நாகேஸ்வரி அண்ணாமலை

நான் எத்தனையோ திருமணங்களில் கலந்துகொண்டிருக்கிறேன்.    ஆனால் போன வாரம் நான் கலந்துகொண்ட திருமணம் மிகவும் வித்தியாசமானது.  கல்யாணம் நடந்த இடம், சூழ்நிலை, திருமணம் செய்துகொண்டவர்கள், கல்யாணச் சடங்குகள், வந்திருந்த விருந்தினர்கள் என்று எல்லாமே வித்தியாசமாக இருந்தன.

திருமணம் நடந்தது அமெரிக்காவில் மிகவும் பெயர்பெற்ற ஸயான் தேசியப் பூங்காவில்.  இது இயற்கை எழில் கொஞ்சும் உயர்ந்த மலைகளும் ஆங்காங்கே சிறு ஆறுகளும் பல வகையான செடி கொடிகளும் மரங்களும் உள்ள மலைப்பிரதேசம்.   அமெரிக்காவில் இயற்கை வளத்திற்கா பஞ்சம்?  அந்த இயற்கை வளங்களை  ரசிப்பதற்கு அமெரிக்க அரசு எத்தனையோ வசதிகளைச் செய்து கொடுத்திருக்கிறது.  நானும் என் மகளும் சிகாகோவிலிருந்து விமானத்தில் லாஸ் வேகஸ் நகருக்குச் சென்று பின் அங்கிருந்து வாடகைக் கார் ஒன்றை எடுத்துக்கொண்டு ஸயான் பூங்காவிற்குச் சென்றோம்.  இந்தப் பூங்கா இருப்பது ஊட்டா என்னும் மாநிலத்தின் தென்கிழக்குப் பகுதியில்.  லாஸ் வேகஸ் இருப்பது நெவாடாவின் தெற்குப் பகுதியில்.  லாஸ் வேகஸிலிருந்து ஸயான் பூங்காவிற்கு அரிஸோனா மாநிலத்தின் வடமேற்குப் பகுதி வழியாகப் போவதுதான் குறுகிய வழி.  ஆக மூன்று மாநிலங்களின் வழியாகப் போகும்போது மூன்றிலும் வெவ்வேறு நேரம்.  நெவாடா வேறு தீர்க்க ரேகையில் (longitude) இருப்பதால் அங்கு ஒரு நேரம்.  அரிஸோனாவும் ஊட்டாவும் ஒரே தீர்க்கரேகையில் இருந்தாலும் அரிஸோனா மற்ற மாநிலங்களைப்போல் வசந்தகாலம் ஆரம்பித்தவுடன் கடிகாரத்தை ஒரு மணி நேரம் முன்னால் வைத்துக்கொள்வதில்லை.  அதனால் அரிஸோனாவில் மூன்று மணி என்றால் ஊட்டாவில் நான்கு மணி ஆகியிருக்கும்.  லாஸ் வேகஸ் அடுத்த தீர்க்கரேகையில் இருப்பதால் அங்கு நேரம் இரண்டுதான்.  இப்படிப் பல கால நேரங்களில் (Time Zones) பயணித்தது ஒரு சுவையான அனுபவம்.   பக்கத்துப் பக்கத்து ஊர்கள் வெவ்வேறு மாநிலங்களில் இருப்பதால் சில மைல்கள் சென்றவுடனேயே ஒரு மணி நேரம் முன்னால் இருப்போம்.

நெவாடாவின் தெற்குப் பகுதி, ஊட்டாவின் தென்கிழக்குப் பகுதி, அரிஸோனாவின் வட மேற்குப் பகுதி ஆகியவை மலைகள் அடர்ந்த பாலைவனப் பிரதேசம்.  சாலைகளில் நிறையக் கார்களைப் பார்க்க முடியாது.  சில சமயங்களில் நாம் மட்டும்தான் காரில் போய்க்கொண்டிருப்போம்.  முன்னாலும் பின்னலும் யாரையும் பார்க்க முடியாது.  பரந்து விரிந்து கிடக்கும் அமெரிக்காவில் இந்தப் பாலைவனப் பிரதேசத்தில் நிறையப் பள்ளத்தாக்குகள் இருக்கின்றன.  அவற்றில் மிகவும் அழகானது கிராண்ட் கான்யான் (Grand Canyon).  செங்குத்தான பாறைகளும் பல வண்ணங்களில் காட்சியளிக்கும் மலைகளும் கண்ணுக்கு விருந்து.  இவ்வளவு தூரம் வந்த பிறகு இந்த எழில்மிகு கான்யானைப் பார்த்துவிடலாம் என்று திட்டமிட்டு அங்கு சில மணி நேரங்கள் தங்கி அந்த எழிலை ரசித்துவிட்டு ஸயான் பூங்காவிற்குச் சென்று அங்குள்ள ஒரு ஓட்டலில் தங்கினோம்.

திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் ஸயான் பூங்காவிற்கு வருவதற்கு உல்லாசப் பயணம் ஏற்பாடு செய்பவர்களின் பேருந்துகளிலோ அல்லது நாமாக சொந்தக் காரிலோ அல்லது வாடகைக் காரிலோதான் செல்ல வேண்டும்.   பொதுப்போக்குவரத்து வசதிகள் கிடையாது.

ஸயான் பூங்காவைக் கடந்து அதன் விளிம்பில் இருக்கும் ஸ்பிரிங்டேல் என்னும் ஊரில் தங்கினோம்.  நாங்கள் தங்கிய ஓட்டல் கார்களை நிறுத்திக்கொள்ள வசதியான மோட்டல்.   அறைகள் எல்லாம் அத்தனை சுத்தம்.  அது மட்டுமல்ல, விசாலமான அறைகளில் நேர்த்தியான படுக்கைகளோடு குளிர்சாதனப் பெட்டி, மைக்ரோவேவ் அவன் (microwave oven) என்று பல வசதிகள்.  சமைப்பதற்கு அடுப்புகள் இல்லையென்றாலும் மைக்ரோவேவ் அவனில் சமைத்துக்கொள்ளலாம்.  வீட்டிலேயே சமைக்காத அமெரிக்கர்கள் ஓட்டல் அறைகளில் சமைக்கப் போகிறார்களா என்ன.  இருந்தாலும் இந்த வசதிகள் இருக்கின்றன.  ஸயான் பூங்காவிற்குள் இலவச ஷட்டில் வசதி உண்டு.  உல்லாசப் பயணிகள் நடப்பதற்கு ஏதுவான இடங்களில் (trails) ஷட்டிலை நிறுத்துகிறார்கள்.  இப்படி எட்டு இடங்கள் இருக்கின்றன.  ஏதாவது ஒன்றில் இறங்கி நடந்துவிட்டு (சில இடங்கள் ஒரு மைல் தூரம் இருக்கின்றன.  இதற்கு மேல் நீளமாக இருக்கும் பாதைகளும்  உயரத்தில் ஏற வேண்டிய நடைபாதைகளும் உண்டு.)  மறுபடி ஷட்டில் நிற்கும் இடத்திற்கு வந்துவிடலாம். திருமணம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் இரண்டு நாட்கள் நடந்தாலும் இடையிடையே நிறைய நேரம் இருந்ததால் திருமணத்தில் கலந்துகொள்ள வந்தவர்கள் –முக்கியமாகப் பல இளவயதினர் – இந்த நடைபாதைகளில்  நடந்து பொழுதை இனிமையாகக் கழித்தனர்.

திருமணத்திற்கு முந்தின நாளே வந்திருந்த விருந்தினர்களுக்கு மதிய உணவிற்கு அங்கிருந்த ஒரு ஓட்டலில் ஏற்பாடு செய்திருந்தனர்.  ஓட்டலுக்கு வெளியே, மரங்களுக்கு அடியில் சாப்பிடுவதற்கு ஏதுவாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.  காலை  உணவைத் தங்கியிருக்கும் ஓட்டலிலேயே எல்லோரும் முடித்துக்கொண்டோம்.   திருமணம் செய்துகொள்ளப் போகும் தம்பதியரில் ஒருவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றாலும் மதிய உணவில் இந்தியச் சாப்பாடு எதுவும் இல்லை.  அன்றைய இரவு விருந்திலும் மறு நாளைய இரவு விருந்திலும் இந்தியச் சாப்பாடு எதுவும் இல்லை.  அங்கிருந்த ஓட்டலில் இந்தியச் சாப்பாடு சமைப்பதற்கு வசதிகளும் சமையல்காரர்களும் இல்லை என்று நினைக்கிறேன்.  அன்று இரவு ஓட்டலுக்குள் எல்லோரும் அமர்ந்து சாப்பிடும் வகையில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.  அதன் பிறகு மணமக்களைப் பற்றி நண்பர்கள், உறவினர்கள், அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் உரையாற்றினார்கள்.  அதன் பிறகு நீண்ட நேரம்  விருந்தினர்களும் மணமக்களும் மேற்கத்திய நடனமாடினர்.

திருமணம் ஸயான் பூங்காவிற்கு உள்ளேயுள்ள ஒரு சிறு ஆம்ஃபி தியேட்டரில் (amphitheater) நடந்தது.  இது ஒரு திறந்தவெளி தியேட்டர்.   அவரவர்கள் தங்கியிருந்த ஓட்டல்களிலிருந்து திருமணம் நடந்த இடத்திற்கு வாகனங்களில் அழைத்துச் சென்றார்கள்.  எல்லோர் முகத்திலும் ஒரு குதூகலம்.   இப்போது ஸயானில் சூரியன் மறைவதற்கு இரவு எட்டு மணியாகிறது.  அதனால் வெயிலுக்கு வசதியாக எல்லோருக்கும் குடைகள் வழங்கினார்கள்.   அடிக்கடி இந்த மாதிரிப் பாலைவனப் பிரதேசத்தில் தாகம் எடுக்கும் என்பதால் தண்ணீர் பாட்டில்களும் வழங்கினார்கள்.  அதில் மணமகன்கள் இருவர் பெயர்கள் அடங்கிய லேபிள் ஒட்டப்பட்டிருந்தது.  தியேட்டரில் ஒரு சிறிய மேடை இருந்தது.  மேடைக்கு முன்னால் விருந்தினர்கள் அமருவதற்கு நீண்ட பெஞ்சுகள் இருந்தன.  சரியாக ஐந்து மணிக்கு மணமகன்கள் இருவரும் – ஆம், தம்பதிகள் இருவரும் ஆண்கள்; இது ஒரு ஓரின ஈர்ப்பு உள்ள இருவர் செய்துகொள்ளும் திருமணம் – அவர்களுடைய தாய்மார்கள் அழைத்துவர மேடைக்கு வந்தனர்.  இந்தியாவைச் சேர்ந்த மணமகன் குஜராத்தி பாணியில் உடை அணிந்திருந்தார்.  அமெரிக்க மணமகன் அமெரிக்க பாணியில் உடை அணிந்திருந்தார்.  நிகழ்ச்சி நிரல் பற்றிய அட்டவணையை எல்லோருக்கும் அங்கு வந்தவுடனேயே வழங்கினர்.  அது மறுசுழற்சி செய்யப்பபட்ட காகிதத்தால் ஆனது.  (திருமண அழைப்பிதழை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தனர்.)  ஸயான் பூங்காவிற்குள் நெருப்பு மூட்டக் கூடாது என்பதால் இந்திய மணமகனின் உறவினர் ஒருவர், நெருப்பைச் சாட்சியாக வைத்துத் திருமணம் நடக்க வேண்டும் என்பதால் மூன்று பெரிய மெழுகுவர்த்திகளை ஏற்றினார்.  இதை அக்னியாகப் பாவித்து மணமக்கள் நான்கு முறை அதை வலம் வந்தனர்.  ஒவ்வொரு சுற்றும் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் வாழ்வின் நான்கு நிலைகளைக் குறிப்பதற்காக.  எல்லா நிகழ்ச்சிகளும் இந்து அல்லது கிறிஸ்தவ சமய பாரம்பரிய வழக்கங்களை அடிப்படையாகக் கொண்டவையாக இருந்தன.  அமெரிக்க மணமகனின் தம்பியின் மகன் – மூன்று வயதுக் குழந்தை – மேடைக்கு வந்து இரண்டு மோதிரங்களைத் திருமணத்தை நடத்தி வைத்தவர் கையில் கொடுத்தான்.  திருமண நிகழ்ச்சிகள் ஆரம்பிப்பதற்கு முன் அந்தக் குழந்தைக்கு மேடைக்கு எப்படிச் செல்வது, யார் கையில் மோதிரங்களைக் கொடுப்பது என்பனவற்றிற்குப்  பயிற்சி கொடுத்தார்கள்.  திருமணத்தை நடத்திவைத்த ஹார்வேர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியரும் ஓரின ஈர்ப்பு உள்ளவர்தான்.

திருமணத்திற்கு வந்திருந்தவர்களை வரவேற்பதற்கு அமெரிக்க மணமகனின் தம்பி ஆங்கிலத்தில் ஒரு பாட்டுப் பாடினார்.  அவர் ஒரு நாடகமேடை நடிகர்.  அதன் பிறகு இந்திய மணமகனின் பெற்றோர்களும் அமெரிக்க மணமகனின் தாயும் (இவருடைய தந்தை இரண்டு வருடங்களுக்கு முன்னால் இறந்துவிட்டார்.) தனித்தனியாக மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.  அதன் பிறகு மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டு முத்தமிட்டுக்கொண்டனர்.  கடைசியாகக் காந்திஜிக்குப் பிடித்த வைஷ்ணவ ஜனதோ என்ற பாடலோடு திருமண நிகழ்ச்சிகள் முடிவடைந்தன.  விருந்தினர்களுக்கு நம் திருமணங்களில் பையில் தேங்காய் வைத்துக் கொடுப்பதுபோல் ஒரு சணலில் செய்த பையில் மணமக்கள் இருவரும் அவர்கள் வாழ்ந்த ஊர்களுக்கே உரிய சிறப்புப் பொருள்களை வைத்துக் கொடுத்தனர்.  கடைசியாக போட்டோ எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி.  எல்லோரும் எல்லோருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.  இரவு மறுபடி வெளியிடத்தில் விருந்து.  விருந்து ஆரம்பிக்கும் முன் அமெரிக்க மணமகனின் தம்பி உரையாற்றினார்.  அவர்களது தந்தை உயிரோடு இருந்திருந்தால் அவருடைய அண்ணனின் திருமணத்தில் உற்சாகமாகக் கலந்துகொண்டிருந்திருப்பார் என்று குரல் தழுதழுக்கக் கூறினார்.  சைவ, அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன.  விருந்திற்குப் பிறகு விரும்பியவர்கள் எல்லாம் மேற்கத்திய நடனம் ஆடினர்.  இரவு பதினொரு மணிவரை இது நடந்தது.

மணமகன்கள் இருவரும் அறிவுஜீவிகள்; இருவரும் அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களாக வேலைபார்ப்பவர்கள்.  திருமணத்திற்கு முன்பு மூன்று வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தவர்கள்.  பரந்த மனப்பான்மை உடையவர்கள்.  தங்கள் தங்கள் நாட்டிற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள்.   மதச்சார்பற்றவர்கள்.  (திருமண மேடைக்கு அருகில் ஒரு மேஜையில் சிறிய கணேசர் உருவச்சிலை வைக்கப்பட்டிருந்தது.  எல்லா இந்து மத வைபவங்களிலும் கணேசரை முன்வைத்துத்தான் நிகழ்ச்சிகளை ஆரம்பிப்பார்கள் என்பதால்தான் இந்த ஏற்பாடு என்று சொன்னார்கள்.) உலகில் சமத்துவமின்மையை ஒழிக்கப் பாடுபடுபவர்கள்.  அமெரிக்க மணமகனுக்கு நன்றாகச் சமைக்க வரும்.  பல வகையான கேக்குகளை ‘பேக்’ பண்ணுவதோடு இந்திய உணவு வகைகளையும் சமைப்பார்.

திருமணத்திற்கு வந்தவர்களில் சிலர் ஓரின ஈர்ப்பு முறையில் திருமணம் செய்துகொண்டவர்கள்.  இவர்கள் உட்பட எல்லோரும் தம்பதிகளை மனமார வாழ்த்தினர்.  உலகில் பல நாடுகளில் ஓரின ஈர்ப்பு உள்ளவர்களை தீண்டத்தகாதவர்கள் என்றும் சமூகத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்பட வேண்டியவர்கள் என்றும் நினைக்கிறார்கள்.  சில சமூகங்களில் அவர்களுக்கு மரண தண்டனையே வழங்கப்படுகிறது.  அமெரிக்கவிலோ சில மாநிலங்களிலாவது அவர்களும் மற்றவர்களைப்போல் நடத்தப்படுகிறார்கள்.  அவர்களில் இருவர் திருமணம் செய்துகொண்டால் அவர்களுடைய திருமணத்தை சட்டபூர்வமாக ஆதரிக்கிறார்கள்; வாழ்த்துகிறார்கள்.  அப்படித் திருமணம் செய்துகொண்டவர்களுக்கு ஆண்-பெண்ணாகத் திருமணம் செய்துகொண்டவர்களுக்கு அளிக்கப்படும் எல்லா உரிமைகளும் வழங்கப்படுகின்றன.  அமெரிக்கா பல விஷயங்களில் முன்னணியில் இருப்பதுபோல் இதிலும் முன்னணியில் இருக்கிறது.  இதுதான் அமெரிக்காவின் தனித்துவம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *