-மேகலா இராமமூர்த்தி

 

woman with toe rings

திருமிகு. வெண்ணிலா பாலாஜி தன் படப்பெட்டியில் பதுக்கிவந்திருக்கும் பாவையொருத்தியின் பாதங்களை இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விரு பெண்களும் என் நன்றிக்கு உரியவர்கள்.

விண்ணும் பெண்ணும் கவிகளுக்கு என்றுமே சலியாத பாடுபொருள்கள். அதனால்தான் மிஞ்சியணிந்த பெண்ணிவளை மித’மிஞ்சி’ப் பாடியிருக்கின்றனர் கவிஞர்கள் என எண்ணுகிறேன்.

இப்பெண்ணரசியின் பாத அணிகள் குறித்துக் கவிவாணர்கள் நமக்குச் சொல்லியிருக்கும் சேதியென்ன என்பதை அறிந்துவருவோம் வாருங்கள்!

****

”கொலுசே மெதுவாய் ஒலி! இல்லையேல் என் காதலியின் பாதங்களுக்கு வந்திடும் வலி” என்கிறார் திரு. கோகுல கிருஷ்ணன் போஜன்.

ஒ(வ)லி

கொலுசே…
மெதுவாய் சப்தமிடு.

என்னவளின்
மென் பாதங்களுக்கு
வலித்துவிடப்போகிறது!!!

*****

”மச்சான் கொடுத்த ஒத்த மிஞ்சி மூணானது அவன் மேல கொண்ட பிரியத்தின் பெருக்கத்தாலே” என்கிறாள் திருமிகு. தேனம்மை லக்ஷ்மணனின் கவிதையில் வரும் மிஞ்சியணிந்த வஞ்சி. 

ஒத்த மிஞ்சி கொடுத்தேண்டி
தங்கமே தங்கம்

அது ஒண்ணுக்கு மூணா மின்னுவதென்ன
தங்கமே தங்கம்

ஒத்த மிஞ்சி நீ கொடுத்தே
மச்சானே மச்சான்
அது ஒன் பிரியம் போலப் பெருகிப் போச்சு
மச்சானே மச்சான்
 

******

”மிஞ்சி அளவுக்கு மிஞ்சியதை”க் குறும்பாய்க் குறும்பாவாக்கியிருக்கிறார் திரு. த. மோகனசுந்தரம்.

அழகுதான்
அவளுக்கு மிஞ்சி!
ஆயினும்
அளவுக்கு மிஞ்சி!

*****

”பாறைவிளிம்பில் பாதம் பதித்து, நர்த்தனமாட எத்தனிக்கும் இந்நங்கையின் கால்களும் கவிபாடுதே!” என்று சிலிர்க்கிறார் திரு. பா. சங்கரகுமார்.

அழகுக் கால்கள் நோகலாகுமோ?

ஒய்யார சாயலில் ஒரு கால்
நர்த்தனைமாட எத்தனிக்க
சலங்கைக் கால் பளபளக்க
பாறை விளிம்பு பயமுறுத்த
ஆடவா வேண்டாமா என தவிக்க…
தங்க தாரகையே !
நீ சிலிர்க்க
உன் கால்களும் கவி பாடுதே!

*****

”முள்ளோ? கல்லோ? ஆடித் துகளோ? உன் பாதத்திற்கு வலியூட்டிய வழி யாதோ?” என்று பாவையைப் பார்த்துப் பரிவோடு கேட்கிறார் ஈரோடு திரு. சாம்ஸ் (பெயரைத் தெளிவாகக் குறிப்பிடுக!)

வலியின் ஒளி
பிறர் பாதணி விட்டுசென்ற
முனையிலா முள்ளோ
கல்லோ கற்கண்டோ
போதை வடிந்த
கோப்பை உடைந்த
ஆடித்துகளோ
வைத்த அடி வைக்காமல்
உன் பாதம் தொக்கிடவே
வலியூட்டிய
வழியது யாதோ….!!!

*****

”பொன்னில் மனம் மயங்கும் பெண்ணே! பொன்னும் உடலில் பூட்டிய மென்விலங்குதான் என என்று உணர்வாய்? என்று வேதனையோடு வினவுகிறார் திருமிகு. சுகமதி.

பொன்னென்று
மகிழ்ந்து
அதன் அழகின் நீட்சியில்
தன்னை தொலைத்து
இசையின் துளிகளில்
இன்பமுற்று
சந்ததிகளை வார்த்தெடுத்தவள்
தனக்குள் தானே
புதையுண்டு போனதை
என்றேனும் உணர்ந்திடுவளா
பொன்னெல்லாம்
பூவிலங்குதான் என்று

*****

சிரசில் சூடும் கிரீடம் மெல்லியலாள் மென்பாதத்திற்கு மெட்டியாய் இடம் மாறியதைச் சுட்டிக்காட்டுகிறார் திரு. இரத்தனசாமி. 

மெல்லியலாள் கிரீடம்தனை மகிழ்வாக
மென்பாதம் சூடியதோ மெட்டியென
வெண்கொலுசும் சிணுங்கியதோ வெட்கமுடன்
தன்நா மணியோசைத் தாளத்துடன்!

*****

”தாலிக்கயிற்றுடன் நான் மணம் முடிக்கக் காத்திருக்க, மெட்டியுடன் வந்து எந்தன் மனம் முறித்துப் போனவளே…! பாழும் மனசடக்கி நான்வாழ வழியொன்று சொல்லிப்போ! எனப் புலம்பும் காதலனைக் காண்கிறோம் திருமிகு. சத்யா அசோகனின் கவிதையில். 

வெள்ளி கொலுசொலிக்க
வீதியுலா வருகையிலே
பார்த்திருந்த நான்
பைத்தியமாகி போனேன்
தாலிக்கயிறுடன் தவமிருக்கும் வேளையிலே
மெட்டியுடன் வந்து
எட்டி உதைத்தவளே!!

கோடை வெயிலிது
கொடுமையாய் சுடுகையிலே
பாறையிலே நடக்கிறியே
பாத அணி இல்லாம
பாதகத்தி நீ எனக்கு
இல்லையின்னு போனபின்னும்
பாழும் மனசடக்க வழி ஒன்னு சொல்லிப்போ!!

*****

”பெண்ணே! கணவனுக்காக அணிந்தாயோ… கள்வனைக் களைய அணிந்தாயோ நானறியேன்! உன் அடிமை வாழ்வின் அடையாளமாகவே நான் இதனைக் காண்கிறேன்” என்று தீர்க்கமாய் உரைக்கிறார் திரு. பெருமாள் அச்சி(?) 

கால் ஆபரணங்களென்பார்..
கலியுக மங்கைகள்..
கால் விலங்குகளென்பார்
புரட்டி பேசுவோர்..
கணவனுக்காய் அணிந்தாயோ..
கள்வனைக் களைய அணிந்தாயோ.!
பாதம் நோகாமல் நடக்கப்பழகிய கால்களும் பரிதவிக்கின்றன
பதம் பார்க்கும் மெட்டிகளால்.
உச்சி முதல் பாதம் வரை
பூட்டிப் பார்ப்பதிலேயே
பழைமை காண்கின்றனர்
கருப்பை வளர்ச்சிக்கு நல்லதென்பார்
அறிவியலையும் இணை சேர்ப்பர் இச்செயலுக்கு
கரை சேர்ந்த கடைசி நிலையிலும் கழட்டிட அனுமதியார்..
மண அடையாளமாய்
மாட்டப்படும் இவ்வளையம் விலக்கப்படுவதோ
மணவாளனின் மரணத்திற்குப் பின்பு..
அதுவரை பூட்டியே இரு
அழுத்தம் விரல்களின் நோவுகளாவது
அடையாளமாகட்டும்
உன் அடிமை வாழ்விற்கு.!

*****

”படிதாண்டிய பாவையின் பாதங்கள் வெம்மை தாளாது சிறு திட்டில் ஊன்றி நிற்கக் கொள்கின்றன ஆசை” என்பது திருமிகு. ரதி ராஜேஷின் யூகம்.

படிதாண்டிய அவள்,
பாதைகள் இல்லா
நடை பயணங்களில்
தேடியலைகின்றாள்…

மெட்டியிட்ட மெல்லடியை
சுடு மணல் தகிக்க,
முன்னோடும் அவள்,
தன் நிழல் மிதித்து
சூடாற்றும் வகையறியாது…

காலடியில் நழுவிய
சாலைகளில்…..
ஏதோ ஒரு கணத்தில் ,
ஒரு சிறு திட்டில் ,
கால் ஊன்றி நிற்கும் ஆசை
அவளுக்கு பேரோசையாகிறது!!

