நிர்மலா ராகவன்

வெற்றியால்தான் மகிழ்ச்சியா?

நலம்-1
“எனக்கு வாழ்க்கையில் சந்தோஷமே இல்லை. எதிலும் வெற்றி பெற முடியவில்லை!”
இப்படிக் கூறுபவருக்கு முக்கியமான ஒன்று புரியவில்லை. மகிழ்ச்சி என்பது வெற்றியால் வருவதில்லை. நமக்குப் பிடித்ததை செய்தாலே போதும். பிடித்த காரியத்தை நாம் எதிர்பார்த்ததைவிடச் செம்மையாகச் செய்தால் கிடைப்பது மகிழ்ச்சி.

தோல்வி ஏன்?

`தோல்விக்குமேல் தோல்வி வருகிறதே!’ என்று மனமுடைபவர்கள் தங்கள் ஆற்றலுக்குட்பட்ட செயல்களைச் செய்யாமலிருக்கலாம். அல்லது, தவறுகளை மறக்கமுடியாது, அவைகளிலிருந்தும் பாடம் கற்காமல், திரும்பத் திரும்ப அதே தவறுகளைச் செய்பவர்களாக இருக்கலாம்.

பணம், புகழ், வெற்றி — இதெல்லாம் குறுகிய காலத்தில் வேண்டுமானால் மகிழ்ச்சி அளிக்கலாம். இவையெல்லாமே போதை தருவன. எவ்வளவு கிடைத்தாலும், இன்னும் அதிகமாக வேண்டும் என்ற பேராசைக்கு நம்மை உட்படுத்திவிடும். இவற்றைத் தட்டிப் பறிக்க யாராவது வந்துவிடுவார்களோ என்ற கவலை வேறு உடன் வரும்.

சில குழந்தைகள் சிரித்தபடி இருக்கும். இன்னும் சில குழந்தைகள் `உர்’ரென்று இருக்கும். ஏன் அப்படி?

குழந்தை சிரித்தபடி இருக்க

இரண்டு அல்லது மூன்று மாதங்களே ஆன குழந்தை விழிக்குமுன் தயாராக அதன் எதிரில் நின்றுகொண்டு, முகத்தில் சிரிப்பைத் தவழ விட்டுக்கொண்டால், நம்மையே உற்றுப் பார்க்கும். சில நாட்களில், அதன் இதழ்களும் சிரிப்பால் விரியும்.

அழும் குழந்தையை கண்ணாடியில் காட்டி, “அசிங்கமா அழறது பாரு, இந்த அசட்டுப் பாப்பா! எங்கே, நீ சிரி!” என்றால் சிரிக்கும். (இதெல்லாம் எனது `பைத்தியக்காரத்தனமான’ கண்டுபிடிப்புகள்).

இயல்பாகவே சிரிக்கக் கற்றால், என்ன நடந்தாலும் அதிகம் கலங்காது இருக்கமுடியும். தவற்றுக்குப் பயப்படாது இருக்கும் துணிச்சல் வரும். `நம்மால் முடியும்!’ என்ற நம்பிக்கையுடன், நிறைய சாதிக்க முடியும்.

ஆரோக்கியம்

ஆரோக்கியம் முக்கியம்தான். ஆனாலும், நமக்கோ, நம்மைச் சார்ந்தவர்களுக்கோ உடலில் ஏதாவது குறைபாடு இருந்து, அதைத் தவிர்க்க முடியாது என்ற நிலை வருமாயின், பொறுமையுடன் ஏற்பது அமைதியைக் கெடுக்காது.

சிலருக்கு மன ஆரோக்கியம் கிடையாது. எந்த சந்தர்ப்பத்திலும் பிறரைக் குறை கூறிக் கொண்டிருப்பார்கள்.

ஒரு பத்திரிகை விழாவில் நடந்த விருந்தில் பலவகை உணவு இருந்தது. சுவை எப்படி இருந்தது என்றெல்லாம் கேட்கக்கூடாது.

ஒரு பெண், “வீட்டிலே தயிர் சாதம், ஊறுகாய் சாப்பிடறது இன்னும் நன்றாக இருக்கும், இல்லையா?” என்று என்னைக் கேட்டாள்.

நான் பதில் சொல்லவில்லை.

பிறரிடம் என்ன குறை என்று ஆராய்ந்தபடி நம் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தால், நம் மகிழ்ச்சிதான் கெடும். நமக்குப் பிடிக்காததை, ஏற்க முடியாததை விடலாமே! ஏதோ, அவர்கள் வசதிக்கு ஏற்றபடி ஏற்பாடு செய்திருந்தார்கள் என்று அனுசரித்துப் போகவேண்டியதுதான்.

எதிர்ப்பைச் சமாளி

நம்மைப் பழித்துக் கீழே தள்ள முயற்சிப்பவர்களை, அல்லது `உலகை ஒட்டித்தான் வாழவேண்டும்!’ என்று நிர்ப்பந்தம் செய்பவர்களை எப்படிச் சமாளிப்பது?

வாய் வார்த்தைகளாலோ, உணர்ச்சிபூர்வமாகவோ அவர்களுக்கு எதிராக எதுவும் செய்தால் அவர்கள் நினைத்ததுபோல், அவர்கள் வெல்ல விடுகிறோம். கூடியவரை, அமைதியாக இருக்க முயலவேண்டும்.

கதை

சிறு வயதில் பெற்றோரும் ஆசிரியர்களும் திட்டி, அடித்து, `படி, படி’ என்று மிரட்டியதைக் கடைப்பிடித்து, கல்வியிலும் உத்தியோகத்திலும் உயர்ந்தாள் அமிர்தா. முப்பது வயதுக்குமேல், எதற்காக ஓர் ஆணுக்கு அடங்கி நடப்பது என்ற மனோபாவம் எழுந்தது. திருமணத்தில் ஆர்வம் காட்டாது இருந்தாள்.

ஆனால் பார்ப்பவரெல்லாம், `ஏன் இன்னும் கல்யாணம் செய்துகொள்ளாமல் இருக்கிறாய்?’ என்று துளைத்தார்கள். அவளைப் பொறுத்தவரையில் மகிழ்ச்சியாகத்தான் இருந்தாள். இதை மற்றவர்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்களே என்று எரிச்சல்தான் ஏற்பட்டது.

ஒப்பிடாதே!

நாம் எவ்வளவுதான் முயன்றாலும், நம்மைவிடச் சிறப்பாக யாராவது இருப்பார். அவருடன் நம்மை ஒப்பிட்டுக்கொண்டு, வேண்டாத எண்ணங்களுக்கு இடங்கொடுத்தால் மகிழ்ச்சி ஏது! நாம் நாமாகத்தான் இருக்க முடியும். நமக்கு இருக்கும் நிறைகளை — பார்வை, நடக்கும் திறன் போன்றவைகளை — நினைத்துப் பார்த்தாலே போதுமே! உற்சாகம் எழும்.

கதை

நல்ல அழகியான பூர்ணிமா இளம் விதவை. குடித்துவிட்டு, அவளை உடல் ரீதியாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் வதைத்த கணவன் இறந்தபோது, அதை பெரிய இழப்பாக அவள் கருதவில்லை. பிடிக்காத ஒன்றை இழப்பது இழப்பா, என்ன!

`எல்லா ஆண்களும் இப்படித்தான் இருப்பார்களோ?’ என்று சந்தேகப்படாது, அவளை விரும்பிய ஒருவரை மறுமணம் செய்தாள். மகிழ்ச்சியுடன் காலத்தைக் கழிக்க முடிந்தது.

`நம் சமூகம் என்ன சொல்லிவிடுமோ!’ என்று எண்ணி அஞ்சாது, தனக்குப் பிடித்த காரியத்தைத் துணிச்சலுடன் செய்தது அவளுடைய மகிழ்ச்சிக்குக் காரணமாக இருந்தது.

நமக்கு உகந்த காரியத்தைச் செய்ய நாமே ஏன் தடை விதித்துக்கொள்ள வேண்டும்? ஆனால் அது பிறருக்குத் தீங்கு விளைவிக்காததாக இருத்தல் அவசியம்.

சுயக் கட்டுப்பாடு

மனம் போனபடி நடந்தால்தான் மகிழ்ந்திருக்க முடியும் என்பதுபோல் சிலர் நடப்பார்கள். ஆனால், அந்த மகிழ்ச்சி நிலைக்காது.

கதை

கல்வியால்தான் உயரலாம் என்று புரிந்து, மிகுந்த பிரயாசையுடன் படித்து, பெரிய உத்தியோகத்திலும் அமர்ந்திருந்தான் சுப்ரா. ஆனால் பதின்ம வயதிலிருந்தே பெண்களிடம் முறைகேடாக நடந்துகொண்டான். புத்திசாலி ஆகையால், ரகசியமாகத் தொடர்ந்தது அவனது லீலைகள்.

திருமணம் ஆனதும், மனைவி லட்சுமி அவனைத் தெய்வமாகவே தொழுதாள். அவளைப் புகழ்ந்து, `நீ இல்லாமல் நானில்லை!’ என்று பசப்பி அவளை நம்ப வைத்திருந்தான். பெண்களின் மனப்போக்கு புரிந்தவன் ஆயிற்றே!

“உங்களைப் பிள்ளையாகப் பெற உங்கள் அம்மா ரொம்ப புண்ணியம் செய்திருக்க வேண்டும்!” என்று அடிக்கடி தான் கணவரிடம் கூறுவதாக லட்சுமி என்னிடம் தெரிவித்தபோது, எனக்குப் பரிதாபம் மேலிட்டது. அப்போது எனக்கு அவன் குணம் தெரியும்.

முப்பது வருடங்கள் கழித்து, அவனுடைய உண்மையான சுபாவம் லட்சுமிக்குப் புரியவந்தது. `எவ்வளவு ஏமாளியாக இருந்திருக்கிறோம்!’ என்று தன்மேலேயே வெறுப்பு வந்தது.

இப்போது அவள் கை ஓங்கியது. அவன் நடுநடுங்கிப்போனான்.

பெரிய உத்தியோகமும், யோசிக்காது செலவழிக்கும்படி வருமானமும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி; அதனால் மகிழ்ச்சி என்று நினைத்தவன் சுயக் கட்டுப்பாடு இல்லாததால் மகிழ்ச்சியை இழந்தான். தன்னைச் சுற்றி இருந்தவர்களின் மகிழ்ச்சியையும் பறித்தான்.

நம்மையே நாம் விரும்பி, பிறர்மேலும் அன்பு செலுத்துவது மகிழ்ச்சியை அளிக்கும் வழி.

“ஒங்ககிட்ட சொன்னேனா? எனக்குப் பேரன் பிறந்திருக்கான்! இப்பவே முழிச்சு முழிச்சுப் பாக்கறான்!” என்று மூன்று மாதக் குழந்தையைக் கண்டு மகிழ்ந்து, பெருமை பேசும் தாத்தா இதைப் புரிந்துகொண்டிருப்பவர்.

கடுமையான உழைப்பு, எளிமை, கருணை ஆகிய குணங்கள் பொருந்தியவர்களே தாமும் மகிழ்ந்து, பிறரையும் மகிழவைப்பவர்கள்.

ஒரு சிறுமி தன்னிடம் அன்பாக இருந்த சித்தியைப் பார்த்து மகிழ்ந்து கூறிய வார்த்தைகள்: “நீதான் ஒலகத்திலேயே அழகானவ!”

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *