படக்கவிதைப் போட்டி (116)

பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

19397831_1352736194780576_1187322604_n

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

பிரேம்நாத் திருமலைசாமி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (24.06.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையுமபெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

editor

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

Facebook Twitter Flickr 

Share

About the Author

editor

has written 1142 stories on this site.

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

6 Comments on “படக்கவிதைப் போட்டி (116)”

 • ரா. பார்த்த சாரதி
  R.Parthasarathy wrote on 22 June, 2017, 21:34

  கருமை நிற நிலத்தில் ஓர் இளம் செடி

  கண்ணை கவரும் வண்ணம் முளைத்து எழுந்தது

  தன் கைகளாகிய கிளைகளை பரப்பி நின்றது

  மழைத்துளிக்காக தன் கையேந்தி நின்றது !

  மழை இல்லாமையால் நிலம் வறண்டு போனதே

  நிலத்தடி ஈரத்தில் தன் காலை ஊன்றியதே

  சிறிது ஈரத்திலும் இளம் செடி அழகாய் முளைத்ததே

  புன்முறுவல் பூத்து தன்னை ஆதரிக்க வேண்டுதே !

  பசுமை நிறம் கொண்ட கீழாநெல்லி செடியோ

  உயர்ந்து வளர்ந்து நிழல் தரும் புளிய மர கன்றோ \

  வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம், என செடி நட்டோம்

  செடி வளர்க்க தண்ணீர் பாய்ச்சி வேலி அமைப்போம் !

  வீட்டிற்கு பல மரம் வளர்த்து சுற்றுப்புற மாசினைதடுப்போமே

  இன்றைய சிறு செடியானாலும், நாளை மூலிகையாய்பயன்படுமே

  பூவாகி, காயாகி கனிந்து,மனித இனத்திற்கு என்றும் பலன் தருமே

  மரங்களும், செடிகளும் என்றும்,சுற்றுப்புற சூழலைக் காக்கும்மே !

  ரா.பார்த்தசாரதி

 • நக்கினம் சிவம் wrote on 23 June, 2017, 15:28

  விதை பிளந்து
  மண் பிளந்து
  உலகை காண
  இலை காட்டி
  இருப்பை காட்டி
  என் பிறப்பை காட்டினேன்.

  நீர் காட்ட வேண்டாமா
  என் உயிர்க்கு
  உரம் சேர்க்கும்
  நீரே ஆதாரம்
  என அறிந்தே
  உதவும் நீரே
  எமது ஆதாரம்
  மழை நீரே
  நமக்கு ஆதாரம்.

  உலகின் ஆதாரம்
  நீரென அறிந்தே
  மழை நீரை பெறவே
  மரத்தை பெருக்கு
  மனித நலனுடன்
  பல்லுயிர் ஓம்பும்
  குணத்தை பெருக்குவோம்.

 • பழ.செல்வமாணிக்கம் wrote on 23 June, 2017, 19:54

  மரமாய் மாற ஒரு வரம் : விதை ஒன்று பூமித்தாய் மடியில் விழுந்தது!
  வானத் தந்தை நீரை உணவாய் தந்தது!
  ஆசான் கதிரவன் ஒளியை கொடுத்தது !
  நண்பன் காற்று துணையாய் நின்றது!
  விதை முளைத்து மரமாய் வந்தது!
  பிறந்த காரணம் நினைத்துப் பார்த்தது!
  நன்றிக் கடன் தீர்க்க உறுதி பூண்டது!
  நச்சுக் காற்றைத் தான் ஏற்று,
  நல்ல காற்றை நமக்குத் தந்தது!
  மண்ணுயிர்க்கு நிழல் தந்தது!
  பறவைக்கு வீடு தந்தது!
  பசிக்கு கனி தந்தது!
  மழை வர வழி செய்தது!
  மரத்தின் நன்றியில் ஒரு துளியாவது
  மனிதர் நம்மிடம் இருந்ததுண்டா?
  இருந்திருந்தால் சிறப்போடு வாழ்ந்திருப்போம் !
  தாயை மதிக்கவில்லை!
  தந்தை சொல் கேட்கவில்லை!
  பாசம் தெரியவில்லை!
  நேசம் எங்குமில்லை
  பிறந்த மண்ணை நினைக்கவில்லை!
  பொது நலத்தில் நாட்டமில்லை!
  தாய் மொழியை கற்கவில்லை!
  மரங்கள் வளர்க்கவில்லை!
  பயிர்த் தொழிலும் செய்யவில்லை!
  சுயநலம் பெருக்கி விட்டோம் !
  பிறர் நலம் மறந்து விட்டோம்!
  பகுத்தறிவு இருந்தாலும் பாவிகளாய்
  மாறி விட்டோம்!
  மரங்களின் பொது நலத்தை கற்றுக் கொள்ள
  வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம்!
  மனிதனாய் சுய நலத்தோடு வாழ்ந்தது மாறி!
  இனி மரங்களாய் பொது நலத்தோடு வாழ்ந்திருப்போம் !

 • வேங்கட ஸ்ரீநிவாசன் wrote on 24 June, 2017, 14:46

  துளிர்

  பழையன கழிதலும்
  புதியன புகுதலும்
  வழுவல என்பதால்
  பழையதை அழித்தோம்
  பழமையைக் களையவில்லை
  புதியனக் கொண்டுவந்தோம்
  புதுமையைப் புகுத்தவில்லை

  விலை போன மனிதர்களால்
  கலை குலைந்து தலை தாழ்ந்து
  சுயம் இழந்து பாழ்பட்டு நின்றோம்
  உயர் தொழில் விடுத்து
  செயற்திறம் மறந்து
  உயிர் மட்டும் கொண்டு வாழ்கின்றோம்

  வீண்ஜம்ப வார்த்தை வீசும் வித்தகனில்
  கூன்போட்டு கால்பிடிக்கும் அடிமைகளில்
  வெள்ளித்திரை வலம்வந்த நாயகனில்
  கொள்கையற்று குழுமாறும் வஞ்சகனில்
  தலைவர்களைத் தேடுகின்றோம் – அவர்
  தகுதிகளைப் பார்க்கவில்லை – வெற்று
  கூட்டத்தைப் பார்த்திருந்தோம்
  கொள்கைகளைப் பார்க்கவில்லை

  வெள்ளி பல அள்ளித்தரும்
  வெளிநாட்டு வேலை,
  எட்டடுக்கு மாடிதன்னில்
  குடியமர்த்த வழிசெய்யும் குலமகள்,
  சுற்றிபலர் அடிபணியும் ஆடம்பரம்
  பெற்றிங்குத் தந்திடவே வழிசெய்யும்
  பட்டமதைப் படித்திடவே
  பாடசாலை தேடுகின்றோம்
  சகமனிதன் தனைக் காத்து
  சமுதாயம் உயர்த்துமொரு
  வாழ்க்கைக்கல்வி கற்பதற்கு
  ஒரு நாளும் விழையவில்லை

  சக மனித உணர்வுகளை
  சமுதாய விழுப்பங்களை
  இழைந்தளிக்கும் கல்விதனை
  இளைய சமுதாயம் பெற
  இன்றேனும் முயன்றிடுவோம்

  அவர் மனதில்
  அதிகார போதை நீக்கி
  எதிர்கால அச்சம் தவிர்த்து
  கதிர்நெல் போல் பலனளிக்கும்
  மதியூகத் தலமைதனைத்
  துளிர்விடச் செய்திடுவோம்

 • செண்பக ஜெகதீசன்
  Shenbaga jagatheesan wrote on 24 June, 2017, 18:59

  மரம் நடு…

  நீரும் நிழலும் பெருகிடவே
  நிச்சயம் வேண்டும் மரமதுவே,
  பாரில் உனது பேர்விளங்கப்
  பயன்மரம் ஒன்றை நட்டிடுவாய்,
  நேரில் நடாது போனாலும்
  நிற்கும் செடிக்கு நீரூற்று,
  வேரது அறவே பிடுங்காதே
  வெட்டி மரங்களை வீழ்த்தாதே…!

  -செண்பக ஜெகதீசன்…

 • பெருவை பார்த்தசாரதி
  பெருவை பார்த்தசாரதி wrote on 24 June, 2017, 23:37

  படத்துக்கான தலைப்பு::

  நோய் வாயில்
  வீழாமல் காக்கும்
  கீழாநெல்லி மூலிகை
  ==================

  சிறுங் கற்களுக்கிடையில் குப்பை கூளங்களில்
  குறுஞ் செடியாய் தரைமுழுதும் பரவியிருக்கும்.!

  சிறுசிறு உடலுபாதை உடனடி தீர்க்குமூலிகை
  சிறுஇலை சற்றுகீழே சிறுநெல்லி காயிருக்கும்.!

  காலைமாலை யிதன்வேரை யரைத்துக் குடிக்க
  காமாலை நோய்காணாது காததூரம் ஓடிவிடும்.!

  சத்தானயிலைச் சாற்றுடன் ஆவின் பால்சேர
  சாப்பிட்டால் தப்பிக்கலாம் சாவே இல்லை..!

  நீரில்லா இடத்தினிலே நிலையாய் வளருமிது.!
  நீரிழிவை குணமாக்கும் நிணநீர் சுரக்கவுதவும்.!

  குற்றுச் சிறுசெடியான இருவிலை மூலிகையாம்.!
  பற்று கொண்டே வளர்க்காமல் வளருமினமாம்..!

  விதைக்காமலே மண்ணிலிருந்து வெளி வரும்..!
  விழுதாக அரைத்துண்டால் வயிறுவலி விலகும்.!

  உடல்முழுதும் மருத்துவ குணம்கொண்டு..மனித
  உடலினுள் எழும்நோய் தீர்க்கும் அரு மருந்தாகும்.!

  வெப்ப மண்டலம்தனில் வளருமது நம்முடல்..
  வெப்பத்தைத் தணிக்குமதன் தளிர் இலைச்சாறு.!

  வாய்வயிறு தொண்டை குடல்புண் அகற்றும்..கீழ்
  வாய்நெல்லியென பெயர்பெரும்சிறு செடியாகும்.!

  கசப்பான நல்விஷயமே வாழ்வில்பின் இனிக்குமாம்
  கசப்பும் துவர்ப்பும் உடல்நலத்திற்குமிக அவசியம்.!

  கசப்புச்சுவை கொண்ட கீழ்வாய்நெல்லி யென்பது..
  பேச்சுவழக்கில் கீழாநெல்லி மூலிகை எனவானது.!

Write a Comment [மறுமொழி இடவும்]


× six = 24


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.