சு. கோதண்டராமன்

திருஞானசம்பந்தரின் ‘தேவாரப் பதிகம்’ ஒவ்வொன்றிலும் ஒன்பதாவது பாடல், திருமால் அயன் இருவரும் பணிந்து வணங்கும் வகையில் சோதிப் பிழம்பாய் சிவபெருமான் தோற்றம் அளித்த நிகழ்ச்சியை வர்ணிக்கிறது. அந்தப் பாடல்களை மட்டும் இப்பொழுது ஆராய்வோம்.

கதை எல்லோருக்கும் தெரிந்தது தான். பிரமனும் மாலும் தங்களுக்குள் யார் உயர்ந்தவர் என்பதில் முரண்பட்டனர். இந்த இருவர் அல்லாத மூன்றாமவர் தானே இதற்குத் தீர்ப்பு அளிக்க முடியும்! எனவே சிவனிடம் சென்றனர். சிவன் அவர்களுக்கு ஒரு எளிய சோதனை வைத்தார். ‘என்னுடைய அடியையோ முடியையோ யார் முதலில் கண்டு திரும்புகின்றனரோ அவரே பெரியவர்’ என்பது தான் அது.

‘இது ஒரு பெரிய வேலையா?’ என்ற தருக்குடன் இருவரும் புறப்பட்டனர். சிவன் ஒரு பெரிய தீப்பிழம்பாக உருவெடுத்து நின்றார். அவ்வெரியின் அடி மண்ணுக்குள் புதைந்து இருந்தது. முடி விண்ணுக்கு மேல் இருந்தது. மால் பன்றி உருவெடுத்து மண்ணைக் கிண்டிக் கீழ் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.  அயன் அன்ன வடிவெடுத்து மேல் நோக்கிப் போய்க் கொண்டிருந்தார். நீண்ட காலம் ஆகியும் அவர்கள் இலக்கை அடைய முடியவில்லை. இறுதியில் தங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டு சிவனிடம் இறைஞ்சிப் பணிந்தனர். தங்கள் இருவரையும் விடச் சிவனே பெரியவர் என்பதை உணர்ந்தனர்.

சொல்வளம்

ஞான சம்பந்தர் பதிகங்கள் மொத்தம் 386-ல் பதினேழு நீங்கலாக மற்றவற்றில் 380 முறை பேரழலாய் நின்ற பெம்மான் கதை பேசப்பட்டுள்ளது. ஒரே விஷயத்தை 380 முறை சொன்னாலும் கூறியது கூறாமல் ஒவ்வொரு முறையும் புதிய சொற்களைப் பயன்படுத்தி இருப்பது அவரது சொல்வளத்துக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. ‘சிவன் மால் மற்றும்  அயன்’ இவர்களது பல வகையான அடைமொழிகள் இந்த வாய்ப்பை அளிக்கின்றன.

“வலியவனாகிச் சுடர் வீசிக் கொண்டு நிற்கும் அக்கினி தேவனைப் பற்றிய மந்திரங்களிலே கவிதை மிகவும் செழிப்புற்று இருக்கின்றது. சூட்சுமப் பொருள் ஆழ்ந்து நிற்கிறது. தெய்வ வெறி தெளிந்து நிலவுகிறது. பாட்டுக் கொள்ளுகிற அக்கினி தேவனுடைய தழலும் அவன் உறுமுதலும் ஒளியும் பாடுகிற ரிஷிகளின் அறி்விலே தாவி விட்டன போலும்” என்ற அரவிந்த கோஷின் வார்த்தைகளை மேற்கோள் காட்டிப் பாரதி மேலும் கூறுகிறார், “ஆம், உயர்ந்த கவிதையின் நெறியே அது. இஷ்ட தேவதையின் காந்தி கவியின் உள்ளத்திலே வீசும், அந்த ஒளி பாட்டிலே தெரியும்”.

எரியுருவாகி நின்ற ஈசனைப் பற்றிய ஞானசம்பந்தரின் பாடல்களும் அதே போன்று தெய்வ வெறியும் கவிதை ஒளியும் பொருந்தியனவாகத் திகழ்கின்றன. விரிவஞ்சி, ஒவ்வொன்றிலும் சில எடுத்துக்காட்டுகள் மட்டும் பார்ப்போம். சிவசோதியைப் பற்றிய அடைமொழிகளில் சில இவை.

1.  அளவிடல் ஒழியவொர் பயமுறு வகை தழல்

2.  மேலது நான்முகனெய்தியதில்லை கீழது சேவடி தன்னை நீலது வண்ணனு மெய்தியதில்லை

3.  சிந்தையினாலுந் தெரிவரிதாகித் திகழ்சோதி

4.  விண்ணுற ஓங்கிய விமலன்

5.  எரியுருவாகிய ஈசன்

6.  பேரழலாகிய பெம்மான்

7.  நிறவுரு ஒன்று தோன்றி எரியொன்றி நின்றதொரு நீர்மை

8.  எரியாய் உயர்ந்த பெரியான்

9.  அண்டமுற அங்கி உருவாகி மிக நீண்ட அரனார்

10. வளர் தீயுருவமான வரதன்

11. ஆதியினொடந்தமறியாத அழல் மேனியவன்

12. ஊற்றமிகு கீழுலகும் மேலுலகும் ஓங்கியெழு தன்மைத் தோற்றமிக நாளும் அரியான்

13. குரை கழலடி தொழக் கூரெரியென நிறங் கொண்ட பிரான்

14. இருவரும் அஞ்ச எரியுருவாய் எழுந்தான்

15. கூடிய கூரெரியாய் நிமிர்ந்த குழகர்

மாலுக்கு சம்பந்தர் வழங்கும் பெயர்கள் அரி, மால், நாரணன், கண்ணன், மாயன், மதுசூதனன் ஆகியவை ஆகும். மாலின் உடல் நிறத்தைக் குறிக்கும் வகையில் கரியன், கடல் வண்ணன், நீல வண்ணன், பச்சையான், மணிவண்ணன், மைதிகழ் உருவினான், புயலொப்பவன், குளிர்கொண்டல் நிறத்தவன், கார்வணன் ஆகிய சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மால் அழகிய தோற்றம் உடையவர் என்பதை எழில் மால், கோலம் முடி நெடுமால், சீர்நெடுமால், பொற்பமர் வாமனன் என்ற அடைமொழிகள் காட்டுகின்றன. திருமாலின் கண்ணழகைக் கண்ணிகழ் புண்டரிகத்தினன், செங்கண் மால், செய்ய தண் தாமரைக் கண்ணன் என்று வர்ணிக்கிறார்.

மாலின் தனிச் சிறப்புகளான கருடக் கொடி, துழாய் மாலை, சக்கரம், சங்கு, திரு அமர்ந்த மார்பு இவற்றால் அவர் அடையாளப் படுத்தப்படுகிறார். அவர் பாற்கடலில் பாம்புப் படுக்கையில் அறிதுயில் கொள்வது அகலிடம் நீரேற்றான், அரப்பள்ளியான், அரவணைத் துயின்றான், கடல் கிடந்தான், கிடந்தவன், கோண் நாக அணையான், திகழ் பாற்கடற் கருநிற வண்ணன், நாகத்தணையான் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.

வடங்கெட நுடங்குபவன் என்ற சொல் அவர் ஆலிலையில் துயில் கொள்வதைக் கூறுகிறது.  அவர் ஆற்றல் மிக்கவர் என்பது அடல்மலி படை அரி, ஆற்றலுடைய அரி என்ற சொற்களாலும், தேவர்களில் பெரியவர் என்பது பெம்மான் என்ற சொல்லாலும், பழமையான தெய்வம் என்பது ஆதிமால் என்ற சொல்லாலும் சுட்டப்படுகிறது. அவர் இலக்குமி தேவியின் இனிய கணவனாக இருப்பது திருமால், எழிலமர் மலர் மகள் மகிழ் கணன், விரிபோதின் மல்குந் திருமகள் தனை மேவினான் என்ற பெயர்களால் கூறப்பட்டுள்ளது.

திருமால் பல பிறப்புகளை எடுத்து, மக்களுக்கு நலம் செய்தார் என்பது தோற்றலார் மால், நன்மையான் நாரணன் என்று பகரப்பட்டுள்ளது. ராம அவதாரத்தை, வில்லிமையினால் விறலரக்கனுயிர் செற்றவன் என்று சம்பந்தர் குறிப்பிடுகிறார். மற்றும் கிருஷ்ண, வாமன, வராக அவதாரங்கள் குறிக்கப்பட்டுள்ளன. மற்ற அவதாரங்கள், குறிப்பாக, நரசிம்ம அவதாரம் கூறப்படாதது கவனிக்கத் தக்கது. சம்பந்தர் காலத்தில் இது வழக்கிற்கு வரவில்லை போலும்.

எல்லாவற்றிலும் மிக அதிகமாகக் கூறப்படுவது அவரது வாமன–திரிவிக்கிரம அவதாரம் தான். அவர் குறுகிய வடிவோடு வாமனனாகச் சென்றதையும் பின்னர் பெரிய உருவெடுத்து விண்ணையும் மண்ணையும் தாவி அளந்ததையும் சம்பந்தர், உயர்ந்தவன் உருக்கொடு திரிந்து எண் பெரிய பண்படை கொண் மால், ஓங்கிய நாரணன், குறிய மாணுருவாகிக் குவலயம் அளந்தவன், சேணியலும் நெடுமால், பேரால் நெடியவன், தரணியளந்த வாமனன், தாவினான், நெடியவன், விண் முடியாப் படி மூவடியால் உலக முழுதுந் தாவிய நெடியான் என்ற அடைமொழிகள் மூலம் சிறப்பிக்கிறார்.

கண்ணனாக அவதரித்த காலை இளமைப் பருவத்தில் அவர் செய்த விளையாட்டுகளான மண்ணை உண்ட வாயில் உலகத்தைக் காட்டுதல், வெண்ணை திருடியதால் உரலோடு கட்டப்பட்டு அதனுடன் தவழ்ந்து வந்து மருத மரத்திடையே புகுந்தது ஆகிய காட்சிகள் இடந்து மண்ணையுண்ட மால், ஞாலமுண்ட மால், மருதிடை நடவிய மணிவணர், வானகம் வரையகம் மறிகடல் நிலன் எனும் எழுவகைப் போனகம் மருவினான் (ஏழுவகையாக அமைந்த வானகம், மலை, கடல், நிலன் இவற்றை உணவாக உண்டவன்) என்ற சொற்களில் ஓவியமாகின்றன. புள்வாய் பிளந்தான் (பகாசுர வதம்), வேழ வெண்கொம்பு ஒசித்தான் (குவலயாபீடம் என்னும் யானை வடிவில் வந்த அசுரனைக் கொன்றது), கன்று ஒரு கையில் ஏந்தி நல் விளவின் கனி பட நூறி (ஒருகையால் பசுவின் கன்றைப்பற்றி விளாமரத்தின் கனி வடிவில் இருந்த கபித்தாசுரனை அழித்தது), கற்குன்றம் ஒன்று ஏந்தி மழை தடுத்த கடல் வண்ணன், அருவரை பொறுத்த ஆற்றலினான் (கோவர்த்தன மலையைத் தூக்கிப் பிடித்தது) என்று அவருக்கு ஏற்பட்ட சிறப்புப் பெயர்களும் கூறப்பட்டுள்ளன. இத்தகைய அருஞ் செயல்களைச் செய்ததால் அவர் அற்புதன் என்று வியந்து பாராட்டப்படுகிறார்.

இத்தகைய பெருமைகள் படைத்த மால் சிவனாரது அடியைக் காண்பேன் எனத் தருக்குற்று தன் இயல்புக்கு மாறுபட்ட பன்றி உருவம் எடுத்து மண்ணைத் தோண்டி நெடுந்தூரம் சென்றும் வெற்றி பெற முடியாமையால் அவருக்குக் கிடைத்த பெயர்கள் அன்றியல் உருவு கொள்வான், ஏனவ உருவாகி மண் இடந்த இமையோன், காய மிக்கதொரு பன்றி, கீண்டு புக்கார் (அகழ்ந்து சென்றவன்), மருளார் தரு மாயன் (தருக்குற்றவன்), பன்றியர் ஆகியவை.

 

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *