-மேகலா இராமமூர்த்தி

கூண்டுக்குள் சிறைப்பட்டிருக்கும் அழகுப் புறாக்களைத் தன் புகைப்படக் கருவிக்குள் சிறைப்படுத்தி வந்திருக்கிறார்   வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கு இப்படத்தைத் தேர்வுசெய்து தந்திருப்பவரும் அவரே. அவருக்கு என் நன்றி!

doves in cage

தகவல் பரிமாற்றத்திற்கு உதவும் தூதுவர்களாக முற்காலத்தில் திகழ்ந்தவை புறாக்கள். ’புறாவிடு தூது’ காதலுக்கும் பயன்பட்டது. மனிதக் காதலுக்குத் தூதுபோன புறாக்களை நன்றியின்றிக் கம்பிகளுக்குள் சிறைவைப்பது முறையோ?

புறாக்களைக் கண்ட நம் கவிஞர்கள், வழக்கம்போலவே, கற்பனைச் சிறகுகளோடு பறந்துதிரிந்து பொற்புடை கருத்துக்களைக் கவிதையாய்க் குவித்திருக்கிறார்கள். அவற்றைப் படித்து இரசிப்போம்!

*****

சிறைப்பட்ட இந்த ஆண்புறா இனி அஞ்சவேண்டாம் கழுகுக்கு; பஞ்சமில்லை அதன் உணவுக்கு; கூடுகட்டவேண்டாம்; புயல் மழையால் கேடுறவேண்டாம். ஆனால் வெளியில் சுதந்தரமாய்த் திரிந்துவரும் பெண்புறாவுக்கோ துன்பங்களும் சவால்களும் நித்தமும் உண்டு! அதனால் கூட்டு வாழ்க்கையை விரும்புகின்றது பெண்புறா! கூட்டைவிட்டு வெளியேறித் திரியும் காட்டு வாழ்க்கையை விரும்புகின்றது ஆண்புறா என்று இயல்பாய் வாழ்வியலை விளக்குகின்றார் திரு. சி. ஜெயபாரதன். எப்போதுமே இக்கரைக்கு அக்கரை பச்சைதானே?

எது சிறைப் புறா ?
நான்கு வேலிக்குள் அடைபட்ட

ஆண் புறாவுக்கு
கழுகுப் பகையில்லை !
உணவுப் பஞ்சம்
எப்போதும் கிடையாது !
குடி இருக்க
கூடு தேவை யில்லை !
புயல், பேய் மழை,
இடி மின்னல்
அடிப்பு எதுவு மில்லை !
தனிமையில் நொந்து துடிப்பது
ஆண் புறா !
விடுதலையாய்
வெளியில் சுற்றும் பெண் புறா வந்து
வாசலில் நின்றது.
கடுமையான வாழ்வு எனக்கு !
கூடு கட்ட மரமில்லை !
குஞ்சு பொரிக்க
அஞ்சுகிறேன் தனித்து !
உறவு கொள்ள
ஆண் துணை இல்லை !
ஊர்ப் பஞ்சத்தில்
உணவில்லை !
கழுகுக் கிரை ஆவேனோ ?
இல்லை புயல் காற்றில்
மரிப்பேனோ ?
கூட்டில் அடை பட்டாய் நீ !
நாட்டில் அடைபட்டேன் நான் !
இப்பிறப்பில் நாமினி
இணையோம் !
கூட்டுக்குள் நுழையத்
துடிப்பது நான் !
விடுதலைப் பெற
விழித்தி ருப்பது, நீ காத்திருப்பது நீ.
எது நடக்கும் ?
வெளியே நீ வருவாயா ?
இல்லை
உள்ளே நான்
அடைபடு வேனா ?
நம்முறவில்
விதி என்ன
விளையாடுகிறதா ?

*****

”புத்தகத்திலும் திரைப்படத்திலும் காதலை வெகுவாய் இரசிக்கும் மாந்த இனம் நிசவாழ்வில் அதனை மருந்தளவும் விரும்புவதில்லை. கவுரக்கொலை செய்தேனும் சாதியை வாழவைப்பாரே தவிரச் சொந்தப்பிள்ளைகளை வாழவிடாத இந்த உத்தமர், நம் காதலை எப்படி அனுமதிப்பர்? எனினும் எப்படியேனும் உன்னைச் சேர்வேன்” என்று பெண் புறாவுக்கு உறுதிசொல்லும் ஆண் புறாவைக் காண்கிறோம் திரு. பழ. செல்வமாணிக்கத்தின் கவிதையில்.

உண்மைக்காதல் :
மனிதக் காதலுக்கு தூது சென்றோம் பெண் புறாவே !

மனித குலம் ,நம்மை பிரித்து வைத்து பார்ப்பதென்ன
பெண் புறாவே!
காதலெனும் வானத்தில் பெண் புறாவே!
சிறகடித்துப் பறந்திருந்தோம் பெண் புறாவே!
உன்னைக் கூண்டில் அடைத்தது ஏன்
பெண் புறாவே!
உயிரும், உடலும் ஒன்றிணைந்து வாழ்வது போல்
பெண் புறாவே!
மகிழ்வோடு வாழ்ந்திருந்தோம் பெண் புறாவே
உயிரையும், உடலையும் பிரித்ததென்ன
பெண் புறாவே!
காதலெனும் அமுதைப் பருகி மீண்டும்
உயிர்த்தெழுவேன் பெண் புறாவே!
காதல் கதை என்றால் பெண் புறாவே!
பல தடவை படித்திடுவார் பெண் புறாவே!
பிள்ளைகள் காதல் செய்து விட்டால் பெண் புறாவே!
வெகுண்டெழுந்திடுவார் பெண் புறாவே!
திரைப்படத்தில் காதல் என்றால் பெண் புறாவே!
கண் இமைக்காமல் பார்த்திடுவார் பெண் புறாவே!
பிள்ளைகள் காதல் திருமணம் செய்து கொண்டால்
பெண் புறாவே!
கௌரவ கொலை செய்து சாதியை வாழ வைப்பார்
பெண் புறாவே!
மனிதர்கள் போல் நாம் இல்லை பெண் புறாவே!
இறைவனைப் போல் பறவைக்கும்
சாதி இல்லை பெண் புறாவே!
தடைகள் உடைத்து பெண் புறாவே!
உன்னைச் சேர்ந்திடுவேன் பெண் புறாவே!

*****

சிறைப்பட்ட நிலையிலும் அளவற்ற காதலுடன் அன்புமொழி பேசும் ஆசைப் பறவைகளைத் தன் கவிதையில் படம்பிடித்துக் காட்டி நம் மனங்கவர்கின்றார் திரு. எஸ். கருணானந்தராஜா.

ஆண்-
அன்பே! ஏனடி எட்டத்தில் நிற்கிறாய்
அருகில் வா உனைக் கோதி விடுகிறேன்
உன் பயிர்ப்பினைத் தூர எறியடி
உரசி இன்புற உள்ளம் துடிக்குது

அண்டை வந்தெனதாருயிர் உன்னெழிற்
சொண்டை நீட்டடி சொர்க்கத்தைக் காணுவோம்
தண்டியாதெனைத் தத்தியருகில்வா
தாபம் தீர்க்கலாம் கோபமெதற்கடி

பேடு-
போங்களிந்தப் பொல்லாத சிறையினில்
ஏங்கும் போதிலும் உங்களுக் கெப்பவும்
தாங்கொணாதொரு தாபமும் கேடதோ
தனித்த வாழ்வு முடியட்டும் பார்க்கலாம்.

இருவரும்-
அன்பிலாதவர் எம்மைப் பிரித்தனர்
அடைபட்டிங்கு சிறையில் தவிக்கிறோம்
இன்ப வாழ்வை இழந்து தவிக்கினும்
இணைந்த எங்களின் காதலழியுமா

எம்மைப் போன்று பல் மாந்தரும் தங்களின்
இனிய காதலை, வாழ்வை இழந்தொரு
பொய்மையான திரைத் தொடர்போடு தம்
போலி வாழ்வைக் கடத்துகின்றாரதால்
எம்மையும் பிரித்துச் சிறை தன்னிலே
இடுவதால் வரும் துன்பமறிகிலார்
அம்ம! இந்த நிலையினில் எங்களை
அடைத்தனர் அதை என்னென்று சொல்லுவோம்.

*****

சிறைவிட்டு விடுதலை வேண்டிநிற்கும் சுதந்தர மனம் ஒருபுறம்; கட்டுண்டு கிடப்பதிலேயே மட்டற்ற மகிழ்வுகாணும் அடிமை மனம் மறுபுறம். பொதுநலம் நாடும் தூய தாய்மனம் ஒருதினம்; தன்னலம் பேணியே தாழ்ந்திடும் பேய்மனம் மறுதினம் என மனித மனத்தின் அலைபாயும் நிலைகளை இந்தப் புறாக்களோடு பொருத்திக் காட்டி இரசிக்கவைக்கிறார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

மங்காத்தா

விட்டு விடுதலையாகி
தடைகளை உடைத்து
கட்டுக்கள் நீக்கி
பறந்திட நினைக்கும் ஒருகணம்
மறுகணம்…
சாவுவீட்டு வைராக்கியம் போல்
உலகவாழ்வில்
கட்டுண்டு வீழ்ந்து
காண்பதெலாம் விரும்பி
சிக்கலில் சேர்ந்து
உழன்றிங்கு நிற்கும் மனம்.

பெண்ணே தாய்
அவளேத் தெய்வம்
பெண்ணுரிமை பெண்ணியம் – என
பெரும் பெரும் வார்த்தைகள்
சொல்லி நிற்கும் ஒரு புறம்.
மறுபுறம்….
பெண்ணடிமைச் செயல் புரிந்து
மாதர்தம்மை இழித்துரைக்கும்
மடமைகள் பலசெய்து
ஆணாதிக்க அதிகார
அழிச்சாட்டியம் தலைத்தூக்கும்

ஒருபொழுது
பிறர் நலம் விரும்பி
நன்மை பல நாடிச்
செயும் செயல்கள் நூறு
மறுபொழுது…
சுயநலம் தலைத்தூக்கி
சுற்றத்தின் நலம் மறந்து
அழுக்காறுற்று அவ்வியம் பேசி
பிறர் நலம் கெடுக்கச்
செய்திடும் பல்லாயிரம்.

உள்ளொன்று வைத்துப்
புறமொன்று பேசி
உள்ளே வெளியே என்று
மனம் காத்தில் ஆடி
நிலைமாறி அலைபாயும் – நான்
நிதமிங்கு வாழும் இவ்வாழ்க்கை.

*****

”உணவுதேடி வெளியேவந்த ஒற்றைப் புறாவை உள்ளே அடைத்தான் பிரித்தாளும் கலையில் மாமணிப் பட்டம் வென்ற மனிதன்! இணையைப் பிரிந்தேங்கும் துணைப்புறாவின் துன்பத்தை இவன் எங்ஙனம் அறிவான்?” என்று வேதனையுறுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.  

நடக்குமா நல்லது…?

இணையைப் பிரிப்பது இவன்வேலை
ஈவு இரக்கம் இலாமனிதன்,
துணையா யிருக்கும் உறவுகளைத்
துண்டாய் ஆக்குதல் இவன்குணமே,
உணவு தேடி வெளிவந்த
ஒற்றைப் புறாவைப் பிடித்தடைத்தான்,
துணைப்புறா தேடிக் கண்டதிங்கே
தீர்வு நல்லதாய்க் கிடைத்திடுமோ…!

*****

’உயிரிரக்கம் மிகுந்த’ மனிதன், கோயில் மாடப் புறாவைக் கூண்டுக்குள் அடைத்துவைத்தான்; காதலனிடமிருந்து அதனை பிரித்துவைத்தான்” எனக் கழிவிரக்கம் கொள்கின்றார் திரு. ரா. பார்த்தசாரதி.

கோயில் மாட புறாவாய் சுற்றிய என்னை சிறையில் அடைத்தாய்
எனது காதலனை பிரித்து என்னை தவிக்க வைக்கிறாய்
காதலனின் அழைப்பு என் மனதை அலைக்கழிக்கிறது
எங்களைச் சேர விடாமல் தடுப்புகள் இருக்கின்றதே
தூர இருந்தாலும் , எனது மனம், இரு மனம் கொண்ட ஒரு மனம்!
மனமிறங்கி என் காதலனுடன் சேர விடை கொடுப்பாயா மனிதா.!

*****

காதல் புறாக்கள் இணைய வேண்டும்; அவற்றின் அடிமை வாழ்வு முடியவேண்டும் என்று பரிவோடு உரிமைக்குரல் எழுப்பியிருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

*****

சிறந்த கவிதையாய் இவ்வாரம் தேர்வாகியிருக்கும் கவிதை இனி…

பறவைகளின் பிரார்த்தனை..!

சுதந்திரமென்ப தனைவருக்கும் பொதுவானால்
—-சுதந்திரமாய்த் திரியும் பறவையின மதில்சேராதோ.?
அகத்தில் மனிதனை அடைத்தாலது பாவமெனில்
—-ஜகத்தில் பறவைக்கது பரவலாய்ப் பொருந்தாதோ.?

பகையின்றி வாழ்ந்தோம் பகட்டாகப் பறந்தோம்.!
—-பூவெழில் வனப்புடன் வட்டமாய்த் திரிந்தோம்.!
வகையாயெமைக் கூண்டிற்குள் அடைத்து விட்டான்.!
—-பகையானான் பரந்த மனம்கொண்ட பறவைக்கே.!

அனைத் துயிருக்குமொரே நீதியெனில் பறவையை
—-அடைத்து வைக்கும் செயலுக்கெனத் தனிநீதியா.!
அநியாயமாய்க் கூண்டுளடைத்தது? ஏனெனக் கேட்டால்
—-அன்பு பாசமென்பார் அனைத்துமே பொய்யாகும்.!

கனியைப்பறித்தீர் காடுகளைக் கருணையின்றி அழித்தீர்.!
—-கட்டுக்கடங்கா யெம்சுதந்திர மதைநீர் தட்டிப்பறித்தீர்.!
குற்றம்கண்டா? கூண்டிலே அடைத்தீர்? எனக்கேட்டால்
—-பற்றுக்கொண்டே அடைத்து வளர்க்கிறே னென்பார்..!

பறவைகள் பூமிக்குக் கிடைத்ததோர் புண்ணியஜீவன்.!
—-இயற்கையைக் காக்குமுயருளம் கொண்ட உயிரினம்.!
எம்மைச் சொந்தமாக்கக் கூண்டுக்குள் அடைத்தசெயலை..
-எந்தமன்றத்தில் வழக்காடியாம் விடுதலை பெறுவோம்.!?

யாரிடம் கேட்பது பாவத்துக்கு மோட்சமுண்டாவென
—-ஆரூடம் சொல்லென கூண்டுக்கிளியிடம் கேட்டேன்?
பந்தயம் வைத்து ஆரூடம் சொல்லி நம்மால் பிழைக்கும்
—-பாவமனிதரும் பிழைக்கட்டுமெ யென்றான் சகோதரன்.!

வளமுடன் வாழ்கவென்பான் ஆரைப் பார்த்தாலும்.!
—-வானிலே பறந்த எங்களை வலைவைத்துப் பிடிக்க..
அனுதினமும் வருவான் அருமையாய்ப் பேசுவானவன்.!
—-அடிமை வாழ்வு கொடிதெனச் சற்றும் உணராதவன்.!

சிறுஅறையைச் சுத்தம்செய்ய நித்தமவன் வருவான்.!
—-கறுப்புள்ளக் கயவனைக் கண்டுகொள்ள மாட்டோம்!
மிரண்டகண்ணுடன் மீளாத்துயரோடு வானை நோக்கிய
—-இருண்ட வாழ்வெனும் பறக்கமுடியா பரிதாபநிலையுடன்.!

இறகோடுபிறந்து இரும்புச் சிறையில் வாழுமெமக்கு..
—-சிறகையேன் படைத்தாய்?சிந்திக்கிறோம் பலநாளும்!
கூண்டுக்குள் குடும்பம்செய்தே குறையிலா வாழ்வுபெற..
—-குஞ்சொன்று வேண்டும் சிறகில்லாமல் அருள்வாயா.!இறைவா…

’சுதந்தரம் எனது பிறப்புரிமை’ என முழக்கமிடும் மனிதன் அதனைப் பறவையினத்துக்கு மறுப்பது ஏன்? குற்றவாளிகளை மட்டுமே கூண்டிலடைப்பது வழக்கமாயிருக்க, குற்றமேதும் செய்யாத அப்பாவிப் பறவைகளைப் பாவி மனிதன் கூண்டிலடைப்பது எதனால்? சிறைப்பட்டிருக்கும் பறவைகள் எமக்குச் சிறகுகள் எதற்காக? என்று  புறாக்களின் கேள்விகளால் தன் கவிதையில் வேள்வி  செய்திருக்கும் பெருவை திரு. பார்த்தசாரதி இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் எனும் சிறப்பைப் பெறுகின்றார். அவருக்கு என் பாராட்டு!

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 117-இன் முடிவுகள்

  1. ஒவ்வொரு வாரமும், இடம்பெறும் படத்துக்கு அனேக கவிஞர்கள் சிறப்பாக தங்களது கவித்திறனை வெளிப்படுத்திவருவதற்கு அனைவருக்கும் எனது பாராட்டை தெரிவித்துக் கொண்டு…

    117 படக்கவிதைப் போட்டிக்கு படம் எடுத்துக் கொடுத்த பொறுப்பாசிரியரே படம் தந்திருக்கிறார்.

    வல்லமை இதழுக்கு படக்கவிதை மூலம் புகழ் சேர்க்கும் விதமாக தொடர்ந்து புதிய முயற்ச்சிகளைக் கையாளும் வல்லமை ஆசிரியர் குழுவுக்கு, குறிப்பாக ஆசிரியர் பவள சங்கரி, பொறுப்பாசிரியர் சாந்தி மாரியப்பன் மற்றும் நடுவர் மேகலா அவர்களுக்கும்..

    இந்த வாரம் சிறந்த கவிஞரெனத் தேர்வு செய்தமைக்கு மிக்க நன்றி…
    ============
    இதற்கு முன் படக்கவிதை-107 ல், இடம்பெற்ற புறாவின் படத்துகான எனது கவிதை இடம்பெற்றிருந்ததைவ் புறா வளர்ப்பில் ஈடுபாடுள்ளமையால் அதை நினைவு கூற விரும்புகிறேன்

    மனிதனும் புறாவும்
    ==================

    ஒருவனுக்கு ஒருத்தியென்ற உறுதி கொண்ட
    உயிரினமாம் அரியபுறா..!

    கோவிலுயர் கோபுரமதில் வாழும் புள்ளின..மது
    கூடிவாழும் கூட்டினம்..!

    பறவையில் தனிப் பிறவியது தண்ணீரை
    உறிஞ்சிக்குடிப்பதோர் அற்புதம்..!

    கூட்டமாய் கூரை தரையிலும் உலவும்
    வட்டமாய்ப்பறந்து வானிலேகோலமிடும்..!

    படபடக்கும் ஓசையுடன் ஜோடியாக ஜன்னலோரம்
    கடகடவெனக் காதல்மொழிபேசும்..!

    உண்டதை உமிழ்ந்துதன் உயிர்க் குஞ்சின்
    குடல்நிரப்பும் தாய்ப்புறா..!

    பெட்டை யிட்ட முட்டையை அன்புடனே
    அடைகாக்கும் தந்தைப்புறா..!

    பகுத்துண்ணும் எண்ணத்துடன் பலதும் கூடி
    தொகுத்துண்ணும் பரந்தகுணம்..!

    ஆடல் கலையில் வல்லவன் நானே..யென
    பாடல்போன்ற முனகலோடு..

    ஒருகாலைத் தூக்கி நடராசன் போலே
    மறுகாலைமறைக்கும் தன்சிறகாலே..!

    பறக்க ரெண்டு இறக்கை உண்டுனக்கு
    பலமைல்பறக்க சக்தியுண்டு..!

    வழித்தடமில்லா வானத்திலே போகும்வழி..வந்த
    வழியறியும் நுண்ணறிவுமுண்டு..!

    உண்ணாமல் பறந்து ஓராயிரம் மைல்கடக்கும்
    உன்னததிறன்பெற்ற அற்புதபறவை..!

    அறுகாதஆதி தகவல் தொடர்புநான் தானென
    அரசனுக்கு ரகசியதூதுசெல்லும்..!

    விரோதத்தின் விளைவான வன்முறைக்குச் சமாதானமென
    வீரமாகப்பறக்கும் வெள்ளைப்புறா..!

    தன்மானம் காத்திடும் பண்பிற்கு..தலைதாழ்த்தி
    தன்னையே வளையவரும்..!

    வெண்சாம்பல் வெள்ளை கரு நிறமென
    பன்னிறவண்ண முன்பகட்டு..!

    வேற்றுமைக்கு பலநிற முன்னில் இருக்கு..மது
    ஒற்றுமையை எடுத்துக்காட்டும்..!

    பகுத்தறிவு முனக்குண்டு..மனிதரோடு நெருங்கிப்
    பழகிடுமடிமைப் பண்பு..!

    அன்புடன்
    பெருவை பார்த்தசாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *