கற்றல் ஒரு ஆற்றல் (85)

க. பாலசுப்பிரமணியன்

கற்றலைக் காட்டும் வரைபடங்கள் (Learning  Curves)

education

கற்றலைப் பற்றிய  ஆராய்ச்சிகள் மூலம் நமக்குத் தெரிவது என்னவென்றால் “கற்றல் தொடர்ச்சியாக நிகழும் செயல்.”  பல நேரங்களில் அது நமக்கு வெளிப்படையாகத் தெரியும் வகையில் நடக்கின்றது. பல நேரங்களில் நமக்கு அறியாமலேயே அது நடந்து கொண்டிருக்கின்றது. இதன்  தாக்கங்கள் நமக்கு சில நேரங்களில்  புலப்படுகின்றன.சில நேரங்களில் அதன் தாக்கங்கள் மறைந்து உள்நிற்பதால் அது நமக்குப் புலப்படுவதில்லை ஆகவே இவ்வாறு வெளிப்படையாக நமக்குப் புலப்படாத தாக்கங்களை அறிந்துகொள்ள முயற்சி அதிகம் தேவைப் படுகின்றது .

கற்றலை  ஒரு தனி நபரின் விருப்பு வெறுப்புக்கள், வாழ்க்கை குறிக்கோள்கள். குடும்பச் சூழ்நிலைகள். பொருளாதார நிலைகள் போன்ற  பல தாக்கங்கள் பாதிப்பதால் அது செழுமைப்பட்டோ அல்லது வளமையின்றியோ இருப்பதற்கான வாய்ப்புக்கள் உண்டு. ஆனால் வாழ்க்கையின் எந்த ஒரு நிலையிலும் சூழ்நிலைகளையும் அல்லது தாக்கங்களையும் மாற்றி கற்றலை வளப்படுத்த, மேம்படுத்த, செம்மைப்படுத்த முடியும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

மேற்கூறப்பட்ட காரணங்களால் ஒரு மாணவனின் கற்றலின் வேகம், (speed of learning) ஆழம்.(depth of learning) ஈடுபாடு,((commitment) வளமை (richness) மற்றும் மேன்மை  இன்னொரு மாணவனிடமிருந்து மாறுபட்டிருக்கும். இந்த நிலை ஒரு குடும்பத்தைச் சார்ந்த இரு குழந்தைகளுக்கும் மாறுபட்டிருக்க வாய்ப்புக்கள் உண்டு. ஆகவே இரு மாணவ மாணவிகளின் கற்கும் திறனையும், கற்றலின் ஈடுபாடுகளையும், கற்றல் வளத்தையும் ஒப்பிடுதல்  விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே, ஒவ்வொரு தனி மாணவனின் கற்றலின் போக்கைக் காட்டும் வரைபடங்கள் (Learning Curve) தனித்தனியாக கவனிக்கப்பட்டு அதற்கான சரியான உத்திகளை முன்வைத்தல் அவசியமாகின்றது

ஒரு தனி மாணவனின் கற்றலை வெளிப்படுத்தும் வரைபடம் அந்த மாணவனின் உடல், உள்ள வளர்ச்சி, மன நலம், சுற்றுச்சூழல் ஆகிய பல காரணங்களால் சில நேரங்களில் குறுகிய காலத்தில் பாதிப்புக்களுக்கு உட்பட்டு கற்றலில் ஒரு வறுமையான போக்கைக் (Inadequacy of Learning) காட்டலாம். ஆனால் சூழ்நிலைகள் மாறும்பொழுது இந்தக் குறைபாடுகள் நீங்கி வளர்ச்சியையும் செழுமையும் காட்டும். அது மட்டுமல்ல, இப்படிப்பட்ட கற்றல் வரைபடங்கள் ஒவ்வொரு தனி பாடத்திட்டத்திருக்கும் மாறுபட்டிருக்க வாய்ப்புக்கள் உண்டு. எனவே ஒரு சில பாடங்களில்  ஒரு மாணவனின் கற்றல் திறனின் மேம்பாட்டையும் ஒரு சில பாடங்களில் பிற்போக்கான  நிலையையும் வெளிப்படுத்த வாய்ப்புக்கள் உண்டு. எனவே, ஒரு மாணவனின் கற்றல் திறனையும் கற்றலில் வல்லமையையும்  ஏதாவது  ஒரு வரைப்படத்தை (learning curve) முன்னிறுத்தி கணித்தல் தவறான கணிப்புக்களைக் கொடுக்கும். எனவே ஒரு மாணவனின் கற்றல் திறன்களை ஆராயும் பொழுது பொது கணிப்புக்களைத் தவிர்த்து குறிப்பிட்ட துறையிலும் குறிப்பிட்ட திறனிலும் அவனது ஈடுபாடுகள், முயற்சிகள், முன்னேற்றங்கள் ஆகியவற்றை  பரிசீலித்தல் அவசியமாகத் தென்படுகின்றது.

சில நேரங்களில் சிறப்பான கற்றல் திறன்களை வெளிப்படுத்தும் மாணவர்கள் வீடுகளில் ஏற்படும் துயரச் சம்பவங்கள் மற்றும் மன நலத்தை பாதிக்கும் சண்டை சச்சரவுகள், விரும்பத்தகாத நிகழ்வுகள் காரணமாக கவனச் சிதறல் (noncentral loss) மற்றும் மன அழுத்தங்கள் (Stress) ஏற்பட்டு தங்கள் கற்றலில் உள்ள ஈடுபாடுகள் மற்றும் ஆர்வங்களை இழந்து அதன் பலன்களை எதிர்நோக்கவும் வாய்ப்புக்கள் ஏற்படலாம். இந்த நிலைகளில் அவர்கள் மன நலத்தை சரிப்படுத்த தேவையான முயற்ச்சிகள் வீடுகளிலும் மற்றும் மனநல வல்லுநர்கள் துணையுடனும்  எடுத்தல் அவசியம். இந்த பாதுப்புக்களை கவனிக்காமல் ஒதுக்கிவிட்டால் அவை நிலைப்பட்டு காலப்போக்கில் கற்றலின் மீது ஒரு வெறுப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி ஒரு தாழ்வு மனப்பான்மைக்கும் வழிவகுக்கலாம் .

\பொதுவாக  ஒரு தனி மனிதனின் கற்றலைக் குறிக்கும் வறைபாடுகள் (individual learning curves) காலப்போக்கில் மாற்றங்களைக் காண்பது நிதர்சனம். இந்த மாற்றங்களின் அடிப்படிக் காரங்களை அறைந்து அதற்குத் தகுந்த முயற்சிகள் எடுத்தால்  அவர்களின் கற்றலின் தலையெழுத்தை மாற்றி எழுத முடியம். எனக்குத் தெரிந்த வரியில் பள்ளிக்கு காலங்களில் மிகச் சாதாரணமான வெற்றிப்படிகளிக்கூடாத தொடமுடியாத பல மாணவர்கள் பிற காலத்தில் கல்வியில் சான்றோர்களாக வளர்ந்ததையும். பள்ளிக்காலத்தில் மிகச் சிறப்பான  மதிப்பெண்களுடன் தேர்வடைந்தவர்கள் வாழ்க்கைப் பாதையில் தடுமாறியதையும்  காண முடிந்திருக்கின்றது.

பல  நேரங்களில் பள்ளிக்காலத்தில் கல்வி கற்கும் பொழுது ஏற்பட்டிருக்கும் தடங்கல்கள்,(Roadblocks) போராட்டங்கள் (challenges) ஆகியவற்றை தங்கள் வாழ்க்கைக்கு ஒரு முதலீடாக மாற்றி வெற்றியையும் சாதனைகளையும் படைத்தவர்களைக் கொண்டிருக்கின்றோம். அவர்களுடைய கற்றல் வெறும் புத்தகத்தில்  எழுதப்பட்டிருக்கும் கருத்துக்களை மட்டும் மூலதனமாகக் கொள்ளாமல் வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்களையும் மூலதனமாகக் கொண்டு முன்னேற்றத்திற்கு வழிவகுத்திருக்கின்றது. ஆகவே  கல்வியாளர்கள்  பாடத்திட்டத்தின் வரைமுறைகளை வகுக்கும்பொழுது  வெளிப்படையான பாடத்திட்டம் (visible curriculum)  என்றும்  மறைமுகமான  பாடத்திட்டம் (Hidden curriculum) என்றும் வகுத்து   அதற்கான வரைமுறைகளையும் உள்ளீட்டுக்களையும் பதிவு செய்கின்றனர்.

இதை தொடர்ந்து  அறியலாம்

(தொடரும் ).

Share

About the Author

க. பாலசுப்பிரமணியன்

has written 377 stories on this site.

க. பாலசுப்ரமணியன், முன்னாள் இயக்குனர் (கல்வி). மத்திய இடைநிலைக் கல்விக் கழகம், டில்லி ஆர்வம்: இலக்கியம், கவிதை, கல்வி, உளவியல், மனித வள மேம்பாடு கல்வி பற்றிய இவருடைய பல கட்டுரைகளும் புத்தகங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

Write a Comment [மறுமொழி இடவும்]


× five = 5


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.