூலைத் தொடர்ந்து, கோணங்கியின் சிறுகதைத் தொகுப்பு, முருகபூபதியின் நாடகக் குறிப்புகள் மற்றும் தமிழ்ச்செல்வனின் பெண்மை என்றொரு கற்பிதம் ஆகிய நூல்களையும் மணமக்கள் வெளியிட்டனர். மதுரகவியின் நூல் பிரதிகளை, அவரது பெண்மக்கள் (தமிழ்ச்செல்வனின் சித்திமார்கள்) பெற்றுக் கொண்டது அருமையான விஷயம். அடுத்து தேவராட்டத்தின் இழைவும், குழைவுமான அடவுகளும், அசைவுகளும், உர்ர்ரூ…ம் என்ற அந்த ஈர்க்கும் இசையும் நிறைவடைந்தபின், ஒருவழியாக, திருமணம் நடத்தப்படும் என்று அவையோருக்கு நம்பிக்கை பிறக்க, மாலை மாற்றிக் கொண்டவர்கள், கார்ல் மார்க்ஸ், பெரியார் வாழ்க்கை வரலாற்று நூல்களை மாற்றிக் கொண்டதோடு வேறு சில நூல்களையும் பகிர்ந்து கொண்டனர். நிகழ்வில் பங்கேற்றோர்க்கு, பெண்மை என்றொரு கற்பிதம் நூல் தாம்பூலத்திற்கு மாற்றாக அங்கேயே வைத்து வழங்கப் பட்டது. இதே நேரத்தில் வெளியே பாரதி புத்தகாலய பந்தலில் ஐம்பதாயிரம் ரூபாய் போல நூல் விற்பனை நடந்தேறியது பின்னர் அறிந்து மகிழ்ந்த விஷயம்.

மண்டபத்தில் ஜா.மாதவராஜ் அவர்களோடு பேசிக் கொண்டிருக்கும்போது தற்செயலாக திலீப்.நாராயணன் அவர்களின் நேரடி அறிமுகம் வாய்த்த கணத்தை மறக்க முடியாது. அவரை, பேராசிரியர் ச மாடசாமியின், வகுப்பறைக்குள் எனக்குரிய இடம் எங்கே என்ற நூலின்வழி மட்டுமே அறிந்திருந்தேன். அந்த நூலில், உழைப்பாளி மாணவர்கள் பற்றிய கண்கள் பனிக்கும் ஒரு கட்டுரையில் நாராயணன் அவர்களது கடிதத்தை பிரசுரித்திருந்தார் பேராசிரியர். குஜராத் மாநிலத்தில், பி எஸ் என் எல் நிறுவனத்தில் கணக்கீட்டு அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் தான், பள்ளி நாள்களில் தகப்பனோடு சென்று செத்த மாட்டைத் தூக்கியதையும், மாடறுக்கவும் செருப்பு தைக்கவும் பழகியதையும், இழவு செய்தி சொல்லச் சென்றது, தேர் சிங்காரிக்கக் கற்றது, தந்தையுடன் இருந்து பிணம் எரித்தது, படையல் வைத்த சோற்றில் கறி தேடி எடுத்துத் தின்று பசியாறிப் பள்ளி சென்றதையும் ……என தனது இளமைக்காலத்தின் வேதனை முட்களைக் கடித்ததில் பதிவு செய்திருந்த நாராயணன் இப்போது விருதுநகரில் பணியாற்றுகிறார். அந்தக் கடிதத்தைப் பின்னர் Bank Workers Unity பத்திரிகை ஜூன் 2008 இதழில் மறு பிரசுரம் செய்திருந்ததை அவரிடம் பகிர்ந்து கொண்டபோதும், அந்தப் பதிவுகள் நெருடிக் கொண்டே இருந்தன.

கோவில்பட்டியிலிருந்து புறப்பாடு அடுத்து நெல்லையை நோக்கியதாக அமைத்துக் கொண்டிருந்தேன். ஓமியோபதி மருத்துவர் பி வி வெங்கட்ராமன் அறிமுகப்படுத்தியிருந்த அற்புதமான நூலான “தூங்காமல் தூங்கி” (சந்தியா பதிப்பகம் வெளியிட்டது, புத்தகம் பேசுது இதழில் பி வி வி எழுதிய நூல் அறிமுகமும் தூண்ட, சென்னை புத்தகத் திருவிழாவில் பிரதிகள் முழுமையாக விற்றுத் தீர்ந்த நூல் ! ) எழுதிய மருத்துவர் மாணிக்கவாசகம் அவர்களைச் சந்திக்காமல் சென்னை திரும்புவதில்லை என்று தீர்மானம். ஓய்வு பெற்ற மயக்க இயல் மருத்துவரான அவர், நோயாளிகளின் வலி, வேதனை, நிவாரணம் குறித்த கவலை, உளச் சோர்வு இவற்றோடு தம்மையும் பிணைத்துக் கொண்டு அவர்களுக்கு எந்த அளவிற்கு ஆறுதலும், உற்சாகமும், நிம்மதியும் நல்க முடியுமோ அதனைச் செய்வதான தமது தொழில்சார்ந்த போராட்டத்தை உயர்ந்த மனிதநேயத்தோடும், உள்ளார்ந்த கரிசனத்தோடும் வளமான இலக்கிய மொழிநடையில் பகிர்ந்து கொண்டுள்ள நூல் அது.

அவரது வீட்டில் அவர் முதலி உள்ளே அழைத்துச் சென்று காட்டியது அவரது புத்தக அலமாரியைத் தான். கண்ணை ஈர்க்கும் வண்ண வடிவமைப்பிலான சில ஆங்கில நூல்களை வெளியே எடுத்துக் காட்டினார். ஒன்று, லியோ டால்ஸ்டாயின் போரும் அமைதியும் நூலின் ஒரு பாகம். அடுத்தது அமெரிக்காவில் கறுப்பின மக்களை அடிமைத்தனத்தில் ஆழ்த்திவைத்திருந்தோரின் மனசாட்சியை உலுக்கியெடுத்த, ஹெச் பி ஸ்டோவே அவர்களின் அங்கிள் டாம்’ஸ் காபின் என்ற நூல். எல்லாம் மகன்களைக் காணச் சென்றபோது அமெரிக்காவில் மலிவாக வாங்கிய தரமான பதிப்புகள் என்ற மாணிக்கவாசகம், அங்கு நூல்களை சமூகத்திற்குப் பரவலாக எடுத்துச் செல்லும் முனைப்பு உள்ளதையும், பேரம் பேசி நூல்களைக் குறைந்த விலைக்கு வாங்கவுள்ள ஏற்பாடுகளையும் உவகையுறச் சொன்னார்.

நேரம் ஆகிறது, ரயில்வே நிலையத்திற்குப் புறப்படலாம் என்று தமது வண்டியில் என்னை அழைத்துச் செல்ல முன்வந்தவரிடம், மெதுவாக இன்னொரு ஆசையைத் தெரிவித்தேன். போகிற வழியில் இலக்கிய திறனாய்வாளர் தோழர் தி.க.சி.யைப் பார்த்து விட்டுப் போய்விட முடியுமா என்றதும், அதற்கென்ன பார்த்துவிடலாம் என்று காரை எடுத்தார். செல்கிறபோது வழியில் வண்டியின் வேகத்தை மட்டுப்படுத்தி பாளையங்கோட்டையின் நீண்ட சாலையின் வலதுபுறம் இருந்த ஒரு கட்டிடத்தைப் பார்க்கச் சொன்னார். புனித சவேரியார் பள்ளி வளாகம் அது. தான் படித்த பள்ளி என்ற அவர், அந்நாளைய ருசிகர செய்தியொன்றையும் சொன்னார். பள்ளியிறுதி வகுப்பின் போது ஆசிரியர் ஒருவர், ‘ஒழுங்காப் படித்து தேர்ச்சி பெற்றால், சாலையைக் கடந்து எதிர்ப்புறம் போய் சவேரியார் கல்லூரியில் சேர்ந்து படிப்பைத் தொடரலாம், இல்லையென்றால், பள்ளியை அடுத்த மைக்கேல் மைதானத்தில் எருமைகள் தயாராகக் காத்திருக்கும், சாலையைக் கடக்க வேண்டிய சிரமம் இல்லாமல் வேலையில் சேர்ந்துவிடலாம்’ என்பாராம்.

உலகறிந்த சுடலை மாடன் தெருவில் நுழைந்து தி.க.சி., அவர்களின் வீட்டை நோக்கி நடந்த போது, மருத்துவர் மாணிக்கவாசகம் பழைய நிகழ்வின் தாக்கம் நெஞ்சை அடைக்கப் பெருமூச்செறிந்தவாறு நடந்தார். தி.க.சி.,யின் மனைவி சில ஆண்டுகளுக்குமுன் மரணப்படுக்கையில் இருந்தபோது இறுதி நேரத்தில் மாணிக்கவாசகம் அங்கே சென்றிருக்கிறார். ஏதும் செய்ய இயலாத கட்டம் அது. ஆனால், ஏதாவது ஊசி போடக் கூடாதா, ஒரு வாய்ப்பு இருக்காதா என்று அரற்றியிருக்கிறார் தி.க.சி., அவருடைய மகன் வண்ணதாசனைத் தனியே அழைத்த மாணிக்கவாசகம், அவரது மன நிறைவிற்காக ஒரு மருந்தைச் செலுத்திப் பார்க்கலாம், பயனிருக்காது என்றாலும் என்று சொல்லிவிட்டு, தி.க.சி.,யிடம், “என்ன மாமா, எல்லாம் தெரிந்தவராயிற்றே, நீங்களே இப்படி குமுறலாமா?” என்று கேட்டிருக்கிறார். தி.க.சி. சொன்னாராம்: “நானும் மனுசன் தானய்யா, மனுசன் தானே”. வேறு முயற்சிக்குக் கூட சிரமம் தராது அவரது மனைவியின் உயிர் பிரிந்த அந்த சங்கடமான நேரத்தை நினைவுகூர்ந்து கொண்டே வந்தார் மருத்துவர்.

தி.க.சி. அவர்களின் அறைகள் பூட்டியிருக்க ஓர் ஏமாற்றம் வந்து கப்பியது. தொலைபேசியில் அழைத்துக் கேட்டுக் கொண்டு வந்திருக்கலாம் என்று சொல்லிக் கொண்டே அருகிருந்த வீட்டில் கேட்டபோது, ஒரு இளைஞர், இப்ப செய்தித்தாள் வாங்கிக்கிட்டு டீ குடிச்சுட்டு வர்ற நேரம், சுடலைமாடன் கோவில் பக்கம் போனா பிடிச்சுரலாம் என்றார். தெருமுனையை எட்டவும், தி.க.சி. அவர்கள் நேரே நிற்கவுமாக ஒன்றுபோல நேர்ந்தது. அதே நேரத்தில், சோலை.சுந்தர பெருமாள், மன்னார்குடி தாமோதரன் இருவரும் கூட கோவில்பட்டி திருமணம் முடிந்து இவரைப் பார்க்கவே அங்கு வந்து சேர்ந்திருந்தனர். தெருமுனை இலக்கிய சந்திப்பில், அறிமுகம் முடிந்து, தி.க.சி., சொன்னது, புத்தகம் பேசுது இதழை மிகவும் பாராட்டிய சொற்களைத்தான். ஏப்ரல் இதழில் வந்த பொருளாதார வல்லுநர் ஆத்ரேயா நேர்காணலை மிகவும் சிலாகித்துச் சொல்லி அவர் எங்கே பணியாற்றுகிறார் என்றும் கேட்டுக் கொண்டார். புத்தகங்கள் நிறைய வரணும், நிறைய எழுதுங்கள் என்று பொதுவாகக் கேட்டுக் கொள்ளவும் செய்தார். பண்பாட்டுத் தளத்தில்தான் நிறைய வேலை செய்ய வேண்டியிருக்கிறது, தமுஎகச அதற்கு முழுமையாகப் பணியாற்றும் என்றும் நம்பிக்கையோடு சொன்னார்.

புத்தகங்களோடான சிந்தனையோடே ரயில்வே நிலையத்திற்கு வந்தடைந்து, மருத்துவருக்கு நன்றி சொல்லிவிட்டு, ரயிலில் ஏறி அமரவும் குறுந்தொகை அறிமுக நூல் வாசிக்க இடமும், சூழலும், மனமும் தோதாக இருந்தது. அது முடியவும், செம்மலரில் தொடராக வந்தபோது வாசித்திருந்தாலும் நூலாக வாசிக்க வேண்டிக் கையில் அடுத்து எடுத்த பெண்மை என்றொரு கற்பிதம் (ச தமிழ்ச்செல்வன் – பாரதி புத்தகாலயம்), முடிக்க வண்டி விருதுநகரைத் தாண்டியிருந்தது. கீழ்ப்படுக்கையில் படுக்க வேண்டிய நலிந்த உடலினராக இருந்த முதியவர் ஒருவர், வார இதழ் ஒன்றில் மும்முரமாக இருந்தார். அய்யா, எப்ப படுக்க விரும்புறியளோ சொல்லுங்க என்றேன். தலையாட்டினார்.

ஃபிரண்ட்லைன் இதழில் மேலும் வேறு பல கட்டுரைகளையும் வாசிக்கவும், இப்போது மதுரை வந்துவிட்டிருந்தது. முதியவரை வற்புறுத்திப் படுக்கச் சொன்னபோது, ஒரு உதவி செய்யணுமே என்றார். தாராளமாக என்றதும், கைப்பையிலிருந்து தேடி எடுத்த காகித உறையிலிருந்த ஒரு மாத்திரை அட்டையை எடுத்துக் காண்பித்தார். இரவு எப்போதாவது தேவையென்றால் உங்களை எழுப்புவேன், இதிலிருந்து ஒன்றை எடுத்து எனது நாக்கின் கீழ் வைக்க வேண்டுமென்று உருக்கமாகக் கேட்டுக் கொண்டார்.

அதிர்ந்து போனது எனக்கு. நெஞ்சு வலிக்கு உயிர்காக்கும் மருந்து அது. “பயப்பட வேண்டாம். அப்படி எதுவும் நேராது. வலி ஏற்பட்டால் தயங்காம என்னை எழுப்புங்க. அசந்து தூங்கற மாதிரி தெரிஞ்சா, கன்னத்தில் அறைந்து கூட என்னை எழுப்பலாம், உதவி செய்வேன் என்று சொல்லியபடி அவரைத் தூங்கச் சொன்னேன். வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மீண்டும் எடுத்துப் பார்த்து உள்ளே பையில் வைத்துக் கொண்டு உறங்கத் தொடங்கிய அந்தப் பெரியவரையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். வண்டி சென்னை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.

காலையில் அவரை எழுப்பி, “நான் இறங்க வேண்டிய இடம் வந்திருச்சு, வரட்டுமா” என்ற போது, நிம்மதிப் புன்னகை அவரது முகத்தில். புத்தகங்களின் சுமை தெரிந்தாலும் வலி தெரியாத பை எனது தோள்களில்.

********

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *