படக்கவிதைப் போட்டி – (111)

பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

18197440_1308734599180736_1596496701_n

71516183@N03_rவெண்ணிலா பாலாஜி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (13.05.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையுமபெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

editor

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

Facebook Twitter Flickr 

Share

About the Author

editor

has written 1214 stories on this site.

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

30 Comments on “படக்கவிதைப் போட்டி – (111)”

 • Gokula Krishnan Bhojan wrote on 8 May, 2017, 15:25

  ஒ(வ)லி

  கொலுசே…
  மெதுவாய் சப்தமிடு.

  என்னவளின்
  மென் பாதங்களுக்கு
  வலித்துவிடப்போகிறது!!!

 • தேனம்மை லக்ஷ்மணன்
  ThenammaiLakshmanan wrote on 8 May, 2017, 16:57

  ஒத்த மிஞ்சி கொடுத்தேண்டி
  தங்கமே தங்கம்

  அது ஒண்ணுக்கு மூணா மின்னுவதென்ன
  தங்கமே தங்கம்

  ஒத்த மிஞ்சி நீ கொடுத்தே
  மச்சானே மச்சான்
  அது ஒன் பிரியம் போலப் பெருகிப் போச்சு
  மச்சானே மச்சான்

 • SANKARAKUMAR wrote on 8 May, 2017, 18:19

  பாட எத்தனிக்கும் புதுவை

  பா. சங்கரகுமார்

 • மோகனசுந்தரம் wrote on 8 May, 2017, 19:29

  போட்டி அறிவிப்பு

  பொதுவெளி விரிப்பு

  நானும் முனைந்தேன்

  ஒரு வெண்பா!

  உன்..

  காலடி கண்டதும்

  நாலடி தோற்றது

  எப்படி

  வெல்லும்

  இங்கென் பா!

 • த.மோகனசுந்தரம் wrote on 8 May, 2017, 19:33

  அழகுதான்

  அவளுக்கு மிஞ்சி!

  ஆயினும்

  அளவுக்கு மிஞ்சி!

 • SANKARAKUMAR wrote on 8 May, 2017, 22:01

  தலைப்பு : அழகு கால்கள் நோகலாகுமோ ?

  ஒய்யார சாயலில் ஒரு கால்
  நர்த்தனைமாட எத்தனிக்க
  சலங்கைக் கால் பளபளக்க
  பாறை விளிம்பு பயமுறுத்த
  ஆடவா வேண்டாமா என தவிக்க
  தங்க தாரகையே !
  நீ சிலிர்க்க
  உன் கால்களும் கவி பாடுதே !

  பா. சங்கரகுமார்

 • Soms erode wrote on 8 May, 2017, 22:38

  ….. வலியின் ஒளி…..
  பிறர் பாதணி விட்டுசென்ற
  முனையிலா முள்ளோ
  கல்லோ கற்கண்டோ
  போதை வடிந்த
  கோப்பை உடைந்த
  ஆடித்துகளோ
  வைத்த அடி வைக்காமல்
  உன் பாதம் தொக்கிடவே
  வலியூட்டிய
  வழியது யாதோ….!!!

 • Sugamathi wrote on 9 May, 2017, 2:42

  பொன்னென்று
  மகிழ்ந்து
  அதன் அழகின் நீட்சியில்
  தன்னை தொலைத்து
  இசையின் துளிகளில்
  இன்பமுற்று
  சந்ததிகளை வார்த்தெடுத்தவள்
  தனக்குள் தானே
  புதையுண்டு போனதை
  என்றேனும் உணர்ந்திடுவளா
  பொன்னெல்லாம்
  பூவிலங்குதான் என்று

 • பழ.செல்வமாணிக்கம் wrote on 9 May, 2017, 12:21

  உயிர்த்தெழுதல் கல்லில் ராமன் பாதம் பட்டதும்
  அகலிகை உயிர்த்தெழுந்தார்!
  பெண்ணே இன்று உன் பாதம்
  கல்லில் பட்டால்!
  எத்தனை ஆண்கள் உயிர்த்தெழுவாரோ !

 • இரத்தனசாமி wrote on 9 May, 2017, 13:27

  மெல்லியலாள் கிரீடம்தனை மகிழ்வாக
  மென்பாதம் சூடியதோ மெட்டியென
  வெண்கொலுசும் சிணுங்கியதோ வெட்கமுடன்
  தன்நா மணியோசைத் தாளத்துடன்!

 • பா. சங்கரகுமார் wrote on 9 May, 2017, 17:37

  பாறையில் பதமான பாதம்

  பாதமோ பாறை ஓரம்
  ஒரு கொலுசில் நாதம்
  சந்தம் அதில் சாந்தம்
  இயல்பான நம் பெண்மை
  இளம் பாதம் நோகுமே
  மேக மூட்டம் கலைந்து
  மழைதனை பொழியுமோ ?

 • Sathya Asokan wrote on 9 May, 2017, 18:59

  வெள்ளி கொலுசொலிக்க
  வீதியுலா வருகையிலே
  பார்த்திருந்த நான்
  பைத்தியமாகி போனேன்
  தாலிக்கயிறுடன் தவமிருக்கும் வேளையிலே
  மெட்டியுடன் வந்து
  எட்டி உதைத்தவளே!!

  கோடை வெயிலிது
  கொடுமையாய் சுடுகையிலே
  பாறையிலே நடக்கிறியே
  பாத அணி இல்லாம
  பாதகத்தி நீ எனக்கு
  இல்லையின்னு போனபின்னும்
  பாழும் மனசடக்க வழி ஒன்னு சொல்லிப்போ!!

  சத்யா அசோகன்
  புது தில்லி

 • Perumal Achi wrote on 9 May, 2017, 22:09

  கால் ஆபரணங்களென்பார்..
  கலியுக மங்கைகள்..
  கால் விலங்குகளென்பார்
  புரட்டி பேசுவோர்..
  கணவனுக்காய் அணிந்தாயோ..
  கள்வனைக் களைய அணிந்தாயோ.!
  பாதம் நோகாமல் நடக்கப்பழகிய கால்களும் பரிதவிக்கின்றன
  பதம் பார்க்கும் மெட்டிகளால்.
  உச்சி முதல் பாதம் வரை
  பூட்டிப் பார்ப்பதிலேயே
  பழைமை காண்கின்றனர்
  கருப்பை வளர்ச்சிக்கு நல்லதென்பார்
  அறிவியலையும் இணை சேர்ப்பர் இச்செயலுக்கு
  கரை சேர்ந்த கடைசி நிலையிலும் கழட்டிட அனுமதியார்..
  மண அடையாளமாய்
  மாட்டப்படும் இவ்வளையம் விலக்கப்படுவதோ மணவாளனின் மரணத்திற்குப் பின்பு..
  அதுவரை பூட்டியே இரு
  அழுத்தம் விரல்களின் நோவுகளாவது
  அடையாளமாகட்டும்
  உன் அடிமை வாழ்விற்கு.!

 • rathi rajesh wrote on 10 May, 2017, 6:46

  படிதாண்டிய அவள்,
  பாதைகள் இல்லா
  நடை பயணங்களில்
  தேடியலைகின்றாள்…

  மெட்டியிட்ட மெல்லடியை
  சுடு மணல் தகிக்க,
  முன்னோடும் அவள்,
  தன் நிழல் மிதித்து
  சூடாற்றும் வகையறியாது…

  காலடியில் நழுவிய
  சாலைகளில்…..
  ஏதோ ஒரு கணத்தில் ,
  ஒரு சிறு திட்டில் ,
  கால் ஊன்றி நிற்கும் ஆசை
  அவளுக்கு பேரோசையாகிறது!!

 • Manju Viswanathan wrote on 10 May, 2017, 17:45

  இளைப்பாறல்

  பிறந்ததிலிருந்து
  கொலுசணிந்த பாதங்களில்
  இன்றிலிருந்து புதிதாய்
  விரல்களில் மெட்டியும்..
  இனி, மணவாழ்க்கையெனும்
  புதிய திசையில்
  நெடிய பயணம்
  தொடங்கும்முன்
  சற்றே இளைப்பாறுகிறேன்
  என் பால்யம் நின்றுவிட்ட
  காலத்தின் படிகளில்..

 • தனபால் பவானி wrote on 10 May, 2017, 18:32

  காலணிகள் அணியவும்
  மருதாணி பூசவும்
  அனுமதி மறுக்கப்பட்ட
  என் பாட்டிகளின் காலத்தில்
  தூக்கி எறிகிறேன் என் ஒப்பனைகளை

  நகச்சாயம் பூசியபடி
  கொலுசுகளும் மெட்டிகளும்
  ஒலிக்குமிந்த கால்களின் பின்னணியில்
  மறைந்து கிடக்கின்றன
  என் மூதாதையர்களின்
  ஏக்கங்களும் ஆசைகளும்

  என் மென் பாதங்களின்
  ரேகைகளில் இன்னும் ஊறுகின்றன
  வெடிப்புகளில் மண்துகள்கள் குடைய
  அவர்கள் வீடடைந்த உச்சிவெயிலின் வலி

  அந்தச் சூட்டின்
  கதகதப்பையும் வலியையும்
  ஒரு கணமேனும் உணரும் தருணமொன்றில்
  நான் படுத்துக்கிடப்பேன்
  என் நான்காம் தலைமுறை
  கொள்ளுப்பாட்டியின் மடியில்

  —தனபால் பவானி
  10-05-2017

 • கீதா ஷங்கர் wrote on 10 May, 2017, 19:20

  வந்த பொழுதிலிருந்தே
  பெயர்ந்து செல்லப்பார்க்கின்றாய்
  வேரறுத்து ஓடி வந்தும்
  துயர்நினைவில் தொலைகின்றாய்
  ஒன்றிற்க்கு மூன்றாய்
  விரல்களில் இட்டது…
  விரல் வழியே உன்
  விழியகளில் நுழையத்தானடி?
  சுமை இறக்கி காலாறு…
  மெட்டிப் பாதமொரு வரலாறு

 • பழ.செல்வமாணிக்கம் wrote on 10 May, 2017, 20:19

  அவளும் நானும் :
  அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து
  என்னைச் சேர்ந்த கண்மணியே !
  என்னில் படர்ந்த வஞ்சிக் கொடியே! நம் திருமணச் செய்தியைச்
  சொல்வதற்கு !
  காலில் மிஞ்சி அணிந்தாயோ!
  சிலம்பால் தொல்லை வந்ததினால்
  கொலுசை நீயும் அணிந்தாயோ !
  கொலுசை நீயும் அணிந்தாலும்!
  கற்புக்கரசி கண்ணகி தான்!
  கற்பு என்று வந்துவிட்டால்!
  ஆணுக்கும் பொதுவென்று
  நான் அறிவேன்!
  கோவலனாய் நான் வாழாமல்!
  ராமனாய் என்றும் வாழ்ந்திருப்பேன் !
  ராமனாய் நானும் வாழ்ந்தாலும்!
  அக்கினி பரிட்சை தர மாட்டேன்!
  உன் மெல்லிய பாதம் கல்லில் பட்டவுடன்!
  கல்லும் மலராய் மாறுதம்மா!
  கல்லும் மலராய் மாறியதாலே!
  எந்தன் நிலையை என்ன சொல்ல!
  ஆண் என்ற கர்வம் மறைந்ததம்மா
  அனைத்தும் பெண் என்று தெரிந்ததம்மா

 • வேங்கட ஸ்ரீநிவாசன் wrote on 11 May, 2017, 2:23

  பாதம் கூறும் பாடம்

  பெண்ணவளின் பாதத்திற்கு
  புது நகைகள் தான் கொடுத்தார்
  வெள்ளியில் மிஞ்சியென்றார்
  தங்கத்தில் சதங்கை தந்தார்

  பிஞ்சு விரல் சொடுக்கெடுத்து
  ஆலிவ் எண்ணெய் பூசி வந்தார்
  நகக்கீறுத் தனைத்தீட்டி
  நளினம் நீயென்றுரைத்தார்.

  இத்தனையும் பழக்கி அவளை
  இத்தரணி மீதினிலே
  போக6ப்பொருள் ஆக்கிவைத்து
  சுயந்தொலைத்து நிற்கவைத்தார்

  பென்னவளின் பாதமலர்
  எண்ணிலாத கதைகள் சொல்லும்
  விண்ணவரும் பெற்றிடாத
  திண்ணமதை தானியம்பும்

  சீதையவள் பாதங்களோ
  ஸ்ரீராமன் பின் சென்றும்
  பெருந்துன்பம் அடைந்ததொரு
  பெருங்காதை நினைவுறுத்தும்

  கடவுளையே பின்தொடர்ந்தும்
  காரிகையாய் பிறந்தோர்க்கு
  கட்டமது நீங்காதென்று
  திட்டமாகச் சொல்லிவிடும்

  பாஞ்சாலி பாதங்களோ
  பார்த்திபனின் கரம்பிடித்தும்
  பலதார பெண்ணென்ற
  பரிகாசம் தனையேற்கும்

  பலதாரந்தனை மணந்த
  பலராமன் உடன்பிறப்பை
  பரந்தாமன் எனப்போற்றுவதை
  பாரோர்்க்குப் பறைந்து நிற்கும்

  கண்ணகியின் காற்சிலம்பொ
  கற்புநிலைக் கற்பித்து
  கல்மனதுக் கணவனையும்
  காத்து நிற்க போதிக்கும்

  தாழ்வுற்று, வாழ்வதனைத் தானிழந்து
  பாழ்பட்டு நின்றதற்கு
  ஆடவனை விடுத்து அவள்
  ஊழ்வினையைச் சாடி நிற்கும்..

  அகலிகையின் நிலைகூறும்
  அருந்ததியைப் பார்க்கச்் சொல்லும
  நளாயினியின் ் கதைச் சொல்லி
  வேசியிடம் தூதனுப்பும்

  வேண்டா இந்நிலை விடுத்து
  தீண்டாமைத் தனைத் துறந்து
  முண்டாசு கவிஞனவன்
  கண்ட பெண்ணாய் நீ வருவாய்

  தடுமாற்றநதனை விடுத்து
  சுயமாற்றந்தனைச் செய்து
  புதுப்பாதைத்தனைக் கண்டு
  முழுவுறுவம் காட்டி நிற்பாய்!!!

 • Ela wrote on 11 May, 2017, 16:24

  என்னுடனான சில தருணங்களை,
  நீங்கள் மறக்கவில்லை,
  உங்கள் நினைவுகளை
  சுமக்கின்றன
  என் மெட்டி விரல்கள்..!!!!

 • Ela wrote on 11 May, 2017, 16:25

  உன் நினைவுகளைச் சுமக்கும்
  மெட்டி விரல்களில்,
  நித்தம் நிறைகின்றன,
  மறக்க நினைக்கும்,
  உன் நினைவுகள்…!!!

  – Ela / 11.5.17

 • Moorthi Erode wrote on 12 May, 2017, 12:00

  விரலுக்கு விலங்கிட்டு
  அவளோடு சேர்த்து
  என்னையும்
  அடைத்துக்கொண்டேன்,
  இல்லறம்
  எனும்
  சிறகுகள் கொண்ட
  சிறையில்

 • kanagu wrote on 12 May, 2017, 15:47

  அவள் கொழுசவிழ்க்கிறாள் எனில்,
  நான் ஆடைகளைந்து ஆயத்தம்
  ஆகிவிடவேண்டும் என்பது அர்த்தம்
  !.

 • செண்பக ஜெகதீசன்
  shenbaga jagatheesan wrote on 12 May, 2017, 21:51

  அத்தனையும்…

  உன்
  மௌனத்தை மொழிபெயர்த்து
  மெல்லப் பேசிடும்
  கால் கொலுசு..

  கொண்டவனை மண்டியிடவைத்து,
  கண்டவனை விலகிடச்செய்யும்
  மிஞ்சி-
  கொஞ்சம் கூடுதலாய்..

  பஞ்சின் மெல்லடி காட்டும்
  பாத அழகு..

  அழகுக் குலமகளே,
  அசையாதே
  அப்படியே நில்,
  அத்தனை அழகும்
  அடங்கின உன் காலடியில்…!

  -செண்பக ஜெகதீசன்…

 • ரா. பார்த்த சாரதி
  R.Parthasarathy wrote on 12 May, 2017, 22:43

  மணமகள் கொலுசின் ஓசையே இனிமை

  மெட்டி ஒலியே அவள் வருவதன் அடையாளம்

  கொலுசின் இன்னிசையே கணவனுக்கு இனிமையூட்டும்,

  மெட்டி ஒலியே அவன் நெஞ்சத்திற்கு மகிழ்வூட்டும் !

  ஏழு முறை வலம் வந்து மெட்டி அணிவித்தேன்

  அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து மெட்டி அணிவித்தேன்

  சதாப்தி என்பது திருமண வைபவத்தில் ஒன்று

  மணமக்களுக்கு, மெட்டி அணிவிப்பது வழக்கத்தில் ஒன்று !

  கொலுசு அணிந்து உன் வரவை தெரிவித்தாய்

  சதங்கை அணிந்து பரத நாட்டியம் ஆடினாய்

  மணமானவள் என்பதை தெரிவிப்பது கொலுசும், மெட்டியே

  திருமணச் சடங்கில் இவை எல்லாம் ஒரு பகுதியே !

  ஜல், ஜல் எனும் சலங்கை ஒலி என் மனதை பந்தாடுதே

  மெட்டி ஒலியுடன் என்னருகில் வரும்போது நெகிழுதே

  இவ்விரு ஓசையும் என் நெஞ்சத்தை கிள்ளுதே

  நான் நோக்கும்போது உன் கால்கள் கோலமிடுத்தே !

 • ஷக்திப்ரபா wrote on 13 May, 2017, 12:57

  அடையாளங்கள்
  _______________

  மனமொத்த மணவாழ்க்கையின்
  மொத்த அடையாளத்தை
  மென்பாதங்கள் நோக
  தனியொருத்தியாய் ஏனடி பாரம் சுமக்கிறாய்?
  மெட்டியிரண்டை புருஷனுக்குப் பகிர்ந்து..
  கொலுசு குலுங்க,
  பழந்தமிழ் பண் பாடு.
  சற்றே இலகுவாகி
  இளைப்பாறிக்கொள்..
  உன் தனித்துவத்தையும்
  சேர்த்தணியப் பழகிக்கொள்.

 • ஷக்திப்ரபா wrote on 13 May, 2017, 13:03

  அளவோடு மிஞ்சினால் அம்ருதம்
  _____________________

  பெண்மையின் அடையாளம்
  நளினத்தின் நகை வடிவம்
  நடனத்தின் நாடி
  மங்கலச் சின்னம்
  ஆடவரை ஆட்டுவிக்கும் நட்டுவாங்கம்…

  ஆயிரம் காரணம் இருப்பினும்
  இவர் சொன்னார்
  அவர் தந்தாரென
  விரலுக்கு ஒன்றாய்
  மாட்டிக்கொண்டு விழிக்காதே.
  இதுவே பெண்ணின்
  எல்லையென அடங்காதே.

  சிக்கென அழகாய்
  ஒற்றை விரலில்
  பாங்காய் அணிந்து
  டக்கென தாவிக் குதிக்கும்
  சுதந்திரமும் ஒப்பிலா அழகு.
  அளவான அழகும் அளவிலா அழகே.

 • சே தண்டபாணி தென்றல் wrote on 13 May, 2017, 17:40

  என்
  காதுக்கு இசை
  முடிச்சு போட்டது
  உன் கொலுசு

 • பழ.செல்வமாணிக்கம் wrote on 13 May, 2017, 22:51

  காதல் விமோசனம் :
  என் உயிர நீ பறிச்சு உன்னோடு சேத்தவளே, தங்கமே தங்கம்!
  நான் கொடுத்த கொலுசை நல்லாத்தான் மாட்டிக்கிட்ட தங்கமே தங்கம்!
  கொலுசு நெறம் கூட இன்னும் மாறலையே
  தங்கமே தங்கம்!
  தாலி தாங்கி வந்ததென்ன தங்கமே தங்கம்!
  என்ன தடுமாற வச்சதென்ன தங்கமே தங்கம்!
  நாம பேசிச் சிரிச்சதெல்லாம் தங்கமே தங்கம்!
  ஆத்தங்கரை சாச்சி சொல்லும் தங்கமே தங்கம்!
  மெட்டி மாட்டி வந்ததென்ன தங்கமே தங்கம்!
  நீ தடம் மாறிப் போனதென்ன தங்கமே தங்கம் !
  ஏழு சென்ம சொந்தமுன்னு சொன்னியே நீ
  தங்கமே தங்கம்!
  என்ன ஏமாத்தி போனதென்ன தங்கமே தங்கம்!
  என் நெஞ்சுக்குள்ள ஒன்ன வச்சேன் தங்கமே தங்கம்!
  என்ன அழ வச்சுப் போனதென்ன தங்கமே தங்கம்!
  என் கண்ணுக்குள்ள ஒன்ன வச்சேன் தங்கமே தங்கம்!
  என்ன குருடாக்கி போனதென்ன தங்கமே தங்கம்!
  ஆண்கள் காதலெல்லாம் தங்கமே தங்கம்!
  கல்லில் எழுத்தாகும் தங்கமே தங்கம்!
  ஆயுசுக்கும் கூட வரும் தங்கமே தங்கம்!
  பெண்கள் காதலெல்லாம் தங்கமே தங்கம்!
  தண்ணீரில் எழுத்தாகும் தங்கமே தங்கம்!
  பெற்றவரின் சொல் கேட்டு தங்கமே தங்கம்!
  என்னை பித்தனாக்கி அலையவிட்டாய்
  தங்கமே தங்கம்!
  காதலிலே தோற்றதினால் தங்கமே தங்கம்!
  கல்லாகிப் போனேனே தங்கமே தங்கம்!
  உன் கால் பட்டால் என் மேலே தங்கமே தங்கம்!
  மீண்டும் உயிர்த்தெழுவேன் தங்கமே தங்கம்!

 • பெருவை பார்த்தசாரதி
  பெருவை பார்த்தசாரதி wrote on 13 May, 2017, 23:28

  கொலுசும் மெட்டியும்
  ====================

  கொலுசு
  ========

  ஒருத்தி வருகையை
  —ஒலியெழுப்பி அறிவிக்கும்
  நரம்பைமுறுக்கி நங்கையிளரத்த
  —நாளத்தைச் சீர்செய்யும்..!

  கொஞ்சுதற்கும் காதலர்கள்..
  —கூடுதற்கும் இடையே
  எச்சரிக்கும்…சைகையாக
  —சிறுமணியின் இசைகேட்கும்..!

  பகலில் பாவையோடு
  —பழகிவந்தால். . “நீகொலுசு”..!
  இரவில்பய ஒலியெழுப்பி
  —இன்னல்செய்யின். . “நீபிசாசு”..!

  மெட்டி
  ======

  ஆயரின் கால்விரல்
  —அனைத்துமணி செய்யும்..!
  கயவரின் கண்படுமுன்
  —காட்டிக் கொடுக்கும்..!

  தாலியுடன் மெட்டியும்
  —வேலிபோல கற்பைக்
  கட்டிக்காக்கு மதுவுன்
  —கருப்பைவளம் பெருக்கும்..!

  அழகுக்கு அழகுசேர்க்கும்
  —அணிகலனே மெட்டியாகுமது
  மரபினால் மங்கையர்கோர்
  —முக்கியதொரு சடங்காகும்..!

  மெட்டியும் கொலுசும்
  =====================

  கட்டிய கணவனுக்கு
  —கிட்டாத தொடுவுறவை
  மெட்டியும் கொலுசும்
  —தட்டிப்பறித்து கேலிசெய்யும்..!

  பொன்னும்மணியும் கழுத்தில்
  —மின்னும் பெண்ணிற்கு
  கணுக்காலும் கால்விரலும்
  —உன்னழகால் மெருகேறும்..!

  சிலம்பை ஒடித்த
  —கண்ணகியின் சாபமோ..?
  சிலர் கால்களிலின்று
  —சிலம்பைக் காணோம்..?

  மெட்டி அணிவதெல்லாம்
  —மட்டமென ஆனதோ..?
  மாதர்தம் விரலினின்று
  —மெட்டியைக் காணோம்..?

  கலாச்சாரமோகத்தில் கன்னியர்கள்
  —கழட்டியெறியும் அணிகலனில்
  கணுக்காலும் கால்விரலும்
  —இன்னுமனுமதி தரவில்லையோ ..?

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.