மீ.விசுவநாதன்

 
பகுதி: இரண்டு
பாலகாண்டம்

ஆதிகவி வால்மீகியும் நாரதரும்

ஸ்ரீராம தர்ம சரிதம்
(காப்பு)
வில்லெடுத்த வீரன் விநயமிகு ராமகதை
நல்லொழுக்கத் தீன்தமிழில் நான்சொல்லச் சொல்லெடுத்து
நீதருவாய் சாரதையே ! நித்திலப் பேரொளியே !
சீருடன் என்னுள்ளே சேர். (8)

சிருங்கேரி மாமலைவாழ் தெய்வதமே ! ஞானப்
பெருங்கோவில் கொண்டவளே ! பிள்ளை அருமைத்
திருராமன் வாழ்ந்த திசைநோக்கிப் பாடக்
கருவாக வந்துநீ கா. (9)

தட்டச்சில் வார்த்தை தவறாமல் வந்திடவும்
பட்டத்து யானையெனப் பைந்தமிழ்த்தேன் சொட்டுகிற
உச்சத்துப் பாக்களையே உள்ளொளியால் கொட்டிடவும்
இச்சையுட(ன்) ஈவார் குரு. (10)

ஒருதிருடன் “மகரிஷி”யானார்
அந்தவோர் காட்டில் அவனேதான் ராஜா !
அடுத்தவரின் பொருட்களை அள்ளிக்கொண் டோடும்
விந்தைமிகு கள்ளனவன் ! வேட்டையி லோர்நாள்
வேதரிஷி நாரதரைத் தீக்காற்றாய்ச் சுற்றி,
“சொந்தமாய் உள்ளவுன் பொருட்களைத்தா” வென்றான்!
“சுகமாகக் கொண்டுபோயுன் சுற்றத்தார் முன்னே
வந்தபாவச் செல்வத்தை வாரிக்கொண் டோரே
வரும்பாப மூட்டையில் பங்குகொள் வீரோ ? (11)

திருடிதினம் நான்தரும் தீமையிலே நீங்கள்
தேகத்தை வளர்க்கின்றீர்! தீராத பாபம்
ஒருபங்கு கொள்வீரோ? சொல்லெனக் கேட்டுச்
சொன்னபதில் பெற்றுவந்து சொல்லுக” வென்று
கருணையுடன் நாரதர் கள்ளனிடம் சொன்னார்!
கள்ளனவன் சென்றுதன் காதல்மனை யாளை
அருகழைத்துக் கேட்டவுடன் !”அன்னமிட லுங்கள்
அன்றாட தர்மந்தான், அறங்கொன்ற பாபம் (12)

உங்களுக்கே எங்களுக்கு ஒட்டாதே என்றாள்”
உடனேயே காட்டிற்கு ஓடிவந்து,”ஞானி
உங்களைநான் பணிகின்றேன்! ஒட்டிய தீமை
ஒழிவதற்கோர் நல்வழியைச் சொல்லுக வென்றான்!”
அங்கேயே “ராமநாம” அற்புதத்தை ஓத
அலுங்காமல் ஆழ்தவத்தில் அப்படியே மூழ்கி
மங்காத ஆதவனாய் வானோர்கள் மெச்சும்
மகத்தான ஆதிகவி வால்மீகி யானார். (13)

வால்மீகி
ஓமெனும் உள்ளொலி உற்சாக வெள்ளம்
ஓயாமற் பாய்கிற உத்தம யோகி
நாமமே வால்மீகி ! நல்முனிவோர்க் கூட்ட
ஞாலமே போற்றுகிற நல்வினையால் வந்தோன் !
சேமமே எப்போதும் செந்நாவில் பொங்கிச்
சீரிளமைக் கவிதையாய்ச் செய்துபேர் கொண்டோன்!
காமமே இல்லாத கர்மவினை என்று
காலத்தால் நீங்காத காவியத்தைச் செய்தோன் ! (14)

நாரதர்

அந்தவோர் ஆதிகவி ஆசிரமம் தேடி
அவராக வந்தாரே நாரதராம் ஞானி !
எந்தவோர் ஆசையும் கிஞ்சித்து மின்றி
எப்போதும் நாரணன் நாமத்தில் மூழ்கும்
பந்தத்தைக் கொண்டவர் ! பக்தியால் முக்தி
பளிச்செனப் பெற்றவர் ! பாட்டிலே விஷ்ணு
சிந்தையை ஆழமாய்ச் சேர்த்திசைத் துள்ளே
சீதள குணமாகச் சிரித்தபடிச் செல்வோன் ! (15)

நாரதருக்கு வால்மீகி செய்த மரியாதை

நாரதர் வந்தவுடன் நல்வணக்கங் கூறி
ஞானியவர் பாதமதை நன்னீரால்த் தூய்மை
பூரணமாய்ச் செய்துவுடன் பூசித்தார் ! உண்ணப்
புதுப்பழங்கள் தந்தவரைக் கௌரவித்தார் ! பின்னர்
நாரதரை நோக்கியே நல்விநயங் கொண்டு
“நல்லோரே ஞானியரில் உச்சமாய் நின்று
வாரணம்போல் ஆன்மபலம் வாய்த்தோரே ! இந்த
வால்மீகி கேள்விக்கு விடைவேண்டு மென்றார்”! (16)

வால்மீகி கேட்ட கேள்விகள்

“முனிவரே இவ்வுலகில் மோகமே இன்றி
முன்னோர்சொல் கேட்பவரும், முனைமுறியா தர்மத்
தனிவழியே செல்பவரும், தன்னாற்றல், தண்மைத்
தவவாழ்வைக் கொள்பவரும், தந்தைதாய் போற்றும்
கனிவினைத்தான் பெற்றவரும், கடுங்கோபம் நீக்கிக்
கல்யாண குணத்தோடு கற்பூர புத்தி
இனிதாகப் பெற்றவரும், ஈடில்லா வீர
இதயத்தோ டிருப்பவரும் எவர்தான் என்றார் ?” (17)

நாரதர் கூறிய பதில்
கேள்விகளைக் கேட்டவுடன் கீர்த்திமிகு உள்ள
கீதமிசை நாரதரும் விடையினைத் தந்தார் !
“கோள்களே குதூகலித்துத் தந்ததோர் பிள்ளை!
குணக்குன்று ! இஷ்வாகு குலத்தோன்றல் ராமன்
தோள்வலிமை கொண்டவன்! தொண்டிலே தேர்ந்தோன் !
துன்பத்தைத் துடைக்கின்ற துடிப்பினைப் பெற்றோன் !
ஆளிவன்போல் யாருமில்லை ஆன்மபலம் மிக்கோன்
அறிவாளன், நீதிமான், அன்பாலே வெல்வோன் ! (18)

கார்மேகம் வெட்க்கிடும் அருட்கொடையான் ! நீண்ட
கைகளும், அகன்றதோர் கண்களும், சங்குச்
சீரான நீள்கழுத்தும், செதுக்கியதோர் தாடை,
சிரசழகும் வெண்ணைபோல் சிரிப்பழகும், நன்கு
நேரான நாசியும், நேர்மைநிறை நெஞ்சும்,
நிமிர்ந்தநல் நடையுடை நேர்த்தியும் கொண்டோன் !
பாராளும் ராஜனுக்குப் பரிந்துரைக்கும் தூய
பண்புகள் அத்தனையும் பரிசாகப் பெற்றோன். (19)

தாயான கௌசல்யா தன்பிள்ளை என்றும்
தயாநிதி எனமகிழும் தன்மையினைப் பெற்றோன் !
மாயாவி விஷ்ணுவின் மறுஅவ தாரம்
மக்களைக் காத்திடவே வந்துதித்த ராமன் !
ஓயாது அறம்செய் தோங்குபுகழ் சேர்த்த
ஊர்மெச்சும் தசரதனின் உயிரான பிள்ளை !
தாயான கைகேயி தன்வரக் கேட்டால்
காடேகிப் போனவன்தான் காகுத்த னென்பேன் ! (20)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *