சுமைகளும் சுகங்களும்!

-பெருவை பார்த்தசாரதி

சுகங்களையே பெரிது மண்டும் மனிதர்கள்
சுமைகளை வெறுப்ப துண்மை இயல்பன்றோ..!

ஈரதன்பண்பைச் சீர்தூக்கி சிந்தையினுள் வைத்தால்சுமைகளும் சுகங்களும்
சீராகுமுன் பயணம்..! சிறக்குமுன் வாழ்வுநிலை..!

சூரியனும் வெண்ணிலவும் விண்ணிலே மாறிவருவதும்
சுகமும் சுமையும் வாழ்வில்வலம் வருவதுமியற்கை..!

இணையாகும் இவ்விரண்டும் இவ்வாழ்வில்..ஈதொரு
நாணயத்தின் இருபக்கமென நினைவில் வையப்பா..!

அன்னையவள் கருவைச் சுமப்பதைச் சுமையென
அதனைக் கருதினால் சுகமாக மகவைப் பெறமுடியுமா..?

தாயீன்ற தன்மகவைச் சுமந்தகாலம் சுமையேயாகும்
சேயீன்ற மகிழ்வின்பின் பலசுகங்கள் பிறக்குமப்பா..!

பதினான்கு ஆண்டுகள் இராமனேற்ற சுமைகள்பல..
பதிவிரதை சீதாதேவி சுகமாயதை இறக்கிவைத்தாள்..!

பிறகு தானேசுமையும் சுகமும்பல வடிவம்கொண்டு
இறகு முளைத்து இராமாயணமென்னும் காவியமானது..!

சுமைகண்டு வாழ்வில் துவண்டுவிடாதே எதையும்
சுகம்கொண்டு எதிர்கொள் என்றது பகவத்கீதை..!

சுமைகளும் சுகங்களும் நம்மிரண்டு கைகள்போலதைச்
சமமாகப் பார்க்கப்பழகி வெற்றியடைந்தான் பார்த்தன்..!

பாவிக்க வேண்டும் ஈரதையொன்றாக வென்பதை..மா
பாரதக்கதை பக்குவமாக உணர்த்தியதை நீஉணர்வாய்..!

குறையைச் சுமையாகவும் நிறையைச் சுகமாகவும்
அரைகுறை யாகவறிந்தவராரும் சாதனை புரிவதில்லை..!

காலிழந்த வாலிபனும் கையிழந்த நங்கையும்
பார்புகழும் பாராலிம்பிக்கில் பதக்கம்வெல்வ தெதனாலே.?

மிஞ்சியது எதுவுமில்லை எனயிடர்வரும் வேளையில்
எஞ்சியவர் வாழ்வை யொருகணம்நீ நினைத்துப்பார்..!

சுமையும்சுகமும் வாழ்க்கையெனும் நதியில் ஓடுமது
சுழித்தோடும் சூழலை யெதிர்த்து நீவாழப்பழகு..!

வாழ்க்கையுமொரு நற்பாடம் தானதைப் பக்குவமா
வாழ்ந்திடலாம் முறையான பயிற்சிமேற் கொண்டால்..!

 

 

பெருவை பார்த்தசாரதி

பெருவை பார்த்தசாரதி

கல்வித் தகுதி :: வணிகவியலில் முதுகலைப் பட்டம்
கல்லூரி :: தேசியக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி
அலுவலகம் :: சென்னை விமானநிலையம்
குடியிருப்பது :: கலைஞர் நகர், சென்னை

Share

About the Author

பெருவை பார்த்தசாரதி

has written 99 stories on this site.

கல்வித் தகுதி :: வணிகவியலில் முதுகலைப் பட்டம் கல்லூரி :: தேசியக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி அலுவலகம் :: சென்னை விமானநிலையம் குடியிருப்பது :: கலைஞர் நகர், சென்னை

Write a Comment [மறுமொழி இடவும்]


eight − = 0


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.