நிர்மலா ராகவன்

விழு-அழு-எழு

நலம்

முன்பு, என் பக்கத்து வீட்டு மலாய்க்காரப் பெண் சாயங்கால வேளைகளில் எங்கள் வீட்டுக்கு அவளுடைய கைக்குழந்தையுடன் வந்து, என்னுடன் பேசிக்கொண்டிருப்பாள்.

“எனக்கு ரொம்ப கவலையாக இருக்கிறது,” என்று ஆரம்பித்தவள், “குழந்தையின் குரல் ஆண்பிள்ளைகளுடையதுபோல் கட்டையாக இல்லையே!” என்றாள். அவளுக்கு இரண்டு பெண்கள் இருந்தார்கள்.

“மூன்று மாதம்தானே ஆகிறது! பையனோ, பெண்ணோ, எல்லாக் குழந்தைகளுக்கும் குரல் கீச்சு மூச்சென்றுதான் இருக்கும். தானே பதினான்கு வயதானால் ஆண்பிள்ளைகளின் குரல் உடைந்துவிடும்,” என்று சமாதானப்படுத்தினேன்.

““நிஜமாகத்தானே சொல்கிறீர்கள்? நான் ரொம்ப பயந்துவிட்டேன்!” என்று, திரும்பத் திரும்ப அதையே நான் சொல்லும்படி கேட்டுக்கொண்டாள்!

ஆண்பிள்ளை என்றால் கட்டைக்குரலுடன், யாருக்கும் படியாத முரடனாக இருக்க வேண்டுமா, என்ன?

`வீரம்’ என்றால் மீசையை முறுக்குவது, சிறு காரணத்திற்கெல்லாம் பிறரை அடித்து உதைப்பது, சட்டையின் பின்புறத்திலிருந்து அரிவாளை உருவுவது என்பதெல்லாம் தமிழ்ப்படங்கள் நமக்கு உணர்த்தும் பாடம். அதிகாரத்தால் பிறரை பயப்பட வைக்கலாம். ஆனால் அப்படிச் செய்வதால் உண்மையான அன்போ, மரியாதையோ கிடைக்குமா?

மூன்று, நான்கு வயதுக் குழந்தை அழுதால்கூட, “ஐயையே! வெக்கமேயில்லே. ஆம்பளை அழலாமா?” என்று கேலி செய்து, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொள்வதுதான் ஆண்மையின் லட்சணம் என்று சிறு வயதிலேயே உணர்த்திவிடுகிறார்கள்.

அதனால், கீழே விழுந்து அடிபட்டுக்கொள்ளும்போது, `அழுதால் பிறர் கேலி செய்வார்களே!’ என்று பயந்து, அதை அடக்கிக்கொள்வார்கள். எதையும் பொறுத்துப்போவதும் உண்டு. அது தவறு.

கதை

ஐந்து வயதுக்குள் இருக்கும் அவனுக்கு. எப்போதும் அழுவான். அப்படி என்ன வருத்தம் அவனுக்கு?

தாத்தா காரணமில்லாமல் அவனைத் திட்டிக்கொண்டே இருப்பார். மரியாதை கருதி, அவனைப் பெற்றவர்களும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஏனெனில், அந்த வீட்டில் தாத்தா வைத்ததுதான் சட்டம். அப்படி ஒரு சர்வாதிகாரம்.

உறவினர்கள் அச்சிறுவனுக்குக் கொண்டுகொடுக்கும் விளையாட்டுச் சாமான்களை உடனே பிடுங்கி, அவனுக்கு எட்டாத தூரத்தில் வைத்துவிடுவார்கள். உடனே உடைத்துவிடுவானே! `என்ன கொண்டு வந்தார்கள்?’ என்று வம்படிக்க வரும் அக்கம்பக்கத்தினருக்கு உடைந்த சாமான்களையா காட்டுவது?

தான் யாருக்குமே ஒரு பொருட்டாக இல்லையே என்ற ஏமாற்றத்துடன், வாயைத் திறந்தாலே மிக உரக்கத்தான் பேசுவான் சிறுவன். இல்லாவிடில், அழுதுகொண்டே இருப்பான். நல்ல வேளை, எல்லா விளையாட்டுகளிலும் ஈடுபாடு இருந்ததால், நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள்.

இப்போது, உலகப் பிரசித்தி பெற்ற நிறுவனம் ஒன்றில் தலைமைப் பதவியில் இருக்கிறான். சிறு வயதில் அவனை அறிந்தவர்கள், `இவன் எப்படி இவ்வளவு தூரம் முன்னுக்கு வந்தான்!’ என்று வியப்படையும் அளவுக்கு ஒரு வளர்ச்சி. பொறுமையும் நிதானமும் அவன் குணமாகிவிட்டது.

இளமையில் எவ்வளவோ கஷ்டப்பட்டபோதும், அவ்வப்போது அழுது அவைகள் தன்னைப் பாதிக்க விடவில்லை அவன். அத்துடன், பிற மனிதர்களின் குணமும் புரிந்துபோயிற்று.

ஆண் என்றால் அதிகாரம்

ஆண் என்பவன் எந்த நிலையிலும் உறுதி படைத்தவனாக இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதியால் ஒருவரின் மன அழுத்தம்தான் அதிகரிக்கிறது. வளர்ந்த பின்னரும், முகத்தில் எந்தவித உணர்ச்சியும் காட்டாது இருப்பவர் ஆண்மை மிகுந்தவராக இருக்கிறார் என்று பிறரை நினைக்க வைக்க முயலுகிறார்கள். தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கிறார்களோ?

அலுவலகங்களில் அதிகாரிகளுக்கு அடங்கி நடப்பவர்கள் வீட்டில் தம் அதிகாரத்தைக் காட்டி ஆறுதல் தேடிக்கொள்வார்கள். இவர்களைப் போன்றவர்கள் பெண்கள் தம்மைவிட உயர்ந்த நிலையில் இருந்தால் பலவீனமாக உணர்வார்கள். தம் அதிகாரத்தை மறைமுகமாக அவர்கள்மேல் செலுத்துவார்கள். மட்டம் தட்டவும் தயங்குவதில்லை.

`ஆண்’ என்றாலே அதிகாரம் என்று எளியவர்களை ஆட்டிப்படைக்கும் குணம் எப்படி வருகிறது?

முன்காலத்தில், ஒருவயதுக்குட்பட்ட பெண்களைவிட ஆண்குழந்தைகளே அதிகமாக இறக்க, அவர்களது உடல் நிலையில் அதிகக் கவனம் செலுத்த வேண்டியிருந்ததாம். `பெற்றோரும் உற்றாரும் தம்மீது பாசத்தைப் பொழிகிறார்களே, தாம் உயர்த்தி என்பதால்தானே!’ என்ற எண்ணம் ஆண்களுக்கு அப்படி ஏற்பட்டிருக்கலாம். ஹார்மோனால் கூடுதலான உடல் வலிமைவேறு!

(இப்போதும், முதுமையில் பெண்களைவிட ஆண்கள்தாம் சில வருடங்கள் முன்னரே இறக்கிறார்கள். பெண்கள் அவ்வப்போது அழுது தம் மனக்கவலைகளைத் தீர்த்துக்கொள்வதும் ஒரு காரணம்).

`தவறு செய்துவிடுவோமோ!’ என்று பயந்து எதுவுமே செய்யாதிருப்பவரும் இல்லாமலில்லை.

ஒரு வேலைக்கான பேட்டிக்கு வந்த பட்டதாரியிடம் கேட்கப்பட்ட கேள்வி: “சம்பளம் கிடைத்தால், என்ன செய்வாய்?”

“வங்கியில் போடுவேன்!”

அந்த இளைஞனுக்கு வேலை கிடைக்கவில்லை. புதிதாக எதையாவது கற்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமோ, தைரியமோ இல்லையே!

பிறர் எந்த அளவுக்கு உதவுவார்கள் என்று எதிர்பாராது, `என்னால் முடியும்!’ என்ற நம்பிக்கையுடன் ஒரு காரியத்தில் பொறுப்பாக இறங்குபவர்கள்தாம் முன்னேறுகிறார்கள்.

சோம்பலுக்கு இடங்கொடேல்

மிகுந்த பிரயாசையுடன் மலையேறுகிறார்களே சிலர், ஏன்? கடினமாக உழைப்பதே நாம் எதிலும் தோல்வி அடையாது இருக்கும் வழி என்று உணர்ந்தவர்கள் அவர்கள்.

ஒரு கடினமான முயற்சியில் ஈடுபடும்போது எவ்வளவோ வேண்டாத விமரிசனங்கள், இன்னல்கள் எழலாம். சில சமயங்களில், அபாயங்களும் இருக்கக்கூடும். அவை நிகழும்போது சற்று மனம் தளர்ந்தாலும், கீழே விழுந்து மீண்டும் எழுந்திருப்பதுபோல், விடாமுயற்சியுடன் தொடர்ந்தால், முன்பு இருந்ததைவிட உயரத்தில் இருப்பதைக் காண்போம். மனமும் உறுதி பெற்றிருக்கும்.

“ஆண்மை என்றால் தனிமையை விரும்புவது, அலட்டலாக நடந்துகொள்வது என்பதில்லை. சரியென்று நமக்குப்பட்டதை, விளைவு என்ன ஆகுமோ என்று யோசிக்காது, துணிச்சலுடன் செய்வது”. (மகாத்மா காந்தி)

உடல் வன்மை இருக்கிறதோ, இல்லையோ, அறிவு, ஒழுக்கம், கடமை உணர்ச்சி எல்லாவற்றிலும் சிறந்திருப்பவர்களே மரியாதைக்கு ஏற்றவராகக் ஏற்கப்படுகிறார்கள்.

கதை

தமிழ்நாட்டில் ஓரிடத்தில் பெண்பார்க்க என்னையும் அழைத்துப்போனார்கள் உறவினர்கள், என் மறுப்பை லட்சியம் செய்யாது.

`நான் மூன்று தங்கைகளுக்குக் கல்யாணம் செய்து வைத்தேன்!’ என்று திரும்பத் திரும்ப என்னிடம் கூறினார் பெண்ணின் தந்தை.

அவர் வீட்டில் அவ்வளவாக வசதி இருக்கவில்லை. ஆனால் தன் சுகத்துக்காக பொறுப்புகளைத் தட்டிக்கழிக்காது இருந்த தந்தை! கணவரின் போக்கில் குறுக்கிடாது, அவருக்குப் பக்கபலமாக இருந்த தாய். இவர்களிடம் வளர்ந்த பெண்ணும் அப்படித்தானே இருப்பாள் என்று நாங்கள் நினைத்தது வீண்போகவில்லை. எங்கள் குடும்பத்தில் ஓரங்கமாகி, எல்லாருடைய பாராட்டையும் பெற்றுவிட்டாள் அப்பெண்.

சிறு பிராயத்தில் உலகமே தன்னைச் சுற்றித்தான் இயங்குகிறது என்ற எண்ணம் இயற்கையாக எழுவது. வளர்ந்தபின்னும் அப்படியே இருந்தால் அது அழகல்ல. எப்போது, எதிலும், தான்தான் முன்னிலையில் இருக்க வேண்டும் என்றால் நடக்கிற காரியமா!

பிறரை அடித்துப்பிடித்துக்கொண்டு முந்தாமல், விட்டுக்கொடுத்து, வெற்றியடைந்தால் அதற்காக தோல்வி அடைந்தவரை ஏளனமாகக் கருதாது இருப்பவர்களை ஜெண்டில்மேன் (gentleman) என்று குறிப்பிடுகிறோம். இவர்களே மாறுபட்டவர்களையும் புரிந்துகொள்ளும் சூட்சுமம் நிறைந்தவர்கள்.

பல பரிசுகளையும், விருதுகளையும் பெற்றுவிட்ட நடிகரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது: “நீங்கள் தலைசிறந்த நடிகர். ஒப்புக்கொள்வீர்களா?”

தொண்ணூறு வயதான அவரது பதில்: அப்படி நினைத்தால், அன்றே நான் இறந்துவிடுவது நல்லது!”

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *