-மேகலா இராமமூர்த்தி

mudandplant

மண்ணுக்கு வெளியே முகங்காட்டிச் சிரிக்கும் இளஞ்செடியைப் புகைப்படம் எடுத்து வந்திருப்பவர் திரு. பிரேம்நாத் திருமலைசாமி. இப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். ஒளிப்பதிவாளருக்கும், தேர்வாளருக்கும் என் நன்றி உரியது.

சிறிய விதையிலிருந்து தோன்றும் செடிகள் பலவும் சீரிய பயனைத் தந்து மண்ணுலக மாந்தரைக் காக்கின்றன. சின்னஞ்சிறு செடியிடம்கூட மனிதன் படித்தறிய வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள் பல இருப்பது வியத்தகு உண்மையே!

கண்ணுக்குக் குளுமையும் கருத்துக்கு இனிமையும் சேர்க்கும் இந்தச் செடி குறித்து நம் கவிஞர் பெருமக்கள் என்ன கருத்துக்களைப் பதிவுசெய்திருக்கிறார்கள் என்பதை அவர்தம் கவிதைவழிக் காண்போம்!

******

”கருநிற நிலத்தில் தோன்றிக் கண்ணைக் கவரும் இந்த இளஞ்செடி, பூத்து, காய்த்து, கனிந்து மாந்த இனத்திற்குப் பலன் தரும்; சுற்றுப்புறத் தூய்மை காத்து உடல்நலன் தரும்” என்று இன்றைய செடியின் நாளைய பலனைக் கணித்துக் கூறுகின்றார் திரு. ரா. பார்த்தசாரதி.

கருமை நிற நிலத்தில் ஓர் இளம் செடி
கண்ணை கவரும் வண்ணம் முளைத்து எழுந்தது
தன் கைகளாகிய கிளைகளை பரப்பி நின்றது
மழைத்துளிக்காக தன் கையேந்தி நின்றது!
மழை இல்லாமையால் நிலம் வறண்டு போனதே
நிலத்தடி ஈரத்தில் தன் காலை ஊன்றியதே
சிறிது ஈரத்திலும் இளம் செடி அழகாய் முளைத்ததே
புன்முறுவல் பூத்து தன்னை ஆதரிக்க வேண்டுதே!
பசுமை நிறம் கொண்ட கீழாநெல்லிச் செடியோ
உயர்ந்து வளர்ந்து நிழல் தரும் புளிய மர கன்றோ
வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் எனச் செடி நட்டோம்
செடி வளர்க்கத் தண்ணீர் பாய்ச்சி வேலி அமைப்போம்!வீட்டிற்குப் பல மரம் வளர்த்துச் சுற்றுப்புற மாசினைதடுப்போமே
இன்றைய சிறு செடியானாலும், நாளை மூலிகையாய்ப் பயன்படுமே
பூவாகி, காயாகிக் கனிந்து மனித இனத்திற்கு என்றும் பலன் தருமே
மரங்களும், செடிகளும் என்றும்சுற்றுப்புற சூழலைக் காக்கும்மே!

******

”விதை பிளந்து தலைகாட்டி, இலைகாட்டி, பின் இருப்பைக் காட்டிய என் வேருக்கு நீவிர்  நீர் காட்ட வேண்டாமா? மரத்தைப் பெருக்குவோம், பல்லுயிர் ஓம்பும் குணத்தைப் பெருக்குவோம்” என்று பொருளுரை புகலும் சிறுசெடியைக் காண்கிறோம் திரு. நக்கினம் சிவம் கவிதையில்.    

விதை பிளந்து
மண் பிளந்து
உலகைக்காண
இலை காட்டி
இருப்பைக் காட்டி
என் பிறப்பைக் காட்டினேன்.

நீர் காட்ட வேண்டாமா
என் உயிர்க்கு
உரம் சேர்க்கும்
நீரே ஆதாரம்
என அறிந்தே
உதவும் நீரே
எமது ஆதாரம்
மழை நீரே
நமக்கு ஆதாரம்.

உலகின் ஆதாரம்
நீரென அறிந்தே
மழை நீரைப் பெறவே
மரத்தைப் பெருக்கு
மனித நலனுடன்
பல்லுயிர் ஓம்பும்
குணத்தைப் பெருக்குவோம்.

******

”சுயத்தை இழந்து விலைபோன மனிதர்களால் தலைகுனிவைச் சந்தித்தோம்; வெள்ளித்திரை நாயகரில், கொள்கையற்ற கயவர்களில் நம் தலைவரைத் தேடுகின்றோம்!! இவைதவிர்ந்து கதிர்நெல் போல் பலனளிக்கும் மதியூகத் தலைமைதனை இனியேனும் துளிர்விடச் செய்திடுவோம்” எனும் சத்தான வார்த்தைகளைத் தன் கவிதையில் முத்தாகக் கோத்துள்ளார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

துளிர்

பழையன கழிதலும்
புதியன புகுதலும்
வழுவல என்பதால்
பழையதை அழித்தோம்
பழமையைக் களையவில்லை
புதியனக் கொண்டுவந்தோம்
புதுமையைப் புகுத்தவில்லை

விலை போன மனிதர்களால்
கலை குலைந்து தலை தாழ்ந்து
சுயம் இழந்து பாழ்பட்டு நின்றோம்
உயர் தொழில் விடுத்து
செயற்திறம் மறந்து
உயிர் மட்டும் கொண்டு வாழ்கின்றோம்

வீண்ஜம்ப வார்த்தை வீசும் வித்தகனில்
கூன்போட்டு கால்பிடிக்கும் அடிமைகளில்
வெள்ளித்திரை வலம்வந்த நாயகனில்
கொள்கையற்று குழுமாறும் வஞ்சகனில்
தலைவர்களைத் தேடுகின்றோம் – அவர்
தகுதிகளைப் பார்க்கவில்லை – வெற்று
கூட்டத்தைப் பார்த்திருந்தோம்
கொள்கைகளைப் பார்க்கவில்லை

வெள்ளி பல அள்ளித்தரும்
வெளிநாட்டு வேலை,
எட்டடுக்கு மாடிதன்னில்
குடியமர்த்த வழிசெய்யும் குலமகள்,
சுற்றிபலர் அடிபணியும் ஆடம்பரம்
பெற்றிங்கு தந்திடவே வழிசெய்யும்
பட்டமதைப் படித்திடவே
பாடசாலை தேடுகின்றோம்
சகமனிதன் தனைக் காத்து
சமுதாயம் உயர்த்துமொரு
வாழ்க்கைக்கல்வி கற்பதற்கு
ஒரு நாளும் விழையவில்லை

சக மனித உணர்வுகளைச்
சமுதாய விழுப்பங்களை
இழைந்தளிக்கும் கல்விதனை
இளைய சமுதாயம் பெற
இன்றேனும் முயன்றிடுவோம்

அவர் மனதில்
அதிகார போதை நீக்கி
எதிர்கால அச்சம் தவிர்த்து
கதிர்நெல் போல் பலனளிக்கும்
மதியூகத் தலமைதனைத்
துளிர்விடச் செய்திடுவோம்!

******

”வேரைப் பிடுங்காதே; மரத்தை வெட்டி வீழ்த்தாதே!
பயன்மரம் நட்டிடுவாய்; பாரில் உன்பேரை நிறுத்திடுவாய்” என்று புவிமாந்தருக்குச் செவியறிவுறூஉ செய்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

மரம் நடு!

நீரும் நிழலும் பெருகிடவே
நிச்சயம் வேண்டும் மரமதுவே,
பாரில் உனது பேர்விளங்கப்
பயன்மரம் ஒன்றை நட்டிடுவாய்,
நேரில் நடாது போனாலும்
நிற்கும் செடிக்கு நீரூற்று,
வேரது அறவே பிடுங்காதே
வெட்டி மரங்களை வீழ்த்தாதே…!

******

”நீரிழிவை உடலைவிட்டு நீக்கும்; காமாலையைக் காணாமல் போக்கும்; இனிப்பான வாழ்வுக்கு வழிவகுக்கும் கசப்பான இம்மூலிகை” என்று படத்தில் தோன்றும் கீழாநெல்லியின் மேலான பலன்களைத் தொகுத்துரைக்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.

நோய்வாயில்வீழாமல் காக்கும் கீழாநெல்லி மூலிகை

சிறுகற்களுக்கிடையில் குப்பை கூளங்களில்
குறுஞ் செடியாய் தரைமுழுதும் பரவியிருக்கும்.!

சிறுசிறு உடலுபாதை உடனடி தீர்க்குமூலிகை
சிறுஇலை சற்றுகீழே சிறுநெல்லிக் காயிருக்கும்.!

காலைமாலை யிதன்வேரை யரைத்துக் குடிக்க
காமாலை நோய்காணாது காததூரம் ஓடிவிடும்.!

சத்தானயிலைச் சாற்றுடன் ஆவின் பால்சேர
சாப்பிட்டால் தப்பிக்கலாம் சாவே இல்லை..!

நீரில்லா இடத்தினிலே நிலையாய் வளருமிது.!
நீரிழிவைக் குணமாக்கும் நிணநீர் சுரக்கவுதவும்.!

குற்றுச் சிறுசெடியான இருவிலை மூலிகையாம்.!
பற்றுக் கொண்டே வளர்க்காமல் வளருமினமாம்..!

விதைக்காமலே மண்ணிலிருந்து வெளி வரும்..!
விழுதாக அரைத்துண்டால் வயிற்றுவலி விலகும்.!

உடல்முழுதும் மருத்துவ குணம்கொண்டு..மனித
உடலினுள் எழும்நோய் தீர்க்கும் அரு மருந்தாகும்.!

வெப்ப மண்டலம்தனில் வளருமது நம்முடல்..
வெப்பத்தைத் தணிக்குமதன் தளிர் இலைச்சாறு.!

வாய்வயிறு தொண்டை குடல்புண் அகற்றும்..கீழ்
வாய்நெல்லியெனப் பெயர்பெறும்சிறு செடியாகும்.!

கசப்பான நல்விஷயமே வாழ்வில்பின் இனிக்குமாம்
கசப்பும் துவர்ப்பும் உடல்நலத்திற்குமிக அவசியம்.!

கசப்புச்சுவை கொண்ட கீழ்வாய்நெல்லி யென்பது..
பேச்சுவழக்கில் கீழாநெல்லி மூலிகை எனவானது.!

******

நல்ல செடிகளை வளர்த்து மரமாக்குவதே சுற்றுச்சூழல் மாசுக்கு விடிவு தரும்; நோய்களுக்கு முடிவு தரும் என்பதைத் தம் கவிதைகளில் சிறப்புற வெளிப்படுத்தியிருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டு!

இந்த வாரத்தின் சிறந்த கவிதையாய்த்  தேர்வாகியிருப்பது அடுத்து வருகின்றது…

மரமாய் மாற ஒரு வரம்!

விதை ஒன்று பூமித்தாய் மடியில் விழுந்தது!
வானத் தந்தை நீரை உணவாய்த் தந்தது!
ஆசான் கதிரவன் ஒளியைக் கொடுத்தது !
நண்பன் காற்று துணையாய் நின்றது!
விதை முளைத்து மரமாய் வந்தது!
பிறந்த காரணம் நினைத்துப் பார்த்தது!
நன்றிக் கடன் தீர்க்க உறுதி பூண்டது!
நச்சுக் காற்றைத் தான் ஏற்று,
நல்ல காற்றை நமக்குத் தந்தது!
மன்னுயிர்க்கு நிழல் தந்தது!
பறவைக்கு வீடு தந்தது!
பசிக்குக் கனி தந்தது!
மழை வர வழி செய்தது!
மரத்தின் நன்றியில் ஒரு துளியாவது
மனிதர் நம்மிடம் இருந்ததுண்டா?
இருந்திருந்தால் சிறப்போடு வாழ்ந்திருப்போம்!
தாயை மதிக்கவில்லை!
தந்தை சொல் கேட்கவில்லை!
பாசம் தெரியவில்லை!
நேசம் எங்குமில்லை!
பிறந்த மண்ணை நினைக்கவில்லை!
பொது நலத்தில் நாட்டமில்லை!
தாய் மொழியைக் கற்கவில்லை!
மரங்கள் வளர்க்கவில்லை!
பயிர்த் தொழிலும் செய்யவில்லை!
சுயநலம் பெருக்கி விட்டோம்!
பிறர் நலம் மறந்து விட்டோம்!
பகுத்தறிவு இருந்தாலும் பாவிகளாய்
மாறி விட்டோம்!
மரங்களின் பொது நலத்தைக் கற்றுக் கொள்ள
வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம்!
மனிதனாய்ச் சுயநலத்தோடு வாழ்ந்தது மாறி!
இனி மரங்களாய் பொது நலத்தோடு வாழ்ந்திருப்போம்!

மரங்கள் புவிக்கு இயற்கை தந்த வரங்கள். விதையாய் விழுந்து செடியாய்த் துளிர்த்த ஓரறிவுள்ள பயிரினம், மரமாகி மண்ணையும் மனிதர்களையும் காத்து நிற்கின்றது. பகுத்தறிவில் மிஞ்சிய மனித உயிரினமோ மரங்களை அழிக்கிறது; மழையினை ஒழிக்கிறது. சுயநலமென்னும் கடுகுள்ளத்தை ஒழித்துப் பொதுநலமென்னும் தாயுள்ளத்தை மானுடம் பேணும் நாளே புவிக்குப் பொன்னாள்!” எனும் நற் சிந்தனை விதைகளைத் தன் கவிதையில் தூவியிருக்கும் திரு. பழ. செல்வமாணிக்கத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *