-மேகலா இராமமூர்த்தி

ladies with burden on head

சிரத்திலும் கரத்திலும் சுமையோடு பயணம் புறப்பட்டுவிட்ட இந்தத் தாயையும் உடன்வரும் சேயரையும் தன் படப்பெட்டிக்குள் நேயத்தோடு சுமந்துவந்திருப்பவர் திருமிகு. அனிதா சத்யம். இப்படத்தைப் போட்டிக்குத் தேர்வுசெய்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். பெண்மணிகள் இருவருக்கும் என் பணிவான நன்றி!

வாழ்வெனும் நெடும்பயணத்தில் மனிதர்களுக்குத்தான் எத்தனை எத்தனை சுமைகள்! அவற்றில் சில சுகமானவை; பல இறக்கவும் துறக்கவும் இயலாக் க(டி)னமானவை. ஆயினும் பயணங்கள் தவிர்க்க இயலாதவை. சுமைகளோடும் கனவுகளோடும் மனிதர்கள் மேற்கொள்ளும் பயணம் வெற்றிப்பயணமா, பயனற்ற வெற்றுப்பயணமா என்பதைக் காலமே தீர்மானிக்கின்றது.

கவிஞர்களின் சிந்தனையில் பூத்த கவிதை மலர்கள் அடுத்து அணிவகுக்கக் காத்திருக்கின்றன. அவற்றை வரவேற்போம்!

”சுமைகளே வாழ்க்கையாகிப் போனது பெண்களுக்கு. மற்றவர்களுக்காகவே சுமந்து கூன்விழுந்துபோன பெண்ணே! இனியேனும் உனக்காக வாழு! சுமைகளை உதறிச் சிறகுவிரித்துப் பறந்திடு!” என்று பெண்விடுதலைக்குக் குரல்கொடுக்கின்றார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

சுமை தலையில் ஒரு சுமை!
இடையில் ஒரு சுமை!
இருந்தும் உன் மனதில் இல்லை என்றும் குறை!
பெண்ணாக பிறந்ததினால் சில வருடம்
பெற்றார், உற்றாரின் வசவுகளை நீ சுமந்தாய்!
அண்ணன், தம்பி மகிழ்ந்து விளையாட பெற்றோர்
அனுமதிக்க! நீ விளையாட அவர் மறுத்துரைக்க
ஏக்கத்தை நீ சுமந்தாய்!
படிக்கும் வயதில் தாலியைத் தான் சுமந்தாய்!
பிள்ளைகளை வயிற்றில் சுமந்தாய்!
குடும்ப நலத்தை மனதில் சுமந்தாய்!
உன் கனவுகளை நீ தொலைத்து குடும்பத்தை
வாழ வைத்தாய்!
சுமப்பதினால் இது வரை என்ன சுகம் கண்டாய்! ;
உன்னை சுமக்க வைக்க மற்றவர்கள் சொல்லும்
பொய்களை நம்பியது போதும் பெண்ணே!
மற்றவர்களுக்காய் நீ சுமந்தது போதும் பெண்ணே!
உன் இரக்கத்தை ஏணியாக்கி ஆண்கள்
ஏறிச் சென்றது போதும் பெண்ணே!
இனியாவது புதுமைப் பெண்ணே !
உன் எண்ணச் சிறகுகளை விரித்து பறந்திடு !
இனிய வாழ்க்கையை என்றும் வாழ்ந்திடு !

***

”தன்னம்பிக்கை எனும் பிடிமானமே எங்கள் வருமானம்; பகுத்துண்டு வாழ்தலே எங்களுக்கு வெகுமானம். உழைத்து வாழ்கின்றோம்; பிறர் உழைப்பில் வாழ்வதில்லை” என்று தன்மான வார்த்தைகளைத் தலைநிமிர்த்தி உச்சரிக்கும் பெண்மணியைத் தன் கவிதையில் உலவவிட்டிருக்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

உழைப்பே எங்கள் உடன்பிறப்பு

அன்றாடம் உழைத்தால்தான் அரைவயிறு நிறையும்
….ஆரும்நன்றாய்ப் படித்து பெரிதாய்ப் ஈட்டுவோரில்லை.!
சென்றுபோகும் இடமெல்லாம் நடந்துதான் செல்லவேண்டும்
….அன்று சம்பாதிப்பது அன்றுமட்டுமே போதாதென்றாலும்.!
நன்றாகத்தான் வாழ்கிறோம் எம் கைக்கொண்டுழைத்தே
….நல்லவேலை செய்வதற்கே நாங்களும் பிறப்பெடுத்தோம்.!
குன்றுபோல் செழித்திருக்கும் குடியிருப்பு இல்லமொன்றில்
….கூட்டுக் குடும்பமாய்வாழ கூலிக்கென்றுமே பஞ்சமில்லை.!

