நிர்மலா ராகவன்

என்னைப்போல் உண்டா!

நலம்
இரண்டே வயதான குழந்தை அவள். எந்த ஒரு புதிய உடையையோ, சட்டையையோ அணிந்தபின், ஓடிப்போய் கண்ணாடிமுன் நின்று அழகு பார்த்துக்கொள்வாள்.

இன்னொரு குழந்தை, ஒரு முறை தலைமயிரை வெட்டிக்கொண்டு வந்ததும், `அழகா இருக்கியே!’ என்று எல்லாரும் பாராட்ட, தினசரி தானே வெட்டிக்கொள்ள ஆரம்பித்தாள்! வீட்டிலிருந்த கத்தரிக்கோல்கள் எல்லாவற்றையும் ஒளித்துவைக்க நேர்ந்தது!

பண்டைக்காலத்தில் கிரேக்க நாட்டில் வாழ்ந்த நார்சீஸஸ் (Narcissus) என்பவன் நீரில் தெரிந்த தனது பிம்பத்தைக் கண்டு சொக்கிப்போய், நகராது அதையே பார்த்துக்கொண்டு இருந்தானாம். நாளடைவில், ஒரு மலராகி விட்டானாம்! இது காதில் பூசுற்றும் வேலையோ, என்னவோ, ஒரு பூவிற்கு இன்றளவும் அவன் பெயர்தான்.

சிறுகுழந்தை, `உலகமே தன்னைச்சுற்றித்தான் இயங்குகிறது!’ என்பதுபோல் நடந்துகொள்வது இயற்கை. வளர்ந்த பின்னரும் அப்படியே இருப்பவர்களுக்கு நார்சீஸிஸம் (Narcissism) என்ற தன்மை இருப்பதாகப் பெயர். இது அளவுக்கு மீறினால், ஒருவித மனநோயாகிறது.

`நான் தவறே செய்யமாட்டேன்!’ என்று கடவுளைப்போல் தன்னை நினைக்கும் ஒருவன், `நான் செய்வதெல்லாம் சரிதான்!’ என்று அலட்டிக்கொண்டு, அவன் சொல்லிலோ, செயலிலோ குற்றம் கண்டுபிடிப்பவர்களை எதிரியாகப் பாவித்து நடத்துவது நார்சீஸிஸம்.

அளவுக்கு அதிகமான சுயநலம், தன் திறமைகளையும் அழகையும் தானே மெச்சி, `என்னைப்போல் உண்டா!’ என்ற பெருமிதம் கொள்வது, பிறரது பாராட்டுக்காக ஏங்குவது போன்ற குணங்கள் நார்சீஸிஸத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஏற்பட்டுவிடும்.

எதற்குப் பிறர் மெச்சுவதுபோல், பிறரைப்போல் இருக்க வேண்டும்? நாம் நாமாகவே இருந்தால் நிறையச் சாதிக்கலாமே!

இது புரிந்து, `என்னால் முடியும்!’ என்று தன் திறமையின் எல்லையை உணர்ந்து, நம்பிக்கையுடன் ஒரு காரியத்தைச் செவ்வனே செய்து முடிப்பது தன்னம்பிக்கை.

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிகள்: நம்மை பயப்பட வைக்கும் (நல்ல) காரியம் ஒன்றைச் செய்து முடிக்க வேண்டும்.

நம் குறைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளுதல் சிறப்பு. நாம் நம்மையே தாழ்வாக நினைக்கும்போதுதான் பொறாமை பிறக்கிறது.

நார்சீஸிஸம் ஏன் வருகிறது?

தமக்கு என்ன வதை நேர்ந்தாலும், அதைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளத் தெரியாது சிறுவர்களுக்கு. ஆனால், அதை மறக்க முடியாது, அல்லது ஏதாவது சிகிச்சையால் அதை ஏற்கும் திறனையும் பெறாது, பெரியவர்களான பின்னரும் அதன் பாதிப்புடன் இருப்பார்கள் ஒரு சிலர்.

அப்படிப்பட்ட ஒருவரின் கதையைப் பார்ப்போமா?

சீராகச் செயல்படாத குடும்பம் அது. மிகுந்த கோபக்காரரான தந்தை மனைவியுடன் அவள் பெற்ற குழந்தைகளையும் உடல் வதைக்கு ஆளாக்கினார். பணத்தட்டுப்பாடு வேறு. சகோதர சகோதரிகளுக்குள் மட்டும் எப்படி ஒற்றுமை ஏற்படும்? இல்லை, கல்வியில்தான் மனம் போகும்? குடும்பத்தில் எல்லாருக்கும் சொல்ல முடியாத அவமானம் மற்றும் தாழ்மை உணர்ச்சி.

சிறு பிராயத்துத் தேவைகள் மாறாமலே வளர்ந்த அந்த ஒருவன் தன் தேவைக்காகத்தான் பிறர் இருக்கிறார்கள் என்பதுபோல் பிறரை நடத்தினான். தான் சொல்வதைக் கேட்காவிட்டால் அளவுகடந்த ஆத்திரம் எழும். தன் குறைபாடுகளை ஏற்கத் துணியாது, பிறரது குற்றங்களையே கவனிப்பான். `நான் ஏதோ விதத்தில் தாழ்ந்தவன்!’ என்று உள்ளுணர்வு உறுத்திக்கொண்டே இருக்க, தெரிந்தவர், தெரியாதவரை எல்லாம் மட்டம் தட்டி, அதனால் தான் ஓரளவு உயர்ந்துவிட்டதாக மனப்பால் குடித்தான்.

முன்பின் தெரியாதவர்களுடன் அலட்டலாகச் சிரித்துப் பேசி, பலரது நட்பைப் பெற்றுவிட்டோம் என்று பெருமிதம் கொள்பவர்கள் இவனைப் போன்றவர்கள். ஆனால், தம் குடும்பத்தாருடன் இணக்கமாக நடக்க மட்டும் தெரியாது. பிறருக்கு உரிய அன்பையும் மரியாதையையும் அளிக்கத் தவறிவிடுவதால், காலப்போக்கில் பிறரது மரியாதையை இழந்துவிடுகிறார்கள்.

இதெல்லாம் பயத்தால் ஏற்படுவது என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

என்ன பயம்?

பிறர் நம் தோற்றம், செயல்களை எப்படி எடுத்துக்கொள்வார்களோ என்ற பயம் இத்தகையவர்களிடம் நிலைத்திருக்கும். ஆகையால், பிறர் பாராட்டுவார்கள் என்று உறுதியாக நம்புவதைத்தான் வெளிக்காட்டுவார்கள். இதற்காகவே பிறருக்காக நிறைய நேரத்தைச் செலவிடுவார்கள். இப்படிப்பட்ட குணங்களைக் கொண்டவர்களுக்கு ஆரம்பத்தில் நிறைய நண்பர்கள் வாய்ப்பதில் ஆச்சரியமில்லை.

இக்குணம் கொண்ட ஒருவன் கையாளும் பொதுவான சில முறைகள்

தான் செய்த தவறுக்குப் பிறரைக் காரணம் காட்டுவான்.

எந்த ஒரு சிறு விஷயத்திற்கும் அநாவசியமான பொய்.

உதாரணம்: நண்பர்களுடன் திரைப்படம் பார்க்கச் சென்றுவிட்டு, நுழைவுச்சீட்டு கிடைக்காது திரும்பியதும், `உன்னை விட்டுப்போக மனமில்லை. அதனால் திரும்பிவிட்டேன்!’ என்று கூசாமல் மனைவியிடம் கூறி, அவளுடைய நல்லெண்ணத்தைப் பெற முயற்சிப்பது.

மிரட்டல். (`யாருமே நான் சொல்வதைக் கேட்பதில்லை. நான் இருந்து என்ன பயன்? தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன்!’)

கொடுமைப்படுத்துதல்.

`உன் மனசில யாரோ இருக்கான்!’ என்று, சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம், மனைவியைச் சாடுவது. மனைவியை உடல் மற்றும் உணர்ச்சிபூர்வமான வதைக்கு உட்படுத்திவிட்டு, `தப்பு செய்தது நீதானே? நான் உன்னை இப்படி நடத்துவது சரிதானே?’ என்று குற்ற உணர்ச்சியை அவளுக்கே திருப்புவது.

பிறர் சொல்லில், செயலில் ஓயாது குற்றம் கண்டுபிடிப்பது.

பொய்யான வாக்குறுதிகள். (`உன்னைத் தங்கத்தாலேயே இழைக்கப்போகிறேன்!’ `நாம் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா போகலாமா?’)

மேற்கண்ட எதுவும் பலிக்காவிட்டால், முகத்தைத் தூக்கிக்கொண்டு, மௌனமாக நாட்களைக் கடத்தல். இது கெஞ்சலில் முடியும்.

இப்படிப்பட்டவர்களை எப்படித்தான் சமாளிப்பது?

`நான் ரொம்ப கஷ்டங்களை அனுபவித்துவிட்டேன்!’ என்று பரிதாபகரமாக ஒரு இளைஞன் கூறும்போது எந்தப் பெண்ணின் மனமும் உருகிவிடாதா! ஆனாலும், திருமணத்துக்குமுன் ஒருவன் இக்குணங்களை வெளிப்படுத்தினால், அவனைவிட்டு விலகுவதுதான் புத்திசாலித்தனம்.

திருமணமானதும் சில பெண்கள், `உணர்ச்சிபூர்வமான வதை’ என்று விவாகரத்து கோருகிறார்கள்.

பொறுத்துப்போகவேண்டிய கட்டாயம் இருப்பவர்கள், தான் எந்தத் தவறும் செய்யவில்லை, கணவருக்குத்தான் மனநிலை சரியில்லை என்று புரிந்து, அவர் வாயிலிருந்து வெளிப்படும் கடும் சொற்களுக்கு மதிப்பளிக்காது, தன் சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொண்டால், ஓரளவு அமைதி பெறலாம்.

நார்சீஸிஸம் பெரும்பாலும் ஆண்களுக்குத்தான் இருக்கிறதாம். குற்றவாளி: அவர்களுடைய ஹார்மோன்.

தகுதி இல்லாவிட்டாலும் எத்துறையிலாவது பிரபலமாக விழைபவர்கள், நடிப்புத்துறையில் ஈடுபடும் ஆசை இருப்பவர்கள் அல்லது ஈடுபட்டிருப்பவர்களில் பலரும் நார்சீஸஸத்தால் பாதிக்கப்பட்டவர்களாம். (நடிகைகள் சிலர் தொலைகாட்சியில் பேட்டி அளிக்கும்போது தம் நீண்ட (போலி) முடியை மார்பில் விட்டுக்கொண்டு, அடிக்கடி அதைத் தடவுவது இதனால் இருக்குமோ?)

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *