இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . ( 239 )

அன்பினியவர்களே !

அன்பான வணக்கங்களுடன் அடுத்த மடலில் உங்களுடன் உறவாடுவதில் மகிழ்கிறேன். காலச்சக்கரம் கனவேகத்தில் சுழல்கின்றது. நேற்றிருந்தோர் இன்றில்லை. இன்றிருந்தோர் நாளயில்லை இதுதான் வாழ்வின் யதார்த்தம். மனிதன் காட்டில் வேட்டையாடி வாழ்ந்திருந்த காலம் முதல் இன்று நாட்டினில் நாகரீகமாக் சகல வசதிகளுடன் வாழும் இக்காலம் வரை மனிதவாழ்க்கையின் மாற்றங்கள் எண்ணிக்கையற்றவை. மாற்றங்களில் பல காலக்கட்டாயத்தின் அடிப்படையில் நிகழ்கின்றன. வேறுசில மனித பேராசையினால் மனிதர் மீது திணிக்கப்படுகின்றன. அது எவ்வகை மாற்றங்களாயிருப்பினும் அவற்றை ஏற்றுக் கொண்டு அதற்கமைய நாம் வாழப்பழகிக் கொண்டால்தான் வாழ்க்கை இலகுவாகிறது. வாழ்க்கை என்றுமே இலகுவாவதில்லை. அவ்வாழ்க்கையை கையாளும் முறையில் நாம் திறமைசாலிகளாக ஆகுவதன் மூலம் வாழ்க்கை இலகுவாவது போல எமக்குத் தோற்றமளிக்கிறது…

english elections 2
“ நடக்கும் என்பார் நடக்காது , நடக்காது என்பார் நடந்து விடும் ” என்பது கவியரசரின் பாடல் ஒன்றின் வரிகள். எதற்காக இந்தத் திடீர் வரிகள் எனும் எண்ணம் எழுகிறதா ? கடந்த மடல்களில் இங்கிலாந்துப் பிரதமரால் சுமார் இரு மாதங்களுக்கு முன்னால் அறிவிக்கப்பட்ட திடீர் பொதுத்தேர்தலைப் பற்றி தெரிவித்திருந்தேன். கடந்த வாரம் 8ம் திகதி இப்பொதுத்தேர்தல் நடைபெற்றது.. ஒன்பதாம் திகதி காலை பொதுத்தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. இம்முடிவு ஓரளவு எதிர்பார்க்கப்பட்ட முடிவாக இருந்தாலும் , பல கோணங்களில் முற்றிலும் எதிர்பார்க்கப்படாத ஒரு முடிவு என்றே கூறவேண்டியிருக்கிறது. ஏனென்கிறீர்களா ?

இப்பொதுத்தேர்தலுக்கான அவசியம் ஒன்றும் இருக்கவேயில்லை. முன்னால் பிரதமர் டேவிட் கமரன் அவர்கள் தனது பதவியை இராஜினாமாச் செய்த பின்னால் பிரதமராகிய தெரேசா மே அவர்களுக்கு பாராளுமன்றத்தில் கணிசமான அளவு பெரும்பான்மை இருந்தது. பலமுறை ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் திரும்பத் திரும்ப இப்போது பொதுத் தேர்தலுக்கு அவசியமேயில்லை என்று அடித்துக் கூறிவந்தார் பிரதமர். அப்படிக் கூறி வந்தவர் ஒரு அரசியல் கணக்குப் போட்டார்.

எதற்காக ?

பிரதான எதிர்க்கட்சியான லேபர் கட்சிக்குள் பலமான உட்பூசல்கள்
அதன் தலைவரான ஜெர்மி கோர்பன் மீதான அவரது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கையில்லாத் தன்மை ஜெர்மி கோர்பன் அவர்களின் தீவிர இடதுசார சோசலிஸக் கொள்கைகளுக்கெதிரான இங்கிலாந்துப் பெரும்பான்மையான வலதுசார ஊடகங்களின் தொடர் தாக்குதல்கள்

என்பன பொதுக் கருத்துக் கணிப்பில் தொடர்ந்து அரசிலிருக்கும் கன்சர்வேடிவ் கட்சியை விட 20 புள்ளிகள் பின் தள்ளி கணிப்புகளைக் கொடுத்தது.. பிரதமருக்கு ஒரு இலட்ச்சிய வேட்கை அதாவது ஜெர்மி கோர்பன் என்பவர் இங்கிலாந்தின் பிரதமராவது என்பதை எப்போதும் இங்கிலாந்து மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், தனது கட்சியோ கருத்துக் கணிப்பில் 20 புள்ளிகள் முன் நிற்கின்றது. இந்நிலையில் தான் பொதுத்தேர்ர்தலை நடத்தினால் லேபர் கட்சி படு தோல்வியையே அடையும். தானும் தனக்கு மக்கள் தான் நினைத்தபடி இந்த “ப்ரெக்ஸிட்” எனப்படும் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் நிகழ்வை நடத்துவதற்கான அதிகாரத்தை தந்து விட்டார்கள் என்று அறைகூவல் விடுக்க முடியும். அத்தோடு பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மை பலத்தைக் கூட்டி விடலாம். எனும் அரசியல் கணிப்பை முடிவெடுத்தார்.

இங்கேதான் நான் மேற்குறிப்பிட கவியரசரின் வரிகள் உயிர் பெறுகின்றன.. எவைகள் நடக்காது என்று பொதுவான கருத்துக்களாக இருந்தனவோ அவைகள் நடந்து விட்டன. அனைத்து எதிர்பார்ப்புகளையும் தகர்த்து படு தோல்வியடையும் என்று எதிர்பார்த்திருந்த லேபர் கட்ச்சி தனது பாராளுமன்றப்பலத்தை 30 ஆசனங்களினால் கூட்டிவிட்டது. எவரினால் தமது கட்ச்சி அழியப்போகிறது என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் கூப்பாடு போட்டார்களோ அவர் லேபர் கட்ச்சியை என்றுமில்லாதவாறு 40 சதவீத வாக்குகளைப் பெறக்கூடிய ஒரு மாபெரும் இயக்கமாக மாற்றி விட்டார், அதே சமயம் அமோக வெற்றியீட்டும் என்ரு கருதப்பட்ட பிரதமரின் கன்சர்வேடிவ் கட்சியோ எண்ணிக்கையில் அதிக அளவு ஆசனங்களைக் கைப்பற்ரி இருந்தாலும் தனது பெரும்பான்மை பலத்தை இழந்து விட்டது. தனியாக அரசமைக்க தேவையான குரைந்த பட்ச எண்ணிக்கையான 326 ஆசனங்களைக் கைப்பற்றாது கூடரசாங்கம் அன்ரி மைனாரிட்டி எனப்படும் சிறுபான்மை அரசை அமைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது..

இந்த முடிவு பிரதமருக்குக் கிடைத்த மாபெரும் தோல்வி என அரசியல் அவதானிகளால் கருதப்படுகிறது. இந்நாடு என்னாலா அன்ரி தீவிர சோசலிஸவாதியான ஜெர்மி கோர்பனினாலா நிர்வகிக்கப்பட வேண்டும்? எனக்கு அதிகாரம் தாருங்கள் நானே ஒரு சிறந்த தலைமையை இந்நாட்டிற்குத் தர்க்கூடியவள் என மேடைதோறும் தன்னம்பிக்கையுடன் முழங்கிய பிரதமரின் கோரிக்கை மக்களால் நிராகரிக்கப்பட்டு விட்டது. தன்னுடைய நேர்மையயும், உண்மைத்தன்மையௌயுமே ஆயுதங்களாகக் கொண்டு மக்கள் முன்றலில் பிரச்சாரத்தை மேற்கொண்ட ஜ்ர்மி கோர்பனின் கட்சியான லேபர் கட்சி எண்ணிக்கையில் அதிக ஆசனங்களைக் கைப்பற்றியிருக்காவிட்டாலும் ஜெர்மி கோர்பன் வெற்றி பெற்றதாகவே அரசியல் அவதானிகளால் கணிக்கப்படுகிறது..

சரி இவ்வளவு நடந்திருக்கிறதே இங்கிலாந்தின் தற்போதைய அரசியல் நிலைப்பாடுதான் என்ன ? வச யர்லாந்து ஜக்கிய இங்கிலாந்தின் ஒரு அங்கம். அங்கு பொதுத் தேர்தலில் இரண்டு கட்சிகள் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளன. வட அயர்லாந்து ஜக்கிய இராச்சியத்திலிருந்து விலகி அயர்லாந்து நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும் என்று போராடி வரும் “சின் வெயின்” எனும் கட்சி 8 பாராளுமன்ற ஆசனங்களையும், வட அயர்லாந்து ஜக்கிய இராச்சியத்துடன் இணைந்திருக்க வேண்டும் என்று போராடி வரும் ” ஜனநாயக ஜக்கிய (டியூபி) ” கட்சி பத்து பாராளுமன்ற ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன. “சின் வெயின்” ஜக்கிய இராச்சியத்தின் இறைமையை ஏற்றுக் கொள்ளாததினால் இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் தமது இருக்கைகளை ஏற்றுக் கொள்வதில்லை. மற்றக் கட்சியான டியூபி , கன்சர்வேடிவ் கட்சியுடன் நெருக்கமான் உறவுகளைக் கொண்டுள்ளது. கன்சர்வேடிவ் கட்சியும், டியூபி கட்சியும் கன்சர்சேடிவ் கட்ச்சியின் அரசுக்கு ஸ்திரமான் பெரும்பான்மைக்கான ஆத்ரவை நல்கும் பேச்சுவார்த்தையில்; ஈடுபட்டிருக்கின்றன. கொள்கையளவில் இங்கிலாந்து அரசைத் தாம் ஆதரிப்பதாகக் கூறியுள்ள போதும் தமது ஆதரவுக்கான சலூகைகளுக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கின்றன.

கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் முடிவு தொங்கு பாராளுமன்றமே எனும் கருத்துக்கணிப்புகளினால் தமது ஆதரவை அப்போது கன்சர்வேடிவ் கட்ச்சி தேடும் எனும் நம்பிக்கையில் அதற்கான முனைப்புகளில் அப்போதைய டியூபி தலைவர் ஈடுபட்டிருந்தார். ஆனால் தேர்தல் முடிவுகள் கன்சர்வேடிவ் கட்ச்சிக்கு பெரும்பான்மையை நல்கியதனால் அவர்களது அந்த எதிர்பார்ப்பு சிதைந்து போனது. ஆனால் இம்முறை கன்சர்ட்வேடிவ் கட்சி அமோக வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பார்ப்புகள் எதுவுமின்றி இருந்த டியூபி இப்போது எதிர்பாராத வகையில் மிகவும் முக்கியமான ஒரு இடத்தை வகிக்கிறது.

அதேபோல இத்தேர்தலுடன் காணமல் போய்விடுவார் எனும் எதிர்பார்ப்பை முறியடித்து முன்னைவிட அதிகபலத்துடன் லேபர் கட்சியின் தலைமைப்பீடத்தை அலங்கரிக்கிறார் ஜெர்மி கோர்பன். இத்தேர்தலில் அவருக்குக் கிடைத்த வெற்றிகள் இரண்டு ,
அனைவரின் எதிர்பார்ப்பையும் உடைத்து அற்புத்ஜமான் பிரச்சார வெற்றியை அடைந்துள்ளார்

உடைந்து சின்னாபின்னமாகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட லேபர் கட்சிக்குள் அவருக்கெதிராக இருந்த பெரும்பான்மையான பாராளுமன்ற லேபர் கட்சி அங்கத்தினர்களின் ஆத்ரவைப் பெற்று கட்சியைக் காப்பாற்றி விட்டார்
சரி எப்படி ஜெர்மி கோர்பன் இப்படி ஒரு சாதகமான சூழலை உருவாக்கினார் ?

மக்களின் ஆதரவு தனக்கே எனும் தவறான கணிப்பினால் அதீத போக்குக் கொண்டு தன்னிச்சைப்படி மிகவும் எதிர்மறையான ஒரு தேர்தல் அரசியல் பிரகடனத்தை பிரதமர் தேரேசா மே வெளியிட்டது.

மிகவும் வெளிப்படையாக முற்றிலும் மாறுபட்ட ஒரு தீவிர சோசலிஸ அடிப்படையிலான தேர்தல் அரசியல் பிரகடனத்துக்கு மக்கள் வழங்கிய ஆதரவு
மிகவும் எளிமையான், நேர்மையான், தனிப்பட்ட தாக்குதல்களைத் தவிர்த்து ஜெர்மி கோர்பன் அவர்கள் மேற்கொண்ட பிரச்சார முறை அரசியல் தலைவர்களுக்கிடையிலான நேரடி விவாதத்தில் தெரேசா மே பங்கேற்க மறுத்தமை
இதுவரை தேர்தலில் இல்லாதவாறு இளையோர்கள் இத்தேர்தலில் பங்கெடுக்க வைத்து அவர்களின் ஆத்ரவை தமது கட்சிக்குத் திருபுவதில் ஜெர்மி கோர்பன் அடைந்த வெற்றி

இவைகளே இத்தேர்தலின் அதிரடி முடிவுக்கான முக்கிய காரணிகள் எனலாம். தெரேசா மே அவர்கள் தலைமையில் வட அயர்லாந்துக் கட்சியான டியூபி ஆதரவுடன் கன்சர்வேடிவ் கட்ச்சி அரசமைப்பது உறுதியாகி விட்டது. ஆனால் நானே எமது கட்ச்சி இத்தேர்தலில் அடைந்த பின்னடைவுக்குக் காரணம் இதிலிருந்து இக்கட்சியை மீட்பது என் கடமை என்று சூளுரைக்கும் பிரதமர் எத்தனை காலம் தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்வார் என்பது கேள்விக்குறியே என்கிறார்கள் அரசியல் அவதானிகள்.

கன்சர்வேடிவ் கட்சி, லேபர் கட்ச்சி இவையிரண்டுமே ஜரோப்பிய ஒன்ரியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று கடந்த ஆண்டு மக்கள் எடுத்த முடிவை நிறைவேற்றுவதே தமது கடமை என்கிறார்கள். ஆனால் எத்தகைய ஒரு உடன்படிக்கையில் விலகுவது, இவ்விலகல் பேச்சுக்களை எவ்வகையில் அணுகுவது எனப்தில் இருவருக்கும் வேறுபாடு உண்டு. இவ்விரு கட்சிகளுக்கும் விழுந்த வாக்குகள் 80 சத்விகிதத்துக்கும் அதிகம். இதிலிருந்து நாட்டின் பெரும்பான்மையினர் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் “ப்ரெக்ஸிட்” ஜ ஆதரிக்கிறாரெகள் என்பதுவே வாதம். ஆனால் வன்மையான் ப்ரெக்ஸிட்டா அன்றி மென்மையான ப்ரெக்ஸிட்டா என்பதிலேயே தர்க்கம் நிகழ்கிறது. பல முன்னாள் பிரதமர்களும், அரசியல் அவதானிகளும் ப்ரெக்ஸிட் அணுகல் முறையை அனைத்துக் கட்ச்சிகளும் இணைந்த ஒரு குழுவின் மூலம் தீர்மானிப்பதே சாலச் சிறந்தது என்கிறார்கள்,

ஸ்கொட்லாந்து இம்முறை 13 கன்சர்வேடிவ் கட்ச்சி உறுப்பினர்களைப் பாராளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளது. ஸ்கொட்லாந்தின் ஆதரவு இருந்திருக்காவிட்டால் பிரதமர் அரசமைக்கும் சந்தர்ப்பத்தை இழந்து விட்டிருப்பார். இவ்வெற்றிக்குக் காரணம் ஸ்கொட்லாந்து கன்சர்வேடிவ் கட்ச்சியின் தலைவர் ருத் டேவிட்சன் என்ரே கூறுகிறார்கள். இவர் திருமணம் செய்யவிருப்பது இன்னொரு பெண்ணை. இத்தகைய ஓரினத் திருமணங்களை முற்றாக எதிர்க்கும் கட்சி டியூபி. அவர்களுடன் உடன் படிக்கை செய்வதா ? எனக் கொதித்துப் போயிருக்கிறார் ஸ்கொட்லாந்து கன்சர்வேடிவ் கட்ச்சித் தலைவர். அவரையும் அனுசரித்து நடக்க வேண்டிஒய சிக்கலான் சூழலில் தத்தளிக்கிறார் பிரதமர். அனைத்துக்கும் முடிவு டியூபியுடனான பேச்சுக்களில் எத்தகைய முடிவுகளை எட்டுகிறார்கள் என்பதிலேயே இரெஉக்கிறது. அதுமட்டுமன்றி வடாயர்லாந்தின் சட்டசபையில் அதிகாரம் “சின்வெயின்” மற்ரும் “டியூபி” ஆகியவைகளின் கூடமைப்பிலேயே நடந்தது. அதிலே ஏற்பட்ட ஒரு சிக்கலினால் சட்டசபை கலைக்கப்பட்டது. மீண்டும் அங்கு கூட்டாட்சி கொண்டு வருவதற்கான பேச்சுக்கள் ப்ருபுறம் நடந்து கொண்டிருக்கிறது இதற்கு நடுநிலைமையான் மத்தியஸ்தம் இங்கிலாந்து அரசினால் வழங்கப்படுகிறது. தமது ஆட்சியின் உத்தரவாதத்திற்குத் தாம் தங்கியிருக்கும் ஒரு கட்சி ஈடுபட்டிருக்கும் ஒரு பேச்சுவார்த்தையில் இவர்கள் எப்படி நடுநிலைமை வகிக்க முடியும் என்பது பலரது கேள்வியாக இருக்கிறது. இவர்களின் உறவு வடாயர்லாந்தில் மீண்டும் அரசியல் சிக்கலை ஏற்படுத்தி விடுமோ எனும் அச்சம் தோன்ரியுள்ளதுஇ. இச்சிக்கலையும் சமாளித்தாக வேண்டிய சூழல் பிரதமருக்கு உண்டு

“நடக்காது என்பார் நடந்துவிடும்” எனும் உண்மையை உள்வாங்கிக் கொண்ட அரசியல்வாதிகள் மக்களின் முடிவை எவ்வகையில் நோக்கப் போகிறார்கள், எத்தகைய முடிவுகளை எடுக்கப் போகிறார்கள் என்பதை நாம் பொருத்திருந்து பார்க்க வேண்டும். எது எப்படி இருப்பினும் ஜக்கிய இராச்சியம் தனது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பயணத்தில் ஒரு முக்கியமான் சந்தியில் நிற்கிறது என்பதுவே உண்மை..

மீண்டும் அடுத்த மடலில்
சக்தி சக்திதாசன்

சக்தி சக்திதாசன்

சக்தி சக்திதாசன்

Share

About the Author

has written 327 stories on this site.

சக்தி சக்திதாசன்

Write a Comment [மறுமொழி இடவும்]


− 7 = one


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.