திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள்  (8)

க. பாலசுப்பிரமணியன்

பொருளின் நிலையாமை

திருமூலர்-1

ஆசை இல்லாத மனிதனே இல்லை. சில நேரங்களில் ஆசை மனிதனுக்கு வாழும் சக்தியை கொடுக்கிறது. வாழ்வில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு ஒரு ஊன்றுகோலாக இருக்கிறது.. சில நேரங்களில் மனிதனுடைய வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை வடிப்பதற்குத் துணையாக இருக்கிறது. ஆனால் அதே ஆசை பேராசையாக மாறும் பொழுதில் அவனுடைய அழிவுக்கு முன்னுரையாகவும் விளங்குகிறது.

தனக்கு எவ்வளவு வேண்டும் என்று இறைவனிடம் வேண்டும் கபீர்தாசர் இறைவா நானும் பசியோடு இருக்கக்கூடாது. இந்த சமூகத்தில் உன்னுடைய அடியார்களும் பசியோடு இருக்கக்கூடாது. அந்த அளவுக்கு நீ தந்தால்  போதும். என்கிறார்.

நாம் எவ்வளவு சேர்த்தாலும், அத்தனை சொத்துக்களையும் இங்கேயே விட்டுவிட்டுச் செல்ல வேண்டும். பட்டினத்தார் சொல்லியது போல் “காதறுந்த ஊசியும் கடை வழி வாராதே ‘ என்பதை உணர வேண்டும். நிரந்தரம் நிரந்தரமாக இருக்கும்போது, வழிப்போக்கர்களாக வந்து போகும் நாம் ஏனோ இதை உணர்வதில்லை. இறக்கும் தருவாயிலும் இன்னும் எவ்வளவு நமக்கு கிடைக்கும் என்றே யோசித்துக் கொண்டிருக்கின்றோம். இந்த மாயையிலிருந்து விடுபட திருமூலர் சொல்வது என்ன?

அருளும் அரசனும்  ஆனையும் தேறும்

பொருளும் பிறர் கொள்ளப்போவதன் முன்

தெருளும் உயிரோடுஞ் செல்வனைச்  சேரின்

மருளும் பினையவன்  மாதவ மன்றே

மற்றவர்கள் நம் பதவியையும் பொருள்களையும், யானையும் தேரையும் பரித்துக்கொள்ளும் முன்னரே நாம் இறைவனிடம் சரணடைந்து விட்டால் எதற்கும் கவலை கொள்ளத்தேவையில்லை. ஆகவே ஒரு பற்றற்ற வாழ்வை வாழ கற்றுக்கொள்ளவேண்டும் என அழகாக எடுத்துரைக்கின்றார்.

இந்த உடலிலிருந்து உயிர் பிரிந்த பின்னும் இந்தப் பொருளால் என்ன நிலை ஏற்படுகின்றது?

வாழ்வும் மனைவியும் மக்கள் உடன்பிறந்

தாரு மளவே  தெமக்கென்பர்

என்று எடுத்துரைக்கும் திருமூலர் நம் மனைவி மக்களும் மற்றவரும் உற்றவரும் இவர் நமக்கு இவ்வளவுதான் விட்டுச் சென்றிருக்கிறாரா?” என்பர்  -எனக்கூறி வாழ்வின் உண்மை நிலையை  நமக்கு படம் பிடித்துக் காட்டுகின்றார்.

நாம்  சேர்த்த செல்வம் மற்றவருக்கு திருப்தி அளிக்காவிட்டால் நம்முடன் கூடவாவது வருகின்றதோ? இதே கேள்வியை பட்டினத்தார் எப்படி எழுப்புகின்றார்?

மாணிக்க முத்து வயிரப் பணிபூண்டு

ஆணிப்பொன் சிங்கா தனத்தி லிருந்தாலும்

காணித்  துடலை நமன் காட்டியே கைபிடித்தால்

காணிப்பொன் கூடவரக் காண்கிலமே நெஞ்சமே .

இந்தத்  துன்பங்களிலிருந்தெல்லாம் நம்மைக் காப்பாற்றக்கூடிய ஒரே வழி தாயுள்ளம் கொண்ட இறைவனின் திருப்பாதமே என்றுணர்ந்த மாணிக்கவாசகர் வண்டின் மூலமாக என்ன செய்தி தருகின்றார் தெரியுமா?

நோயுற்று மூத்துநான் நுந்துகன்றா யிங்கிருந்து

நாயுற்ற செல்வம் நயந்தறியா வண்ணமெல்லாந்

தாயுற்று வந்தென்னை ஆண்டுகொண்ட தன்கருணைத்

தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ . 

ஆசைகளையெல்லாம் விட்டுவிடுகின்ற மனநிலை நமக்கு கிடைக்குமா ? இந்தப் பிறவியில் அது நடக்கக்கூடியதா? அப்படியானால் நமக்கு உண்மையான ஆனந்தம் எங்கே கிடைக்கிறது?  இதற்கு சரியான பதிலை திருமூலரே கொடுக்கின்றார் :

முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்

அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம். 

இவ்வாறு அகத்தில் உள்ள இறைவனை அறிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ளாமல், பாராட்டாமல், போற்றாமல், நாம் ஊர் உலகெல்லாம் சுற்றி வந்து கொண்டு இருக்கின்றோம். அது மட்டுமல்ல, அந்த இறையால் நமக்கு அளிக்கப்பட ஐம்புலன்களையும் அறிவுக்கண்களோடு இணைக்காமல் புறநோக்கில் செலுத்தி அவற்றின் உயரிய பண்புகளை வீணடித்துக்கொண்டிருக்கின்றோம். இறைவன் நமக்கு இந்தப் புலன்களையெல்லாம் எதற்குக் கொடுத்திருக்கின்றான்? இவை அவன் புகழ் பாடவும், புகழ் கேட்கவும், அவன் தாள் வணங்கவும் தங்களை அர்ப்பணித்த்துக்கொள்ள வேண்டாமோ? அப்பர் பெருமான் அழகாகச் சொல்லுகின்றார் :

வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சம்

தாழ்த்த சென்னியும் தந்த தலைவன்

இதை மறந்து நாம் கொண்ட அவல நிலையை நமக்கு எடுத்துக்காட்டும் பட்டினத்தாரோ வாழ்க்கையில் இறைவனை நினைக்காத மானிடரைக் கண்டு எவ்வாறு வியக்கின்றார் :

“கண்ணுண்டு காணக் கருத்துண்டு நோக்கக் கசிந்துருகிப்

பண்ணுண்டு பாடச் செவியுண்டு கேட்கப்பல் பச்சிலையால்

எண்ணுண்டு சாத்த வெதிர்நிற்க வீச னிருக்கையிலே

மண்ணுண்டு போகுதே யோகெடு வீரிந்த மானுடமே”

சிந்தனைக்கு இது ஒரு நல் விருந்தன்றோ ?

(தொடரும்)

Share

About the Author

க. பாலசுப்பிரமணியன்

has written 371 stories on this site.

க. பாலசுப்ரமணியன், முன்னாள் இயக்குனர் (கல்வி). மத்திய இடைநிலைக் கல்விக் கழகம், டில்லி ஆர்வம்: இலக்கியம், கவிதை, கல்வி, உளவியல், மனித வள மேம்பாடு கல்வி பற்றிய இவருடைய பல கட்டுரைகளும் புத்தகங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

Write a Comment [மறுமொழி இடவும்]


× 8 = fifty six


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.