-மேகலா இராமமூர்த்தி

மனித சமுதாயத்தினர் மேற்கொண்டொழுகும் இரு அறங்கள் இல்லறமும் துறவறமும் ஆகும். இவற்றில் மற்றவர்களையும் வாழ்வித்துத் தானும் வாழும் பெற்றி பற்றி இல்லறமே சிறந்தது எனலாம்.

வள்ளுவரும், ’அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை’ என்றுகூறி இக்கருத்துக்கு அரண் சேர்க்கிறார். இல்வாழ்க்கையின் நன்கலமாகத் திகழ்வது அறிவிற்சிறந்த மக்கட்பேறு. அதனால்தான்,

”பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற”
என்று மக்கட்பேற்றின் மகத்துவத்தை மக்களுக்கு உணர்த்துகின்றார் பேராசான்.

இல்வாழ்க்கையில் எல்லா இணையருக்கும் மக்கட்பேறு விரைவில் வாய்த்துவிடுவதில்லை. சிலர் பலகாலம் தவமாய்த் தவமிருந்துதான் இப்பேற்றைப் பெறுகின்றனர். இதற்குத் தக்கதோர் சான்றாய்ச் சங்க இலக்கியம் நமக்குக் காட்டுவது பாண்டிய மன்னன் அறிவுடைநம்பி. பொருட்செல்வம் மலையெனக் குவிந்துகிடந்தது அவனிடம். காலால் இட்டதைத் தலையால் செய்ய ஏவலர் பலர் இருந்தனர். ஆயினும் அவனுக்கு மனத்தில் நிறைவில்லை. காரணம்… மனத்தை மகிழ்விக்கும் மழலையொன்று அவன் மாளிகையில் அதுவரைத் தளர்நடை பயிலவில்லை. இதனை எண்ணி எண்ணியே துயில்தொலைத்தான் அவன்.

வறண்ட பாலையில் திடீரென்று பெய்த மழை, பாலையைப் பசுஞ்சோலையாய் ஆக்குவதுபோல், வறண்டிருந்த அவன் வாழ்க்கையை வளமாக்கும் குழந்தைச்செல்வம், வாராதுபோல் வந்த மாமணியாய், அவனுக்கு வாய்த்தது ஒருநாள்! அவனடைந்த மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை!

அக்குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் ஆசையோடு கவனித்தான். தன் உள்ளத்து உணர்ச்சிகளை அழகியதோர் பாடலாய் வடித்தெடுத்தான் அவன்.

படைப்புப்பல  படைத்துப்  பலரோடு  உண்ணும்
உடைப்பெருஞ்  செல்வர்  ஆயினும்  இடைப்படக்
குறுகுறு  நடந்து  சிறுகை  நீட்டி
இட்டும் தொட்டும்  கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை  இல்லைத்  தாம்வாழும்  நாளே. (புறம் : 188 – பாண்டியன் அறிவுடைநம்பி)

பல்வேறு வகையான செல்வங்களைப் பெற்று, பலருக்கும் உணவுபடைத்துத் தானும் உண்ணக்கூடிய வசதிபடைத்த செல்வரே ஆயினும், குறுகுறுவென நடந்து, சிறிய கைகளை நீட்டித் தனக்கெனப் பிசைந்து வைக்கப்பட்டிருக்கும் நெய்சோற்றைத் துழாவி, மெய்யெங்கும் பூசிக்கொண்டு காண்போர் மனம் மயக்கும் மக்கட்செல்வம் வீட்டில் இல்லையென்றால் அந்த இல்லறத்தின் பயன் குறைவுபட்டே போகும் என்று எழுதிநின்றது அவன் எழுதுகோல்.

இன்பத்தைக் குவியல் குவியலாய்ப் பெற்றோர்க்கு அள்ளித்தருவதால்தான் ’bundle of joy’ என்று குழந்தையை ஆசையோடு அழைக்கிறார்களோ?

மழலையர் இல்லறவாழ்விற்கு அணிகலனாய்த் திகழ்வதோடு மட்டுமல்லாமல், இல்லறத்தில் கணவன் மனைவியரிடையே ஏற்படும் பிணக்கையும் ஊடலையும் தீர்த்துவைக்கும் சமாதானத் தூதுவர்களாகவும் சிலநேரங்களில் செயலாற்றுகின்றனர். அதனை விளக்கும் அரிய பாடலொன்று அகநானூற்றில் இடம்பெற்றிருக்கின்றது.

இல்லறவாழ்வில் இணைந்தனர் ஒரு தலைவனும் தலைவியும். அவர்களுக்கு அழகான  புதல்வன் ஒருவன் பிறந்தான். மகிழ்ச்சிக்குக் குறைவின்றிச் சிலகாலம்வரை அவர்களின் இல்லறம் நல்லறமாகத்தான் சென்றுகொண்டிருந்தது. யார் கண்பட்டதோ தெரியவில்லை…அந்தத் தலைவனின் ஒழுக்கத்தில் குறைபாடு ஏற்பட்டது. தலைவியையும் குழந்தையையும் துறந்து பரத்தையரோடு தொடர்புகொண்டான் அவன். இதற்கிடையில், இன்னொரு பெண்ணை மணக்கவும் முடிவுசெய்திருந்தான் அந்த உத்தமத் தலைவன்(!!).

மணநாளும் வந்தது. புதுமாப்பிள்ளைக் கோலம்பூண்டு, பூமாலைகள் அணிந்துகொண்டு தலைவி வசிக்கும் தெருவழியே வந்தான் தேரேறி. வீதியில் தேர்நுழைந்ததும் தேரின் மணிகள் காற்றில் ஒலித்தன. அந்தச் சத்தம் வீட்டுக்குள் விளையாடிக்கொண்டிருந்த தலைவனின் புதல்வன் காதில் விழுந்தது. அது என்ன சத்தம் என்று அறியவிரும்பிய பாலகன், வீட்டுவாயிலைக் கடந்து தெருவுக்கு ஓடிவந்தான். ஓடிவந்த குழந்தையைத் தலைவனும் கண்டான். உடனே தேரை நிறுத்தச்சொல்லிக் கீழே இறங்கியவன், மலரன்ன கண்களும், பவளச் செவ்வாயும் கொண்ட தன் புதல்வனை வாரியணைத்துக்கொண்டான். பின்னர், ”பெரும! நீ உள்ளே செல்!” என்று கூறி மீண்டும் தேரில் ஏற முற்பட்டான். புதல்வனோ தந்தையைவிட்டுச் செல்லமறுத்து அழவே, அவனை விடுத்துச்செல்ல இயலாது தவித்தது தலைவனின் ’தந்தை’யுள்ளம்!

எனவே குழந்தையைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான். உள்ளிருந்த தலைவி, குழந்தையால்தான் தலைவனின் அவசரப் பயணம்(!) தடைப்பட்டுவிட்டது போலும் என்றெண்ணிக் குழந்தையைச் சிறுகோலால் அடிக்க வந்தாள். அதனை அனுமதிக்கவில்லை தலைவன். அப்போது, ’வா வா’ என்று தலைவனை அழைப்பதுபோல் அவனுக்குப் புதுமணம் நிகழவிருந்த வீட்டிலிருந்து மணமுழவு (கல்யாண மேளம்) ஒலித்தது.

என்ன ஆச்சரியம்! தலைவன் மணம் செய்துகொள்ளப் புறப்படவில்லை அப்போது. தலைவியோடு தான்பழகிய அந்த இனிய நாட்களெல்லாம் அவன் நினைவில் நிழலாடின; ஆகவே மணம் தவிர்ந்தான்!

தலைவன் குறித்த மேற்கண்ட நிகழ்வுகளையெல்லாம் தன் தோழியிடம் விவரித்த தலைவி, மேலும் தொடர்ந்தாள்…

”பகைவரும் விரும்பக்கூடிய அழகும் அறிவும் வாய்ந்த புதல்வரைப் பெற்றோர், புவி வாழ்விலும் புகழோடு விளங்குவர்; மறுமை உலகையும் மறுவின்றி எய்துவர் என்று பெரியோர் உரைத்த பழமொழிகளெல்லாம் வெற்றுமொழிகளல்ல…அவை உண்மைமொழிகளே! என்பதை என் சொந்த வாழ்விலேயே கண்டுவிட்டேன். ஆம், வாடியிருந்த என் வாழ்க்கையில் மீண்டும் வசந்தத்தைக் கொணர்ந்தது என் புதல்வனே” என்று புளகாங்கிதத்தோடு புகன்றாள். தோழியும் அதனை ஆமோதித்தாள்!

இம்மை  உலகத்து  இசையொடும்  விளங்கி
மறுமை  
உலகமும்  மறுவின்று  எய்துப
செறுநரும்  விழையும்  செயிர்தீர்  காட்சிச்
சிறுவர்ப்  பயந்த  செம்மலோர்  எனப்
பல்லோர்  கூறிய  பழமொழி  எல்லாம்
வாயே  ஆகுதல்  வாய்த்தனம்  தோழி
நிரைதார்  மார்பன்  நெருநல்  ஒருத்தியொடு
வதுவை  அயர்தல்  வேண்டிப்  புதுவதின்
இயன்ற  அணியன்  இத்தெரு  இறப்போன்
மாண்தொழில்  மாமணி  கறங்கக்  கடை கழிந்து
காண்டல்  விருப்பொடு  தளர்புதளர்பு  ஓடும்
பூங்கட்  புதல்வனை  நோக்கி நெடுந்தேர்
தாங்குமதி  வலவ என்று  இழிந்தனன்  தாங்காது
மணிபுரை  செவ்வாய்  மார்பகம்  சிவணப்
புல்லிப்  பெரும  செல்இனி  அகத்து எனக்
கொடுப்போற்கு  ஒல்லான்  கலுழ்தலின்  தடுத்த
மாநிதிக்  கிழவனும்  போன்ம்  என மகனொடு
தானே  புகுதந்  தோனே யான்  அது
படுத்தனென்  ஆகுதல்  நாணி  இடித்து இவற்
கலக்கினன்  போலும்  இக்கொடியோன்  எனச்சென்று
அலைக்கும்  கோலொடு  குறுகத்  தலைக்கொண்டு
இமிழ்கண்  முழவின்  இன்சீர்  அவர்மனைப்
பயிர்வன  போலவந்து  இசைப்பவும்  தவிரான்
கழங்குஆடு  ஆயத்து  அன்றுநம்  அருளிய
பழங்கண்  ணோட்டமும்  நலிய
அழுங்கினன்  அல்லனோ  அயர்ந்த தன்  மணனே!  (அகம்: 66 – செல்லூர் கோசிகன் கண்ணனார்)

இப்பாடலிலிருந்து அன்றைய சமூகம் குறித்த பலசெய்திகள் நமக்குத் தெரியவருகின்றன. ஆண்மக்கள் தம் மனம்விரும்பியபடி எத்தனை மணம் வேண்டுமானாலும் செய்துகொள்ள அன்றைய சமூகம் அவர்களை அனுமதித்திருக்கிறது. மாறாகப் பெண்களோ, கல்லானாலும் கணவன், புல் (ஃபுல்?) ஆனாலும் புருஷன் என்று அவன் அன்பையும் அருளையுமே எதிர்பார்த்து வாழ்ந்திருக்கின்றனர். பொருளாதாரச் சுதந்திரமோ, ஒழுக்கம் பிறழ்ந்த கணவனைப் பிரிந்துவாழும் சுதந்திரமோ அவர்களுக்கு அளிக்கப்படவில்லை. அதனால்தான் தலைவன் பரத்தையரைத் தேடிச்சென்று அவர்களோடு வாழ்ந்துவிட்டுத் திரும்பிவந்தாலும் அவனைச் சிறு ஊடலோடு ஏற்றுக்கொண்டிருக்கின்றனர் அன்றைய தலைவியர். பெண்களை ஆடவரின் அடிமைகளாகவும், நுகர்பொருளாகவும், இரண்டாந்தரக் குடிமக்களாகவும் சமூகம் நடத்திவந்ததன் வெளிப்பாடே இவை எனில் மிகையில்லை.

இத்துணை அவலங்களுக்கு இடையிலும், தலைவன் ஒருவனின் தவறான நடத்தையை அவனுடைய சின்னஞ்சிறு மழலை திருத்திவிட்டதை இப்பாடல்வழி அறியும்போது நாம் மனம் மகிழவே செய்கிறோம். சிற்றுளி ஒன்று பெரிய மலையையே பிளந்துவிடுவதுபோல், குடும்பப் பாசமற்று மலைபோல் இறுகியிருந்த தலைவனின் உள்ளத்தைத் தன் அன்பெனும் சிற்றுளியால் பிளந்து அதில் அருளைச் சுரக்கச் செய்துவிட்டானே இந்தப் ’பொடியன்’ என்று நம் உள்ளம் இக்குழந்தையைக் கொண்டாடவே செய்கிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *