போப் பிரான்ஸிஸ் காட்டும் புதிய வழி

நாகேஸ்வரி அண்ணாமலை

எல்லா சமூகங்களிலும் ஓரின ஈர்ப்பு உள்ளவர்களை ஒரு காலத்தில் மன்னிக்க முடியாத குற்றம் புரிபவர்கள் என்று ஒதுக்கிவைத்தார்கள், பழித்தார்கள், சில சமூகங்களில் மரணதண்டனையே கொடுத்தார்கள்.  இப்போது பல சமூகங்களில் அந்த நிலை மாறிவருகிறது.  இஸ்லாம் மதத்தில் இவர்கள் இன்னும் (இந்து மதத்தில் இவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்று எனக்குச் சரியாகத் தெரியவில்லை.  இந்தியாவில் ஓரின ஈர்ப்பு உள்ளவர்கள் அதிகமில்லையே என்று அமெரிக்கர்களிடம் நான் கூறினால் அந்தச் சமூகம் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லையாதலால் நிறையப் பேர் தாங்கள் ஓரின ஈர்ப்பு உள்ளவர்கள் என்று சொல்லிக்கொள்வதில்லை என்று சொல்கிறார்கள்.  இது எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை.). இவர்கள் கசை அடிக்கும் மரண தண்டனைக்கும் உட்படுத்தப்படுகிறார்கள்.  கிறிஸ்தவ மதத்திலும் இவர்கள் முழுவதுமாக அங்கீகரிக்கப்படவில்லை.  இவர்கள் தங்களைப் போன்றோரோடு திருமணம் செய்துகொள்வதும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகவே கருதப்படுகிறது.  ஏனெனில் அவர்களுடைய வேதபுத்தகமான பைபிளில் திருமணம் என்பது ஒரு பெண்ணிற்கும் ஒரு ஆணிற்கும் இடையேயான பந்தம் என்று கூறப்பட்டிருக்கிறதாம்.  அதே பைபிளில் யேசு எல்லோரையும் – ஓரின ஈர்ப்பு உள்ளவர்களையும் – தன்னுள் வரவேற்றார் என்றும்  கூறப்பட்டிருந்தாலும் அவர்கள் பாவம் செய்தவர்கள், அப்படிப் பாவம் செய்தவர்களையும் யேசு மன்னித்து ஏற்றுக்கொண்டார் என்ற பொருளில்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கிறிஸ்தவ மதத்தலைவர்கள் கூறிவந்தார்கள்.  பைபிள் எழுதப்பட்டு இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்த பிறகும் அதைப் பின்பற்ற வேண்டும் என்று நினைப்பது எத்தனை மடமை என்று இவர்கள் இன்னும் உணரவில்லை.

கத்தோலிக்க மதகுருக்களுக்கெல்லாம் தலைவரான போப்பாக நான்கு ஆண்டுகளுக்கு முன் பதவியேற்ற பிரான்ஸிஸ் ஓரின ஈர்ப்பு உள்ளவர்களையும், அப்படி ஓரின ஈர்ப்பு உள்ளவர்களை மணந்துகொண்டவர்களையும் இரண்டு இனத்திலும் சேராதவர்களையும் (transgender) கத்தோலிக்க மதத்திற்குள் சேர்த்து அணைத்துக்கொள்ள வேண்டும் என்று வெகுவாக முயன்றுவருகிறார்.  இவர் முதலிலிருந்தே ஏழைகளின், வறியவர்களின் நலன்களில் அக்கறை செலுத்துபவராகவும் சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டவர்களின் உரிமைகளுக்காகப் பாடுபடுபவராகவும் இருந்து வருகிறார்.  கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களையும் மதச்சார்பற்றவர்களையும் ஏன் கடவுளே இல்லை என்பவர்களையும் தான் அன்பு செலுத்தும் வட்டத்திற்குள் இவர் சேர்த்துக்கொள்கிறார்.  ஏனெனில் இவரைப் பொறுத்தவரை எல்லோரும் இறைவனின் குழந்தைகள், இறைவனின் அன்புக்கும் கருணைக்கும் பாத்திரமானவர்கள்.  ஓரின ஈர்ப்பு உள்ளவர்கள் கத்தோலிக்க மதத்தில் மதக் குருமார்களாக சேவை செய்யலாமா என்று ஒரு முறை இவரிடம் கேட்கப்பட்டபோது ‘அவர்கள் இறைவனுக்குத் தொண்டு செய்ய விரும்பினால் அதை ஏன் தடுக்க வேண்டும்?  அவர்களைப் பற்றி விமர்சிக்க நான் யார்?’ என்று கூறினார்.

இவர் ஒரு வித்தியாசமான மதத்தலைவர்.  யாரும் செய்யத் துணியாத சில சீர்திருத்தங்களைக் கத்தோலிக்க மதத்தில் கொண்டுவர முயன்றுவருகிறார்.  மதத்தின் மூலம் அல்லாமல் சிவில் சட்டப்படி விவாகரத்து செய்துகொண்டவர்களுக்கு திருவிருந்து (communion) கொடுப்பது தவறு என்று இப்போதுவரை இப்படி விவாகரத்து செர்ய்துகொண்டவர்கள் மதத்தலைவர்களால் ஒதுக்கிவைக்கப்படுகிறார்கள்.  இந்த வழக்கத்தை முதன் முறையாகத் தகர்த்து எறியப் பாடுபட்டு வருகிறார் போப் பிரான்ஸிஸ்.  இது கத்தோலிக்க மதக் கோட்பாடுகளில் முக்கியமான திருப்பம்.  ஓரின ஈர்ப்பு உள்ளவர்களையும் கத்தோலிக்க மதத்திற்குள் சேர்த்துக்கொள்ளவும் அவர்களுக்குத் திருவிருந்து கொடுக்கவும் இவர் பாடுபட்டு வருகிறார்.  இதுவரை இவர்களால் கத்தோலிக்க மதச்சடங்களில் முக்கியமானதாகக் கருதப்படும் திருவிருந்தில் கலந்துகொள்ள முடியாது.  இப்போது இவரால் கார்டினலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோசப் டோபின் அமெரிக்காவில் இந்த வழக்கத்தை மாற்றியிருக்கிறார்.

ஜோசப் டோபின் அமெரிக்காவின் நியுஜெர்ஸி மாநிலத்தைச் சேர்ந்த நெவார்க் என்னும் ஊரின் ஆர்ச்டயோஸிஸைச் சேர்ந்தவர்.  இவர் சமீபத்தில் தன் கீழ் இயங்கிவரும் தேவாலயத்தின் கதவுகளை ஓரின ஈர்ப்பு உள்ளவர்களுக்காகத் திற்ந்துவிட்டிருக்கிறார்.  ஐந்து வருஷங்களுக்கு முன்னால் கூட இது நடக்கக் கூடிய விஷயமாகக் கருதப்படவில்லை.  இப்போது போப் பிரான்ஸிஸின் உந்துதலால் இங்கு இது நடந்திருக்கிறது.

இதுவரை தேவாலயத்திற்குள் அனுமதிக்கப்படாத நூறு ஓரின ஈர்ப்பு உள்ளவர்களை ஜோசப் டோபின் வரவேற்றிருக்கிறார்.  அவர்களைப் பொறுத்தவரை இது ஒரு யாத்திரை.  தேவாலயத்தின் மேடைக்கு எதிரே இரண்டு வரிசை பெஞ்சுகளுக்கு இடையே நாற்காலிகளில் இவர்கள் உட்காரவைக்கப்பட்டார்கள்.  நியுயார்க்கிலிருந்தும் அருகில்உள்ள ஐந்து மறைமாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த இந்த நூறு பேரையும் வரவேற்றுப் பேசிய டோபின், ‘இதுவரை நீங்கள் எங்கும் வரவேற்கப்படவில்லை.  உங்கள் சகோதரனாக நான் உங்களை வரவேற்கிறேன்’ என்றார்.  இவர்களுக்கு கத்தோலிக்க மதத்தைப் பொறுத்தவரை மற்றவர்களோடு சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று பாடுபட்டுவரும் ஒரு இயக்கத்தின் தலைவர் ‘கத்தோலிக்க மதத்தில் ஓரின ஈர்ப்பு உள்ளவர்களுக்கான உரிய இடம் பற்றிச் சிந்திப்பதற்கு இது முதல் படி’ என்றார்.  2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஃப்ளோரிடா மாநிலத்தின் ஆர்லேண்டோ நகரில் உள்ள ஓரின ஈர்ப்பு உள்ளவர்களுக்கான கிளப்பில் துப்பாக்கிச் சூடு நடந்தபோது பல கத்தோலிக்க மதகுருமார்கள் அதை வெளிப்படையாகக் கண்டித்துப் பேசவில்லை.  1986-இல் போப்பாக இருந்த இரண்டாவது ஜான் பாலின் உதவியாளர் கார்டினல் ரேட்ஸிங்கர் (இவர்தான் இரண்டாவது ஜான் பாலிற்குப் பிறகு போப்பாக நியமிக்கப்பட்டு பதினாறாவது பெனெடிக்ட் ஆனார்) வாடிகனின் சார்பில் ஓரின ஈர்ப்பு உள்ளவர்களை ஆதரிப்பதைக் கடுமையாக எச்சரித்து எல்லா மதகுருக்களுக்கும் கடிதம் அனுப்பினார்.  இப்போது போப் பிரான்ஸிஸ் பதவியேற்ற  பிறகு பலவித மாற்றங்கள் நடந்து வருகின்றன.

டோபினால் வரவேற்கப்பட்ட ஓரின ஈர்ப்பு உள்ளவர்கள் இப்போது தங்கள் யாத்திரை முடிந்து தாயகம் திரும்பியிருப்ப்து போல் உணர்ந்ததாகக் கண்ணீர் சொரியக் கூறினர்.  மதத்தலைவர்கள் ‘நீங்கள் எல்லோரும் தேவாலயத்திற்குள் அனுமதிக்கப்படுகிறீர்கள் என்று சொல்லி எங்களை வரவேற்றதை ஒரு பெரிய அதிசய நிகழ்ச்சியாகக் கருதுகிறோம்’ என்றனர்.  இந்தத் தேவாலயத்தில் 25 வருடங்களாக டீக்கனாக இருந்த ஒருவர், ‘இத்தனை ஆண்டுகளாக நான் இதற்காகக் காத்திருந்தேன்.  என் பெற்றோர்கள் தாங்கள் உயிரோடு இருக்கும்வரை என்னைப் போன்றோர் நரகத்திற்குத்தான் போவார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தார்கள்.  இப்போது ஓரின ஈர்ப்பு உள்ளவர்களுக்கு கத்தோலிக்க மதம் அளிக்கும் வரவேற்பு என்னுள் ஆழ்ந்த இன்பத்தை அளிக்கிறது’ என்று கண்ணீர் மல்கக் கூறினார்.

மதம் மக்களுக்கு அளிக்க வேண்டியது இப்படிப்பட்ட இன்பம்தான்; தண்டனை அல்ல.

பின் குறிப்பு

நான் போப் பிரான்ஸிஸ் பற்றி எழுதியுள்ள நூல் விரைவில் அடையாளம் பதிப்பகத்தின் மூலம் வெளிவரவிருக்கிறது.

நாகேஸ்வரி அண்ணாமலை

நாகேஸ்வரி அண்ணாமலை

முனைவர்

Share

About the Author

நாகேஸ்வரி அண்ணாமலை

has written 199 stories on this site.

முனைவர்

Write a Comment [மறுமொழி இடவும்]


3 − = two


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.