கற்றல் ஒரு ஆற்றல் 77

க. பாலசுப்பிரமணியன்

கேட்கும் திறனால் கற்றலில் ஏற்படும் பயன்கள்

education-1

கேட்கும் திறன் ஒரு தனி மனிதனின் வாழ்க்கை வளத்திற்கு ஆதாரமாக அமைகின்றது. பல்லாண்டுகள் முயன்று நாம் பாடுபட்டு சேர்க்கக்கூடிய அறிவினை நாம் குறைந்த காலத்தில் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கின்றது. மேலும், இந்த அறிவினை பெறுவதற்கு மற்றவர்கள் எடுத்துக்கொண்ட கால அவகாசங்கள் நமக்கு கிடைப்பது ஒரு ஈடில்லாத வரவு. ஆகவேதான் நாம் நல்ல கற்றவர்களோடு அமர்ந்து அவர்கள் அறிவினை நமக்கு கிடைப்பதற்கான வழிமுறைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதை வலியுறுத்தும் திருவள்ளுவர் என்ன கூறுகின்றார் ?

கேள்வியறிவால் துளைக்கப்படாத செவிகள், கேட்டறிந்தாலும், கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.”

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்

தோட்கப் படாத செவி.” 

மற்றவர்கள் பேசி நாம் கேட்கும் பொழுது நமக்கு என்ன பயன்கள் ஏற்படுகின்றன.

 1. கற்றல் என்னும் செயல் மிக இயல்பாக நடைபெறுகின்றது.
 2. மற்றவர்களின் உணர்வுகளோடு கருத்துக்களும் வார்த்தைகளும் சேர்ந்து வருவதால் கற்றல், அறிதல், புரிதல் ஆகிய நிகழ்வுகள் உணர்வுமயமாக நடைபெறுகின்றன.
 3. மற்றவர்களுடைய உணர்வுகளோடு கேட்பவர்களின் உணர்வுகள் சங்கமமாகும் நிலை உருவாகி மனித நேயத்திற்கான வித்துக்கள் விதைக்கப்படுகின்றன.
 4. மற்றவர்களுடைய கருத்துக்களோடு உள்ளடங்கி அவர்கள் அனுபவங்கள் வெளிப்படுவதால் நம்முடைய கற்றல் ‘அனுபவ பூர்வமான கற்றலாக உருவாகின்றது.

மொழிக்கல்வியில் கேட்கும் திறன் மிகவும் தேவையானதாகக் கருதப்படுகின்றது. மூளை நரம்பியல் ஆராய்ச்சியாளர்கள் குழந்தைகள் பிறந்தவுடன் அவர்களுடைய தாய்மார்கள் தொடர்ந்து குழந்தைகளுடன் பேசிக்கொண்டிருக்க வேண்டும் என்ற கருத்தை ஆணித்தரமாக உணர்த்தியுள்ளனர். இந்தச் செயல் நிகழும்போது

 1. தாய்க்கும் சேய்க்கும் நடக்கும் உறவாடலால் அன்புப் பிணைப்புக்கள் உருவாகின்றன.
 2. தாயின் முகம் மற்றும் உதட்டு அசைவுகள் குழந்தைகளின் பார்வையில் படும் பொழுது மூளையில் உள்ள கண்ணாடி நியூரோன்களால் அறியப்பட்டு பின் மொழி வழக்கங்களை உருவாக்குவதற்குத் துணையாக இருக்கின்றன.
 3. இதனால் மொழி உச்சரிப்புக்கள். மொழி வளம், மொழி வழக்குகள் ஆகியவை எளிதாக அறியப்பட்டு வழக்கத்திற்கு வருகின்றன.
 4. கேட்கும் செயலை தூண்டுவிடும் பொழுது குழந்தைகளின் எதிர்பார்ப்புகள், ஆர்வங்கள், பதில் கொடுக்கும் திறன்கள் மேம்படுகின்றன.

பிற்காலத்தில் இந்தப் பழக்கங்கள் முழுமைப்பட்டு மொழித்திறன்களும் மொழிவளமும் வாழ்க்கையில் சிறப்பாகப் பிரதிபலிக்கின்றன.

வளரும் நேரங்களில், நாம் குழந்தைகளை தொலைக்காட்சி செய்திகளை கேட்காத தூண்டும் பொழுது இந்த கேட்கும் வளம் மேளம் சிறப்படைகின்றது.

கேட்கும் திறனை வளர்ப்பதில் பள்ளிகளில் “கதை சொல்லும் கலை” ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒரு கதையை உணர்வுபூர்வமாக, அந்தக் கதையின் இயற்கை சூழ்நிலைகளுக்குத் தகுந்தமாதிரி சொல்லும் பொழுது மூளையின் கறபனைத் திறன், சிந்தனைத் திறன், உருவகிக்கும் திறன் போன்ற பல திறன்கள் வளப்படுகின்றன. அந்தக்கதைகளின் கருத்துக்களைத் தன்னடக்கி குழந்தைகள் அந்தக் கதாபாத்திரங்களுடன் ஒன்றாகி விடும் நிலை ஏற்படுகின்றது. இதனால் பல நேரங்களில் அவர்களுடைய உணர்வு நிலைகள் பதப்பட்டு செம்மையாகி மனித உறவுகளையும் மனித நேயத்தையும் பலப்படுத்துகின்றன.

கேட்கும் திறன் மனிதர்களுடைய உணர்வுகளோடு எளிதாக உறவாடுவதால்தான் பல சிறந்த பேச்சாளர்கள் தங்களுடைய உணர்வுபூர்வமான பேச்சுக்கள் மூலம் ஒரு சமுதாயத்தின் தலையெழுத்தையே மாற்றி அமைக்கின்றார்கள். சரித்திரத்தில் இதற்கான பல சான்றுகள் நமக்கு கிடைக்கின்றன.

சுவாமி விவேகானந்தரின் சிக்காகோ பேச்சைக் கேட்ட உலக  மக்களின் நெஞ்சம் மதங்களுக்கு அப்பால் மனித நேயத்தைக் கண்டது.  மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் பேச்சு ஒரு சமுதாயத்தின் விடுதலைக்கு வழிவகுத்தது. இந்திய துணைக் கண்டத்தின் சுதந்திரப்போராட்டத்தில் பல மேதைகளின் அறிவாளிகளின் பேச்சுக்களைக் கேட்ட மக்கள் ஒரு போராட்டத்துக்கு தங்களை அற்பணித்தனர்.

கேட்கும் திறன் சந்தர்ப்பங்களுக்குத் தகுந்தவாறு மாற்றங்களைக் காண்கின்றது.

உதாரணமாக

 1. ஒருவரின் வெற்றி அல்லது துயரக்கதைகளைக் கெடுக்கும் செயல்
 2. ஒருவரின் முயற்ச்சி, ஈடுபாடு அண்ட் போராட்டங்களை பற்றி அறியும் செயல்
 3. ஒருவரிடம் யதார்த்தமாக உலக நடப்களைப் பற்றி உறைந்த=யாடுதல்
 4. ஒருவருடைய சொற்பொழிவுகளைக் கேட்டல்
 5. ஒரு சிலரின் கருத்தாமிக்க உரையாடல் மற்றும் கருத்துப் போராட்டங்களைக் கேட்டல்
 6. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆசிரியர்கள் கொடுக்கும் விளக்கங்களைக் கேட்டல்

இதுபோன்ற மற்ற பல கற்கும் திறன்களில் கேட்டலின்  ஆதிக்கத்தையும் தாக்கத்தையும் நாம் காணும் பொழுது பேசுபவர்களுடைய திறன் எப்படி இருக்கவேண்டும் என்று கேள்வியும் எழுகின்றது. தொடர்ந்து காண்போம்.

(தொடரும் )

Share

About the Author

க. பாலசுப்பிரமணியன்

has written 384 stories on this site.

க. பாலசுப்ரமணியன், முன்னாள் இயக்குனர் (கல்வி). மத்திய இடைநிலைக் கல்விக் கழகம், டில்லி ஆர்வம்: இலக்கியம், கவிதை, கல்வி, உளவியல், மனித வள மேம்பாடு கல்வி பற்றிய இவருடைய பல கட்டுரைகளும் புத்தகங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

Write a Comment [மறுமொழி இடவும்]


three − 2 =


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.