பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

19866349_1372215519499310_188705727_n

ஷாமினி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (22.07.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “படக்கவிதைப் போட்டி (120)

  1. கோலம்
    ========
    வாசலில் இடுவது மாக்கோலம்
    வார்த்தையில் இடுவது பாக்கோலம்
    பரம்பொருள் தந்தது ஒளிக்கோலம்
    பாரிது கொண்டது களிக்கோலம்

    பாவையர் இடுவது இழைக்கோலம்
    பாவியர் இடுவது பிழைக்கோலம்
    வானகம் கொண்டது மழைக்கோலம்
    கானகம் பெற்றது தழைக்கோலம்

    மேகங்கள் சேர்ந்தால் கார்க்கோலம் – அவை
    மேனி சிலிர்த்தால் நீர்க்கோலம்
    வீரன் கொள்வான் போர்க்கோலம் – அவன்
    வெற்றியில் காண்பான் தேர்க்கோலம்

    தீயவர் இடுவது அவக்கோலம் – உளத்
    தூயவர் கொள்வது தவக்கோலம்
    மேதையர் இடுவது மதிக்கோலம் – எங்கள்
    மாயவன் இடுவது விதிக்கோலம்

    பாவலர் எழுதுவர் கவிக்கோலம் – நம்
    பரமன் செயலோ புவிக்கோலம்
    பக்தியில் வருவது இசைக்கோலம் – நல்ல
    பகலவன் தந்தது திசைக்கோலம்

    அருமையாய் செழிக்கும் பயிர்க்கோலம் – வா!
    அன்பிலே தழைக்கட்டும் உயிக்கோலம்
    வழுவிலாதெழுதுங்கள் அகக்கோலம் – பின்
    வாழ்வினில் எல்லாம் சுகக்கோலம்!

  2. எண்ணக் கோலங்கள்: புள்ளி வைத்து கோலம் போடும் சின்னப் பெண்ணே !
    உன் போல்,கோலமும் அழகு, செல்லப் பெண்ணே !
    அன்புக் கோலம் உறவை வளர்க்கும் ஆசைப் பெண்ணே!
    கல்விக் கோலம் அறிவை வளர்க்கும் சமத்துப் பெண்ணே!
    கருணைக் கோலம், மனிதம் வளர்க்கும் வண்ணப் பெண்ணே !
    புன்னகைக் கோலம், அழகை வளர்க்கும் சிட்டுப் பெண்ணே!
    அமைதிக் கோலம், அகிலம் காக்கும் அருமைப் பெண்ணே!
    ஒற்றுமைக் கோலம், உலகை உயர்த்தும் சுந்தரப் பெண்ணே!
    உழைப்பு கோலம், வெற்றியைக் கொடுக்கும் புதுமைப் பெண்ணே !
    முயற்சிக் கோலம், நினைத்ததைக் கொடுக்கும் இனிமைப் பெண்ணே!
    அகந்தைக் கோலம், நம்மை அழிக்கும், உணர்வாய் பெண்ணே!
    சாதிக் கோலம், சாவைக் கொடுக்கும், அறிவாய் பெண்ணே!
    போதைக் கோலம் நாட்டை அழிக்கும், தெளிவாய் பெண்ணே !
    போரின் கோலம், உலகை அழிக்கும், புரிவாய் பெண்ணே!
    வண்ணக் கோலம் போட விழையும் தங்கப் பெண்ணே!
    எண்ணக் கோலம் போட்டால், நன்மை பயக்கும் பெண்ணே !

  3. கோலமிடும் பாவாய் !

    சி. ஜெயபாரதன், கனடா.

    சின்னச் சின்ன கோலம் !
    சிங்காரக் கோலம் !
    வெள்ளை மாவில் அணியாய்ப்
    புள்ளிகள் போட்டு
    பள்ளிச் சிறுமி
    துள்ளிப் பாடி
    வரைந்த கோலம் !
    அம்மா எழுவதற்கு முன்பு
    முற்றம் பெருக்கி
    பளிச்செனப் போட்ட கோலம் !
    அம்மா கோலம்
    சும்மா தோற்றுப் போகும் !
    அக்கா போட்ட கோலம்
    தப்பா போச்சுடி பார் !
    தங்கிச் சிரிக்குது
    தங்கை போட்ட கோலம்
    மங்க வில்லை மாலை !
    இறுதியில்
    தெருப் போட்டிப் பரிசு
    சின்னக் கோல மிட்ட
    சிறுமிக்கே !

    +++

  4. அறிவுரை
    ____________

    சின்ன சின்ன விரல்கள் கொண்டு
    சிறு கோல மிடும் பைங்கிளியே
    சிறிய தொரு அறிவுரையை
    செவி மடுத்துக் கேட்டிடுவாய்…

    இன்று,
    உன் எண்ணமதை ஒருங்கிணைத்து
    வண்ண வண்ண நிறங்கள் தீட்டி
    வாசல் கோலம் நிறைவு செய்து
    வீட்டி னுள்ளே நுழைந் திடலாம்

    ஆனால்
    வாழ்க்கை கோலம் என்னவென்று
    வஞ்சி உனக் கெடுத் துரைக்க
    நாளை எனும் நாட்கள் கொண்ட
    வருங் காலம் காத்திருக்கு!!!

    தாயக ஒரு கோலம்,
    தாரமாக மறு கோலம்,
    வன்மம் கொண்ட கயவர் காணின்
    வீறு கொள்ளும் சினக் கோலம்..

    நெடு தூர பயணங்கள்
    உனக்காகக் காத்திருக்க
    தடம் புரண்டு செல்லாமல்
    தரணியதை நீயும் வெல்லு

    வாழ்க்கை செல்லும் பாதையிலே
    பின் தொடர்ந்து போவதிலே
    வழித்தடத்தை தொலைக்கின்றோம்
    நம் மரபுகளை மறக்கின்றோம் !!!!

    சின்ன சின்ன மகிழ்ச்சிகளை
    சிறைப் படுத்தி வைக்கின்றோம்
    நம்மை நாமே மறக்கின்றோம்
    மாற்ற மதில் கலக்கின்றோம்

    ஆதலால்

    ஓலம் பல வரினும்,
    ஞாலம் எது தரினும்;
    உன்னை நீயே தொலைக்காமல்
    உன் தனித்துவத்தை இழக்காமல்

    உன் காலம் உள்ள அதுமட்டும்
    உயிர் காற்று உள்ள அதுமட்டும்
    இன்று போல என் றென்றும்
    கோல மிட்டு மகிழ்ந்து இரு !!!!!

  5. அங்கும் இங்கும்…

    விண்ணில்-
    வீதியெல்லாம் புள்ளிவைத்துவிட்டு,
    விரிவானக் கோலமிடத்
    தெரியாமல்,
    விழிக்கிறது வானம்..

    மண்ணில்-
    எண்ணம்போல் புள்ளிவைத்து,
    எழிலோடு
    எழிலாகக் கோலமிட்டு,
    வீதியை வனப்பாக்கும்
    எங்கள் செல்வங்கள்…!

    -செண்பக ஜெகதீசன்…

  6. பெண்குழந்தை பெறுவதே பெருமை..!
    ==============================
    விழிப்புறுவாள் அதிகாலை மார்கழி நன்னாளில்..
    …….விடியுமுன்னே வீடனைத்தையும் சுத்தம் செய்வாள்.!
    விழிமூடா நிலையினிலே இயங்கிடுவாள் தரையினிலே
    …….விரல்நுனியில் வேகமாய் புள்ளியினை இட்டிடுவாள்.!
    மொழிகூடப் பேசு மவள்போட்ட மாக்கோலம்..
    …….விழிதிறந்து பார்க்கையில் வியப்பில்நமை ஆழ்த்தும்.!
    அழியாத கோலமாக அவளிட்ட கோலம்தான்..
    …….ஆழமாக மனதினிலே பதிந்தவள் திறம்சொல்லும்.!

    துள்ளித் துள்ளி ஓடிவரும் சின்னஞ்சிறுமியவள்
    …….துடிப்புடனே செயல்படு மாற்றல் கொண்டவள்.!
    பள்ளி செல்லுமுன் வாசலிலே கோலமிடுவாள்
    …….பள்ளிமுடிந்ததும் படிப்பினிலே நாட்டம் வரும்.!
    அள்ளியவளை அணைத்தே பெற்றோரும் மகிழ
    …….அன்றாடம் அவள் செய்யுமருமைச் செயலினாலே.!
    கிள்ளிச் செல்வாள் மனதையெலாம் தன்குரும்பாலே
    …….கவர்ந்திடுவாள் படித்திடுவாள் பள்ளியிலே முதலாக.!

    ஆண்மகவே வேண்டுமென்று விரும்புவது அன்று..
    …….ஆணுக்கு இணையாக பெண்பேசப்படும் நிலையின்று.!
    பெண் மகவொன்றை முதலாகப் பெற்று விட்டால்..
    …….பெரிதென நினைத்து பெருமைப்படும் காலமுமிதுதான்.!
    தூண்போல நின்று வாழ்வில்வரும் துயரெல்லாம்..
    …….துடைத்து குடும்பத்தில் பெரும்பங்கு வகிப்பவளவளே.!
    நாண்போன்று நற்குடும்பமதைக் கட்டிக் காப்பாளவள்..
    …….பெண்ணென்று வெறும்பேச்சு சொல்ல அனுமதியாள்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *