நலம் .. நலமறிய ஆவல் (55)

நிர்மலா ராகவன்

நலம்-1-1-1-1-1

வாழ்க்கை எனும் பாதை

திருமணமான பத்து வருடங்களில் மகிழ்ச்சியாக இருந்ததாகவே ரத்னாவிற்கு நினைவில்லை.

சர்வாதிகாரியான மாமனார், `இது என் ராஜ்யம்!’ என்பதுபோல் அவளை சமையலறைப்பக்கமே விடாத மாமியார், வாயில்லாப்பூச்சியான கணவன் — இவர்களைப் பொறுத்துப் போக வேண்டிய கடமை.

தனிக்குடித்தனம் போகலாம் என்றாலோ, `பெரியவர்களை விட்டுவிட்டு உனக்கென்னடி வாழ்வு!’ என்று பிறந்தவீட்டினர் பழிப்பார்களே என்ற தீராத பயம்.
தன் விருப்பப்படி எதுவும் செய்ய முடியாது, தலையாட்டி பொம்மையாக இருந்த நிலையில், தன் பொறுமையைத் தானே பாராட்டிக்கொண்டு இருக்கதான் முடிந்தது ரத்னாவால்.

கிட்டத்தட்ட ரத்னாவைப்போன்ற மணவாழ்க்கைதான் வாணிக்கும் அமைந்தது. `பிறர் என்ன சொல்வார்களோ!’ என்று பயந்து பயந்தே பொறுத்துப்போனால் உடலுடன் மனநிலையும் கெடும் அபாயம் இருப்பதை உணர்ந்தாள்.

தாயின் ஏச்சுப்பேச்சுகளை எதிர்பேச்சின்றி பொறுத்துப்போன சாதுவான கணவரை எப்படி நல்வழிக்குக் கொண்டுவருவது என்று யோசித்தாள். ஓர் உபாயம்தான் தென்பட்டது. தொலைவில் ஒரு உத்தியோகம் தேடிக்கொண்டு, அதைச் சாக்காக வைத்து தனிக்குடித்தனம் போனாள்.

`நீங்கள்தானே இந்தக் குடும்பத்தின் தலைவர்!’ என்று அவள் அடிக்கடி கூற, கணவரும் தன்னம்பிக்கையுடன் செயல்பட ஆரம்பித்தார். தன் நன்றியைக் காட்டும் விதமாக மனைவியின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டினார்.

“ஹூம்! சில பேருக்கு வாழ்க்கை இப்படி அமைஞ்சுடறது!” வாணியைப் பார்த்துப் பொருமினாள் ரத்னா.

`பிறர் என்ன சொல்லிவிடுவார்களோ!’ என்று அஞ்சியே தன் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள எந்தவித முயற்சியும் எடுக்காதவள் அவள். தான் இப்படி வாழ்க்கையுடன் போராடும்போது எந்த உறவினரும் தன்னுடன் சேர்ந்து துயரப்படவில்லையே என்ற வருத்தம்தான் அவளுக்கு மிஞ்சியது.

வாழ்க்கைப்பாதையைக் கடந்துதான் ஆகவேண்டும் — அது எவ்வளவு நிரடலாக இருந்தாலும்.

`எப்படி நம் வாழ்க்கைப் பாதையை மாற்றலாம் என்று புரியவில்லையே!’ என்று குழம்புகிறவர்களுக்கு சீனத் தத்துவ ஞானி ஒருவர் என்றோ அறிவுரை கூறி வைத்திருக்கிறார்: `ஆயிரம் மைல்களைக் கடக்க வேண்டுமானாலும் ஒவ்வொரு அடியாகத்தான் நடக்க வேண்டும்!’ மாறுதலே இல்லாது ஒரே இடத்தில் நிற்க மனிதன் என்ன, தாவரமா!

புதிய பாதையா, ஐயோ!

புதிதான பாதையைத் தேர்ந்தெடுக்கும்போது, அச்சமாகத்தான் இருக்கும். நிறைய வலிகளையும் சந்திக்க நேரிடலாம். இதற்கெல்லாம் பயந்தே பலரும் எவ்வளவு கடினமான வாழ்க்கையையும் மாற்றத் துணியாது, `என் தலைவிதி அவ்வளவுதான்!’ என்று பேசியே காலத்தைக் கடத்துகின்றனர். ஆனால், அது ஆறுதல் அளிக்குமா?

கடந்த காலத் துயரைப்பற்றிப் பேசினால், அது நடந்தபோது இருந்த அதே பாதிப்பை ஏற்படுத்தி, ஒருவரை பலகீனராக ஆக்கும்.

இன்றைய பயணம் செம்மையாக இருக்க வேண்டுமானால் நேற்றைய பயணத்தையே நினைத்து வருந்திக்கொண்டிருப்பது சரியல்ல. அதிலிருந்து ஏதாவது கற்க முடிந்தால் அப்பாடத்தை மட்டும் கற்றுக்கொண்டு, விட்டுவிட வேண்டியதுதான். நடந்து முடிந்தவைகளை மாற்றவா முடியும்!

பலர் தமக்குப் பிடித்ததை செய்ய முயன்று, ஆரம்பித்தில் தோல்வியோ, அல்லது கேலியோ எதிர்ப்பட்டால் செய்ய முயன்றதை அரைகுறையாக விட்டுவிடுவார்கள். அப்படி நாம் வெற்றி காண்பதைப் பொறுக்காதவர்களை அலட்சியம் செய்ய வேண்டியதுதான்.

கதை

சுமார் இருபது வயதாக இருந்தபோது, எனக்கு எழுத்துலகில் பத்து வருட அனுபவம். பிரமிக்க வேண்டாம். எதையும் பிரசுரத்திற்கு அனுப்பியதில்லை. என் படைப்புகளின் தரக்குறைவு எனக்கே தெரிந்திருந்ததுதான் காரணம். `உருப்படியாக ஏதாவது செய்யேன்!’ என்று தாய் கெஞ்சினார். (திட்டினாலோ, மிரட்டினாலோ நான் மசியமாட்டேன் என்று அவர் அறிந்ததுதானே!) `இவள் ஒரு போர்!’ என்று பழித்தார்கள் பிறர். நானோ ஓயாமல் படிப்பேன், இல்லையேல் எழுதுவேன்.

நான் தொடர்ச்சியாக கதைகள் எழுத ஆரம்பித்ததும், புதிய விஷயங்களைப்பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வம் வந்ததது. புதிய இடங்களுக்குப் பயணித்தேன். நிறையத் திண்டாட்டம். இருந்தாலும், வாழ்க்கையைப்பற்றி சிறிது புரிந்தது. தமிழிலும் ஆங்கிலத்திலும் பலவிதப் புத்தகங்களைப் படித்தேன். பலரைப் பேட்டி கண்டேன். அவர்களுள் நோய் முற்றிய நிலையிருந்த பெருநோயாளிகள், வீட்டைவிட்டு ஓடி வந்த இளம்பெண்கள், குண்டர் கும்பலிலிருந்து விலகிய இளைஞர்கள், உடல்வதைக்கு ஆளான மனைவிகள் என்று பலதரப்பட்டவர்களும் அடக்கம்.

இதையெல்லாம் விரிவாக ஒரு உரையின்போது கூற, “எழுத நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கீங்க!” என்று வியந்தார் ஒருவர்.

கஷ்டமா! நான் அவைகளை அனுபவம் என்றுதான் எடுத்துக்கொண்டேன்.

விஷயங்களைத் தேடுவதே சுவாரசியமாக இருந்தது. என்று, எவ்வாறு எழுதப்போகிறோம் என்றெல்லாம் அப்போது யோசிக்கத் தோன்றவில்லை. மனிதர்களையும் வெவ்வேறு விதமான வாழ்க்கையையும் புரிந்துகொள்வதே கலக்கத்தையும் வியப்பையும் ஒருங்கே உண்டாக்கியது.

வெற்றி காண நீண்ட பயணம் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.

எழுத ஆரம்பித்த காலத்தில், என்னைப் பரிகசித்து, என் நம்பிக்கையைக் குலைக்க சிலர் முயன்றவர்களுக்கு நான் பயணிக்க விரும்பிய பாதையைப்பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை என்பது வேறு விஷயம்.

அன்று பிறரது பரிகசிப்பு என்னைத் துளியும் பாதிக்கவில்லை. சவாலாக எடுத்துக்கொண்டேன். இப்போது புகழ்ச்சியும் என்னைப் பாதிக்க விடுவதில்லை.

கற்பனையும் நிதரிசனமும்

`நம் வாழ்க்கை இப்படித்தான் இருக்க வேண்டும்!’ என்று தீர்மானித்துக்கொண்டால் அது நடக்கிற சமாசாரமா?

இளைஞர்கள் திரைப்படங்களிலும் புதினங்களிலும் வரும் காதல் மற்றும் மணவாழ்க்கையைப் பார்த்துவிட்டு, சொந்த வாழ்க்கையிலும் அதையே எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.

வெளிநாடு போய் சம்பாதித்தால், லட்சாதிபதியாக சொந்தநாடு திரும்பலாம் என்று மனப்பால் குடிக்கும் தொழிலாளிகளுக்கும் இதே நிலைதான்.

உற்றவர்களைவிட்டுத் தனிமையுடன் போராடியபடி வாழவேண்டிய கட்டாயம், நினைத்தபடி பணம் சேமிக்க இயலவில்லையே என்ற ஏமாற்றம் — இப்படி அவர்கள் எதிர்பாராத பல தோல்விகள். இவற்றைப் பெரிதாக எண்ணாது, கருமத்திலேயே கண்ணாக இருப்பவர்கள்தாம் வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள்.

கதை

கோலாலம்பூரில் சாப்பாட்டுக்கடை ஒன்றில் பரிசாரகராகப் பணியாற்ற பங்களாதேஷி ஒருவர் வந்திருந்தார். தன் நாட்டில் புதுமனைவியை விட்டு வந்திருந்ததாக என்னிடம் தெரிவித்தார். ஒரு வருடம் கழித்து, தனக்கு ஒரு மகன் பிறந்திருப்பதாகச் சொன்னவர், என்னுடன் வந்திருந்த என் பேரனுக்கும் அதே நான்கு மாதங்கள்தாம் என்று கேட்டு, `நான் தூக்கிக்கொள்கிறேனே!’ என்று கெஞ்சலாகக் கேட்டார்.

குழந்தையுடன் உள்ளே போனவர் விசித்து விசித்து அழுவதைப் பார்த்தோம். பரிதாபமாக இருந்தது. குழந்தையின் கையில் ஐந்து ரிங்கிட் நோட்டைத் திணித்திருந்தார்! அவருக்கு அது பெரிய தொகை. தடுத்துப்பார்த்தோம். `ஏன்?’ என்றவருக்குத் திரும்ப அழுகை வந்துவிட்டது. அதற்கு மேலும் மறுத்துப் பேச முடியவில்லை.

அண்மையில், அவருடைய பிள்ளைகள் பெரிய படிப்பு படிப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அவருடைய உண்மையான உழைப்பால் மற்ற ஆட்களுக்கு மேலதிகாரியாக ஆகியிருந்தார். `இது ஃப்ரீ!’ என்று என் பேரனுக்குப் பிரத்தியேகமாக குலாப்ஜாமூன் கொண்டு வைக்கும் அளவுக்கு அவருக்குச் சுதந்திரம் அளித்திருந்தார்கள்.

சொந்த நாட்டுக்குத் திரும்பிச் சென்று, நட்சத்திர ஹோட்டல் திறக்குமளவுக்கு அவரிடம் சொத்து சேராதிருக்கலாம். ஆனால், `வாழ்க்கை என்றால் மேடு பள்ளங்கள் இருக்கத்தானே செய்யும்!’ என்று புரிந்து, கடினமான வாழ்க்கையால் மனம் தளராது, அதை அனுபவித்து ஏற்று, வெற்றி கண்டவர் அவர்.

தொடருவோம்

Share

About the Author

நிர்மலா ராகவன்

has written 222 stories on this site.

எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா. இவருடைய அனைத்து உளவியல் கட்டுரைகளையும் மின்னூலில் வாசிக்க : http://freetamilebooks.com/ebooks/unnai-nee-arinthal/

Write a Comment [மறுமொழி இடவும்]


+ 2 = ten


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.