கருப்புக் குமரிகள்தான் நாங்களாயினு மெங்களைக்
….காதலித்து ஏமாற்றும் கயவர்பயம் எங்களுக்கில்லை.!
ஆருமில்லை ஆதரிப்போரெனும் ஆதங்கமும் இல்லை
….அன்பாலே ஏனையொரை ஈர்க்குமாற்றல் எமக்குண்டு.!
விருப்பமுடன் வீடுதேடி வேலைகேட்பின் இல்லையென
….மறுக்கமாட்டார் எடுத்தெறிந்து பேசமாட்டார் எவரும்.!
கரும்புபோல பேசிவிட்டு முகம்சுளிப்போர் நடுவே
….அரும்புச் சிரிப்புடன் ஆறுதலாய் பேசுவோருண்டு.!

இடையூறு இன்னல்கள் எதுவரினும் எதிர்கொள்ள..
….இறையருளும் எங்களுக்கு எப்போதும் உடனிருக்கும்.!
தடையில்லா வாழ்வு வாழ எங்களுக்கும் ஆசைதான்
….தருவாயா இறைவாநீ உடலுறத்தை உயிருள்ளவரை.!
நடைபோடும் தளிர்நம்பிக்கை யெனும் கொழுகொம்பைப்
….பிடித்துவாழும் பிடிமானமேயெங்கள் நிரந்தர வருமானம்.!
படையோடு பலருடன் மகிழ்ந்தெதையும் கொண்டாடுவோம்
….பக்குவமாய் உழைத்து வாழ்வோர் உதாரணமாவோம்.!

***

பள்ளிச் சீருடைகளிலும் ரிப்பன்களிலும் மட்டுமே காணக்கிடைக்கின்ற சமத்துவம் சமூகத்தில் ஏனோ சீர்கெட்டுப்போயிருக்கின்றது. ரிப்பன் கட்டிய சிறுமியாய்த் தொடங்கும் பெண்ணின் வாழ்க்கை, நடை தளர்ந்து, நரை வளர்ந்து, முதியவளாய் அவள் மாறியபின், (பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு) முதியோர் இல்லத்தில் முற்றுப்பெறுவதை உணர்வுபூர்வமாய் விவரிக்கின்றார் திரு. கா. முருகேசன்.

நிழல்!
தலை நிறைய மூட்டை,

சின்னஞ்சிறு மழலைகளின் சிரிப்பு,
நடக்க நல்ல ஒரு மணல் பரப்பு!
வெயிலின் பிரதிபலிப்பால்
அவர்களை விட்டு பிரியாது தொடரும்
நிழல்!

முடி நரைத்தாலும் மூட்டை தூக்குவதில்
சலிப்பில்லாத முதுமை!

பள்ளிகூடங்களில் மட்டும் சமத்துவம் என்பது,
இல்லாதிருந்தால் நாம் மறந்திருப்போம்,
ரிப்பன் கட்டும் பழக்கத்தை!
பெண்களின் அழகை
சீர்தூக்கி நிறுத்தும் ரிப்பன் இப்போது,
பல கொடிகளின் வண்ணங்களாய்
மிளிர்கிறது!
பள்ளிக்கூடங்கள் திணறுகின்றன,
எந்த வண்ணத்தை தீர்மானிக்க என்று!

இரட்டைச் சடையும்,
ஒற்றைச் சடையுமாய் வளர்ந்து
முதுமையடைகிறாள் பெண்!

முதுமை என்றதும் நினைவுக்கு வருவது
மீன் குழம்பும், கத்தரிக்காய் கூட்டும்!
அப்போது!
இப்போது!
முதுமை என்றதும் நினைவுக்கு வருகிறது
முதியோர் இல்லம்!

கூன் விழாத முதுகுத்தண்டு சொல்லும்
அவள் உழைப்பை!
நரைத்த முடிகள் சொல்லும்
அவள் கஷ்டத்தை!
தன் மகனும், மகளும் படிக்க,
வயல் தோட்டங்கள், தொழில் கூடங்கள் என
உழைப்பிற்காக நடந்த நடையைச் சொல்லும்
அவளின் செருப்பில்லாத பாதங்கள்!
குழந்தைகளை நிழல் போல் காக்கிறாள்!
நிலத்தில் விழுந்து விடக்கூடாதென்று!

எல்லாவற்றையும் கடந்து உழைக்கிறாள்!
என் மகன், மகள் கஷ்டப்படக்கூடாதென்பதற்காக!

ஆனால், அவர்களோ!
முதுமையின் முதுமையாய் முதிர்ந்தவர்களை,
விடுகின்றனர் முதியோர் இல்லத்தில்!

இந்த உலகத்தில் முதுமைக்கு
விலையில்லாத விலைமதிக்கத்தக்க ஒன்று,
ஒரு வேளை சோற்றை விடவும் உயர்ந்தது!
மொழி கடந்து, சொல் கடந்து,
அந்த மௌனச்சிரிப்பினால்,
முதுமையின் கன்னத்தை வருடும்
பேரன் பேத்திகளின் ஸ்பரிசம் ஒன்றுதான்!
அது கிடைக்காதா! என்று
ஏங்குகிறாள் முதியோர் இல்லத்தில்!

முதுமை நினைத்துப்பார்க்கிறது!
என்றும் உங்களின் நிழலாக இருக்கிறேனே
நான்!

உங்களைப் படிக்க வைத்தேன்
படித்தும் புரியவில்லையே!
நிழலைப் பிரிக்கமுடியாது என்று!
என் குழந்தைகளுக்கு!

கடவுளே என் மகனும் மகளும்
நன்றாக இருக்க வேண்டும்!
நான் மறைந்தாலும் அவர்களுக்கு
நிழலாக!

***
முதுமை மேற்கொண்ட நடைப்பயணம் கண்டு மனங்கசிந்து, மடைதிறந்த வெள்ளமெனக் கவிமழை பொழிந்திருக்கின்றனர் நம் வித்தகக் கவிஞர்கள். அவர்களுக்கு என் உளங்கனிந்த பாராட்டுக்கள்!

***

மனித வாழ்வுக்குத் தேவை ’இலக்கு’ என்பது பெரியோர் வாக்கு. ’குறிக்கோளின்றிக் கெட்டேனே’ என்று ஞானச் செல்வரான அப்பர்கூட மொழிந்திருக்கக் காண்கின்றோம். ஆனால் வாழ்வுக்கு உகந்த இலக்கினை அமைப்பதும், அதனை வெற்றிகரமாய்ச் சென்றடைவதும் அத்தனை இலகுவன்று என்பதே  உண்மை!

மதுஅரக்கனின் பிடியில் சிக்கி மனைவியை நட்டாற்றில் தவிக்கவிடும் மணாளர்களுக்குப் பஞ்சமில்லை நம் தாய்த்தமிழ் நாட்டிலே!

கட்டியவனைப் பறிகொடுத்த காரிகையொருத்தி, சுட்டெரிக்கும் வெயிலில், பட்டமரமெனப் பிஞ்சுக் குழந்தைகளோடு நடந்துசெல்லும் இலக்கற்ற பயணத்தைக் காட்சிப்படுத்தியுள்ள கவிதையொன்று நெஞ்சைச் சுடுகின்றது!

இலக்குகள்…

போகுமிடம்
மதுக்கடை மட்டும்
தெரிந்தவன்
போய்ச் சேர்ந்தான்,
பெண்டாட்டி பிள்ளைகளைத்
தெருவில்
திண்டாட விட்டு…

புறப்பட்டுவிட்டார்கள்
இவர்கள் இப்போது,
பிழைப்புத் தேடி-
போகுமிடம் எதுவென்ற
இலக்குத் தெரியாமலே…!

சிறிய கவிதையில் நடப்பியலைச் சிறப்பாய்க் கூறியிருக்கும் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 119-இன் முடிவுகள்

  1. சிறந்த கவிஞராக என்னைத் தேர்வுசெய்த சகோதரி மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கும், ‘வல்லமை’ நிர்வாகத்தினர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *