படக்கவிதைப் போட்டி – (110)

பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

18217587_1308733892514140_163952999_n
97233181@N07_rஜமீல் ரியாஸ் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (06.05.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

editor

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

Facebook Twitter Flickr 

Share

About the Author

editor

has written 1214 stories on this site.

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

4 Comments on “படக்கவிதைப் போட்டி – (110)”

 • செண்பக ஜெகதீசன்
  Shenbaga jagatheesan wrote on 6 May, 2017, 20:05

  முளைத்தது…

  நீல வானம்
  நிலவை வைத்துக்கொண்டது-
  பொட்டாய்..

  மேகத்துக்குப் பிடிக்கவில்லை,
  மறைத்தது நிலவை..

  வான வயலில்
  விதைத்தது,
  விண்மீன் விதைகளை..

  விதை முளைத்து
  வெளிச்சமாய்-
  கண்சிமிட்டும் தாரகைகள்…!

  -செண்பக ஜெகதீசன்…

 • பழ.செல்வமாணிக்கம் wrote on 6 May, 2017, 22:02

  நிலாப்பாடம் மேகத்தின் பின்னால் உன் முகத்தை
  ஏன் மறைத்தாய் வெண்ணிலாவே!
  நட்சத்திரத் தோழிகள் உடனிருக்க
  என்ன பயம் உனக்கு வெண்ணிலாவே!
  ஈசன் சூடியதால் வெண்ணிலாவே!
  உனக்கு ஈடு இணை எதுவுமில்லை
  வெண்ணிலாவே!
  காதலர்க்கு தூது செல்லும் வெண்ணிலாவே! அவர்
  உன்னைக் காணாமல் கலங்கிடுவார் வெண்ணிலாவே!
  கவிஞர்களின் கற்பனைக்கு அடித்தளம் நீ
  வெண்ணிலாவே!
  உன்னைக் காணாமல் மொழி மறப்பார்
  வெண்ணிலாவே!
  மழலைக்கெல்லாம் மாதா நீ வெண்ணிலாவே!
  உன்னைக் காணாமல் தவித்திடுவார்
  வெண்ணிலாவே!
  மேகத்திரை விலக்கி வெண்ணிலாவே!
  உன் எழில் முகத்தை காட்டிடுவாய் வெண்ணிலாவே !
  இருளின் துயர் நீக்கி வெண்ணிலாவே!
  ஒளியைத் தந்திடுவாய் வெண்ணிலாவே!
  நீ சிந்தும் சிறு துளி ஒளியில் வெண்ணிலாவே !
  மலை அரசி மிளிரும் எழிலைப் பார் வெண்ணிலாவே!
  உன்னைப் பார்த்த மகிழ்ச்சியில் வெண்ணிலாவே!
  பூமித்தாயின் புன்னகையைப் பார் வெண்ணிலாவே!
  இதமாய் ஒளி வீசும் வெண்ணிலாவே!
  உடனே வெளியில் வா வெண்ணிலாவே!
  இதயத்தில் கொலுவிருக்கும் வெண்ணிலாவே!
  உதயம் வரும் வரை ஒளி தருவாய்
  வெண்ணிலாவே!
  சாதி, மதம் பார்க்காத வெண்ணிலாவே!
  சடுதியில் வந்திடுவாய் வெண்ணிலாவே!
  வளர்வதும், தேய்வதும் , மறைவதும்
  வெண்ணிலாவே!
  மரபென்று வாழ்ந்து காட்டுகிறாய்
  வெண்ணிலாவே!
  இதை மறக்காமல் மனதில் கொள்வோம்
  வெண்ணிலாவே!

 • சி.ஜெயபாரதன்
  சி. ஜெயபாரதன் wrote on 6 May, 2017, 22:30

  பொரி உருண்டை

  சி. ஜெயபாரதன், கனடா

  பிரம்மாண்டமான நமது
  பால்வீதிப்
  பிரபஞ்சம் கலியுகத்தில்
  கணினி யுகத்தில்
  ஒரு படமாய்ப்
  பொரி உண்டையாய்ப்
  போனது !
  அண்ட கோளங்களை இயற்கை
  அன்னை கைகளில்
  அம்மான ஆடுகிறாள் !
  சூரியக் கோள்கள் புரியும்
  சர்க்கஸ் போல்
  கோடான கோடிப்
  பரிதி மண்டலங்கள்
  கொடை ராட்டினம் சுற்றும்,
  ஒளிமந்தைகள்
  நளின நடம்புரியும்
  பிரபஞ்சத்தைக் காணக்
  கோடிக் கண்கள்
  வேண்டும் !
  சூரியக் கதிர்ப் பொழிவில்
  நீரியக் கோளாம்
  பூமியில் மட்டும் ஏன்
  புள்ளினம், புல்லினம், பூவினம்
  துள்ளி முளைத்தன ?
  இயற்கை அன்னை
  வயிற்றில்
  வாரிசாய்த் தோன்றிய
  ஆறறிவு மாந்தர்
  உன்னதப் படைப்பென்ன ?
  தாரகை வானிலே
  இடியும், மழையும், மின்னலும்
  கடல் மடியிலே
  எரிமலை பொங்கி
  வெடிப்பும், துடிப்பும், எழுந்து
  பூகம்பத்தில்
  சுனாமி அலைகள்
  அடிப்ப தென்ன ?
  மனிதர் வாழ்வெல்லாம்
  கதையாய்க்
  கனவாகிப் போவதென்ன ?
  ஆயினும்
  கற்றதனால் நாம்
  பெற்ற பயன் என்ன ? என்ன ?
  பிரபஞ்சச் சிற்பியின்
  கைத்திறனை,
  கலைத்திறனை, கவினைக்
  காணாத போது ?

  ++++++++++++++++++++

 • பெருவை பார்த்தசாரதி
  பெருவை பார்த்தசாரதி wrote on 6 May, 2017, 23:39

  “ஆகாயம் ஒரு ஆல்பம்”..!
  =======================

  மண்ணிலிருந்து ஆகாயத்தைப் பார்…நம்
  எண்ணமும் விண்ணைத் தொடுமப்பா..!

  வான வெளியை வியந்து நோக்கின்..
  மனதுக்குள் சிந்தனைபல கிளர்த்தெழும்..!

  விண்ணும் முகிலும் காதல்கொண்டு விளையாட..
  மண்ணும்மலையும் மறைந்திருந்து பார்க்கும்..!

  மேகம் நாணமுடன் விண்ணை நெருங்கி..
  மோகம் கொள்ளு மப்போது..

  மண்ணில் வாழும் மனிதரை நோக்கி..
  கண் சிமிட்டும் விண்மீன்கள்..!

  கவர்ச்சிமிகு கன்னியரின் கார் குழல்போல்
  அசைந்தாடும் மேகக் கருங்கூட்டம்..!

  மதிமயக்கும் விண்ணை மனதார வாழ்த்த
  மலையேறிச் செல்லும் வெண்முகிலழகு..!

  எதிரொலி கொடுக்கும் இடியின் வாழ்த்தால்
  மறுஒலிகேட்டு மகிழு மனைத்தும்..!

  சின்னக் குழந்தைகள் கிறுக்கிய ஓவியமாய்
  மின்னல் கோடுகளின் மாலைதெரியும்..!

  மலை முகட்டை மழைத் துளியால்
  தலை நனைக்கும் வானமாவாய்நீ..!

  நிலவுக்கு அதன் அழகைக் காட்டும்
  நிலைக் கண்ணாடி போல்நீ..!

  வானமுனது ஓம்கார இறைச்சலில் ஆழ்ந்ததில்
  மனமெனது அகங்காரம் மெளனமாகிறது..!

  மலையின் மலைப்பான இயற்கைச் செழிப்பில்
  மலைத்தெழும் கற்பனைகள் ஏராளம்..!

  உவமை தேடும் கவிஞருக்கு..ஆகாயம்
  உன்னை விட்டால்வேர் ஆருமில்லை..!

  உச்சிவானம் பற்றியே உறக்கமிலா சிந்தனையுடன்
  மெச்சியுனைப் புகழாத கவிஞரிலர்..!

  ஆகாயமொரு தமிழ்தோட்ட மதில்…விண்மீன்கள்
  ஆகும் புலவர்களின் பாக்கூட்டம்..!

  அத்துணை கவிஞனின் கற்பனைக்கு விருந்தாகிய
  ஆகாயம்…நீயொரு “ஆல்பம்”

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.