*****

இதுவரைக் கொலுசு மட்டுமே அணிந்திருந்த மென்பாதங்களில் மணவாழ்க்கை தந்த புதுச்சுமையாய் (!) மெட்டியும் சேர்ந்துகொள்ள, பால்யம் நின்றுவிட்ட காலத்தின் படிகளில் சற்றே இளைப்பாறுகிறாள் இந்த வனிதை என்பது திருமிகு. மஞ்சு விஸ்வநாதனின் அனுமானம்.

இளைப்பாறல்

பிறந்ததிலிருந்து
கொலுசணிந்த பாதங்களில்
இன்றிலிருந்து புதிதாய்
விரல்களில் மெட்டியும்..
இனி, மணவாழ்க்கையெனும்
புதிய திசையில்
நெடிய பயணம்
தொடங்கும்முன்
சற்றே இளைப்பாறுகிறேன்
என் பால்யம் நின்றுவிட்ட
காலத்தின் படிகளில்…

*****

”விரல்வழியே உன் விழிகளில் நுழைய நான் இட்டவையே இம் மெட்டிகள்” என ஆடவன் ஒருவனின் ஆசையைப் பேசுகின்றது திருமிகு. கீதா ஷங்கரின் கவிதை.

வந்த பொழுதிலிருந்தே
பெயர்ந்து செல்லப்பார்க்கின்றாய்
வேரறுத்து ஓடி வந்தும்
துயர்நினைவில் தொலைகின்றாய்
ஒன்றிற்கு மூன்றாய்
விரல்களில் இட்டது…
விரல் வழியே உன்
விழியகளில் நுழையத்தானடி?
சுமை இறக்கி காலாறு…
மெட்டிப் பாதமொரு வரலாறு

*****

”கல்லில் பட்ட பெண்ணின் பாதம் கல்லை மலராய் மாற்றியது; ஆணின் கர்வம் அடக்கிப் பெண்ணின் பெருமை சாற்றியது” எனப் பெண்ணின் பெருமை போற்றுகிறார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

அவளும் நானும்
அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து
என்னைச் சேர்ந்த கண்மணியே !
என்னில் படர்ந்த வஞ்சிக் கொடியே! நம் திருமணச் செய்தியைச்
சொல்வதற்கு !
காலில் மிஞ்சி அணிந்தாயோ!
சிலம்பால் தொல்லை வந்ததினால்
கொலுசை நீயும் அணிந்தாயோ !
கொலுசை நீயும் அணிந்தாலும்!
கற்புக்கரசி கண்ணகி தான்!
கற்பு என்று வந்துவிட்டால்!
ஆணுக்கும் பொதுவென்று
நான் அறிவேன்!
கோவலனாய் நான் வாழாமல்!
ராமனாய் என்றும் வாழ்ந்திருப்பேன் !
ராமனாய் நானும் வாழ்ந்தாலும்!
அக்கினி பரிட்சை தர மாட்டேன்!
உன் மெல்லிய பாதம் கல்லில் பட்டவுடன்!
கல்லும் மலராய் மாறுதம்மா!
கல்லும் மலராய் மாறியதாலே!
எந்தன் நிலையை என்ன சொல்ல!
ஆண் என்ற கர்வம் மறைந்ததம்மா
அனைத்தும் பெண் என்று தெரிந்ததம்மா

*****

பாவையின் மெட்டி விரல்கள் தன் நினைவுகளைக் கட்டிப்போடுவதைச் சுட்டுகிறான் திரு. இளா(?) (பெயரைத் தெளிவாகக் குறிப்பிடுக!) படைத்த கவிக் காதலன்.

உன் நினைவுகளைச் சுமக்கும்
மெட்டி விரல்களில்,
நித்தம் நிறைகின்றன,
மறக்க நினைக்கும்,
உன் நினைவுகள்…!!!

*****

”விரலுக்கு விலங்கிட்டு அவளோடு என்னையும் அடைத்துக்கொண்டேன் சிறகுகள்கொண்ட இல்லறச் சிறையில்” என்கிறார் ஈரோடு திரு. மூர்த்தி.

விரலுக்கு விலங்கிட்டு
அவளோடு சேர்த்து
என்னையும்
அடைத்துக்கொண்டேன்,
இல்லறம்
எனும்
சிறகுகள் கொண்ட
சிறையில்

*****

”வஞ்சியே! கொண்டவனை மண்டியிட வைக்கும் உன் மிஞ்சி, கண்டவனை விலகிடச் செய்யும்  அஞ்சி!” என்று கருத்துரை பகர்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன். 

அத்தனையும்…

உன்
மௌனத்தை மொழிபெயர்த்து
மெல்லப் பேசிடும்
கால் கொலுசு..

கொண்டவனை மண்டியிடவைத்து,
கண்டவனை விலகிடச்செய்யும்
மிஞ்சி-
கொஞ்சம் கூடுதலாய்..

பஞ்சின் மெல்லடி காட்டும்
பாத அழகு..

அழகுக் குலமகளே,
அசையாதே
அப்படியே நில்,
அத்தனை அழகும்
அடங்கின உன் காலடியில்…!

***** 

மெட்டி அணிவிக்கும் திருமண வைபத்தைச் சுவையோடு தன் கவிதையில் படம் பிடித்துக் காட்டுகிறார் திரு. ரா. பார்த்தசாரதி.

மணமகள் கொலுசின் ஓசையே இனிமை
மெட்டி ஒலியே அவள் வருவதன் அடையாளம்
கொலுசின் இன்னிசையே கணவனுக்கு இனிமையூட்டும்,
மெட்டி ஒலியே அவன் நெஞ்சத்திற்கு மகிழ்வூட்டும்!
ஏழு முறை வலம் வந்து மெட்டி அணிவித்தேன்
அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து மெட்டி அணிவித்தேன்
சதாப்தி என்பது திருமண வைபவத்தில் ஒன்று
மணமக்களுக்கு மெட்டி அணிவிப்பது வழக்கத்தில் ஒன்று!
கொலுசு அணிந்து உன் வரவைத் தெரிவித்தாய்
சதங்கை அணிந்து பரத நாட்டியம் ஆடினாய்
மணமானவள் என்பதை தெரிவிப்பது கொலுசு, மெட்டியே
திருமணச் சடங்கில் இவை எல்லாம் ஒரு பகுதியே!
ஜல், ஜல் எனும் சலங்கை ஒலி என் மனதைப் பந்தாடுதே
மெட்டி ஒலியுடன் என்னருகில் வரும்போது நெகிழுதே
இவ்விரு ஓசையும் என் நெஞ்சத்தைக் கிள்ளுதே!
நான் நோக்கும்போது உன் கால்கள் கோலமிடுதே!

*****

”ஆடவரை ஆடவைக்கும் நட்டுவாங்கமாய் மெட்டி மிளிர்ந்தாலும் விரலுக்கு ஒன்றாய் மாட்டிக்கொண்டிருப்பது எழிலைத் தரவில்லையே! அளவான அழகே அளவில்லா அழகு” என்று நகையணியும் முறைபற்றி நயம்பட உரைக்கிறார் திருமிகு. ஷக்திப்ரபா.

அளவோடு மிஞ்சினால் அம்ருதம்

பெண்மையின் அடையாளம்
நளினத்தின் நகை வடிவம்
நடனத்தின் நாடி
மங்கலச் சின்னம்
ஆடவரை ஆட்டுவிக்கும் நட்டுவாங்கம்…

ஆயிரம் காரணம் இருப்பினும்
இவர் சொன்னார்
அவர் தந்தாரென
விரலுக்கு ஒன்றாய்
மாட்டிக்கொண்டு விழிக்காதே.
இதுவே பெண்ணின்
எல்லையென அடங்காதே.

சிக்கென அழகாய்
ஒற்றை விரலில்
பாங்காய் அணிந்து
டக்கென தாவிக் குதிக்கும்
சுதந்திரமும் ஒப்பிலா அழகு.
அளவான அழகும் அளவிலா அழகே.

*****

”காதுக்கு இசைமுடிச்சிட்டது உன் கொலுசு” எனக் குதூகலிக்கிறார் திரு. சே தண்டபாணி தென்றல். 

காதுக்கு இசை
முடிச்சு போட்டது
உன் கொலுசு

*****

கொலுசும் மெட்டியும் தரும் அழகையும் ஆரோக்கியத்தையும் பட்டியலிடும் பெருவை திரு. பார்த்தசாரதி, இன்றைய நவநாகரிகம் இவற்றையெல்லாம் அநாகரிகம் என்று அப்புறப்படுத்தும் அவலத்தையும் சுட்டத் தயங்கவில்லை. 

கொலுசும் மெட்டியும்

கொலுசு

ஒருத்தி வருகையை
—ஒலியெழுப்பி அறிவிக்கும்
நரம்பைமுறுக்கி நங்கையிளரத்த
—நாளத்தைச் சீர்செய்யும்..!

கொஞ்சுதற்கும் காதலர்கள்
—கூடுதற்கும் இடையே
எச்சரிக்கும்…சைகையாகச்
—சிறுமணியின் இசைகேட்கும்..!

பகலில் பாவையோடு
—பழகிவந்தால். . “நீகொலுசு”..!
இரவில்பய ஒலியெழுப்பி
—இன்னல்செய்யின்… “நீபிசாசு”..!

மெட்டி
ஆயரின் கால்விரல்
—அனைத்துமணி செய்யும்..!
கயவரின் கண்படுமுன்
—காட்டிக் கொடுக்கும்..!

தாலியுடன் மெட்டியும்
—வேலிபோல கற்பைக்
கட்டிக்காக்கு மதுவுன்
—கருப்பைவளம் பெருக்கும்..!

அழகுக்கு அழகுசேர்க்கும்
—அணிகலனே மெட்டியாகுமது
மரபினால் மங்கையர்க்கோர்
—முக்கியதொரு சடங்காகும்..!

மெட்டியும் கொலுசும்
கட்டிய கணவனுக்குக்
—கிட்டாத தொடுவுறவை
மெட்டியும் கொலுசும்
—தட்டிப்பறித்து கேலிசெய்யும்..!

பொன்னும் மணியும் கழுத்தில்
—மின்னும் பெண்ணிற்குக்
கணுக்காலும் கால்விரலும்
—உன்னழகால் மெருகேறும்..!

சிலம்பை ஒடித்த
—கண்ணகியின் சாபமோ..?
சிலர் கால்களிலின்று
—சிலம்பைக் காணோம்..?

மெட்டி அணிவதெல்லாம்
—மட்டமென ஆனதோ..?
மாதர்தம் விரலினின்று
—மெட்டியைக் காணோம்..?

கலாசாரமோகத்தில் கன்னியர்கள்
—கழட்டியெறியும் அணிகலனில்
கணுக்காலும் கால்விரலும்
—இன்னுமனுமதி தரவில்லையோ…?

வஞ்சியின் ’மிஞ்சி’யெழிலை நெஞ்சினிக்கும் சொற்களால் வருணித்திருக்கும் கவிவலவர்கட்கு என் வாழ்த்தும் பாராட்டும்!

*****

ஆடை அணிகள்மீது அரிவையர்க்கு அளவுக்கு மிஞ்சிய மோகத்தை ஏற்படுத்தி இச்சமூகம் அவர்களை அவைகளுக்கு அடிமையாக்கி வைத்திருக்கிறது. அதனால் தம் உடலழகைக் கூட்டுவதிலும், தம்மை அழகியராய்க் காட்டுவதிலுமே ஆர்வம் கொண்டுவிட்ட பெண்டிர், இப்பொன்விலங்குகளைக் களைந்தெறிய மற(று)க்கின்றனர்.

”கல்லானாலும் கணவன் எனும் பழமொழியைச் சிரமேற்கொண்டு கல்லிலும் முள்ளிலும் கணவனொடு கால்நோக நடந்து எண்ணிலாத் துயரடைந்த பெண்ணரசிகளுக்கும் நம் மண்ணில் பஞ்சமில்லை!

அதைவிடுத்து, தம் நல்வாழ்வுக்கேற்ற புதிய பாதையை மதியின் துணைகொண்டு மங்கையர் தெரிவுசெய்யவேண்டிய காலமிது!

அணிகளில் இல்லை அரிவையரின் அழகு! நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் கொண்டு திமிர்ந்த ஞானச்செருக்கோடு பாரதியின் புதுமைப் பெண்ணாய்த் திகழ்வதிலேயே ஒளிர்கின்றது அவர்தம் உண்மை அழகு!” எனும் உயர்ந்த கருத்துக்களை உரக்கச்சொல்லி மாதரார்க்கு அறிவொளி ஏற்றும் அருங்கவிதை ஒன்றைக் கண்டேன்!

பாதம் கூறும் பாடம்

பெண்ணவளின் பாதத்திற்கு
புது நகைகள் தான் கொடுத்தார்
வெள்ளியில் மிஞ்சியென்றார்
தங்கத்தில் சதங்கை தந்தார்

பிஞ்சு விரல் சொடுக்கெடுத்து
ஆலிவ் எண்ணெய்ப் பூசி வந்தார்
நகக்கீறுத் தனைத்தீட்டி
நளினம் நீயென்றுரைத்தார்.

இத்தனையும் பழக்கி அவளை
இத்தரணி மீதினிலே
போகப்பொருள் ஆக்கிவைத்து
சுயந்தொலைத்து நிற்கவைத்தார்

பெண்ணவளின் பாதமலர்
எண்ணிலாத கதைகள் சொல்லும்
விண்ணவரும் பெற்றிடாத
திண்ணமதைத் தானியம்பும்

சீதையவள் பாதங்களோ
ஸ்ரீராமன் பின்சென்றும்
பெருந்துன்பம் அடைந்ததொரு
பெருங்காதை நினைவுறுத்தும்

கடவுளையே பின்தொடர்ந்தும்
காரிகையாய்ப் பிறந்தோர்க்கு
கட்டமது நீங்காதென்று
திட்டமாகச் சொல்லிவிடும்!

பாஞ்சாலி பாதங்களோ
பார்த்திபனின் கரம்பிடித்தும்
பலதாரப் பெண்ணென்ற
பரிகாசம் தனையேற்கும்

பலதாரந்தனை மணந்த
பலராமன் உடன்பிறப்பை
பரந்தாமன் எனப்போற்றுவதைப்
பாரோர்க்குப் பறைந்து நிற்கும்!

கண்ணகியின் காற்சிலம்போ
கற்புநிலைக் கற்பித்துக்
கல்மனதுக் கணவனையும்
காத்து நிற்கப் போதிக்கும்

தாழ்வுற்று, வாழ்வதனைத் தானிழந்து
பாழ்பட்டு நின்றதற்கு
ஆடவனை விடுத்து அவள்
ஊழ்வினையைச் சாடி நிற்கும்…!

அகலிகையின் நிலைகூறும்
அருந்ததியைப் பார்க்கச் சொல்லும்
நளாயினியின் கதைச் சொல்லி
வேசியிடம் தூதனுப்பும்!

வேண்டா இந்நிலை விடுத்துத்
தீண்டாமைத் தனைத் துறந்து
முண்டாசு கவிஞனவன்
கண்ட பெண்ணாய் நீ வருவாய்

தடுமாற்றந்தனை விடுத்து
சுயமாற்றந்தனைச் செய்து
புதுப்பாதைத்தனைக் கண்டு
முழுவுறுவம் காட்டி நிற்பாய்!!!

சிந்தனைக்கு வளஞ்சேர்க்கும் இக்கவிதையை இயற்றிய திரு. வேங்கட ஸ்ரீநிவாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவிக்கின்றேன். 

***** 

காலணி மறுக்கப்பட்ட பாட்டிமார்களின் கால் நோவைப் பாதம் பழுக்க வெயிலில் நின்றிருக்கும் நிலையில்தான் உணரமுடியும் எனும் உண்மையைப் பரிவோடு பதிவுசெய்திருக்கும் மற்றொரு கவிதையும் மனங்கவர்ந்தது.

காலணிகள் அணியவும்
மருதாணி பூசவும்
அனுமதி மறுக்கப்பட்ட
என் பாட்டிகளின் காலத்தில்
தூக்கி எறிகிறேன் என் ஒப்பனைகளை

நகச்சாயம் பூசியபடி
கொலுசுகளும் மெட்டிகளும்
ஒலிக்குமிந்த கால்களின் பின்னணியில்
மறைந்து கிடக்கின்றன
என் மூதாதையர்களின்
ஏக்கங்களும் ஆசைகளும்

என் மென் பாதங்களின்
ரேகைகளில் இன்னும் ஊறுகின்றன
வெடிப்புகளில் மண்துகள்கள் குடைய
அவர்கள் வீடடைந்த உச்சிவெயிலின் வலி

அந்தச் சூட்டின்
கதகதப்பையும் வலியையும்
ஒரு கணமேனும் உணரும் தருணமொன்றில்
நான் படுத்துக்கிடப்பேன்
என் நான்காம் தலைமுறை
கொள்ளுப்பாட்டியின் மடியில்

திரு. தனபால் பவானியின் இக்கவிதையைப் பாராட்டுக்குரியதாய்க் குறிப்பிடவிரும்புகிறேன்.

தொடரட்டும் கவிஞர்கள்தம் நன்முயற்சி!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 111-இன் முடிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *